Published:Updated:

மறுக்கப்படும் மண்ணெண்ணெய்!

மோடி அரசு முடிவின் பின்னணி

'இனி... மண்ணெண்ணெய்க்கு மானியம் கிடையாது, ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் வழங்கப்பட மாட்டாது’ என்ற மத்திய அரசின் அறிவிப்பு ஏழை மக்களை பதறவைத்துள்ளது!

இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்கள் சமையல் எரிவாயுவுக்கு மாறிவிட்டாலும், கெரசினை மட்டுமே நம்பியுள்ள குடும்பங்கள் பல லட்சம் உள்ளன. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் சுமார் 25 கோடி குடும்பங்கள் உள்ளன. அவற்றில் 50 லட்சம் குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு இல்லை. நம் நாட்டில் 10 ஆயிரம் விறகு அடுப்புகள் இருப்பதாகவும் இன்னும் மின்சாரத்தைப் பார்க்காத சுமார் ஒரு லட்சம் கிராமங்கள் இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மக்களின் ஒரே நம்பிக்கை மண்ணெண்ணெய்தான்.

மறுக்கப்படும் மண்ணெண்ணெய்!

இந்தச் சூழலில், அதற்கான மானியத்தை ரத்து செய்துவிட்டால், ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய்யை நிறுத்திவிட்டால், அதனை மட்டுமே நம்பியிருக்கும் மக்கள் என்ன செய்வார்கள்? அதைப்பற்றி எந்த சிந்தனையும் கவலையும் இல்லாமல், ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில், அமைச்சரவை முடிவாகக்கூட எடுக்காமல், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார், நிதி மந்திரி அருண் ஜெட்லி.

மானியங்களை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதைத் தவிர, இந்த முடிவுக்கு வேறு எந்தக் காரணமும் இல்லை. மானியங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பது முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு கூட்டணி அரசின் கொள்கை முடிவு. அதற்கான நடவடிக்கைகளை முந்தைய அரசு எடுத்தபோதெல்லாம், எதிர்க் கட்சியான பி.ஜே.பி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மானியங்கள் குறைக்கப்படுவதை 'கிரிமினல் இன்ஜஸ்டிஸ்’ என்றுகூட பி.ஜே.பி தலைவர்கள் விமர்சனம் செய்தனர். அவர்களும் இப்போது, மானியங்களை ஒழித்துக்கட்டிவிட்டுத்தான் மறுவேலை என்று கங்கனம் கட்டிக்கொண்டு இறங்கியுள்ளனர்.

மானியங்களை ஒழிப்பதில் காங்கிரஸ், பி.ஜே.பி ஆட்சியாளர்களுக்குள் எந்த வித்தியாசமும் இல்லை. இந்தியாவின் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் தேவைகளுக்கு, சர்வதேச சந்தையில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. அதில் இருந்துதான் கெரசினும் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில், ஒரு பீப்பாய் (Barrel) கச்சா எண்ணெய் விலை 150 டாலர்கள் வரை இருந்தது. இப்போது, 65 டாலராக (4,000 ரூபாய்) குறைந்துள்ளது. ஒரு பீப்பாய் என்பது 159 லிட்டர். ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் விலை 25 ரூபாய். ஒரு லிட்டரை சுத்திகரிக்க 3 ரூபாயும் போக்குவரத்துக்கு 2 ரூபாயும் செலவாகிறது. அப்படியென்றால், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை வெறும் 30 ரூபாய். ஆனால், பல்வேறு வரிகளை விதித்து 67 ரூபாய்க்கு விற்கிறார்கள். வாங்குகிறோம். 50 காசு குறைத்தாலே சந்தோஷப்படுகிறோம்.

2010 - 2011 நிதியாண்டில், எண்ணெய் மூலமாக மத்திய அரசுக்குக் கிடைத்த லாபம், ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் கோடி என்கிறது ஒரு புள்ளிவிவரம். அதில், மக்களுக்கு மானியமாகக் கொடுத்தது வெறும் 80 ஆயிரம் கோடி. ரூ.2.16 லட்சம் கோடியை மக்களிடம் வரிகளாக வசூலித்துவிட்டு, 80 ஆயிரம் கோடியை மானியமாகத் திருப்பிக் கொடுக்கிறார்கள். அவ்வளவுதான். ஆட்சியாளர்கள் தங்களின் சட்டைப் பாக்கெட்டில் இருந்து மானியத்தை எடுத்துக் கொடுக்கவில்லை.

பெட்ரோலுக்கான, டீசலுக்கான மானியம் எல்லாம் ஒழிக்கப்பட்டுவிட்டது. சமையல் எரிவாயு, கெரசின் ஆகிய இரண்டுக்கு மட்டும்தான் இப்போது மானியம் வழங்கப்படுகிறது. இதை ஒழிப்பதற்கும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை ஒழிப்பதற்காக, 'உங்கள் பணம் உங்கள் கையில்’ என்ற திட்டத்தைக் கொண்டுவர மன்மோகன் சிங் அரசு முயற்சி செய்தது. அப்போது அதை பி.ஜே.பி கடுமையாக எதிர்த்தது. அதே பி.ஜே.பி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பிறகு, வங்கிக் கணக்கை மூன்று மாதங்களுக்குள் கொடுக்காதவர்களுக்கு கியாஸ் சிலிண்டர்களுக்கான மானியம் நிறுத்தப்படும் என்று தற்போது கெடு விதித்து இருக்கிறது.

மாநிலங்களுக்குத் தேவையான கெரசினை மத்திய அரசுதான் வழங்கி வருகிறது. குடும்ப அட்டை கணக்குப்படி, தமிழகத்துக்கு மாதம் ஒன்றுக்கு 65,140 கிலோ லிட்டர் கெரசின் தேவை. அதன்படி, 2010-ம் ஆண்டு மத்திய அரசு தமிழகத்துக்கு கெரசின் ஒதுக்கீடு செய்தது. பின்னர், கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்க ஆரம்பித்தது. அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தொடர்ச்சியாக கடிதங்களை எழுதினார். அதை அவர் கண்டுகொள்ளவே இல்லை. தமிழகத்துக்கான கெரசின் 44 ஆயிரம் கிலோ லிட்டராகவும், 29 ஆயிரம் கிலோ லிட்டராகவும் படிப்படியாகக் குறைக்கப்பட்டது. பி.ஜே.பி வந்த பிறகும் அதில் மாற்றம் இல்லை. எனவே, பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கடிதம் எழுதினார். மோடியும் அதை மதிக்கவில்லை. தற்போது, முதலுக்கே மோசம் வந்துவிட்டது.

இனிமேல், ரேஷன் கடைகளில் கெரசின் கிடைக்காது. சமையல் எரிவாயு இணைப்பு இல்லாத, ஒரு சிலிண்டர் மட்டுமே வைத்துள்ள மக்கள் இனி என்ன பாடுபடப்போகிறார்களோ தெரியவில்லை. கிராமப்புறங்களைப் பொறுத்தவரை மக்கள் மீண்டும் விறகை நாடிச்செல்வார்கள். மரங்கள் வெட்டப்படும். சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும்.

எதிர்க் கட்சியாக இருந்தபோது கடுமையாக எதிர்த்து வந்த ஒரு விஷயத்தை, ஆட்சிக்கு வந்தபிறகு ஆதரிக்கும், அமல்படுத்தும் செயல் என்பது வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகமில்லாமல் வேறென்ன?

ஆ.பழனியப்பன்

“வீடுகள் இருள் அடையும்!”

கெரசின் மானியத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவு குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

மறுக்கப்படும் மண்ணெண்ணெய்!

அய்யப்பன் (பொன்னவராயன்கோட்டை): 'முந்தைய காங்கிரஸ் அரசு, தமிழகத்துக்கான கெரசின் அளவை குறைத்தார்கள். புதிதாக வந்துள்ள பி.ஜே.பி அரசோ ஒட்டுமொத்த மானியத்தையும் ரத்து செய்யப்போகிறது. முன்பு, பெரும்பாலான மக்கள் விறகு அடுப்பைத்தான் பயன்படுத்தினார்கள். அதனால், சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டது. இப்போது மீண்டும் பழைய காலத்துக்கு மக்களைத் தள்ளப் பார்க்கிறார்கள்.'

தேவதாஸ் (வடகாடு): 'ஏழைகளின் வாழ்வில் ஒளி ஏற்றுவோம் என்று சொல்லித்தான் எல்லோரும் ஓட்டு கேட்கிறார்கள். பி.ஜே.பியும் அப்படித்தான் சொன்னது. இப்போது, ஆட்சிக்கு வந்தவுடன் ஏழைகளின் வீடுகளை இருள் அடையச் செய்யும் காரியத்தைச் செய்கிறது. மத்திய அரசின் இந்த முடிவு தமிழகம் போன்ற மின்பற்றாக்குறை உள்ள மாநில மக்களை கடுமையாகப் பாதிக்கும். கெரசின் விளக்கில் படிக்கும் கிராமப்புற மாணவர்கள் இன்னும் இருக்கிறார்கள். எனவே, கெரசின் மானியத்தை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.'

ராஜாமணி (ஆவணம்): இரவு நேரத்தில் மின்சாரம் எப்போது வரும் எப்போது போகும் என்பதே தெரியாத நிலையில்தான் இருக்கிறோம். இரவில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில்தான் பெரும்பாலும் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அந்த நேரங்களில் சிம்னி என்கிற கெரசின் விளக்குகளைத்தான் பயன்படுத்துகிறோம். எங்களுக்கு ரேசன் கடையில் மாதம் இரண்டு லிட்டர் கெரசின் கொடுக்கிறார்கள். இதுவே போதவில்லை. இருப்பதையும் பறித்துக்கொண்டால் எப்படி? பழைய காலத்தைப்போல,  தீப்பந்தங்களைத் தயாரித்து, கொளுத்த வேண்டியதுதான்.

வீ.மாணிக்கவாசகம்

'தமிழகத்துக்கு கடும் பாதிப்பு'

தமிழக உணவு அமைச்சர் காமராஜிடம் பேசினோம்.  'தமிழகத்துக்கு ஒரு மாதத்துக்கு 65,140 கிலோ லிட்டர் கெரசின் தேவை. முன்பிருந்த மத்திய அரசு தமிழகத்துக்கான மண்ணெண்ணெய்யின் ஒதுக்கீட்டை 10 முறை குறைத்து இப்போது, 29,056 கிலோ லிட்டர் மட்டுமே தமிழகத்துக்குக் கொடுக்கப்படுகிறது. இது, தமிழகத்தில் கெரசின் பயன்படுத்தி வரும் மக்களைக் கடுமையாக பாதித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். மானியத்தை ரத்து செய்வதற்கான முடிவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு