Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் தளபதிகளை வீழ்த்திய கருணாநிதி

10 நிமிடங்களில் 18 பேர் அவுட்!

பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் தளபதிகளை வீழ்த்திய கருணாநிதி

ழுகார் உள்ளே நுழைந்ததும் ஜூ.வியின் பழைய இதழ்களைப் புரட்ட ஆரம்பித்தார். இரண்டு இதழ்களுக்கு முன்னதாக 'மாவட்டச் செயலாளர் தேர்தல்... மாஜிக்களை காப்பாற்றும் ஸ்டாலின்? விரட்டும் எதிர்கோஷ்டி’ என்ற தலைப்பிட்டு ஸ்டாலின் படம் போட்ட இதழில் 'மிஸ்டர் கழுகு’ பகுதியை கவனமாகப் பார்த்துவிட்டு நம்மை நிமிர்ந்து பார்த்தார்!

 ''இப்போது மாவட்டச் செயலாளர்களாக இருக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கு மாவட்டங்களில் கடுமையான எதிர்ப்பு இருந்தாலும் அவர்களை எதிர்த்து போட்டியிட பலரும் தயங்குகிறார்கள். அவர்களுக்கு ஸ்டாலின் ஆதரவு இருப்பதால் பலரும் யோசிக்கிறார்கள் என்றும் நான் சொல்லி இருந்தேன். திரும்பத் திரும்ப ஒரே ஆட்கள் 10, 15 வருடங்களாக மாவட்டச் செயலாளராக இருந்தால் மற்றவர்கள் எப்படி பதவிக்கு வருவது என்ற வருத்தம் கட்சிப் பிரமுகர்கள் மத்தியில் பரவி வருவதையும் சொல்லியிருந்தேன். இந்தத் தகவல்கள் கருணாநிதியை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளது. 'வட்டச் செயலாளர், கிளைக் கழகச் செயலாளர் பதவிக்கு எல்லாம் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கும்போது மாவட்டச் செயலாளர்கள் தேர்தலில் மட்டும் போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படிச் சரியாகும்? முன்னாள் அமைச்சர்களை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லையா? தங்களை எதிர்த்து யாரையும் போட்டியிடவிடாமல் இவர்கள் தடுக்கிறார்களா?’ என்று கருணாநிதி கேட்டுள்ளார்!'

''கடந்த இதழில் இது சம்பந்தமான செய்திகளைக் கொடுத்த நீர் புறப்படும்போது, 'போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களை அவரசமாக சென்னைக்கு வரச்சொல்லி இருக்கிறார் கருணாநிதி. அங்கெல்லாம் என்ன பிரச்னையோ?’ என்று சொல்லி இருந்தீரே?'

''ஆமாம்! இதனை நான் உமக்குச் சொன்னது 15-ம் தேதி திங்கள்கிழமை இரவு. அன்று மாலைதான் இந்த மாவட்டச் செயலாளர்கள் அனைவரையும் சென்னைக்கு வரச்சொல்லி தாக்கீது போனது. மறுநாள் 16-ம் தேதி காலை 10 மணிக்கு கோபாலபுரம் வீட்டுக்கு கருணாநிதி வரச்சொன்னார். பொதுவாக ஓரிருவர் சம்பந்தப்பட்ட பிரச்னை என்றால் மட்டும்தான் கோபாலபுரம் வீட்டுக்கு கருணாநிதி வரச் சொல்வார். இது 18 மாவட்டச் செயலாளர்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை. ஆனாலும் அனைவரையும் கோபாலபுரம் வரச் சொன்னது அனைத்தையும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காகத்தானாம். 'தலைவர் வாழ்த்துவதற்காக அழைக்கிறார்’ என்றுதான் முதலில் செய்தி பரவியது. சிலர் மட்டும் ஸ்டாலினைத் தொடர்புகொண்டு கேட்டார்கள். 'தலைவர் அழைத்தால் தலைவருக்குத்தான் தெரியும்’ என்று மையமாக ஸ்டாலின் சொல்லிவிட்டார். அப்போது அவரது வார்த்தைகளில் சுரத்து இல்லை என்பதும் பலரை கலங்கவைத்தது. ஏதோ எழுதி வாங்கப் போகிறார் என்று அடுத்துச் சொன்னார்கள். முன்னாள் அமைச்சர் ஒருவர் இதையே ஸ்டாலினிடம் கேட்க, 'எழுதிக் கேட்டால் எழுதிக் கொடுங்க’ என்றும் சொல்லியிருக்கிறார். 15-ம் தேதி நள்ளிரவிலும் 16-ம் தேதி காலையிலும் 18 பேர் சென்னை வந்தார்கள். காலையிலேயே ஸ்டாலின் வீட்டுக்குப் போனார்கள். அவரும் உற்சாகம் இல்லாமல்தான் இருந்துள்ளார்.'

''ம்!'

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் தளபதிகளை வீழ்த்திய கருணாநிதி

''அங்கிருந்தவர்களை கோபாலபுரம் போகச் சொன்னார் ஸ்டாலின். 9 மணிக்கெல்லாம் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் எனப் பலரும் கோபாலபுரம் வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள். கருணாநிதி முதல் மாடியில் இருந்தார். இவர்கள் கீழ்த்தளத்தில் காத்திருந்தார்கள். 'பேராசிரியர் வந்த பிறகு அவரோடு சேர்ந்து அனைவரையும் சந்திக்கலாம்’ என்று கருணாநிதி சொல்லிவிட்டதாக இவர்களுக்குத் தகவல் சொல்லப்பட்டது. பதற்றத்துடன் காத்திருந்தார்கள். ஸ்டாலினும் வந்து சேர்ந்துவிட்டார். 10.30 மணிக்கு மேல் வந்தார் அன்பழகன். கருணாநிதியை அவர் சந்திக்கச் சென்றார். அடுத்த சில நிமிடங்களில் இவர்கள் அனைவரும் மாடிக்கு அழைக்கப்பட்டார்கள். இவ்வளவு பேர் உட்காருவதற்கு வசதியான அறை அல்ல அது. கருணாநிதியும் அன்பழகனும் மட்டும்தான் உட்கார்ந்திருந்தார்கள். மற்றவர்கள் அனைவரும் உட்காரவில்லை. அதாவது யாரையும் உட்காரச் சொல்லவில்லை. எப்போதும் கருணாநிதி பேசும்போது அமைதியாக இருக்கும் அன்பழகன்தான் இந்தமுறை பேசினார்!'

''அப்படியா?'

''தொண்டையை சரி செய்துகொண்ட அன்பழகன், 'தலைவரும் நானும் கலந்து பேசி சில முடிவுகளை எடுத்துள்ளோம். அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். கட்சி இன்று இருக்கும் நிலைமையில் சில சீர்திருத்தங்களை, புனரமைப்பு வேலைகளைச் செய்தால் மட்டுமே கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர முடியும். வளர்க்க முடியும். ஒரே ஆள் மாவட்டச் செயலாளராகவும் எம்.எல்.ஏவாகவும் அமைச்சராகவும் இருப்பதுதான் பல்வேறு விமர்சனங்களை விதைத்துவிட்டன. அமைச்சர்கள் சிலர் மீது வழக்குகள் இருக்கின்றன. இதன் தீர்ப்புகள் வர இருக்கின்றன. அதனால் தலைவரும் நானும் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளோம். நீங்கள் அனைவரும் மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறீர்கள். பலரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டீர்கள். சிலருக்கு போட்டி இருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது. அதிலும் நீங்கள் போட்டியிட்டால் ஒரே ஆளிடம் பொறுப்புகள் குவியும். அதனால் இப்போது மாவட்டச் செயலாளராக ஆகிவிட்டவர்கள் சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏவுக்கு சீட் கேட்கக் கூடாது. அப்படி வாக்குறுதி கொடுத்தால் மட்டுமே உங்களுக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட அனுமதி கிடைக்கும். இதுதான் கட்சியின் நன்மைக்காக தலைவரும் நானும் கலந்து பேசி எடுத்த முடிவு. இதனை நீங்கள் அனைவரும் ஏற்று ஒத்துழைப்பு தர வேண்டும்’ என்று அன்பழகன் பேசப்பேச இவர்கள் அனைவர் முகமும் இருள ஆரம்பித்தது. யாருக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. மறுத்துப் பேசும் துணிச்சலும் இல்லை. பேயறைந்தது போலத்தான் இருந்துள்ளார்கள். 'இதனை ஏற்றுக்கொண்டால் அதற்கான கடிதத்தில் அனைவரும் கையெழுத்துப் போட்டுத் தரவேண்டும்’ என்றும் அன்பழகன் சொல்லியிருக்கிறார்!'

''அந்த இடத்தில் யாரால் மறுக்க முடியும்?'

''ஏற்கெனவே கருணாநிதியும், அன்பழகனும் சேர்ந்து தயார் செய்திருந்த ஒப்புதல் கடிதம் தயாராக இருந்தது. 'மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு இந்தத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்கின்றவர்கள், கட்டுப்பாட்டை ஏற்றுச் செயல்பட வேண்டும் என்பதற்காக அவர்களிடம் ஓர் உறுதிமொழிப் பத்திரம் பெற வேண்டும் என்று தீர்மானித்தபடி இந்த உறுதிமொழி அந்த வேட்பாளர்களிடத்தில் வாங்கப்படுகிறது. இதில் கையொப்பமிட்டு தலைவரிடம் ஒப்படைப்பவர்கள் அடுத்து வரக்கூடிய சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களிலோ தாங்கள் கட்டாயம் போட்டி​யிட வேண்டும் என்றோ, தலைவர் நியமிக்கின்ற பதவிகளில் தங்களுக்கோ தங்கள் குடும்பத்தினருக்கோ இடம் அளிக்க வேண்டுமென்றோ வேண்டுகோள் வைக்க மாட்டோம் என்று இதன்மூலம் உறுதி கூறுகிறோம்’ என்று அதில் எழுதப்பட்டு இருந்தது. அனைவருக்கும் ஆளுக்கு ஒரு பிரதி உடனடியாக வழங்கப்பட கையெழுத்துப் போட்டுவிட்டு... கருணாநிதிக்கும் அன்பழக​னுக்கும் கும்பிடு போட்டுவிட்டு... வெளியேறினார்கள். யாராவது எதிர்த்துக் கேட்பார்கள், கையெழுத்துப் போடத் தயங்குவார்கள் என்று கருணாநிதி நினைத்தார். ஆனால் யாருமே எதுவும் பேசவில்லை. 10 நிமிடங்களில் 18 பேரை அவுட் செய்துவிட்டு கருணாநிதி அமைதியானார்!'

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் தளபதிகளை வீழ்த்திய கருணாநிதி

''ஸ்டாலின்?'

''சில நிமிடங்களில் ஸ்டாலினும் கோபாலபுரத்தில் இருந்து வெளியேறினார். வழக்கமாக அவரது காரில் இருக்கும் பொன்முடியும் எ.வ.வேலுவும் உடன் போனார்கள். 'ஒரே கல்லில் 18 மாங்காயை தலைவர் வீழ்த்திவிட்டார். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஸ்டாலின் ஆட்கள். ஸ்டாலினின் ஆசீர்வாதத்தைப் பயன்படுத்தி மாவட்டங்களில் மற்றவர்களை வளரவிடாமல் தடுத்தவர்கள். தலைவர் விலகிக்கொண்டு ஸ்டாலின் தலைவராக ஆகிவிடுவார் என்று மாவட்டங்களில் சொல்லிக்கொண்டு இருப்பவர்கள். சென்னைக்கு வந்தாலும் தலைவரை வந்து பார்க்காமல், ஸ்டாலினை மட்டும் பார்த்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுபவர்கள். தங்கள் மாவட்டத்தில் நடக்கும் பிரச்னைகளை தலைவர் காதுக்குக் கொண்டு வராதவர்கள். வேறு யாரும் கொண்டு போய்விடக் கூடாது என்பதிலும் கவனமாக இருப்பவர்கள். இவர்கள் அனைவரையும் மாவட்டச் செயலாளர் வேண்டுமா? எம்.எல்.ஏ வேண்டுமா? ஏதாவது ஒன்றுதான் என்று கேட்டு சிங்கிள் மேன் ஆக்கிவிட்டார் தலைவர். இதனை ஸ்டாலினுமே எதிர்பார்க்கவில்லை’ என்றே சொல்கிறார்கள். 'ஸ்டாலின் தயவு இருந்தால் போதும் பதவிகளைக் கைப்பற்றி விடலாம் என்று நினைத்து வந்தவர்களுக்கு செக் வைத்துவிட்டார் கருணாநிதி’ என்றும் சொல்கிறார்கள். இப்படி தான் முடிவு எடுத்துவிட்டதைத் தொண்டர்களுக்குச் சொல்லியாக வேண்டும் என்று நினைத்த கருணாநிதி, 16-ம் தேதி மதியமே உடன்பிறப்புக்குக் கடிதம் எழுத ஆரம்பித்தார். மாலையில்தான் அந்தக் கடிதம் தயார் ஆனது. 'ஸ்டாலினிடம் காட்டிவிட்டு பத்திரிகைக்குக் கொடுங்கள்’ என்று கருணாநிதி சொல்லியிருக்கிறார். ஆனால் ஸ்டாலின் பார்க்காமலேயே அந்தக் கடிதம் பத்திரிகைகளுக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது!'

''பார்க்க மறுத்துவிட்டாரா ஸ்டாலின்?'

''அப்படித்தான் சொல்கிறார்கள்!'

''அன்பழகன் துணிச்சலாகப் பேசி இருக்கிறாரே?'

''கருணாநிதியும் அவரும் சேர்ந்து எடுத்த முடிவை அவர் அறிவித்துள்ளார். அன்பழகனைப் பற்றி இன்னொரு தகவலும் உலவுகிறது. கட்சியை கொள்கை ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் மாற்றி அமைக்க அவசியமான சில ஆலோசனைகள் உள்ள அறிக்கையை அவர் தயாரித்து கருணாநிதியிடம் கொடுத்துள்ளாராம். 'நானும் பேராசிரியரும் ஆசிரியர் வீரமணியும் இணைந்து திராவிட இயக்கக் கொள்கைகளை பிரசாரம் செய்ய வசதியாக தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் கூட்டங்களை நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளோம்’ என்று கருணாநிதி ஒரு கூட்டத்தில் பேசினார். அந்தக் கூட்டத்தை நடத்துவதில் எந்த மாவட்டச் செயலாளர்களும் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லையாம். அந்த வருத்தமும் அன்பழகனுக்கு உண்டாம்!' என்றபடி அடுத்த மேட்டருக்குத் தாவினார் கழுகார்!

''கல்வித் துறை வட்டாரத்தில் ஒரு பூசல் பெரிதாகக் கிளம்பி இருக்கிறது. ஆசிரியர்கள் டிரான்ஸ்ஃபர் விவகாரம்தான் அது. பள்ளிக்​கல்வித் துறை பதவி வகிக்கும் அமைச்சர்களுக்கும், பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்கும் என்ன ராசியோ தெரியவில்லை. 'ஆசிரியர் டிரான்ஸ்ஃபர், மெட்ரிக்குலேஷன் பள்ளி அங்கீகாரம் புதுப்பித்தல் என பல்வேறு விஷயங்களில் ஆளும் கட்சிப் பிரமுகர்கள் குடைச்சல் கொடுத்தனர். இதை அறிந்த பள்ளிக்கல்வி செயலாளர் சபீதா, பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் ஆளும் கட்சி ஆட்கள் நுழைய தடை போட்டார். விஷயத்தை அறிந்த ஆளும் கட்சி பிரமுகர்கள் கடுப்பானார்கள். தென் மாவட்டங்களுக்கு ஆசிரியர் டிரான்ஸ்ஃபரை ஆளும் கட்சி பிரமுகர்கள் கேட்டிருக்கின்றனர். அப்போது அதிகாரிகள் தரப்பில் தென் மாவட்டங்களில் காலியிடங்கள் இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், பெங்களூரு விவகாரம் ஹாட்டாக ஓடிக்கொண்டு இருந்த நேரத்தில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து தென் மாவட்டங்களில் மட்டும் பழைய தேதியைக் குறிப்பிட்டு 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு டிரான்ஸ்ஃபர் போட்டிருக்கின்றனர். ஆளும் கட்சியினர் இதை ஆதாரப்பூர்வமாக அமைச்சர் வீரமணியிடம் கொடுக்கவும் அவர் கொதித்துப் போனார். அதை செயலரிடமே கேட்டுள்ளார். 'உங்க ஆளுங்கதான் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அலுவலகத்தில் போய் உட்கார்ந்துகொண்டு ஆசிரியர் டிரான்ஸ்ஃபர் விஷயங்களில் தலையிடுகிறார்கள் நியாயமா?’ என்று செயலாளர் எதிர் கேள்வி கேட்டுள்ளார். இது மேலிடம் வரைக்கும் போனது, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வரம் முருகன் இப்போது மாற்றப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித் துறையில் டிரான்ஸ்ஃபர் விஷயங்களை கவனித்து வந்த ரவி, முரளி உள்பட 5 சூப்பிரண்ட்டுகளை அதிரடியாக வேறு இடத்துக்கு மாற்றியுள்ளனர்’ என்று சொல்கிறார்கள்!'

''துறையில் சில அதிகாரிகளை டிரான்ஸ்ஃபர் செய்தால் போதுமா?'

''சமீபத்தில் செய்யப்பட்ட ஆசிரியர் பணிமாறுதலில் பெருமளவு பணம் கைமாறி உள்ளது. இது சம்பந்தமாக விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை வைக்க ஆரம்பித்​துள்ளார்​​கள்!'

''ஜெயலலிதா மீதான ஜாமீன் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதே?'

''பொதுவாக நிரந்தர ஜாமீன்தான் வழங்குவார்கள். ஆனால், ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 18 வரை ஜாமீன் கொடுத்தது உச்ச நீதிமன்றம். இப்போது ஏப்ரல் 18 வரைக்கும் ஜாமீன் கொடுத்துள்ளார்கள். இதுவே அவருக்கு டென்ஷன் கொடுத்து வருகிறது. ஸ்பெஷல் பெஞ்ச் நியமிக்க வேண்டும், தினமும் விசாரிக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்றம். மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று ஏற்கெனவே நீதிமன்றம் சொல்லியிருக்கிறது!'

''உடனடியாக தனது மேல் முறையீட்டை விசாரிக்க வேண்டும் என்று கேட்டாரே ஜெயலலிதா?'

''அதனை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. டிசம்பர் 18-ம் தேதிக்குள் மேல்முறையீட்டு மனுவை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஆக வேண்டும். இவர்கள் டிசம்பர் 8-ம் தேதியே மனுவைத் தாக்கல் செய்துவிட்டார்கள். 18ம் தேதி அன்று இந்த மனு எடுத்துக்கொள்ளப்படவில்லை. டிசம்பர் 20 முதல் ஜனவரி 1 வரைக்கும் கர்நாடக உயர் நீதிமன்றம் விடுமுறை. அதனால் ஜனவரி 2-ம் தேதிக்குப் பிறகுதான் வழக்கைப் பற்றிச் சொல்ல முடியும்!' என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்!

சி.பி.ஐ வளையத்தில் தமிழகப் பிரமுகர்கள்!

டெல்லி சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறையின் இரும்பு வளையங்களுக்குள் சிக்கிக்கொண்டுள்ளது தமிழகம். முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், தயாநிதி மாறன், அன்புமணி ராமதாஸ் மற்றும் கலாநிதி மாறன் என ஒவ்வொருவரும் கடந்த வாரத்தில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார்கள்.

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் தளபதிகளை வீழ்த்திய கருணாநிதி

தயாநிதி மாறன், கலாநிதி மாறன், ப.சிதம்பரம் ஆகியோர் ஏர்செல் மேக்ஸிஸ் விவகாரங்களில் கடந்த வாரம் டெல்லியில் வைத்து விசாரிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில், சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குகள் வேகமெடுத்து நடந்து கொண்டிருக்கின்றன. சி.பி.ஐ தொடுத்த வழக்கில் அடுத்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி நேரில் ஆஜராகச் சொல்லி, சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, மாறன் சகோதரர்கள் இருவருக்கும்  சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், அமலாக்கத் துறை இந்த விவகாரத்தில் நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் பற்றி விசாரித்து வருகின்றது. அதற்காக டெல்லியில் உள்ள அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் இவர்களிடம் விசாரணை தொடங்கியுள்ளது.

அமலாக்கத் துறை அதிகாரிகளால் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விசாரிக்கப்​பட்டுள்ளார். 'வெளிநாட்டு நேரடி முதலீடு வரும்போது, அதற்கென்று பல வரைமுறைகள் உள்ளன. ஒரு நிதியமைச்சர் மட்டும் சில 100 கோடிகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்க அதிகாரம் படைத்தவர். அந்தத் தொகையைத் தாண்டி வெளிநாட்டு முதலீடு நேரடியாக உள்நாட்டுக்குள் வரவேண்டுமானால், அதற்கு வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிக்கும் மத்திய நிதியமைச்சக வாரியத்தின் (Foreign Investment Promotional Board) முன் வைக்கப்பட்டு அந்த வாரியம் அனுமதி கொடுத்த பிறகுதான், அவ்வளவு பெரிய தொகைக்கு அனுமதி கொடுக்க முடியும். ஆனால், ஏர்செல் மேக்ஸிஸ் விவகாரத்தில் சுமார் 5,000 கோடி வரை வெளிநாட்டு நேரடி முதலீடு வருவதற்கு ப.சிதம்பரம் தன்னிச்சையாக அனுமதி கொடுத்துள்ளார். அதைப் பற்றி அவரிடம் விசாரணை நடந்துள்ளது’ என்கிறார்கள்.

அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது, இந்தியா முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரிக்கும், உத்தரப்பிரதேசத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரிக்கும் அனுமதி வழங்கப்பட்டதில் ஊழல் நடந்துள்ளது என்றும் பிரச்னை கிளம்பியது. அதில், அன்புமணி ராமதாஸ், அப்போதைய சுகாதாரத் துறை துணைச் செயலாளர் கே.வி.எஸ்.ராவ், சப்தர்ஜங் மருத்துவமனை மருத்துவர்கள் ஜே.எஸ்.தூபியா, திபேந்திரகுமார், இந்தூர் இண்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைவர் சிரேஷ்சிங் பதோரியா உள்பட பலர் மீது டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடந்த 2012-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 2-ம் தேதி இந்த வழக்கில் விசாரணை தொடங்கியது. சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கை, நீதிபதி அஜய்குமார் ஜெயின் பெஞ்ச் விசாரித்து வருகிறது. சி.பி.ஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாண்டேவும் அன்புமணி தரப்பில் வழக்கறிஞர் முகுல் குப்தாவும் ஆஜரானார்கள். 24-ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது!

சீக்ரெட் 14

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் தளபதிகளை வீழ்த்திய கருணாநிதி

அகில இந்திய பி.ஜே.பி தலைவர் அமித்ஷா வருகை அறிவிப்பு தமிழக பி.ஜே.பியை சுறுசுறுப்படைய வைத்துள்ளது. மறைமலைநகரில் 20-ம் தேதி பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு, மறுநாள் சென்னையில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். ''தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்களை வகுத்துக் கொடுக்கிறார். ஒரு கோடி உறுப்பினர்களை சேர்ப்பது, 122 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைப்பது பற்றியெல்லாம் கட்சி நிர்வாகிகளுக்குப் பாடம் எடுக்க இருக்கிறார் அமித்ஷா' என்கிறார்கள்.

சென்னை வருகை குறித்த அறிவிப்புக்கு முன்னரே, அமித்ஷா டெல்லி அலுவலகத்​துக்கு தமிழக பி.ஜே.பி நிலவரம் பற்றிய, '14 பாயின்ட்’ ரகசிய அறிக்கை ஒன்று சென்றுள்ளது. மாவட்ட, மாநில நிர்வாகிகளின் பிளஸ், மைனஸ் பற்றி விலாவாரியாக விவரிக்கிறதாம் அந்த ரிப்போர்ட். அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க செல்வாக்குகள் பற்றியும் அலசுகிறதாம் அந்த ரகசிய அறிக்கை. கேரள சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு, தமிழகம் வரும் அமித்ஷா, அடுத்து தெலங்கானா, ஆந்திரா, ஒடிசா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் கட்சி வளர்ச்சிக்காக சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறார். இதை அமித்ஷாவின் 'ரைட் டெக்னிக்’ என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு