ஸ்பெஷல் -1
Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

'கௌரவக் கொலை’ என்ற பெயரில், பெற்ற மகளையே சாதிக்கு நரபலி கொடுக்கும் கொடூரம்  நிகழ்கிறது இந்தியாவில். வட இந்தியாவில் ஊரே கூடி இத்தகைய கொலைகளைச் செய்கிறது எனில், தமிழ்நாட்டில் உறவுக் கூட்டமே இந்தக் கொடூரத்தை அரங்கேற்றுகிறது.

இதுபோன்ற இழிவான கொலைகளைத் தடுத்து நிறுத்த புதிய சட்டம் இயற்றும் நோக்கத்துடன், மத்திய அரசு வரைவு மசோதா ஒன்றைத் தயாரித்தது. அதன் மீது கருத்து கேட்டு இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் இந்த மசோதா அனுப்பப்பட்டது. 21 மாநிலங்கள் இதை ஆதரித்துள்ளன. ஆரம்பத்தில் கடுமையாக எதிர்த்த ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களே இப்போது ஆதரிக்கின்றன. ஆனால், சமூக உரிமைக்கான போராட்டங்களில் எப்போதும் முன்நிற்கும் தமிழ்நாட்டில் இருந்து இதுவரை ஒரு பதிலும் இல்லை. பெரியார் பிறந்த மண், சாதிப் பஞ்சாயத்தை ஒழிக்கும் மசோதாவை ஆதரிக்காமல் மௌனம் காப்பதன் பின்னால், வாக்குவங்கியைக் குறிவைக்கும் சாதி அரசியலன்றி வேறு எதுவும் இல்லை.

பெற்ற பிள்ளையின் கண்ணில் தூசி விழுந்தால்கூடப் பதறித் துடிக்கும் பெற்றோர்தான்... ஆனால், அதே பிள்ளை வேறு சாதி ஆணைக் காதல் திருமணம் செய்து வெளியேறினால், அவர்களை வெறிகொண்டு வேட்டையாடி வெட்டிக்கொள்வது கொடூரம்; மன்னிக்க முடியாத பயங்கரம். வெளிவரும் செய்திகள் ஒன்றிரண்டுதான்... மூடி மறைக்கப்படும் படுகொலைகளே அதிகம். குடும்பப் பெண்களைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, அவர்களின் சமாதியை சாமியாக்கி வழிபடும் வினோதமும் இதே மண்ணில்தான் நடக்கிறது. குடும்ப உறுப்பினர்களே சேர்ந்து செய்யும் கொலை என்பதால், பெரும்பாலும் இது வெளியில் தெரிவது இல்லை. தெரிந்தாலும் தற்கொலை என வழக்கு முடிக்கப்படும். அகப்பட்டாலும் குற்றவாளிகள் அவமானப்படுவது இல்லை. முக்கியமாக, இந்தக் கொடூரம் ஊருக்குள் ஒரு வீரதீர சாகசம்போல பேசப்படுவது இன்னும் அபாயம்.

'கௌரவக் கொலை’க்கு எதிரான மத்திய அரசின் வரைவு மசோதாவை தமிழக அரசு ஆதரிப்பது என்பது, இதற்கான நடவடிக்கையின் சிறுபகுதியே. அதற்கு முன்பாக பொது சமூகத்தில் எரிச்சலைத் தூண்டும், பகை மூட்டும், வெறுப்பை விதைக்கும் அனைத்து சாதிக் கொண்டாட்டங்களையும் ஒட்டுமொத்தமாகத் தடைசெய்ய வேண்டும். சாதியின் பெயரால் நடக்கும் படுகொலைகளை, கண்டும்காணாமல் காவல் துறை வேடிக்கை பார்ப்பது அவமானம். சமூகத்தின் மரபணுவில் பதிந்திருக்கும் சாதிவெறி இப்படி மிகக் கோரமாக, கொடூரமாக வெளிப்படுவதை ஒழித்துக்கட்டுவதுதான் சமூகத்தின் நிஜ கௌரவம்!