Published:Updated:

"ஸ்டாலின் விவகாரம் என்னோடு போகட்டும்!”

காங்கிரஸுக்குத் தாவிய குஷ்பு குபீர்

குஷ்புவின் அரசியல் பயணம் இனி... இந்தியா முழுவதும். இதுவரை ஒரு மாநிலக் கட்சியில் இருந்து தமிழகத்துக்குள் அரசியல் நடத்தி வந்த அவர், அகில இந்தியக் கட்சி ஒன்றில் இணைந்ததன் மூலம் அகில இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துவிட்டார். ஜி.கே.வாசன் ஏராளமான தொண்டர்களுடன் தனிக் கட்சியை உருவாக்கிய சரிவை எப்படி சமாளிப்பது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை யோசித்துவந்த வேளையில், குஷ்புவை தனது இல்லத்துக்கு அழைத்து மரியாதை கொடுத்துள்ளார் சோனியா. இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் இருந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பே, 'நான் ஒரு முடிவு எடுக்கப் போகிறேன், அதற்காகக் காத்திருங்கள்’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குஷ்பு தகவல் பரப்பினார். அதில் இருந்தே அவர் ஏதாவது அரசியல் முடிவை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. யாரையும் ஏமாற்றவில்லை குஷ்பு.

"ஸ்டாலின் விவகாரம் என்னோடு போகட்டும்!”

 ''என் அர்ப்பணிப்பும் உழைப்பும் ஒருவழிப் பாதையாகவே தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலை கழகத்தில் உள்ளபோது, நான் தேர்ந்தெடுத்தப் பாதையும் பயணமும் தாங்க இயலாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே    தி.மு.கவில் இருந்து விலகுவது என்ற முடிவை கனத்த இதயத்துடன் மேற்கொள்கிறேன்''  கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி இப்படியொரு அறிக்கையைவிட்டு,     தி.மு.கவில் இருந்து விலகினார் குஷ்பு. சரியாக ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். ''இப்போதுதான் மனசுக்கு ரொம்பவும் அமைதியாகவும், நிம்மதியாகவும் இருக்கிறது. இனி என்னோட பாதை, பயணம் எல்லாமே சந்தோஷமாக இருக்கும்!' என்று உற்சாகமாகப் பேசுகிறார் குஷ்பு. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

''திராவிடக் கட்சியில் இருந்து  திடீரென்று காங்கிரஸில் சேர்ந்துவிட்டீர்களே?'

''நான் ஏதோ நேற்று யோசித்து இன்று வந்து காங்கிரஸில் சேர்ந்துட்டேன்னு நினைக்க வேண்டாம். தி.மு.கவில் இருந்து விலகியதில் இருந்தே நிதானமாக யோசித்து எடுத்த முடிவுதான். நான் பி.ஜே.பியில்தான் சேருவேன் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். பேசினார்கள். ஆனால், நான் என் முடிவில் தெளிவாக இருந்தேன். இப்போது எல்லோரும் அதிர்ச்சியாகப் பார்க்கிறார்கள்.

இந்தியாவில் பல்வேறு மதம், மொழியைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். இங்கே சாதி, மத பேதம் தலைவிரித்தாடாமல் அமைதியான பூமியாக காக்கும் மாபெரும் சக்தி காங்கிரஸ் கரங்களில்தான் இருக்கிறது. அந்த சக்தி இந்தியாவில் வேறு எந்தக் கட்சிக்கும் இல்லை அதனால் காங்கிரஸில் இணைந்தேன். காங்கிரஸ் இன்று மத்தியில் ஆளும் கட்சியாக இல்லாமல் இருக்கலாம். நாளை இந்தியாவை ஆளப்போகும் கட்சி அதுதான். எல்லோரும் அலை அடிக்கிற பக்கமே படகை ஓட்டுவார்கள். எனக்கு அதில் விருப்பம் இல்லை. எதிர் அலையில் படகை ஓட்ட வேண்டும்.'

''நடிகர் கார்த்திக் ஆலோசனைப்படிதான் நீங்கள் காங்கிரஸில் இணைந்ததாகச் சொல்கிறார்களே?'

''கார்த்திக் என்னுடைய குடும்ப நண்பர். அரசியல் பற்றியெல்லாம் நான் அவரிடம் பேசவில்லை. ஆனால், காங்கிரஸில் நான் சேரப் போகிறேன் என்பது அவருக்குத் தெரியும். சோனியா மேடத்தை சந்திக்க டெல்லிக்கு கிளம்புவதற்கு முன்பு அவரிடம் பேசினேன். நான் டெல்லி செல்லும் தகவலை அவரிடம் சொல்லிவிட்டுப் போனேன்.'

"ஸ்டாலின் விவகாரம் என்னோடு போகட்டும்!”

''என்ன சொன்னாங்க சோனியா?'

''இந்தியாவில் பெண்கள் சமூகத்தின் மிகப்பெரிய லெஜன்ட் சோனியா மேடம்! அவங்களை நேரில் பார்க்கும்போது ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. என்னிடம் ரொம்பவும் அன்பாகப் பேசினார். என்னோட குடும்பத்தைப் பற்றியும் குழந்தைகள் பற்றியும் அக்கறையோடு விசாரித்தார். 'நீங்க காங்கிரஸுக்கு வந்தது எங்களுக்கு சந்தோஷம். நல்லா வொர்க் பண்ணுங்க!’னு சொல்லி அனுப்பினார்!'

''தமிழ்நாட்டு அரசியலில் நீங்க கற்றுக்கொண்டது என்ன?'

''நான் அரசியலில் இருந்தது தி.மு.கவில் மட்டும்தான்! அதனால் நான் கத்துக்கிட்டது எல்லாமே தி.மு.கவில் இருந்து மட்டும்தான். 'நேர்மையாக இருக்க வேண்டும், உண்மையாக இருக்க வேண்டும், எதுக்கும் பயந்து ஓடிடக் கூடாது.’ இந்த மூன்று விஷயங்களையும்தான் நான் அரசியலுக்கு வந்து கத்துக்கிட்டேன். அதுபடித்தான் நான் இன்று வரைக்கும் இருக்கிறேன். நான் அரசியலுக்கு வந்த பிறகு மக்களை நேரடியாகச் சந்திக்க நிறைய வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் பிரச்னைகளை நானே பல இடங்களில் நேரடியாகக் கேட்டிருக்கிறேன். மக்களைப் பொறுத்தவரைக்கும் எது உண்மை... எது பொய் என்று யோசிப்பதே இல்லை. சிலர் பரப்பிவிடும் வதந்திகளைக்கூட உண்மை என்று நம்பிவிடுகிறார்கள். அதனால் எங்கேயும் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன்.'

''காங்கிரஸ் கட்சியுடன் ஒருவேளை தி.மு.க. கூட்டணி வைத்துக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. அந்தச் சூழ்நிலை உங்களுக்கு தர்மசங்கடத்தை உண்டாக்காதா?'

''வருவதற்கு முன்பே நாம் ஏன் அதைப் பற்றி யோசிக்கணும். வரட்டும் பார்த்துக்கலாம். நான் தி.மு.கவை விட்டு வந்துட்டதால் அங்கே இருக்கும் எல்லோர் கூடவும் சண்டை போட்டுக்கிட்டு வரவில்லையே... தி.மு.கவில் இருப்பவர்களும் எனக்கு நண்பர்கள்தான். தலைவர்மீது அன்பும் மரியாதையும் எனக்கு எப்போதும் உண்டு. இப்போதும் சொல்கிறேன்... என்னைப் பொறுத்தவரை கலைஞர் அவர்கள் மிகச் சிறந்த தலைவர். அதில் எந்த மாற்றமும் கிடையாது. அதனால் எந்தச் சூழ்நிலையிலும் எனக்கு வருத்தங்கள் வராது!'

"ஸ்டாலின் விவகாரம் என்னோடு போகட்டும்!”

''தி.மு.கவில் இருந்து விலகியதற்கு ஸ்டாலின்தான் காரணம் என்று ஒரு பரவலான பேச்சு அப்போது கிளம்பியது. இப்போதாவது உண்மையான காரணத்தை நீங்கள் சொல்லக்கூடாதா?'

''எல்லோரும் பேசிட்டு இருக்கிறார்கள் என்பதற்காக நான் இதற்கு பதில் சொல்ல முடியாது. உண்மை என்ன என்று தெரியாமல் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் விஷயம் மண்டைக்குள் ஓடிட்டு இருக்கும். ஓடட்டும். ஒவ்வொருத்தரோட மனசுக்கு ஏற்ற மாதிரி என்ன நினைக்கிறார்களோ நினைக்கட்டும். கதையும் கட்டட்டும். என்ன நடந்தது என்பதை நான் அப்பவும் சொல்லலை. இப்பவும் சொல்லலை. நாளைக்கும் சொல்லப்போவது இல்லை. அது எதுவாக இருந்தாலும் என்னோடு போகட்டும்!'

''ஜெயலலிதாவுக்குச் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டது பற்றி?'

''நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கினால் அதை யாரும் விமர்சனம் செய்யக்கூடாது. ஆனால், தமிழ்நாட்டில் அவங்க கட்சியைச் சேர்ந்தவர்கள் நீதிபதியைப் பற்றி தவறாகப் பேசுவதும், தீர்ப்பை விமர்சனம் செய்வதுமாக இருக்கிறார்கள். இது எல்லாமே தவறு என்பதை அவர்கள் உணர வேண்டும். இப்படிச் செய்வதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வருமே தவிர, ஜெயலலிதாவுக்கு எந்த நல்லதும் நடக்காது. அவருக்கு நல்லது செய்வதாக நினைத்து கெடுதல்தான் செய்கிறார்கள்.'

''தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சி எப்படி இருக்கிறது?'

''அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் இப்போதுதான் காங்கிரஸ் கட்சிக்கு வந்திருக்கிறேன். காங்கிரஸ் கட்சியைப் பற்றி கேளுங்கள் சொல்கிறேன். பன்னீர்செல்வத்தின் ஆட்சி பற்றி நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!'

''சரி, காங்கிரஸ் கட்சியில் நிறைய கோஷ்டிகள் இருக்குமே... அதை எப்படி சமாளிக்கப்போறீங்க?'

''காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் பரவி பரந்து இருக்கும் பேரியக்கம். இந்தியா முழுக்க நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள். அதனால் கருத்து மாற்றங்கள் வருவது இயல்புதான். அதை கோஷ்டி என்று சொல்வது தவறு. வேலைகளை செய்வதற்கு இந்தியா முழுக்க நிறைய பேர் இருக்கிறோம் என்பதுதான் உண்மை.'

"ஸ்டாலின் விவகாரம் என்னோடு போகட்டும்!”

''தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த என்ன திட்டம் வெச்சிருக்கீங்க?''

''வயதில் மூத்தவர்கள் ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு தெருவிலும் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேருமே காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள். மனதுக்குள் காங்கிரஸ் கட்சியை நேசிப்பவர்கள். அவர்களை நாம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தவில்லை. நான் சென்னைக்கு வந்ததும், ஒவ்வொரு ஊராகச் சென்று காங்கிரஸ் கட்சியின் தேசப்பற்று குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்வேன். கட்சிக்குள் இருந்து ஒதுங்கி இருப்பவர்களையும் முழுமையாக இயக்கத்துக்குள் கொண்டு வர பாடுபடுவேன். எனது அரசியல் செயல்பாடு என்பது தமிழகத்துக்குள் மட்டும் முடங்கிவிடாது. இந்தியா முழுக்க காங்கிரஸ் கட்சியை வளர்க்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வேன்!'

மீண்டும் புறப்பட்டுவிட்டது குஷ்பு புயல்!

கே.ராஜாதிருவேங்கடம், எம்.குணா

படம்: கே.ராஜசேகரன்

அடுத்த கட்டுரைக்கு