Published:Updated:

கழுகார் பதில்கள்!

ஆக்‌ஷன் எல்லாம் சினிமாவில் மட்டும்தானா?

பிரீமியம் ஸ்டோரி

ரேவதிப்ரியன், ஈரோடு-1.

கழுகார் பதில்கள்!

நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் முதல்வர் பதவி வகிக்கும்  ஓ.பன்னீர்செல்வம், தனது முதல்வர் இருக்கையில் அமராமல் நிதி அமைச்சர் ஆசனத்தில் அமர்ந்தது பணிவின் வெளிப்பாடா?

நடிப்பின் வெளிப்பாடு!

இன்னும் முதல்வருக்கான அறைக்கு பன்னீர்செல்வம் போகவில்லை. தன்னுடைய அறையில் முதல்வர் என்று பெயர்ப்பலகை வைத்துக்கொள்ளவில்லை. தனது வீட்டின் பெயர் பலகையிலும் மாறுதல் செய்யவில்லை. இப்படி எல்லாம் பன்னீர் இருப்பது சுயவிருப்பமாக இருக்காது. முதல்வர் என்று தன்னைச் சொல்லிக்கொண்டால் 'மக்கள் முதல்வருக்கு’ப் பிடிக்காது என்பதற்காக இப்படி இருக்கலாம். போலியாகக்கூட தன் முன்னால் அனைவரும் நடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களைப் பற்றி என்ன சொல்ல முடியும். உலக யதார்த்தத்துக்கு வர விரும்பாமல் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறார்கள்!

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

காந்தியின் சுயசரிதை மனம்திறந்த புத்தகமாக இருந்ததுதானே அதன் பலம்?

அது மட்டுமல்ல, அப்படி மனம்திறந்த புத்தகத்தை மற்ற யாரும் எழுதாததும் ஒரு காரணம்!

எம்.ஜி.ஆர். மனோகரன், சின்னத்தாராபுரம்.

எல்லா அரசியல் கட்சிகளிலும் கோஷ்டி பூசல் அதிகரிப்பது ஏன்?

அரசியல் என்பது மக்களுக்குச் சேவை செய்வதாக இருந்திருந்தால், கோஷ்டிப்பூசல் அதிகரிக்காது. சுயநல நோக்கம் அதிகமாகத் தலை தூக்குவதால், கோஷ்டிப்பூசல் அதிகரிக்கத்தான் செய்யும்!

'அரசியல் என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் என்று யாரோ சொன்னார்கள். இல்லை, அதுதான் முதல் புகலிடம்’ என்று கண்ணதாசன் சொன்னது அதனால்தான்!

மேட்டுப்பாளையம் மனோகர்,  சென்னை. 'மூப்பனாரையும் ஜி.கே.வாசனையும் தமிழகக் கிராம மக்களுக்குத் தெரியாது’ என்கிறாரே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்?

கழுகார் பதில்கள்!

இவர் என்ன எம்.ஜி.ஆரா? இளங்கோவனை அனைத்துக் கிராமங்களும் அறியுமா?

இளங்கோவனைப் பற்றியோ, காங்கிரஸைப் பற்றியோ ஜி.கே.வாசனோ, த.மா.காவினரோ பேசாமல் இருக்கும்போது, இவர் ஏன் வலியப்போய் வம்பு இழுக்க வேண்டும்?

'மூப்பனார் கார் ஓட்டத் தெரியாமல், யார் மீதாவது விட்டு ஆக்ஸிடென்ட் செய்து சிறைக்கு போயிருந்தால்தான் உண்டு’ என்ற அளவுக்கு எல்லாம் இறங்கிப்போய் இளங்கோவன் பேசத் தேவை இல்லை. அவரது அப்பா,  

ஈ.வெ.கி.சம்பத்துக்கு 'சொல்லின் செல்வர்’ என்று பெயர். நாடாளுமன்றத்தில் அவர் பேசும்போது எதிராளிகளும் மெய் மறந்து அவரது பேச்சைக் கேட்பார்கள் என்று சொல்வார்கள். அப்படிப்பட்டவரின் மகன் பேசினால், எல்லோரும் காதை மூடிக்கொண்டு சென்று விடுவார்கள் என்று பெயர் வாங்கிவிடக் கூடாது!

 லட்சுமிகாந்தம், ப.வேலூர்.

 'காங்கிரஸை ஜெயிக்கவைப்பேன்’ என்கிறாரே குஷ்பு?

சட்டமன்றத்திலா, நாடாளுமன்றத்திலா, சென்னை கார்ப்பரேஷன் தேர்தலிலா, விழுப்புரம் கவுன்சிலர் தேர்தலிலா.... எதில் என்று சொல்லவில்லையே குஷ்பு. அப்புறம் ஏன் கவலைப்படுகிறீர்கள்?

 எஸ்.அஜீம், உடையார்பாளையம்.

மக்களின் முதல்வர் கூடிய விரைவில் தமிழக முதல்வர் ஆக டிப்ஸ் தாருங்கள்?

இதற்கெல்லாம் எதற்கு டிப்ஸ்? சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை சட்டரீதியாக, தள்ளிப்போடாமல் வாய்தா வாங்காமல் இனியாவது சந்தியுங்கள்!

டி.சி.இமானுவேல், மயிலாடுதுறை.

கழுகார் பதில்கள்!

தி.மு.க உட்கட்சித் தேர்தலில் ராமநாதபுரம் கட்சித் தொண்டரான வேலு தொடர்ந்த வழக்கில் பொதுச் செயலாளர் அன்பழகன் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் வந்துள்ளதே?

ராமநாதபுரத்தில் மட்டுமல்ல, நெல்லையில் இருந்தும் அப்படி ஒரு தகவல். நெல்லையில் அன்பழகனுக்கு மட்டுமல்ல, கருணாநிதிக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதுவரை எல்லா பஞ்சாயத்துகளும் அறிவாலயத்துக்குள் மட்டுமே நடந்து வந்தன. இப்போது நீதிமன்றம் வரை வந்துவிட்டது. குடும்பத் தகராறு வாசலைத் தாண்டக் கூடாது என்பார்கள். அது கட்சித் தகராறுக்கும் பொருந்தும். இந்தத் தேர்தலில் விதிமுறைகள் தங்கள் வசதிக்கு ஏற்ப வளைக்கப்படுகின்றன. அதனைத் தலைமை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அதனால்தான் நீதிமன்றத்தில் போய் நீதியைத் தேடுகிறார்கள். 'நெஞ்சுக்கு நீதி’ எழுதியவரும் இதனைத் தடுக்க முடியாமல் தவிப்பதுதான் சோகமானது!

 எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

பல்வேறு குற்றங்களுக்குக் காரணமான மதுவை நீக்கி, மது விலக்கை உடனடியாக ஏன் அமல்படுத்தக்கூடாது என்று உயர் நீதிமன்றம் யோசிக்கும்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு யோசிக்கத் தயங்குவது ஏன்?

உயர் நீதிமன்றம் பார்ப்பது சமுதாய நீதியை. அரசாங்கம் பார்ப்பது அதிலிருந்து கிடைக்கும் நிதியை. சிக்கல் இதுதான்!

 'ஒரு மாதத்துக்குப் பிறகு இப்போதுதான் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறேன். பேப்பர் படிக்கவில்லை, டி.வி. பார்க்கவில்லை... அதனால் செய்திகள் என்ன என்பது எனக்குத் தெரியாது. அதனைத் தெரிந்துகொண்ட பிறகுதான் பதில் சொல்ல முடியும்’ என்று எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?

வெளிநாட்டில் இருந்ததால் தமிழக செய்தித்தாள்களைப் படிக்கவில்லை என்கிறார் விஜயகாந்த். இங்கே இருக்கும்போதாவது தமிழக செய்தித்தாள்களைப் படித்தாரா? அனைத்து விஷயங்களுக்கும் ரியாக்‌ஷன் சொன்னாரா?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

 கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002 kalugu@vikatan.com என்ற முகவரியிலும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு