Published:Updated:

ஒட்டுக்கேட்பு அறை... உதவாத அலுவலர்... டைப் அடிக்காத டைப்பிஸ்ட்!

சகாயத்தை தொல்லைபடுத்திய மதுரைசண்.சரவணக்குமார்

துரைக்கு வந்த சகாயத்துக்கு எவ்வளவு தொல்லை கொடுக்க முடியுமோ அவ்வளவு தொல்லைகளையும் கொடுத்துவிட்டார்கள்.

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட், தாது மணல் கொள்ளைகள் குறித்து விசாரிக்க, நீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், கடந்த 3,4,5 ஆகிய தேதிகளில் மதுரையில் தங்கியிருந்து விசாரணை நடத்தினார். அந்த மூன்று நாட்களும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்தன.

'பயந்து ஒன்றும் ஆகப்போவதில்லை!’

ஒட்டுக்கேட்பு அறை... உதவாத அலுவலர்... டைப் அடிக்காத டைப்பிஸ்ட்!

கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உட்பட பல தரப்பினரும் வரிசையில் நின்று சகாயத்திடம் புகார் அளித்தனர். அங்கு பாதுகாப்புப் பணிக்கு வந்திருந்த சப்இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணனும் ஏட்டு மனோகரனும் பொதுமக்களுடன் வரிசையில் நின்று சகாயத்திடம் புகார் மனுக்களை அளித்தனர். காவல் துறையினரே நேரில் புகார் அளித்ததால், அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறை வட்டாரத்திலும் அந்தச் செய்தி பரவியது. அவர்கள் இருவரிடமும் போலீஸ் உயரதிகாரிகள் செல்போனில் தொடர்புகொண்டு விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, 'கிரானைட்காரர்களால் நாங்கள் கடுமையாகப் பாதிப்பட்டு இருக்கிறோம். உயர் அதிகாரிகளிடம் புகார்கள் கொடுத்துப் பார்த்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீங்களும் நடவடிக்கை எடுக்கமாட்டீர்கள்... நடடிக்கை எடுக்க வந்திருக்கும் அதிகாரியையும் வேலை செய்ய விடமாட்டீர்களா?' என்று இவர்கள் காட்டமாகப் கூறினார்களாம்.

எஸ்.ஐ ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். 'புதுத்தாமரைபட்டியில் 'ஜாங்கிட் நகர்’என்ற பெயரில் 200 பேருக்கு ஐந்தரை சென்ட் கொண்ட பிளாட்டுகள் விற்கப்பட்டன. பிளாட் ஒன்றின் விலை ரூ.35 ஆயிரம். போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருப்பதால், எந்தப் பிரச்னையும் இருக்காது என்று நம்பினோம். சிலர் அங்கு உடனடியாக வீடு கட்டினர். ஏற்கெனவே அந்தப் பகுதியில், பி.ஆர்.பி தரப்பு கிரானைட் குவாரிகளை நடத்தி வந்தது. குவாரிகளின் வெடிச்சத்தத்தால், போலீஸ்காரர்களின் வீடுகளில் விரிசல்கள் விழுந்தன. புதிதாக வீடுகளைக் கட்ட மற்றவர்கள் பயந்தனர். இடம் வாங்கிக் கொடுத்தவர்களிடம் புகார் சொன்னோம். எஸ்.பியிடமும் முதல்வரின் தனிப் பிரிவிலும் புகார் அளித்தோம். எதுவும் நடக்கவில்லை. அந்த இடத்தை விற்கவும் முடியவில்லை. பி.ஆர்.பி குவாரிகளின் வெடிச்சத்தம் காரணமாக, இடத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. எங்களைத் தவிர வேறு யாருக்கும் இந்த இடங்களை விற்கக் கூடாது என்று பி.ஆர்.பி தரப்பு மிரட்டினர். நாங்கள் போலீஸ்காரர்களாக இருந்தாலும் எங்கள் பிரச்னையை யாரிடம் போய் சொல்வது என்று தெரியவில்லை. அந்த இடங்களை பி.ஆர்.பி தரப்பு, நாங்கள் வாங்கிய அதே விலைக்கு எங்களிடம் மிரட்டி வாங்கியது. அவர்களை எதிர்த்து எங்களால் அப்போது ஒன்றும் செய்ய முடியவில்லை. சகாயம் சாரிடம் புகார் கொடுத்தவுடன், உயர் அதிகாரிகள் போனில் அழைத்து என்னைத் திட்டினார்கள். எங்களின் வேதனை அவர்களுக்கு எப்படி தெரியும்? அந்த இடத்தை வாங்குவதற்கும், வாங்கிய பிறகும் நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பது எங்களுக்குத்தான் தெரியும். இதற்கு மேல் பயந்து ஒன்றும் ஆகப்போவதில்லை. எது வந்தாலும் பரவாயில்லை என்றுதான் புகார் கொடுத்தோம்' என்றார் வேதனையுடன்.

ஒட்டுக்கேட்பு அறை... உதவாத அலுவலர்... டைப் அடிக்காத டைப்பிஸ்ட்!

இவர்கள் புகார்கள் அளித்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மற்ற போலீஸ்காரர்கள் தங்களது மனைவி மூலமாகப் புகார் மனுக்களை கொடுத்து அனுப்பினர். தங்களது இடத்தை மிரட்டி வாங்கிக் கொண்டார்கள் என்று எஸ்.ஐ லோகமணி என்பவரின் மனைவி வேலம்மாள் புகார் அளித்தார். இவர்கள் வேறு ஒருவருக்கு விற்க முயற்சி செய்துள்ளனர். அப்போது, தங்களைத் தவிர வேறு யாரும் இடம் வாங்க வரக் கூடாது என்று இடம் வாங்க வந்தவர்களை பி.ஆர்.பி தரப்பு தடுத்துள்ளது. பின்னர் அந்த இடத்தை பி.ஆர்.பி தரப்பு அபகரித்துக் கொண்டது என்றும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் எப்படி வருவார்?

அரசு விருந்தினர் மாளிகையில் சகாயம் தங்கியிருந்தார். அவரது அறையிலும் அவருடன் வந்த உதவியாளர்கள் தேவசேனாதிபதி மற்றும் ஹேமாவின் அறைகளிலும் ஒட்டுக்கேட்பு கருவிகள் பொருத்தப்பட்டு இருப்பதாக பிரச்னை கிளம்பியது. ஹேமா மற்றும் தேவசேனாதிபதி அறைகளில், இரண்டு நாட்களாக பீப்.. பீப் என்ற ஒலி கேட்டுள்ளது.  முதல் தளத்தில் 11-ம் நம்பர் அறையை காலி செய்துவிட்டு, கீழ்த்தளத்தில் உள்ள அறை ஒன்றுக்கு சகாயம் மாறினார். சகாயம் காலி செய்த அறையில் சற்று நேரத்தில் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 'அமைச்சர் வந்து கொண்டிருக்கிறார், எனவே நீங்கள் அறையை காலி செய்துவிடுங்கள்’ என்று சகாயத்திடம் பொதுப்பணித் துறையினர் சொல்லியிருக்கிறார்கள். ''சட்டசபை நடந்து கொண்டிருக்கும் வேளையில் அமைச்சர் எப்படி வருவார்? இங்கு தங்குவதில் இவ்வளவு பிரச்னைகள் என்றால், இனிமேல் வெளியே தங்கிக்கொள்கிறோம், அடிக்கடி ரூமை மாற்றமுடியாது' என்று சகாயம் தரப்பில் சொல்லப்பட்டது. இந்த சம்பவங்கள் அனைத்தையும் மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது.

அழுது புலம்பிய டைப்பிஸ்ட்!

கிரானைட் முறைகேடுகள் குறித்து மற்ற மாவட்ட புகார் மனுக்கள் குறித்து பட்டியலை டைப் செய்து தருமாறு தட்டச்சர் விஜயாவிடம் சகாயம் சொல்லியிருக்கிறார். அந்த ஊழியர் 'லேப்டாப்பில் வேகமாக டைப் பண்ண தெரியாது’ என்று சொன்னதும், புதிதாக கீபோர்டு வாங்கிக் கொடுத்துள்ளனர். இரண்டு நாட்கள் வந்த மனுக்களின் பட்டியலை சகாயம் கேட்டபோது, பட்டியல் தயாராகவில்லை. அந்த ஊழியரிடம் சகாயம் கேட்டதும், ஓவென்று அழுத அந்த ஊழியர், ’என்னை மன்னிச்சிடுங்க சார். உங்கக்கிட்ட நேர்மையாக வேலை பார்க்க ஆசைதான். என்னை எதுவும் செய்யக்கூடாதுனு சொல்லிட்டாங்க!’ என்று கண்ணீர்விட்டாராம். சகாயத்துக்கு உதவுவதற்காக, மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பப்பட்ட கனிமவளத் துறை அதிகாரிகள் உட்பட எட்டுப்பேர், சகாயம் வந்திருந்த மூன்று நாட்களும் எந்த வேலையும் செய்யவில்லை. தினமும் வருவதும் டீ சாப்பிட்டு அரட்டை அடித்துவிட்டுச் செல்வதுமாக இருந்துள்ளனர். மாவட்ட கனிமள அதிகாரி நயினார் ஆறுமுகம், ''என்னிடம் யாரும் எந்த வேலையும் சொல்லக் கூடாது. நான் சும்மா வந்துருக்கேன்' என்று சொல்லியிருக்கிறார்.

கலெக்டர் அனுப்பிய வீடியோகிராபர்

மாவட்ட நிர்வாகம் சார்பில் வீடியோகிராபர் ஒருவர் அனுப்பப்பட்டிருந்தார். அவர், சகாயத்தின் அறைக்குள் யார் யாரெல்லாம் வருகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை எல்லாம் வீடியோ எடுத்துள்ளார். அவர் மீது சந்தேகப்பட்ட சகாயம், 'புகார் கொடுப்பதை மட்டும் எடுங்க’ என்று சொல்ல... 'கலெக்டர் சார்தான் எல்லாவற்றையும் வீடியோ எடுத்து தனியாக ஒரு காப்பி தருமாறு கேட்டார்’ என்று சொன்னாராம் அந்த வீடியோகிராபர்.

பஞ்சமி நிலத்தில் கிரானைட் ஆலை

மேலூர் பகுதிகளில் உள்ள பஞ்சமி நிலங்களின் சர்வே எண், அதன் தற்போதைய நிலை, ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்கள் ஆகியவை சம்பந்தமாக 600 பக்கங்கள் அடங்கிய புகார் மனுவை சகாயத்திடம் விவசாயிகள் அளித்தனர். மேலூர் தெற்குத் தெருவில் பி.ஆர்.பிக்கு சொந்தமான கிரானைட் தொழிற்சாலையில் பாதி இடம் பஞ்சமி நிலங்கள். அது தவிர, மேலூரில் சுமார் 2,000 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் கிரானைட் முதலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன என்றும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

முகமது இஸ்மாயில் என்பவர், நல்லூர் என்ற இடத்தில் 100 ஏக்கர் பட்டா நிலத்தில் 10 அடி ஆழத்துக்குப் பள்ளம் தோண்டி மண்ணை அள்ளிவிட்டதாக அட்டாக் பாண்டி தரப்பு மீது புகார் அளித்தார். திருமோகூர் பகுதிகளில் கோயில் இடம், பட்டா இடம் என எந்த வித்தியாசமும் இன்றி 100 அடி ஆழத்துக்கு கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளதாக அந்தப் பகுதி விவசாயிகள் புகார் தந்துள்ளனர்.

மீண்டும், வரும் 10-ம் தேதி ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் புகார் மனுக்கள் வாங்க மதுரைக்கு வருகிறார்.

படங்கள்: பா.காளிமுத்து, ஈ.ஜெ.நந்தக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு