Published:Updated:

"83 படகுகளை 10 நாட்களில் விடுவிப்போம்!

அறிவிக்கிறார் சுவாமி சுனில்தாஸ்ச.ஜெ.ரவி

பிரீமியம் ஸ்டோரி

லங்கை அரசால் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையில் இருந்து மீண்ட மீனவர்கள் 5 பேரும் இன்னும் இந்தியப் பிரதமரையோ, தமிழக முதல்வரையோ நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கவில்லை. ஆனால், கேரளாவில் உள்ள சாமியாரை இருமுறை சந்தித்து நன்றி தெரிவித்து விட்டனர். இரண்டாவது முறை இலங்கை அமைச்சர், அதிகாரிகளுடன் சந்தித்து நன்றி கூறியதோடு மட்டுமில்லாமல், அந்தச் சாமியார் தலைமையில் தமிழக மீனவர் பிரச்னைக்குத் தீர்வு காண்பது குறித்து ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கூட்டத்தில், இந்திய அரசு சார்பிலோ, தமிழக அரசு சார்பிலோ அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை.

"83 படகுகளை 10 நாட்களில் விடுவிப்போம்!

மீனவர் விடுதலைக்குத் தாங்கள்தான் காரணம் என பி.ஜே.பியும், அ.தி.மு.கவும் அறிக்கையில் மோதிக்கொள்ளும் அளவுக்கு மீனவர் விடுதலை என்பது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. ஆனால், எங்களை மீட்டவர் இவர்தான் என சாமியாரை நோக்கி கைகாட்டுகின்றனர் தூக்கில் இருந்த மீண்ட ஐந்து பேரும். யார் அந்தச் சாமியார்?

கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள முதலமடை கிராமத்தில் ஆசிரமம் நடத்தி வருபவர் சுவாமி சுனில்தாஸ். பொள்ளாச்சியில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்த ஆசிரமம். சுவாமி தனது சினேகம் அறக்கட்டளையின் மூலம், கல்வி, மருத்துவம் மற்றும் ஆன்மிக சேவைகளை செய்து வருகிறார். ஒரு போட்டோவில் ராஜபக்‌ஷே, இன்னொரு போட்டோவில் மோடி என பெரும்பாலான அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இவரது இணைய பக்கங்களையும், ஆசிரமத்தையும் அலங்கரிக்கின்றன.

இவரது ஆசிரமத்துக்கு அடிக்கல் நாட்டியவர் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன். சினேகம் டிரஸ்ட் மருத்துவமனையை திறந்து வைத்தவர் முன்னாள் தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் என்பதில் தொடங்கி ஆசிரமத்துக்கு வந்த வி.ஐ.பிகளின் பட்டியல் நீளமானது. இந்த நிலையில்தான் மீனவர்கள் தூக்கில் இருந்து மீண்ட விவகாரத்தில் மீடியாக்களின் லைம்லைட்டில் வந்துள்ளார் சுனில்தாஸ் சுவாமி.

கடந்த 6-ம் தேதி இலங்கை அமைச்சர் பிரபா கணேசன், இலங்கை எம்.பி ஸ்ரீகங்காதரன், இலங்கை அமைச்சகச் செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட இலங்கை அரசைச் சேர்ந்தவர்களும், தூக்குத் தண்டனையில் இருந்து மீண்ட 5 மீனவர்களும், மீனவ அமைப்பின் நிர்வாகிகளும் சுனில்தாஸ் சுவாமியை சந்தித்து நன்றி சொன்னார்கள்.

இலங்கை அமைச்சர் பிரபா கணேசன், 'சாமியார் சுனில்தாஸ் சமூக அக்கறையும், நாட்டுப்பற்றும் கொண்டவர். ஒரு முறை கேரள மாநிலம் முதலமடைக்கு வந்தபோது, தமிழக மீனவர்கள் பிரச்னை பற்றிச் சொன்னார். இவர் சொன்னதை இலங்கை அரசிடம் எடுத்துக்கூறி அவ்வப்போது தமிழக மீனவர்களை விடுவிக்க கோரிக்கை விடுத்துவந்தேன். இந்தச் சூழலில் 5 மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது என்னிடம் சுவாமிஜி பேசினார். இலங்கை அதிபரிடம் நான் இதுதொடர்பாக பேசினேன். சுவாமிஜி சொன்னார் என சொன்னேன். 'இந்திய அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதை திரும்பப் பெற்றால், விடுதலை செய்யலாம்’ என்றார். அதன்படி, இந்தியத் தூதர்களுடன் பேசி வழக்கை வாபஸ் பெற வைத்தவுடன் 5 பேருக்கும் இலங்கை அதிபர் விடுதலையை உறுதி செய்தார். இப்போது மீதமுள்ள மீனவர்களையும் படகுகளையும் மீட்பது குறித்து ஆலோசித்துள்ளோம். விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

"83 படகுகளை 10 நாட்களில் விடுவிப்போம்!

ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸும் 'மீனவர் விடுதலைக்கு சுனில்தாஸ் சுவாமிதான் காரணம்’ என்கிறார்.

இதுபற்றி சுனில்தாஸ் சுவாமிகள், '2012-ம் ஆண்டு முதல் மூணு தடவை இலங்கையில் நடந்த அமைதி கருத்தரங்கில் கலந்துக்கிட்டு, அதிபர் ராஜபக்‌ஷேவுடன் பேசியிருக்கேன். 'இலங்கையில் அமைதி தேவையென்றால், இந்திய மீனவர்கள் பிரச்னையில் அமைதி தேவை’ என்று தொடர்ந்து வலியுறுத்தி இருக்கேன். இந்தச் சமயத்தில்தான் மீனவர்கள் 5 பேருக்கும் தூக்குத் தண்டனை கொடுத்தாங்க. இதுதொடர்பா நாங்க அதிபர் ராஜபக்‌ஷேகிட்ட முறையிட்டோம். என்னுடைய ஆசிரமத்தில் அக்டோபர் 20-ம் தேதி இலங்கை அமைச்சர் பிரபா கணேசன், இலங்கை அரசைச் சேர்ந்த சிலர் தமிழக மீனவப் பிரதிநிதிகள் தேவதாஸ், போஸ் உள்ளிட்டோர் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தினோம்.

மீனவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறு. தண்டனை பெற்ற 5 பேரின் குடும்பங்களின் நிலையை விளக்கினோம். அப்போது தமிழகத்தில் போராட்டம்  தீவிரமாய்  இருந்தது. பிரதமர், தமிழக முதல்வர் உட்பட பலரும் மீனவர்களை விடுவிக்க கோரிக்கை வெச்சாங்க. பறிமுதல் செய்யப்பட்ட 83 படகுகளும் 10 நாட்களில் விடுவிக்கப்படும். இந்தப் பிரச்னை ஓர் அறுவைச்சிகிச்சை மாதிரி. கடைசிக்கட்ட சிகிச்சை இப்போதான் நடந்துக்கிட்டு இருக்கு. சீக்கிரம் பிரச்னை முழுசா தீரும். அதேமாதிரி கச்சத்தீவு திரும்ப வந்துடும். கச்சத்தீவு இந்தியாவுக்கானது' என்றார்.

மீனவர் விடுதலைக்கு நாங்கதான் காரணம்னு அறிக்கை போர் நடத்தின தமிழக பி.ஜே.பியும், அ.தி.மு.கவும் இதுக்கு என்ன சொல்லப் போறாங்க?.

படங்கள்: தி.விஜய், உ.பாண்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு