Published:Updated:

மிஸ்டர் கழுகு: மாஜிக்களை காப்பாற்றும் ஸ்டாலின்?

மிஸ்டர் கழுகு: மாஜிக்களை காப்பாற்றும் ஸ்டாலின்?

மிஸ்டர் கழுகு: மாஜிக்களை காப்பாற்றும் ஸ்டாலின்?

''தி.மு.கவில் நடக்கத் தொடங்கி இருக்கும் அடிதடி ரகளைகளைப் பற்றி அப்புறம் சொல்றேன்... முதலில் ஐந்து பெண்களைப் பற்றிச் சொல்கிறேன்!' என்றபடி வந்து அமர்ந்த கழுகார், இஞ்சி டீயை உறிஞ்சியபடியே ஆரம்பித்தார்.

மிஸ்டர் கழுகு: மாஜிக்களை காப்பாற்றும் ஸ்டாலின்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''தி.மு.கவில் ஐந்து மாவட்டச் செயலாளர் பதவிகளுக்குப் பெண்களை நியமிக்க தலைமை முடிவு எடுத்துள்ளதாம். 'பெண்களையும் மாவட்டச் செயலாளர்களாக ஆக்க வேண்டும்’ என்று கருணாநிதி சொல்ல... அதற்கு ஸ்டாலினும் தலையாட்டி இருக்கிறாராம். அந்த ஐந்து பெண்களைத் தேர்வுசெய்யும் பொறுப்பு ஸ்டாலின் கைக்குப் போயிருக்கிறது. முதல்கட்டமாகக் கிடைத்த தகவலைச் சொல்லிவிடுகிறேன். ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் தற்போது நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மாவட்டச் செயலாளராகப் பெண்ணை நியமிக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. கோவை பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் மீனா லோகநாதன். கோவை மாநகராட்சியில் கடந்த நான்கு முறையாகத் தொடர்ந்து கவுன்சிலராக இருக்கிறார். ஸ்டாலினின் தீவிரமான ஆதரவாளர். கடந்த ஆண்டு கருணாநிதியின் பிறந்தநாள் சமயத்திலும், ஸ்டாலின் பிறந்தநாளின்போதும், அவர்களுக்காக பாடல்களை எழுதி, அதை அவரே பாடி சி.டி வெளியிட்டுள்ளார். அண்மையில் கோவை மாநகராட்சிக் கூட்டத்தில், 'தண்டனை நிரூபிக்கப்பட்ட ஒரு குற்றவாளியின் படத்தை எப்படி நீங்க மாநகராட்சியில் மாட்டலாம்?’ என்று ஆக்ரோஷமாக ஜெயலலிதா படத்தை சேதப்படுத்தினார். இதைக் கேள்விப்பட்ட கருணாநிதி, மீனாவை சென்னைக்கு அழைத்துப் பாராட்டுப் பத்திரம் வாசித்து அனுப்பியிருக்கிறார். அதனால் மீனாவுக்கு நிச்சயம் வாய்ப்பு இருக்கும் என்கிறார்கள்!'

''அடுத்து?'

''சேலம் உமாராணி! சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்கு தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கியவர். ஸ்டாலின் சொல்லுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்.  பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், வீரபாண்டி ராஜா, எஸ்.ஆர்.சிவலிங்கம் என்று சேலத்தில் இருக்கும் பல கோஷ்டிகளுக்கு மத்தியில் அங்கே ஒரு பெண்ணுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று தி.மு.க தலைமை நினைக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் வேலை பார்த்த அனுபவம் இருப்பதால் உமாராணிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்று சொல்கிறார்கள். கடந்த 2009-ம் ஆண்டு திருவள்ளூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளராக நிறுத்தப்பட்ட காயத்ரி தரன் பெயரும் அடிபடுகிறது. அந்தத் தேர்தலில் காயத்ரி தோல்வியைத் தழுவினார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் திருவள்ளூர் தொகுதி காயத்ரிக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனாலும், தேர்தல் சமயத்தில் சளைக்காமல் வேலை பார்த்தார் காயத்ரி. இவரும் ஸ்டாலின் ஆதரவாளர். அதனால் காயத்ரிக்கு திருவள்ளூர் கைகூடிவரும் என்று எதிர்பார்க்கிறார்கள்!'

''ம்!'

''முன்னாள் அமைச்சர்கள் தமிழரசியும், கீதாஜீவனும் மாவட்டச் செயலாளர் ஆக்கப்படலாம் என்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் தெற்கு மாவட்டச் செயலாளராக கீதா ஜீவன் ஆகலாம். அவரது அப்பாவும் ஒன்றுபட்ட தூத்துக்குடி மாவட்டச் செயலாளருமான என்.பெரியசாமி இதற்கு இன்னும் தலையாட்டவில்லையாம். அப்பாவின் முடிவைப் பொறுத்து மகள் மாவட்டச் செயலாளர் ஆகலாம் என்கிறார்கள். தமிழரசிக்கு மதுரை புறநகர் தெற்கு கிடைக்கலாம் என்பது தகவல். இந்த அடிப்படையில் பார்த்தால் 5 பெண்கள் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள்.

மிஸ்டர் கழுகு: மாஜிக்களை காப்பாற்றும் ஸ்டாலின்?

தி.மு.கவில் கரூர் வாசுகி முருகேசனுக்குப் பிறகு பெண் மாவட்டச் செயலாளர்கள் இல்லை. அந்தக் குறையைப் போக்க இந்த ஐந்து பேரும் வருவார்கள் என்று சொல்கிறார்கள்!'

''களேபரங்களைச் சொல்லும்!'

''தி.மு.கவில் மாற்றியமைக்கப்பட்ட 65 மாவட்டத்துக்கும் புதிய செயலாளர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் அடுத்த சில தினங்களில் நடக்கவிருக்கிறது.

மிகப்பெரிய சீரமைப்பு நடவடிக்கையால் கட்சியில் பல காலம் ஆதிக்கம் செலுத்தி வந்தவர்கள் எல்லாம் காணாமல்போகும் சூழல் உண்டாகியிருக்கிறது. 'மாஜிக்களை மாற்றுங்கள்’ என்று எதிர் தரப்பு களமிறங்க.... இது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறத் தொடங்கி உள்ளது!'

''சொல்லும்!'

''தஞ்சை தெற்கு மாவட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏக்களான மகேஷ் கிருஷ்ணசாமி, துரை சந்திரசேகர் ஆகியோர் போட்டியில் உள்ளனர். இவர்கள் இருவரும் டி.ஆர்.பாலுவின் ஆதரவாளர்கள். எனவே பழனி மாணிக்கம் ஆதரவாளர்கள் அதனைத் தடுக்க முயற்சித்து வருகிறார்கள். ஒன்பது ஒன்றியச் செயலாளர்களை டி.ஆர்.பாலு வசப்படுத்தி விட்டார். அதனால் துரை சந்திரசேகர் பொறுப்புக்கு வர வாய்ப்பு இருக்கிறது.

மிஸ்டர் கழுகு: மாஜிக்களை காப்பாற்றும் ஸ்டாலின்?

தஞ்சை வடக்கு மாவட்டத்துக்கு கும்பகோணம் எம்.எல்.ஏவான சாக்கோட்டை அன்பழகன், ராமலிங்கம், கல்யாணசுந்தரம் ஆகியோர் போட்டியில் இருக்கிறார்கள். மாவட்டப் பொறுப்பை எங்களுக்கு விட்டுக் கொடுங்கள் என்று ராமலிங்கமும் கல்யாணசுந்தரமும் நேரடியாகவே சாக்கோட்டை அன்பழகனிடம் கேட்டிருக்கிறார்கள். உங்களில் யார் என்று முடிவு செய்துவிட்டு வாருங்கள் என அவர் சொல்லவும் இருவரும் அமைதியாக இருக்கிறார்கள். அதனால் இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என்கிறார்கள்!'

''கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூர்?'

''திருவாரூர் மாவட்டத்தில் தற்போதைய மாவட்ட செயலாளரான பூண்டி கலைவாணன் போட்டியில் இருப்பதால் அவரை எதிர்த்து டி.ஆர்.பி.ராஜா, நீடாமங்கலம் ராஜமாணிக்கம், தலையாமங்கலம் பாலு, அழகு திருநாவுக்கரசு ஆகியோர் என்ன செய்வதென்று தெரியாமல் தங்களது வேலைகளை அமைதியாகத் தொடங்கிவிட்டார்கள். இவர்கள் நால்வருக்கும் ஒற்றுமை இல்லாததால் பூண்டி கலைவாணன் மீண்டும் மாவட்டச் செயலாளர் ஆகலாம். நாகை வடக்கு மாவட்டத்தைக் கைப்பற்ற குத்தாலம் கல்யாணம் முயற்சிக்கிறார். அவரை எதிர்த்து ஏ.கே.எஸ்.விஜயனின் ஆதரவாளரான நிவேதா முருகன் களம் இறங்குகிறார். பெரும்பான்மை ஒன்றியச் செயலாளர்களின் ஆதரவு இல்லாத நிலையிலும், கட்சி மேலிடத்தின் செல்வாக்கு இருப்பதால் குத்தாலம் கல்யாணத்துக்கு வாய்ப்பு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். நாகை தெற்கு மாவட்டத்தின் பொறுப்பை தனக்குக் கொடுக்கும்படி ஏ.கே.எஸ்.விஜயன் மேலிடத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் எம்.எல்.ஏவான வேதரத்தினமும் களத்தில் இருக்கிறார். மருதூர் ஒன்றியத்தைத் தவிர அனைத்து ஒன்றிய நிர்வாகிகளும் விஜயனின் ஆதரவாளர்கள் என்பதால் மாவட்டப் பொறுப்பு அவருக்குக் கிடைப்பதற்கே அதிக வாய்ப்பு இருக்கிறது!'

''அடுத்து கரூர்?'

மிஸ்டர் கழுகு: மாஜிக்களை காப்பாற்றும் ஸ்டாலின்?

''தற்போதைய மாவட்டப் பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரனுக்கு எதிராக மாநில விவசாய அணிச் செயலாளரான சின்னசாமி காய் நகர்த்தி வருகிறார். ஆனாலும், வாய்ப்பு நன்னியூர் ராஜேந்திரனுக்கே கிடைக்கும் என்று சொல்கிறார்கள். இதற்கிடையில் கே.சி.பழனிசாமியும் ரேஸில் இருக்கிறார்!'

''பெரம்பலூர்?'

''இந்த மாவட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சொல்வதே வேதவாக்கு. ஆ.ராசா தன்னிடம் இருந்த மாவட்டச் செயலாளர் பொறுப்பை தனக்கு நெருக்கமாக இருந்த துரைசாமிக்குப் பெற்றுக் கொடுத்தார். ஆனால், தற்போது அவரின் செயல்பாடுகளில் ராசாவுக்கு திருப்தி இல்லையாம். அதனால், வேப்பூர் ஒன்றியச் செயலாளரான குன்னம் ராஜேந்திரன், தற்போதைய துணைச் செயலாளரான வெங்கடாசலம், முன்னாள் நகரச் செயலாளரான என்.ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் ஆ.ராசாவின் ஆசியுடன் பொறுப்புக்கு வரத்துடிக்கிறார்கள். இதில், குன்னம் ராஜேந்திரன் இப்போது ரேஸில் முந்திக்கொண்டு இருப்பதாகத் தகவல். பக்கத்தில் உள்ள அரியலூர் மாவட்டத்திலும் ஆ.ராசாவின் ஆதரவாளரே பொறுப்புக்கு வர முடியும். அந்த வகையில், ராசாவின் தீவிர ஆதரவாளரும் நம்பிக்கைக்கு உரியவருமான தற்போதைய மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் போட்டியின்றி இங்கு தேர்வாவார் என்கிறார்கள்.!'

''கோவை?'

''கோவை மாவட்டம் நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர் வடக்கு மாவட்டத்தில், தற்போதைய மாநகர் செயலாளர் வீரகோபால் போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக களமிறங்கப் போகிறவர் மீனா லோகநாதன். அவரைப் பற்றித்தான் ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேனே... கோவை மாநகர் தெற்கு மாவட்டத்தில் குறிச்சி பிரபாகரனும், முத்துசாமியும் போட்டியிட உள்ளனர். இருவரும் பொங்கலூர் பழனிசாமி ஆதரவாளர்களாக இருந்தவர்கள்தான். இப்போது குறிச்சி பிரபாகரன், பொங்கலூர் பழனிசாமி கோஷ்டியில் இருந்து, வீரகோபால் தரப்பில் சேர்ந்து  போட்டியிடுகிறார். இங்கே குறிச்சி பிரபாகரன் பக்கம்தான் காற்று பலமாக வீசுகிறது. கோவை புறநகர் வடக்கில் அண்மையில் கட்சியில் இருந்து நீக்கி, பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்ட டி.பி.சுப்பிரமணியம் போட்டியிட உள்ளார். இவரை எதிர்த்து, முன்னாள் எம்.எல்.ஏ மேட்டுப்பாளையம் அருண்குமார் போட்டியிட உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இங்கே டி.பி.சுப்பிரமணியம் ஆதரவு கொஞ்சம் கூடவே இருக்கிறது. கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தில் பொங்கலூர் ஆதரவாளர்கள் இருவர் போட்டியிட உள்ளனர். தென்றல் செல்வராஜ், நாகராஜ் ஆகியோர் போட்டியில் இருக்கிறார்கள்.'

''திருப்பூர்?'

மிஸ்டர் கழுகு: மாஜிக்களை காப்பாற்றும் ஸ்டாலின்?

''திருப்பூர் வடக்கில்தான் போட்டி கடுமையாக இருக்கும். தற்போதைய மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெள்ளக்கோவில் சாமிநாதன், தி.மு.க மாநகரச் செயலாளரும், முன்னாள் மேயருமான செல்வராஜும் இங்கு போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமியும் போட்டியிடக் கூடும். தெற்கு மாவட்டத்தைப் பொறுத்தவரை, மூலனூர் பத்மநாபன், உடுமலை வேலுசாமி, குண்டம் சேகர், பொங்கலூர் மணி ஆகியோர் போட்டியிடக்கூடும் என சொல்லப்படுகிறது. இதில் பத்மநாபன், வேலுசாமிக்கு வாய்ப்புகள் அதிகமாம்.'

''நீலகிரி எப்படி இருக்கு?'

''கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் அதிரடித் திருப்பமாக போட்டி இருக்கவே வாய்ப்பில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. அதன்படி தேர்தல் பணிச் செயலாளர் முபாரக், மாவட்டச் செயலாளர் இளித்துறை ராமச்சந்திரன் தரப்பு ஆகியோர் போட்டியைத் தவிர்க்க, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அறிவாலயத்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் முபாரக்கை மாவட்டச் செயலாளராகத் தேர்வுசெய்ய அனுமதித்துவிட்டதாக அறிவாலாய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!'

''தென் மாவட்டங்களைப் பற்றிச் சொல்லும்!'

''மதுரை மாநகர் மாவட்டம் (தெற்கு) பொறுப்புக்கு தற்போதைய புறநகர் மாவட்டச் செயலாளரான மூர்த்தி, கொட்டாம்பட்டி ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் தமிழரசி ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. மதுரை புறநகர் மாவட்டம் (தெற்கு) பொறுப்புக்கு சேடப்பட்டி முத்தையா, பொன்.முத்துராமலிங்கம் ஆகிய பெருந்தலைகளுடன் வி.கே.குருசாமி, எஸ்ஸார் கோபி ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இதில் சேடப்பட்டிக்கு வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மதுரை மாநகர் (வடக்கு) மாவட்டத்துக்கு தற்போதைய பொறுப்புக்குழு தலைவரான கோ.தளபதி களத்தில் இருக்கிறார். இவருக்கு ஸ்டாலின் ஆதரவு இருந்தாலும் அதே அளவு செல்வாக்கு பெற்ற ஜெயராமனும் வேலுச்சாமியும் எதிர்க்கிறார்கள். முடிவு, தளபதிக்கு சாதகமாக இருக்கலாம். இந்த மாவட்டத்தை தனது ஆதரவாளர் ஒருவருக்குத் தரவேண்டும் என்று அழகிரி கோரிக்கை வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மதுரை புறநகர் (வடக்கு) மாவட்டத்தில், பொன்.முத்துராமலிங்கத்தின் மகன் பொன்.சேது போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜெயராமன், கார்த்திகேயன் ஆகியோர் போட்டியிட இருக்கிறார்கள். இதில் பொன்.சேதுவுக்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாகச் சொல்கிறார்கள்!'

''மதுரையில்தான் அமைதியாக நடக்காதே?'

''சிவகங்கை மாவட்டச் செயலாளராக பெரியகருப்பன் இருந்தாலும் ஆக்டிங் மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சரான தென்னவன் இருப்பதாக ஏற்கெனவே கட்சிக்குள் புலம்பல் இருந்தது. நடந்து முடிந்த உட்கட்சி தேர்தலில், தென்னவன் கைகாட்டிய நபர்கள் பலருக்கு பெரியகருப்பன் வாய்ப்பு தந்ததால் அவருக்கு நெருக்கமாக இருந்த பலர் புகைச்சலில் உள்ளனர். பெரியகருப்பன் மீண்டும் போட்டியிட்டாலும் கணிசமான ஆதரவாளர்களை கையில் வைத்துள்ள தென்னவனுக்கும் அந்த ஆசை எட்டிப்பார்த்துள்ளது. இது தவிர, மாவட்டத் துணைச் செயலாளரான சேங்கை மாறனும் களத்தில் குதிக்கிறார். பள்ளத்துார் ரவி, ஜெயக்குமார், தியாகு ஆகியோரும் போட்டியிட உள்ளனர்.

தேனி மாவட்டச் செயலாளரான மூக்கையாவுக்கும், கம்பம் எம்.எல்.ஏவான ராமகிருஷ்ணனுக்கும் இடையே பலமான போட்டி நிலவுகிறது. ராமகிருஷ்ணன் மாவட்டச் செயலாளர் பதவிக்காகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தில் முத்தரையர் சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும் என்கிற பேச்சு நிலவுகிறது. ஆனால், ஆலங்குடியைச் சேர்ந்த கே.பி.கே.தங்கவேல், பொன்னமராவதியைச் சேர்ந்த ராஜு, அறந்தாங்கியைச் சேர்ந்த மெய்யநாதன் ஆகியோர் தற்போது களத்தில் இருக்கிறார்கள். இதில் மெய்யப்பனுக்கு வாய்ப்பு என்கிறார்கள்.'

''நெல்லைக்கு வாரும்!'

''நெல்லை மாவட்டம் கிழக்கு, மேற்கு, மாநகரம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. மாவட்டம் சுருக்கப்பட்டுவிட்டதால் தற்போதைய மாவட்டச் செயலாளரான கருப்பசாமி பாண்டியன், 'கலெக்டராக இருந்துவிட்டு தாசில்தாராக விரும்பவில்லை. அதனால் யார் வேண்டுமானாலும் போட்டியிட்டுக்கொள்ளுங்கள்’ என்று ஓபனாக அறிவித்து ஒதுங்கிக்கொண்டார்.

மிஸ்டர் கழுகு: மாஜிக்களை காப்பாற்றும் ஸ்டாலின்?

மாநகரச் செயலாளர் பொறுப்பில் தற்போது இருக்கும் அப்துல்வகாப்பும் மாணவரணிச் செயலாளரான அருண்குமாரும் போட்டியில் இருக்கிறார்கள். மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு வர கீழப்பாவூர் ஒன்றியச் செயலாளரான சிவபத்மநாபன் முயற்சி செய்தார். ஆனால், இரண்டு இடத்தில் அவருக்கு வாக்கு இருந்ததால் அவரைப் போட்டியில் இருந்து கழட்டிவிட ஏற்பாடு செய்தார், முன்னாள் அமைச்சர் பூங்கோதை. அவரும் போட்டியில் இருக்கிறார். இது தவிர, கருப்பசாமி பாண்டியனின் மகன் வி.கே.பி.சங்கரை அந்தப் பொறுப்புக்கு கொண்டு வர வேண்டும் என்பது அண்ணாச்சி குடும்பத்தினரின் விருப்பம். ஆனாலும், ஸ்டாலினுக்கு நெருக்கமான யு.எஸ்.டி.சீனிவாசனுக்கே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். நெல்லை கிழக்கு மாவட்டத்தைக் குறிவைத்து முன்னாள் எம்.எல்.ஏவான அப்பாவு, ஒன்றியச் செயலாளரான ஞானதிரவியம், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவரான கிரஹாம்பெல் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இது தவிர, முன்னாள் சபாநாயகரான ஆவுடையப்பனின் மகன் பிரபாகரனும் களத்தில் இருப்பதால் போட்டி அதிகம்.'

''குமரி?'

''கிழக்கு மாவட்டத்தில் சுரேஷ்ராஜனை எதிர்த்து மனோதங்கராஜின் சிஷ்யரும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளருமான செந்தில் முருகன் என்ற இளைஞர் நிறுத்தப்பட்டு இருக்கிறார். மேற்கு மாவட்டத்தில் மனோ தங்கராஜை எதிர்க்க, கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கேஸ்டன் என்பவரை சுரேஷ்ராஜன் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், அப்படி மாவட்டத்தை மாற்றி நிற்க கட்சித் தலைமை அனுமதி கொடுக்காததால் ஜீவராஜன் அல்லது முன்னாள் எம்.பியான ஹெலன் டேவிட்சனை களத்தில் இறக்க முயற்சி நடக்கிறது. ஆனாலும், மனோ தங்கராஜுக்கு பொறுப்பு கிடைக்கும் என்கிறார்கள்.

அப்படியே தெற்கே இருக்கும் மற்ற மாவட்டங்களைப் பற்றியும் சொல்லிடுறேன். தூத்துக்குடி மாவட்டத்தை வடக்கு, தெற்கு என பிரித்துள்ளனர். இந்த மாவட்டத்தில் 25 வருடங்களுக்கும் மேலாக மாவட்டப் பொறுப்பில் இருந்த பெரியசாமி, தனது மகன் ஜெகனை தெற்கு மாவட்டச் செயலாளராக்க ஆசைப்படுகிறார். அதற்கு ஏற்ற வகையில் அங்குள்ள முன்னாள் எம்.எல்.ஏவான அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது கட்சியில் இருந்து ஒதுங்கி இருப்பதால் ஜெகன் போட்டியின்றி தேர்வாகும் நிலைமை உள்ளது. பெண் மாவட்டச் செயலாளர் என்ற அடிபடையில் கீதாஜீவன் பெயரும் அடிபடுகிறது.

வடக்கு மாவட்டத்துக்கு பெரியசாமியின் தீவிர ஆதரவாளரான ராதாகிருஷ்ணன் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. ஆனால், கோவில்பட்டி தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவரான ராஜாராம் என்பவரும் களத்தில் உள்ளார். கட்சியின் மூத்த வழக்கறிஞரான கே.எஸ்.ராதாகிருஷ்ணனும் மாவட்டப் பொறுப்புக்கு வர விருப்பம் தெரிவித்து இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும். விருதுநகர் வடக்கு மாவட்டத்துக்கு தங்கம் தென்னரசுவும் தெற்கு மாவட்டத்துக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது. ராமநாதபுரத்தில், முதுகுளத்தூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் முருகவேல், சுப.தங்கவேலனுக்கு எதிராக களம் காண உள்ளார். ராமநாதபுரம் நகர தேர்தல் முறையாக நடக்கவில்லை என்பதால் அந்தத் தேர்தலைப் புறக்கணித்து ஒதுங்கியவர் முன்னாள் எம்.பியான பவானி ராஜேந்திரன். கட்சி தலைமை இசைவளித்தால்  மாவட்டச் செயலாளர் தேர்தலில் சுப.தங்கவேலனுக்கு எதிராக இவரும் போட்டியிடும் முடிவில் உள்ளார்!'

''வடக்கு மாவட்டங்களைப் பற்றிச் சொல்லும்!'

''கடலூர் கிழக்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை எதிர்த்து குழந்தை தமிழரசன், துரை. சரவணன் ஆகியோர் போட்டியிட உள்ளனர். மேற்கு மாவட்டத்தில் சபா.ராஜேந்திரன், டாக்டர். நந்தகோபால்கிருஷ்ணன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவினாலும் ராஜேந்திரனுக்கே வாய்ப்பு அதிகம். விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் கண்ணன், சேகர், மஸ்தான், வசந்தவேல் ஆகியோருக்கு இடையே போட்டி அதிகம் இருக்கிறது. தெற்கு மாவட்டத்தில் உதயசூரியன், ஆதிசங்கர் ஆகியோர் மோதுகிறார்கள். உதயசூரியனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்பதே நிலைமை. விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக க.பொன்முடி இருக்கிறார். ஆனாலும் அவரை எதிர்த்து புகழேந்தி களம் இறங்குகிறார். பொன்முடியாக பார்த்து ஒதுங்காவிட்டால் அவரை எதிர்த்து ஜெயிப்பது கடினம். பொன்முடிக்கு எதிராக கச்சைகட்டி வந்த புஷ்பராஜ் சமீபத்தில் நீக்கப்பட்டு உள்ளதால் பொன்முடிக்கு ஓரளவு நிம்மதி. திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தில் சிவானந்தமும், அன்பழகனும் போட்டியிடுகிறார்கள். தெற்கு மாவட்டத்தில் எ.வ.வேலு போட்டியிட்டால் அவரே மாவட்டச் செயலாளர். ஒருவேளை அவர் ஒதுங்கிக்கொண்டால் சாவல்பூண்டி சுந்தரேசனுக்கு வாய்ப்பு இருக்கிறது. வேலூர் கிழக்கு மாவட்டத்துக்கு அ.அசோகனை எதிர்த்து சுந்தரமூர்த்தி களம் இறங்கி உள்ளார். மேற்கு மாவட்டத்தில் சூரியகுமார், சிவாஜி, தேவராஜ் ஆகியோர் போட்டியிடக் கூடும். மத்திய மாவட்டத்தில் எ.பி.நந்தகுமாரும், வன்னியராஜாவும் மோதுகிறார்கள்.!'

''திருச்சி?'

''முன்னாள் அமைச்சர் செல்வராஜ், தொட்டியம் ஒன்றியச் செயலாளர் சீமானூர் பிரபு, லால்குடி எம்.எல்.ஏ செளந்திரபாண்டியன் உள்ளிட்டோர் வடக்கு மாவட்டத்துக்குப் போட்டியிடுகின்றனர். ஆனால், நேரு யாரை கைகாட்டுகிறாரோ அவர்தான் திருச்சி வடக்கு மாவட்டத் தலைவராக முடியும் என்பதால் செளந்திரபாண்டினுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்கிறார்கள். தெற்கு மாவட்டத்தைப் பொறுத்தவரை, முன்னாள் எம்.எல்.ஏவான கே.என்.சேகரன், அன்பில் பெரியசாமி, முன்னால் துணைமேயர் அன்பழகன் ஆகியோருடன்

கே.என்.நேருவின் நம்பிக்கைக்கு உரிய உதவியாளரான முத்து செல்வத்துக்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். நேருவின் எதிரியான செல்வராஜ், இவர்களது வெற்றியைத் தடுக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறார்!'

''சேலம் என்னாச்சு?'

''சேலம் கிழக்கு மாவட்டத்தில், வீரபாண்டி ராஜாவும், சிவலிங்கமும் போட்டியிட உள்ளனர். வீரபாண்டியார் குடும்பத்தில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதால் ராஜாவுக்கு கிடைக்கலாம். மேற்கு மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவரான மாவட்டப் பொருளாளர் மேட்டூர் கோபாலும் வட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜேஷும் போட்டியிட உள்ளனர். இங்கே கோபாலுக்கு வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். பவர் ஃபுல்லான மத்திய மாவட்டத்துக்குத்தான் உமாராணி பெயர் அடிபடுகிறது. டி.எம்.செல்வகணபதி, பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.''

'ஆக, தி.மு.கவில் களை கட்டுகிறது என்று சொல்லும்!'

''மாவட்டங்களின் எல்லையைப் பிரித்து சிறிய மாவட்டமாக ஆக்கக்கூடாது என்று மாஜி மந்திரிகளும் மாவட்டச் செயலாளர்களும் சொன்னார்கள். ஆனால் மாவட்டங்களைப் பிரிப்பதில் கருணாநிதியும் ஸ்டாலினும் உறுதியாக இருந்தார்கள். ஆனால் தங்களுக்கு மறுபடியும் வாய்ப்புத் தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். ஆரம்பத்தில் மாஜி மந்திரிகள், மாவட்டச் செயலாளர்களுக்கு எதிராக இருப்பதாகக் காட்டிக் கொண்ட ஸ்டாலின், தேர்தல் நெருங்க நெருங்க அவர்களையே மறுபடியும் பதவிக்கு கொண்டுவருவதற்கு ஆசீர்வாதம் செய்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். மாவட்டங்களைப் பிரித்தால் எங்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வேண்டாம் என்று சொன்னவர்கள், இப்போது மாவட்டச் செயலாளர் ஆவதற்கு ஆசைப்படுகிறார்கள். கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பொன்முடி, சுப.தங்கவேலன், தளபதி, தூத்துக்குடி பெரியசாமி, பொங்கலூர் பழனிசாமி... போன்றவர்களுக்கு எதிராக மாவட்டங்களில் கடுமையான போட்டிகள் உள்ளன. இதனை எப்படி சமாளிக்கப் போகிறார் ஸ்டாலின் என்பது தெரியவில்லை என்கிறார்கள். தி.மு.கவைப் பொறுத்தவரை 11ம் தேதி முதல் அக்னிபரீட்சை ஆரம்பம்!' என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்!

அட்டைப் படம்: எம்.விஜயகுமார்

'பி.ஜே.பிக்கு காங்கிரஸ் எவ்வளவோ மேல்!’

மிஸ்டர் கழுகு: மாஜிக்களை காப்பாற்றும் ஸ்டாலின்?

'பி.ஜே.பி கூட்டணியில் இருந்து ஒருவழியாக ம.தி.மு.க விலகிவிட்டது. கட்சியின் அவசர ஆலோசனை கூட்டத்தைக் கூட்டி இந்த முடிவை எடுத்திருக்கும் வைகோ, ''ஈழப் பிரச்னையில் பி.ஜே.பியைவிட காங்கிரஸ் எவ்வளவோ மேல். வாஜ்பாய் காலத்தில் இருந்த பி.ஜே.பி வேறு... இப்போது மோடி தலைமையில் இருக்கும் பி.ஜே.பியின் முகம் வேறு. ராஜபக்‌ஷேவை  மறைமுகமாக ஆதரித்தது காங்கிரஸ். ஆனால் பி.ஜே.பி வெளிப்படையாகவே அவரை ஆதரிக்கிறார்கள். அவரை அழைத்து பதவியேற்பு விழாவை நடத்துகிறார்கள். கொலைகார ராஜபக்‌ஷேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி சொல்கிறார். இதை அவர்கள் கண்டிக்கவில்லை. 1999-ல் வாஜ்பாய் ஆட்சியை ஒரு ஓட்டில் கவிழ்த்தபோது அதற்காக தேனீர் விருந்து நடத்தியவர் சுப்பிரமணியன் சுவாமி இந்த துரோகத்தை எல்லாம் மறந்துவிட்டு அவரை ஆதரிக்கிறது பி.ஜே.பி. என்னை மோசமாக விமர்சனம் செய்த ஹெச்.ராஜாவை அவர்கள் கண்டிக்கவில்லை. இவையெல்லாம்தான் கூட்டணியை விட்டு வெளியேறக் காரணம். திராவிட இயக்கக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லப் போகிறோம். அதற்காக இதை தேர்தல் கூட்டணி என நினைத்துவிட வேண்டாம்' என்று பேசியிருக்கிறார். வைகோ பொதுவாழ்வுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. அதற்காக பொதுவாழ்வு பொன்விழா மாநாட்டை அடுத்த ஆண்டு மே மாதம் சென்னையில் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.