Published:Updated:

காவலர்களுக்காகப் பரிதாபப்படும் ராமதாஸ்! அரசுக்கு வைக்கும் 6 திட்டங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காவலர்களுக்காகப் பரிதாபப்படும் ராமதாஸ்! அரசுக்கு வைக்கும் 6 திட்டங்கள்!
காவலர்களுக்காகப் பரிதாபப்படும் ராமதாஸ்! அரசுக்கு வைக்கும் 6 திட்டங்கள்!

காவலர்களுக்காகப் பரிதாபப்படும் ராமதாஸ்! அரசுக்கு வைக்கும் 6 திட்டங்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக காவல்துறையில் மொத்தமுள்ள 1,21,215 பணியிடங்களில், 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன என்று தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ்,  மாநிலத்தைக் காக்கும் முக்கியக் கடமையை ஏற்றுள்ள காவல்துறையினர், மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக காவல்துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள், அனுபவிக்கும் துயரங்கள் ஆகியவைகுறித்து வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கின்றன. காவல்துறையினர் என்றாலே அச்சமும், இனம் புரியாத வெறுப்பும் நிலவிவரும் நிலையில், அவர்களின் பணிச் சூழலும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் தீமைகளும் மிகவும் கொடுமையானவை என்பதுதான் உண்மையாகும்.

தமிழ்நாட்டில், கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களில், தமிழகத்தில் 83 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 15 பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். 20 காவலர்கள் மாரடைப்பாலும், 29 பேர் சாலை விபத்திலும் உயிரிழந்துள்ளனர். புற்றுநோய்க்கும் மஞ்சள் காமாலைக்கும் தலா 5 காவலர்கள் பலியாகியுள்ளனர். மீதமுள்ளவர்கள், பிற நோய்களுக்கு உயிரைக் கொடுத்துள்ளனர். அத்துடன், இதே காலகட்டத்தில் மேலும் 5 காவலர்கள் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் காரணம் என்ன என்பதை அறிவதற்குப் பெரிய அளவில் ஆராய்ச்சிகள் எதையும் மேற்கொள்ளத் தேவையில்லை. காவல்துறையினரின் பனிச்சுமையும், அதனால் ஏற்படும் மன அழுத்தமும்தான் காவல்துறையினருக்கு ஏற்படும் துயரங்களுக்குக் காரணம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. காவல்துறையினர், இடைவேளையின்றி நீண்ட நேரம் பணியாற்றவேண்டியிருப்பதால், குடும்பத்துடன்  நேரத்தைச் செலவிட முடிவதில்லை. பல காவலர்கள் பணி நிமித்தமாக குடும்பத்தினரைப் பிரிந்து வேறு ஊரில் வாழ வேண்டியிருக்கிறது. பணியிடத்தில் பல நேரங்களில் உயரதிகாரிகளால் இழைக்கப்படும் அவமானங்களும் அவர்களைப் பாதிக்கின்றன. இதனால் காவலர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.

காவலர்களின் பணி நேரம் ஒழுங்கற்றதாக இருப்பதால், அவர்களால் சரியான நேரத்துக்கு உணவருந்த முடிவதில்லை. கிடைத்த நேரத்தில் கிடைத்த உணவை உட்கொள்ளவேண்டியிருப்பதால், அவர்களின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. பாதுகாப்புப் பணி என்ற பெயரில், பல நாள்கள் வெளியூரில்  தங்கவைக்கப்படும்போது, சரியான குடிநீர் கிடைப்பதில்லை; சிறுநீர் கழிக்க இடமில்லை என்பதும்  காவலர்களின் உடல்நலத்துக்கு வேட்டுவைக்கிறது. பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தம்தான் காவலர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது. உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படும் நோய்களும்,  காவலர்கள் இளம் வயதிலேயே உயிரிழப்பதற்குக் காரணமாக அமைகிறது. இத்தகைய துயரங்களைத் தடுக்கவே காவலர்களுக்கு பணி நேரத்தை வரையறுத்து, செயல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்திவருகிறது. ஆனால், எந்த அரசும் இதைக் கண்டுகொள்ளவில்லை.

காவல்துறையினர் கடுமையாக நடந்துகொள்கின்றனர்; கையூட்டு வாங்குகின்றனர் என்று பொதுவான குற்றச்சாற்றுகள் கூறப்பட்டாலும், உண்மையில் அவர்களின் பணிச்சூழல் மிகவும் பரிதாபமானதாக உள்ளது. தொடர்ந்து பல நாட்கள் குடும்பத்தினரைப் பார்க்க முடியாமலும்,  நல்ல உணவும் உறக்கமும்  இல்லாமலும் பணி செய்வது என்பது மிகவும் கொடுமையான ஒன்றாகும். இக்கொடுமையைத் தான் தமிழக காவல்துறையினர் வெகுகாலமாக அனுபவித்துவருகின்றனர். காவலர்களின் பணிச்சுமையைக் குறைக்க வேண்டும் என்று காவல் ஆணையங்கள் அளித்த பரிந்துரைகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதிலும், கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜெயலலிதா

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை ஓராண்டாக காவல்துறையினரின் பணி கடுமையாக அதிகரித்துள்ளது.

மாநிலத்தைக் காக்கும் முக்கியக் கடமையை ஏற்றுள்ள காவல்துறையினர், மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் பாதுகாக்கவேண்டியது அரசின் கடமையாகும். அதற்கான முதல் நடவடிக்கையாக காவல்துறையில் காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். தமிழக காவல்துறையில் மொத்தமுள்ள 1,21,215 பணியிடங்களில், 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்தப் பணியிடங்களில் ஐந்தில் ஒரு பங்குக்கும் அதிகமான இடங்களை காலியாக வைத்திருந்தால், காவலர்களின் பணிச்சுமையும், அதனால் மன உளைச்சலும் ஏற்படுவதை எவரும் தடுக்க முடியாது. இதை ஆட்சியாளர்கள் உணர்ந்து, காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை அடுத்த சில மாதங்களில் முழுமையாக நிரப்ப வேண்டும்.

காவலர்களின் மன அழுத்தத்தைப் போக்க உளவியல் கலந்தாய்வு, பொழுதுபோக்குகள், விளையாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அடிக்கடி ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அதுமட்டுமன்றி, காவல்துறையினருக்கு 8 மணி நேர வேலை, அரசு ஊழியர்கள் - காவலர்கள் இடையிலான ஊதிய முரண்பாட்டைக் களைதல், ஏழு ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு, காவலராகப் பணியில் சேருபவர்கள் ஓய்வுபெறும் போது, ஆய்வாளராகப் பதவி உயர்வு பெறுவதை உறுதிசெய்தல்,  அனைத்து மாவட்டங்களிலும் காவலர் நல அமைப்புகளை ஏற்படுத்துதல், படி உயர்வு, சலுகை விலையில்  பொருள்களை வழங்கும் கேன்டீன்களை அனைத்து மாவட்டத் தலைநகரங்களுக்கும் விரிவுபடுத்துதல் உள்ளிட்ட காவலர் நலத் திட்டங்களைச் செயல்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு