Published:Updated:

அமைச்சரிடம் இருந்து என் மனைவியை மீட்டுத் தாருங்கள்!

பள்ளி ஆசிரியரின் பகீர் புகார்எஸ்.சரவணப்பெருமாள்

பிரீமியம் ஸ்டோரி

''ஒரு பெண்ணைத் தலைவியாகக் கொண்ட கட்சியில் இருந்து கொண்டு பெண்மையின் மகத்துவத்தையே கெடுத்து வருகிறார். என் குடும்பத்தில் புகுந்து, என்னுடைய மனைவியை அபகரித்து இப்போது என் குடும்ப வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டார். கேட்டால், மிரட்டுகிறார். புகார் கொடுத்தால் போலீஸார் வழக்குப்பதிவு செய்ய மறுக்கிறார்கள்.''  சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனுக்கு எதிராகத்தான் இப்படியொரு புகாரை இன்பராஜ் என்பவர் கூறியிருக்கிறார். இதுகுறித்து மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கலும் செய்திருக்கிறார்.

அமைச்சரிடம் இருந்து என் மனைவியை மீட்டுத் தாருங்கள்!

புகார்குறித்து ஆசிரியர் இன்பராஜிடம் பேசினோம். ''எனது ஊர் தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம். மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலைபார்த்து வருகிறேன். எனது மனைவி எங்கள் ஊரிலுள்ள ஓர் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்த்து வருகிறாள். எங்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். மகன் படித்துவிட்டு சென்னையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கிறான். மகள் ஒரு கல்லூரியில் படித்து வருகிறாள்.

நான் வெளியூரில் வேலைபார்ப்பதால் அடிக்கடி வீட்டுக்கு வரமுடியாத சூழ்நிலை. இந்த இடைவெளியைப் பயன்படுத்தி, எங்க வீட்டுக்குப் பக்கத்திலுள்ள பாலசந்தர் என்கிற அ.தி.மு.க கிளைச் செயலாளர், என்னோட மனைவியை ஆசைவார்த்தை சொல்லி அமைச்சர்           எஸ்.பி.சண்முகநாதனோடு 'லிங்க்’ ஏற்படுத்திவிட்டான். அவரிடம் நல்லபெயர் வாங்குவதற்காக என் மனைவியைப் பயன்படுத்திவிட்டான். ஒரு நாள் இரவு அவருக்கும் அவரோட கட்சிக்காரர்களுக்கும் எங்கள் வீட்டில் வைத்து சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டது. அது முதல் அவர்களுக்குள் 'லிங்க்’ ஏற்பட்டிருக்கிறது. இதையெல்லாம் கேள்விப்பட்டு அவளை நான் கண்டித்தேன். அமைச்சரோட சப்போர்ட் இருப்பதால் அவள் என்னை மதிக்கவில்லை.

சண்முகநாதன் வாரம்தோறும் சனி, ஞாயிறு கிழமைகளில் ஊருக்கு வந்து போகிறார். அந்த சமயங்களில் அவர்கள் சந்திக்கிறார்கள். சண்முகநாதனின் சொந்த ஊரான பண்டாரவிளையில் வைத்து சந்திப்பு நடக்கிறது. எங்கள் ஊர் பக்கம் வரும்போதெல்லாம் என் மனைவியை சந்தித்துவிட்டுப் போகிறார். கடந்த மூன்று வருடங்களாக இது நடந்து வருகிறது. என் பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து வெளியில் சொல்லாமல் இருந்தேன்.  

அமைச்சரிடம் இருந்து என் மனைவியை மீட்டுத் தாருங்கள்!

இந்த நிலையில் 'டைவர்ஸ் வாங்கிவிட்டு ஊரைவிட்டே ஓடிவிடு’ என சண்முகநாதனின் அடியாட்கள் என்னை மிரட்டினார்கள். வேறு வழியில்லாமல் உயிருக்கு பயந்து டைவர்ஸ் செய்துவிட்டு வெளியூருக்கு ஓடி அமைதியாகிவிட்டேன். இதற்கிடையில் எனது மகளைக் கல்யாணம் கட்டித் தரும்படி பாலசந்தர் எனது மனைவியிடம் கேட்டு வற்புறுத்தி வருவதாகத் தகவல் வந்தது. படிக்கிற பிள்ளையை,  டிரைவர் வேலை பார்ப்பவர் பெண் கேட்கிறார் என்றதும் நான் கடுமையான கோபம் அடைந்து ஊருக்குத் திரும்பி வந்தேன்.

கடந்த மாதம் 9-ம் தேதி சாத்தான்குளம் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் நின்றிருந்தபோது, அங்கே காரில் வந்த சண்முகநாதன், 'உன் சொத்தைப் பிரிச்சுக் கொடுத்துட்டு, ஒழுங்கு மரியாதையா ஊரைவிட்டு ஓடிப்போயிடு. இல்லைன்னா கொன்னுபுடுவேன்’ என்று மிரட்டினார். நான் லோக்கல் போலீஸில் கம்ப்ளைன்ட் செய்தேன்.  அவர்கள் அதை வாங்க மறுத்துவிட்டார்கள். ஏற்கெனவே இவர்கள் என்னை மிரட்டிவருவது சம்பந்தமாக சென்னை டி.ஜி.பி ஆபீஸிலும் புகார் கொடுத்துப் பார்த்தேன். ஒரு நடவடிக்கையும் இல்லை. வேறு வழி தெரியாமல் கோர்ட்டுக்கு போயிருக்கேன். இப்போது என் அண்ணன், தம்பிமார்களை மிரட்டி எனக்கு எதிராகக் குரல் கொடுக்க வைத்திருக்கிறார்.

நாசரேத், சாத்தான்குளம் பகுதிகளில் சண்முகநாதனால் நிறைய பேர் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இவர் மீது பல்வேறு புகார்கள் இருக்கிறது. இவரது லட்சணத்தை வெளியில் கொண்டுவருவதற்காக நான் கோர்ட்டில் மனு போட்ட மறுநாள் தூத்துக்குடியில் நடந்த ஒரு மீட்டிங்கில் 'குடும்பத் தலைவர் ஒழுக்கமாக இருந்தால் எய்ட்ஸ் வராமல் தடுக்கலாம்’னு ஒழுக்கத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார். அதை சொல்ல இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? ஒரு மகத்தான பெண்ணைத் தலைவியாகக்கொண்ட கட்சியில் இருந்துகொண்டு பெண்மையின் மகத்துவத்தைக் கெடுத்து வருகிறார். எனவே, சி.பி.சி.ஐ.டியைக் கொண்டு விசாரித்து, குடும்பத்தைக் கெடுக்கும் மினிஸ்டர், அவருக்கு உதவும் பாலசந்தர் மற்றும் அடியாட்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மனைவியை மீட்க ஆற்றல்மிகு கட்சித் தலைவி உதவி செய்வார் என நம்புகிறேன்'' என்றார்.

ஆசிரியர் இன்பராஜின் மனைவியிடம் பேசினோம். தன்னுடைய பெயர், புகைப்படம் வரக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். ''என்னோட கணவர் வீட்டைவிட்டு வெளியில போய், 10 வருஷங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவராகவேதான் டைவர்ஸ் அப்ளை பண்ணி வெளியில போனார். அவரை யாரும் நிர்ப்பந்தப்படுத்தவில்லை. அவர் மனநிலை சரியில்லாதவர். நான் யார்கிட்ட பேசினாலும் அவர்களோடு தொடர்புப்படுத்திப் பேசுவார். இரண்டு நாட்கள் மட்டுமே மினிஸ்டரை மீட் பண்ணியிருக்கேன். மற்றபடி மினிஸ்டரைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஒரு நாள் எங்கள் பகுதியில் அவர்கள் கட்சி மீட்டிங் நடந்தது. எங்கள் வீடு கொஞ்சம் வசதியாக இருந்ததால், இங்கே வைத்து சாப்பாடு கொடுக்க பாலசந்தர் அனுமதி கேட்டார். நானும் சம்மதித்தேன். மினிஸ்டர் உட்பட நிறையபேர் வந்து சாப்பிட்டுவிட்டுப் போனார்கள். அதன் பிறகு அவருடன் எந்தத் தொடர்பும் இல்லை. மினிஸ்டர் மகளோட கல்யாணம் தூத்துக்குடியில் நடந்தது. என்கூட வேலை பார்க்கிறவர்கள் கூப்பிட்டதால் போனேன்.

என் கணவர்தான் என்னை அசிங்கப் படுத்துகிறார். அவர் சொல்கிற குற்றச்சாட்டு சுத்தப் பொய். கடவுள் சத்தியமாக மினிஸ்டருக்கும் எனக்கும் எந்தத் தொடர்புமே கிடையாது. எந்தக் கோயிலில் வைத்து சத்தியம் பண்ணணும் என்றாலும் பண்ணுவேன்'' என்றார் உறுதியாக.

அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனிடம் விளக்கம் கேட்டோம். ''மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு ஆசைப்படுகிற அரசியல்வாதிகள் சிலர் அந்தப் பகுதியில் இருக்கிறார்கள். அவர்கள்தான் இந்த நபரை தூண்டிவிட்டு இப்படி எனக்கு எதிராகச் செயல்பட வைக்கிறார்கள். மற்றபடி அந்தப் பெண் யார்? கறுப்பா சிவப்பா? என்று எனக்குத் தெரியாது. இதுவரையிலும் ஒரு தடவைகூட அந்தப் பெண்ணை நான் பார்த்தது கிடையாது. அவர் சொல்கிறபடியே பார்த்தாலும் என் வீட்டைச் சுற்றி அண்ணன்  தம்பி என்று எங்கள் குடும்பத்தினர் வீடுகள் நிறைய இருக்கின்றன. அங்கே இன்னொரு பெண்ணை நான் சந்திக்க முடியுமா? அந்த நபரோட நடவடிக்கைகள் பிடிக்காமல் அவரோட அண்ணன் தம்பிமார்கள் எல்லாருமே அவருக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறார்கள் என்றால் பாருங்களேன். அவர் சொல்வதில் ஒரு துளிகூட உண்மை இல்லை. எல்லாமே அரசியல்தான்'' என்றார் தைரியமாக.

'இரண்டு முறை அமைச்சரைச் சந்தித்திருக்கிறேன்’ என்கிறார் அந்தப் பெண். 'நான் அவரைப் பார்த்ததே இல்லை’ என்கிறார் அமைச்சர்.

யார் சொல்வது நிஜம்? அம்மா ஸ்பெஷல் கோர்ட் தீர்ப்பு வந்தால் தெரியும்!

படம்: ஏ.சிதம்பரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு