ஸ்பெஷல் -1
Published:Updated:

"என்னய்யா லைக்ஸ் குறைஞ்சிருக்கு?”

கருணாநிதி@ஃபேஸ்புக்நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: வீ.நாகமணி

''பேட்டியா... எங்களையா? தலைவர்கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு, பத்து நிமிஷத்தில் லைன்ல வர்றோம்!'' என்றவர்கள், சரியாக ஆறு நிமிடங்கள் கழித்து தொடர்புகொண்டார்கள். ''தலைவர் ஓ.கே சொல்லிட்டார்'' என்று வரச் சொன்னார்கள்.  நேரில் சென்றால், ''அஞ்சு நிமிஷம் சார்... தலைவர் எழுதின ஜோக் ஒண்ணை போஸ்ட் பண்ணிட்டு வந்துடுறோம். அது பாட்டுக்கு லைக்ஸ் குவிச்சுட்டு இருக்கும்!'' என்று ஒரு துண்டுச் சீட்டைப் பார்த்து ஸ்டேட்டஸ் போடுகிறார்கள். பார்க்க 'தமிழ் சினிமாவின் அமெரிக்க மாப்பிள்ளைகள்’போல 'சாஃப்ட்’டாக இருப்பவர்களின் வேலை என்ன தெரியுமா? தி.மு.க தலைவர், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஃபேஸ்புக் பக்க நிர்வாகிகள் (பேஜ் அட்மின்!).  

''என் பேரு நவீன் நரேந்திரன். இவர் சுரேஷ் இம்மானுவேல். நான் சென்னைக்காரன். சுரேஷ§க்கு சேலம். ரெண்டு பேரும் எம்.பி.ஏ;  ரெண்டு பேரும் தி.மு.க ஆதரவுக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க!''-அறிமுகம் கொடுத்துவிட்டுத் தொடர்கிறார் நவீன்.

"என்னய்யா லைக்ஸ் குறைஞ்சிருக்கு?”

''நானும் சுரேஷ§ம் இ-மெயில் கண்டுபிடிச்ச தமிழர் சிவா அய்யாதுரையின் 'எக்கோ மெயில்’ நிறுவனத்தில் 2008-ம்  ஆண்டு வேலைக்குச் சேர்ந்தோம். சென்னையில்தான் வேலை. ஆனா, என் பேர் 'பாப் டேவீல்ஸ்’. சுரேஷ் பேர் 'வில்லியம் ஸ்மித்’. எப்பவும் நைட் ஷிஃப்ட்தான் வேலை. ஏன்னா,  எங்க புராஜெக்ட் அப்படி. 2008-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா போட்டியிட்டார். அப்போ சமூக வலைதளங்கள் மூலம் உலகத்தின் சந்துபொந்துகளுக்கு எல்லாம் அவரோட பிரசாரத்தைக் கொண்டுபோகணும். அதுக்காக 200 பேர் தீவிரமா வேலைபார்த்தோம். எப்பவுமே கூகிள்ல யாரைப் பத்தி தேடினாலும், அவரைப் பத்தின நெகட்டிவ் விஷயங்கள்தான் முதலில் வரும். எஸ்.சி.ஓ, டேக்ஸ் போன்ற 25 கோடிங் வார்த்தைகளைப் பயன்படுத்தி, கூகுளில் மெள்ள மெள்ள ஒபாமா பத்தின நெகட்டிவ் செய்திகளை மூணாவது, நாலாவது பக்கத்துக்குத் தள்ளிருவோம். பாசிட்டிவ் நியூஸ் முன்னாடி வர்ற மாதிரி பண்ணிடுவோம். ஏன்னா, கூகுளில் தேடுறவங்க 99 சதவிகிதம் முதல் ரெண்டு பக்கங்களைத்தான் பார்ப்பாங்க. இதே கோடிங் மேஜிக்கைத்தான் மோடி பிரசாரத்துக்கும் பண்ணினாங்க!'' என்கிறார் நவீன்.  

''ஒரு சமயம் தலைவர் கலைஞர் பெயரை கூகிளில் தேடினா, நெகட்டிவ் நியூஸா வந்து விழும். 2011-ல் தேர்தலில் தி.மு.க தோல்விக்கு சமூக வலைதளங்களில் பரவிய நெகட்டிவ் விஷயங்களும் ஒரு காரணம். அப்பத்தான், ஏதோ ஒரு நாட்டுக்கு யாரோ ஒருத்தர் அதிபர் ஆவதற்கு  நம்ம உழைப்பைக் கொடுக்கிறோம். நம்ம தலைவருக்கு அதே வேலையைப் பார்த்தா என்னன்னு தோணுச்சு. உடனே 'எக்கோ மெயில்’ நிறுவன வேலையை விட்டுட்டோம். 2012-ம் ஆண்டு ஜூன் 3. தலைவர் பிறந்த நாள். ஒபாமா பிறந்த நாளுக்கு முதன்முதலாக அவரை வாழ்த்த wishobama.com-னு ஒரு வெப்சைட் உருவாக்கினோம். அதுக்கு அமெரிக்காவில் நல்ல ரெஸ்பான்ஸ். இங்கேயும் அதே மாதிரி wishthalaivar.com-னு இ-மெயில் மூலம்  தலைவருக்கு வாழ்த்துச் செய்திகளை சேகரிச்சோம். பல்லாயிரக்கணக்கில் குவிஞ்சது வாழ்த்து. அதை தலைவர்கிட்ட சொன்னப்ப, ரொம்ப சந்தோஷப்பட்டார்.

"என்னய்யா லைக்ஸ் குறைஞ்சிருக்கு?”

அதைக் கேள்விப்பட்ட கட்சியின் சீனியர்ஸ் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, ஜெ.அன்பழகன், தா.மோ.அன்பரசன் எல்லாரும் சமூக வலைதளங்கள், ஸ்மார்ட் போன் பத்தி ஆர்வமாக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டாங்க. 'டச் போனைப் பயன்படுத்தத் தெரியலைன்னா, நம்மளை படிக்காதவன்னு நினைச்சுக்கிறாங்கய்யா’னு துரைமுருகன் சார் ஜாலி கமென்ட் அடிச்சார்.

இப்படியே போயிட்டு இருந்தப்ப ஒருமுறை ஆ.ராசா அண்ணா, 'அந்த கோடிங்கைப் பயன்படுத்தி கூகுளில் என்னைப் பத்தின நெகட்டிவ் நியூஸ்களைப் பின்னுக்குத் தள்ள முடியுமா?’னு கேட்டார். அவருக்கும் பண்ணிக் கொடுத்தோம். அப்போதான் தலைவருடைய உதவியாளர் நித்தியானந்தம் அண்ணா மூலம் தலைவரைச் சந்திச்சோம்!'' என்று சுரேஷ் பாஸ்விட, அவர் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தார் நவீன்.

''இன்டர்நெட், கூகுள், ஒபாமா பிரசார டெக்னிக் பத்தி தலைவர்கிட்ட முழுசும் சொன்னோம். உடனே புரிஞ்சுக்கிட்டார். 'இந்த இன்டர்நெட்டால ஒரு சதவிகிதம் தி.மு.க-வோட வாக்குவங்கி கூடினாக்கூட சந்தோஷம்தான்யா’னு சொல்லி அவர் பேர்ல ஃபேஸ்புக் பக்கம் ஆரம்பிக்க அனுமதி கொடுத்தார். 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி, தலைவருக்கு ஃபேஸ்புக் பக்கம் ஆரம்பிச்சோம்.

"என்னய்யா லைக்ஸ் குறைஞ்சிருக்கு?”

ஆனா, ஆரம்பத்துல அந்தப் பக்கத்தை ஓப்பன் பண்ணிப் பார்க்கவே முடியலை. வண்டிவண்டியாத் திட்டி கமென்ட்ஸ் போட்டிருந்தாங்க. விஷயத்தை தலைவர்கிட்ட தயங்கித் தயங்கிச் சொன்னோம். 'கண்டபடி திட்டுவாங்களே! அதெல்லாம் எனக்குப் பழகிருச்சு. திட்டுறதைப் பத்தி கவலைப்பட மாட்டீங்கன்னா, வேலைபாருங்க. அதைப் பத்தி கவலைப்பட்டா, வேலையே பார்க்க முடியாது’னு சிரிச்சுட்டே சொல்லி திட்டுக்களைச் சமாளிக்க நிறைய ஐடியாஸ் கொடுத்தார்.  ஃபேஸ்புக் பத்தி முழுசாத் தெரிஞ்சதும் தலைவர் செமத்தியா பிக்கப் ஆகிட்டார். ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் எவ்வளவு லைக்ஸ் வருது, எந்த மாதிரி ஸ்டேட்டஸ் போட்டா லைக்ஸ் கூடும், எதெல்லாம் நிறைய ஷேர் ஆகுதுனு அப்பப்போ விவரம் கேட்பார். திடீர்னு வேற ஏதோ ஒரு விஷயம் வைரல் ஆகி, இவர் பேஜ்ல லைக் குறைஞ்சா, 'என்னய்யா லைக்ஸ் குறைஞ்சிடுச்சு? என்ன பண்றது இப்போ?’னு தீவிரமா விசாரிப்பார். 'நீங்க அ.தி.மு.க அரசாங்கத்தை விமர்சனம் பண்ணும் அறிக்கைகளுக்கு நிறைய லைக்ஸ், ஷேர் வருது’னு சொன்னோம். அப்புறம்தான் அரசாங்கத்தை விமர்சிச்சு நிறைய அறிக்கைகள் கொடுக்க ஆரம்பிச்சார். இப்போ தினமுமே தலைவருக்கு அன்னன்னைக்கு அப்டேட்ஸ் கொடுத்துட்டு இருக்கோம்!'' என்று முடித்தார் நவீன்.

"என்னய்யா லைக்ஸ் குறைஞ்சிருக்கு?”

''திடீர் திடீரென எதிர்பார்க்காத கோணத்தில் அறிக்கை விடுகிறாரே... அந்த ஐடியாவெல்லாம் யாருடையது?'' என்று கேட்டபோது, ''வேற யாரு..? தலைவர் ஐடியாதான்!'' என்று சொல்லி விவரிக்கத் தொடங்கினார் சுரேஷ்.

''ஒருநாள் 'யாருய்யா இந்த ஃபேஸ்புக், ட்விட்டர்லாம் கண்டுபிடிச்சது?’னு கேட்டார் தலைவர். நாங்க ஃபேஸ்புக் ஆரம்பிச்ச மார்க் ஸக்கர்பெர்க், ட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்ஸேவை பத்தி விளக்கமா சொன்னோம். 'பரவாயில்லையே... இந்தச் சின்ன வயசுலயே இவ்வளவு சாதனைகள் பண்ணியிருக்காங்க. அவங்களைப் பாராட்டி ஓர் அறிக்கை விடலாம்யா’னு உடனே பேப்பர் பேனா எடுத்து எழுத ஆரம்பிச்சிட்டார். 'அவங்க கண்டுபிடிச்சதை நாம பயன்படுத்துறோம். அதுக்கு அவங்களுக்கு சின்னதா நன்றிகூட சொல்லலைனா எப்படி?’னு அவர் கேட்டதும்,  'அட... ஆமாம்ல. இது ஒபாமாவுக்கே தோணாத ஆங்கிளா இருக்கே’னு எங்களுக்குத் தோணுச்சு.

ஒருநாள் சச்சின் எழுதின சுயசரிதை புத்தகம் பத்தி செய்தி பரபரப்பா இருந்தப்ப, தலைவர் அந்தப் புத்தகத்தைப் படிக்கக் கேட்டார். வாங்கிக் கொடுத்தோம். படிச்சுட்டே இருந்தவர் எங்களைக் கூப்பிட்டு, 'இந்தப் புத்தகத்தை நான் படிக்கிற மாதிரி போட்டோ எடுத்துப் போடுங்கய்யா. நிறைய லைக்ஸ் வரும்’னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே அந்த போட்டோவுக்கு லைக்ஸ் பிச்சுக்கிச்சு. சச்சினோட மேனேஜர் லைன்ல வந்து நன்றி சொன்னார். இதே மாதிரிதான் ரோஹித் ஷர்மா கிரிக்கெட்ல        264 ரன் அடிச்சு அது வைரல் பரபரப்பா இருந்தப்ப, உடனே அவரைப் பாராட்டி அறிக்கை ரெடி பண்ணி போஸ்ட் பண்ணச் சொன்னார்.

"என்னய்யா லைக்ஸ் குறைஞ்சிருக்கு?”

ஒருநாள் எங்களை தனியாக் கூப்பிட்டுப் பேசினார் தலைவர். 'நீங்க இனிமே ரொம்பக் கவனமா இருக்கணும். உங்க குடும்பத்தை நல்லபடியா பாத்துக்கங்க. என்கூட அடிக்கடி நீங்க பேச வர்றதால, நம்ம கட்சியிலேயே சிலர் பொறாமைப்படலாம். எதிர்க்கட்சிகாரங்க ஏதாவது இடைஞ்சல் பண்ணலாம். எனக்காக வேலை செய்றீங்க. என்னால் உங்களுக்கு எந்தத் தொந்தரவோ, ஆபத்தோ வந்துடக் கூடாது’னு அவர் சொன்னப்ப, அவரோட அன்பையும்அக்கறையையும் பார்த்து நாங்க நெகிழ்ந்துட்டோம்!'' என்கிற சுரேஷ் நெகிழ, ''இதுக்கு எவ்வளவு சம்பளம் வாங்குறீங்க?'' என்று கேட்டேன்.

''நீங்க கேட்பீங்கனு தெரியும். ஆனா, இதுவரை ஐயாகிட்ட இருந்து ஒரு ரூபாய்கூட  சம்பளமா வாங்கினது இல்லை. அவர்கூட வேலைபார்க்கிறதே பெரிய பாக்கியம். பணம் எங்களுக்குப் பிரச்னையே இல்லை. மாயாவதி, சரத்பவார்னு பல அரசியல்வாதிகள் அவங்களுக்காக வேலைபார்க்க, பிரசாரம் பண்ண எங்களைக் கூப்பிட்டாங்க. ஆனா, நாங்கதான் தலைவருக்காக வேலை செய்றதே போதும்னு இங்கேயே இருக்கோம். தலைவர்கிட்ட எப்படியாவது லைக்ஸ் வாங்கிரணும். அதைவிட வேற எங்களுக்கு என்ன பெரிய சம்பளம் வேணும்?'' என்கிறார்கள்  இருவரும்.

நல்லா பண்றீங்கப்பா!