Published:Updated:

ஜனவரியில் ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினி!

ரகசியம் அவிழ்க்கும் அண்ணன்சி.ஆனந்தகுமார்

பிரீமியம் ஸ்டோரி

டந்த 7-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த்தின் அண்ணன் சத்தியநாராயண ராவ் கெய்க்வாட் ரஜினி ரசிகர் ஒருவரின் இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்திருந்தார். முன்னதாக ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ராகவேந்திரா மடத்தில் நடந்த சிறப்பு பூஜையில், கலந்து கொண்டார். அவரைச் சந்தித்தோம்.

ஜனவரியில் ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினி!

''பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிக்கு என்ன சொல்ல ஆசைப்படுகிறீர்கள்?''

''நிம்மதியோடு சந்தோஷமா இருக்கணும்னு கடவுளை வேண்டிக்கிறேன்.''

''அவர் அரசியலுக்கு வரணும்னு ரசிகர்கள் ஆசைப்படுகிறார்களே... உங்கள் கருத்து?''

''ஆன்மிகத்தில் இருப்பவர்கள் நியாயமாக நடக்கணும். ஆனால் இதையெல்லாம் அரசியலுக்கு வந்தால் கடைப்பிடிக்கமுடியுமா என்பது சந்தேகம்தான். அவர் மகா நியாயமாக இருப்பதால்தான் அவருடைய குரு அவதார் பாபாவுக்கு, இவர்மேல் அன்பு ஜாஸ்தி. ஆகவேதான், பாபாவின் சிஷ்யர் சச்சிதானந்த சுவாமி மூலம் தீட்சை கொடுத்திருக்காங்க. தீட்சைப் பெற்றவர்கள், பொய் சொல்லக் கூடாது. அரசியலில் இருந்தால் பொய் சொல்ல வேண்டிவரும். இப்படி இருந்தால் தீட்சை டிராப் ஆகிவிடும்.''

''நல்ல நடிகராக, சிறந்த ஆன்மிகவாதியாக இருக்கும் உங்கள் தம்பியிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது?''

''நல்ல மனம். இந்தக் கையில கொடுக்குறது அந்தக் கைக்குத் தெரியாதுன்னு சொல்லுவாங்களே... அப்படி அவர், யாருக்கும் தெரியாமல் பலருக்கு உதவி செய்துக்கிட்டே இருக்கார். எல்லாம் தமிழ் மக்களுக்காக. ஏன்னா இந்த மக்கள்தான் அவரை இவ்வளவு வளர்த்திருக்காங்க. கல்யாண மண்டபத்தை மக்களுக்கு எழுதிவெச்சு அதில்வரும் பணத்தைப் படிக்கிற பிள்ளைகளுக்குக் கொடுக்கிறார். இப்படி உதவிசெய்யும் ரஜினி, அரசியலுக்கு வந்தால் 10 பேருக்கு நல்லது பண்ணுவாங்க. ஆனா, 90 பேருக்கு உதவ முடியாமப் போயிடும். எல்லா அரசியல்வாதிகளும் அரசியலுக்கு வாங்கன்னு வற்புறுத்திக்கிட்டு வர்றாங்க. அவங்க எல்லோரும் இவருக்கு நண்பர்கள். இவர் ஒரு கட்சிக்குப் போனால் இன்னொரு கட்சிக்கு எதிரியாக வேண்டியதாகிடும். காமராஜரையே அரசியலில் இருந்து இந்த காங்கிரஸ்காரங்க தள்ளிவிட்டுட்டாங்க. அதனால்தான் அரசியலுக்கு வர யோசிக்கிறார்.''

ஜனவரியில் ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினி!

''காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்ட முயற்சிப்பது சரி என்று சொல்லியிருக்கிறீர்களே..?''

''கர்நாடகமும், தமிழ்நாடும் அண்ணன் தம்பி பந்தம். அந்த உறவைப் பிரிக்க பார்க்கிறாங்க. இதற்கு ஒரே தீர்வு எல்லா நதிகளையும் இணைக்கணும். அதற்காக ரஜினி ஒரு கோடி தர்றேன்னு சொல்லி 10 வருஷம் ஆகுது. யாரும் நதிகளை இணைக்க முன் வரல. மோடி அரசு நதிகளை இணைக்கணும்னு சொல்லியிருக்கு. அப்படி செய்தால் நல்லது.''

''ரஜினிக்கு நண்பரான மோடி பிரதமர் ஆகிட்டார். நதிநீர் இணைப்பு கொடுப்பதாகச் சொன்ன ஒரு கோடியை கொடுத்து நதிகளை இணைக்க முயற்சி எடுக்கலாமே?''

''நதிகளை இணைக்கத் தொடங்கினா அந்தப் பணத்தைக் கொடுப்பார். 'லிங்கா’ படத்துலகூட காவிரி கங்கையும் இணைக்க வேண்டும்’ என்றுதான் சொல்லியிருக்கார். அவர் நல்லதே நினைக்கிறார். யாருக்கும் கெட்டது நினைச்சது இல்லை. வரும்போது காவிரியில நிறைய தண்ணீர் இருப்பதைப் பார்த்தேன். அந்தத் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கக் கூடாது. செக் டேம் கட்டி நீரைப் பாதுகாக்கணும்.''

''மோடியின் ஆறுமாத ஆட்சி எப்படி இருக்கிறது?''

''அவர் மக்களுக்கு நல்லது பண்றார். சும்மா அவரைக் குறை சொல்லாமல் அவருக்கு ஒரு வருசமாவது டைம் கொடுக்கணும்.''

''ஒவ்வொரு படம் வரும்போதும் ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரான்னு பேச்சு கிளம்புகிறதே, இது ரஜினி சினிமாவை மார்க்கெட்டிங் செய்யும் யுக்தியா?''

''மீடியாதான் இப்படி கிளப்பிவிடுறாங்க. ரஜினியின் வளர்ச்சிக்கும் இதே மீடியாதான் காரணம்.''

''ரஜினி, பல வருஷமா ரசிகர்களை சந்திக்கப் போவதாக சொல்லி வருகிறார். ஆனா, சந்திக்கவில்லையே?''

''ரசிகர்களின் ஆசீர்வாதத்தாலும் பிரார்த்தனையாலும்தான் அவர் மீண்டு் வந்தார். கடந்த வாரம் எனது பேத்தி திருமணத்துக்கு அவர் பெங்களூரு வந்தபோதுகூட, சொன்னேன். சரின்னு சொல்லியிருக்கிறார். ஜனவரிக்குமேல ரசிகர்களைச் சந்திக்க உள்ளார். ரசிகர்களை சந்திக்கும் இடத்தையும் அவரே விரைவில் அறிவிப்பார்.''

படம்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு