Published:Updated:

ரத்தம் குடிக்கும் புத்தம்!

ரத்தம் குடிக்கும் புத்தம்!
ரத்தம் குடிக்கும் புத்தம்!

பதைபதைக்கும் முஸ்லிம் படுகொலைகள்...

புத்தத்தை பூசிக்கும் தேசங்கள் ரத்தங்களையும் குடிக்கின்றன என்றால் அக்குருதியின்   பிரதிபலிப்பு சிங்களத்தையும் பர்மியத்தையும் நோக்கியதாக தான் இருக்கும்.சிங்களம்  இனத்தின் பேரால் மனிதனை புதைக்கிறது என்றால், பர்மியமோ மதத்தின் பேரால்  மனிதத்தை உடைத்து படுகொலைகளை புரிகிறது.

இலங்கையில் தமிழர்கள் வந்தேறிகளால் கொல்லப்படுகின்றனர்,பர்மாவில் வாழ வந்த  முஸ்லிம்கள் பர்மிய ராணுவம்-புத்த பிக்குகளால் கொல்லப்படுகின்றனர்.இரு நாட்டிலும்  பௌத்த வெறி ஓங்கி உள்ளது. அது தன் தாக்கும் விதத்தை மட்டும் இனம்-மதம் என  பிரித்துக்கொண்டுள்ளது.

கடவுள் இல்லை என்ற புத்தனை கடவுளாக்கி, அதை ஓர் மதமாக்கி, அதன் பெயரில்  ஏன் தான் இவ்வளவு படுகொலைகளோ ?

ரத்தம் குடிக்கும் புத்தம்!

உலகின் கறுப்புச் சரித்திரத்தில் கடந்தகாலத்திலும், நிகழ்காலத்திலும்,  மதக்கோட்பாட்டால் நிகழ்ந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய படுகொலைகளின் பூர்வீகம் தான்  பர்மா.

பர்மா ராணுவ ஜனநாயகவாதிகளால் ஆளப்படும் நாடு...தேசியமயமாக்கப்பட்ட நதிகள்.  அதனால் இயற்கையில் வறுமை என்பதே இல்லை.தொழில்நுட்பத்தில் பின்தங்கிய  தேசம்.இந்தியாவை போலவே பல மொழி பேசும் இனத்தவர் உள்ள நாடு.ஆனால்  அம்மக்களுக்கென சுயாட்சி இல்லை; பர்மியர்களுக்கு கீழ் நிலையில் இருக்கும் கூட்டாட்சி  நிலை தான்.

சூகியே குரல் எழுப்புவதில்லை

இவர்களின் கோட்பாடும்,வேற்றுமைக்குள் ஒற்றுமை தான்.ஆனாலும் சர்வதேச அளவில்  பின்னோக்கியுள்ள நாடுதான் அன்றைய பர்மாவும், இன்றைய மியான்மரும். பர்மா  என்றால் நமக்கு தெரிவதெல்லாம் 'ஆங் சாங் சூகி'மட்டுமே.அந்த சூகியே மாற்று  மத-இனத்தவர்களின் படுகொலைகளுக்கு பெரிதாக குரல் எழுப்புவதில்லை என்கிறபோதே  சூகியின் ஜனநாயக தத்துவம் பொய்பிக்கிறது.

சூகி பர்மிய இனத்துக்கு நல்ல தலைவர்; ஆனால் பர்மியத்தின் அனைத்து இனத்தவருக்கும்  நல்ல தலைவரல்ல...அப்படியிருந்தும் சூகியை நம்புகிறார்கள் வதைபடும் அம்மக்கள்.

பர்மாவின் இப்படுகொலைகளில் அதிகபடியாக சிக்குவதெல்லாம் முஸ்லிம் மதத்தவர்கள்  தான்.இன்றைய காலக்கட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக முஸ்லிம்  மதத்தவர்களுக்கு எதிரான படுகொலைகளே பர்மாவில்  விடாமல் நிகழ்ந்து   கொண்டேயுள்ளன.

முகமறியா  எந்தயொரு தேசத்திலோ குண்டு வெடித்தால் கூட, அது முஸ்லிம்தான்  வைத்திருப்பான் என்பதே சர்வதேச கணக்கீடுகள்.அக்கணக்கீடை இவ்வுலகம் நிர்ணயித்துக்  கொண்டதால், எந்தயொரு முஸ்லிம் கொல்லப்பட்டாலும் சர்வதேச சமூகம்  அலட்டிக்கொள்வதில்லை.

பர்மிய சுதந்திரத்துக்கு முன்பே, இரண்டாம் உலகப்போரின் ஜப்பானிய  ஆக்கிரமிப்பின்போது பர்மிய-ஜப்பானிய ராணுவத்தால் 28 மார்ச்  1942 ம் ஆண்டு சுமார்  5,000 முஸ்லிம் மக்கள்  கொல்லப்பட்டனர்.

ரத்தம் குடிக்கும் புத்தம்!

அன்றிலிருந்து தொடங்கிய வெறி இதுவரை 20,000 முஸ்லிம்களை கொன்றுள்ளது;  4,000 குடும்பங்களை அழித்தும், எரித்துமுள்ளது;300 மசூதிகளை மூடியுள்ளது;பல  லட்சம் மக்களை பர்மாவை விட்டு துரத்தியடித்துள்ளது.

பர்மிய முஸ்லிம்கள் 'ரோஹிங்க்யாஸ்' என்றழைக்கப்படுகின்றனர்.ஐ.நா.வின்  கணக்கெடுப்புபடி இவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சம்.இவர்கள் அதிகபடியாக  பங்களாதேஷ்-பர்மா எல்லையோரங்களில் வாழ்கின்றனர்.பல நூறாண்டுகளாக வாழும்  இந்த பர்மிய முஸ்லிம்களுக்கு பர்மாவில் குடியுரிமை கிடையாது.தங்கள் விருப்பத்திற்கு  திருமணம் செய்ய அனுமதியில்லை,கல்வியும் இவர்களுக்கு மறுக்கப்படுகின்றது.

கொலைகார புத்த பிக்குகள்

இவர்களது குழந்தைகள் கொத்தடிமைகளை போல் சிறு ஊதியத்துக்கு குழந்தை  தொழிலாளிகளாக்கப்படுகின்றனர்.பர்மாவில் பல்லாண்டுகளுக்கு குடியேறிய இவர்கள்  இன்னமும் அகதியாக தான் வாழ்கின்றனர்.சுற்றுலா சொர்க்கமாகவுள்ள இந்நாடு,  முஸ்லிம் சுற்றுலாவாசிகளை அனுமதிக்க மறுக்கிறது;மீறினால் அது கொலை  சுற்றுலாவாகத்தான் முடியும்.

இக்கொலைகளை நிகழ்த்துவது எல்லாம் பர்மிய ராணுவமும், புத்த பிக்குகளுமே. இவர்கள்  கூற்றுபடி பர்மா புத்த மதத்தவர்களுக்கானது,புத்தத்தை தழுவாதவர்கள் தீயவர்கள்  ...கடவுள் இல்லை என்றால் அவர்கள் புத்த மதத்துக்கு எதிரானவர்கள்.இங்கு புத்த  மதத்துக்கு  அடுத்தப்படியாக மக்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பது இந்து  மதத்தவர்கள்.ஆனால் இந்து கோவில்களிலும் கூட ஒரு புத்த சிலை இருக்குமாம்.  அப்படியிருந்தால் தாக்க வரும் பர்மிய ராணுவமோ-புத்த பிக்குகளோ 'நம் மதத்தின்  மீது  பற்றோடு இருக்கிறார்கள்' என திரும்பி சென்றுவிடுவார்களாம்.

ஆனால் பர்மிய முஸ்லிம்களோ ஓர் பாவ பிறவிகளாக, அப்பாவிகளாக  வதைப்படுகின்றனர்.இது போன்ற ஒடுக்குமுறைகளை எதிர்த்து சில முஸ்லிம் போராளி  குழுக்களும் உள்ளன.இவர்களை பார்த்த இடத்தில் கொல்லலாம் என்று அறிவிப்பும்  உள்ளது.ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் எவரையும் ராணுவ ஜனநாயகம்  அனுமதிப்பதில்லை.

பர்மாவில் 20 லட்சத்திற்கும் மேலாக உள்ள தமிழர்களுக்கும் சுயமான சுதந்திர  வாழ்வில்லை-அவர்களும் புத்தத்துக்கு மாறிய பர்மியர்களாகவே வேடமிட்டு  வாழ்கின்றனர்.

புத்தனை போதிக்கும் தேசங்கள்  மனிதத்தை புதைத்து ரத்த வெறியோடு  திரிகின்றன.இவர்களுக்கு புத்தரின் வாக்கு ஏற்றதாக இருக்கும் "ஆசையால் வெற்றி  பெற்றவன் அந்தப் போதையால் தவறுகள் செய்து அழிவைத் தேடுவான்.ஆனால்  தன்னடக்கம் உள்ள மனிதன் அறிவுடன் சிந்தித்து எப்போதுமே இன்பமாக  வாழ்ந்திடுவான்"!

சில புத்த தேசங்கள் சிந்திக்காமல் ஆசை போதையில் உள்ளன;இவர்கள் ஒரு நாள்  அவர்களாகவே அழிவை தேடுவார்கள்..புத்தரின் வாக்கு போலவே !

                                                                                                                                           -மகா.தமிழ்ப் பிரபாகரன்