பிரீமியம் ஸ்டோரி

அண்ணா குமார், பெரியகுளம்.

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.? இன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.? வருங்கால முதல்வர் ஓ.பி.எஸ்.?

பெரியகுளத்துக்காரர்களுக்கு இவ்வளவு பேராசை இருக்கக் கூடாது. 2016 தேர்தலுக்குப் பிறகும் அவரால்தான் முதல்வராக முடியும் என்று நினைக்கிறீர்களா? பெரிய ஆளுங்கண்ணா நீங்க!

கழுகார் பதில்கள்!

தாமஸ் மனோகரன், புதுச்சேரி - 4.

தி.மு.கவுக்குள் என்னதான் நடக்கிறது?

முன்பு அண்ணன் தம்பி மோதல் நடந்தது. அண்ணனை ஒதுக்கிய பிறகு அடுத்து அப்பாவுடன் நடக்கிறது. யாரோ ஒருவருடன் யுத்தம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

வி.எஸ்.சோமு, செம்பட்டி.

உலக அரசியலைத் தெரிந்துகொள்ள வாசிக்க வேண்டிய புத்தகங்களைப் பரிந்துரை செய்யுங்கள்?

 உலக அரசியலை தமிழ் வாசகர்களுக்கு பந்தி வைத்த எழுத்தாளர் வெ.சாமிநாத சர்மா. உலக நாடுகளின் அரசியல், சமூக வரலாற்றை தனித்தனியாகப் பெரும்பெரும் புத்தகங்களாக எழுதியவர் அவர். அவருடைய புத்தகங்கள் இப்போது முழுத் தொகுப்பாக மீண்டும் வந்துள்ளது. அவரது எழுத்துகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. வெ.சாமிநாத சர்மா விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து யாராவது எழுதினால் அது தமிழுக்கு மிகப்பெரிய கொடையாக அமையும். நேரு எழுதி தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 'உலக சரித்திரம்’ என்ற புத்தகமும் முக்கியமானது. ஆங்கிலத்தில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. ஆக்ஸ்போர்டு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

டி.பாலகிருஷ்ணன், அஸ்தம்பட்டி.

ஜெயலலிதா மீது சுமத்தப்பட்டது ஒரே ஒரு குற்றச்சாட்டு மட்டுமே. ஆனால், எம்.எல்.ஏ பதவி பறிப்பு, சொத்துகள் பறிமுதல், சிறைத் தண்டனை, முதல் அமைச்சர் பதவி பறிப்பு, ரூ.100 கோடி அபராதம், ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை... என்பது போன்ற ஆறு கொடிய தண்டனைகள் என்பது எந்தச் சட்ட அடிப்படையிலானது?

ஆறு கொடிய தண்டனைகளை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தரவில்லை. தீர்ப்பு வேறு, அதனுடைய விளைவு வேறு. இரண்டும் சேர்ந்ததுதான் ஆறுவிதமான தண்டனைகள்.

1988-ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின்  13 (1) (ஈ) பிரிவின் கீழும், இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 120 பி மற்றும் 109-ன் கீழும் ஜெயலலிதா மீது வழக்கு போடப்பட்டது. இந்த மூன்று பிரிவுகளின்படி சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை, சொத்து பறிமுதல், ரூ.100 கோடி அபராதம் ஆகிய மூன்று தண்டனைகளை விதித்தது. இவை மட்டுமே நீதிமன்றத் தீர்ப்பு.

இப்படி தண்டனை பெற்றால் அவரது வகிக்கும் பதவி போய்விடும். அந்த அடிப்படையில் ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ., முதல்வர் பதவி பறிபோனது. தண்டனை பெற்றவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாது. இவை சட்டம். இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்க்க முடியாது.

எஸ்.எம்.சுல்தாமன், கோயம்புத்தூர்.

இலக்கியவாதியின் சொற்பொழிவுக்கும் அரசியல்வாதியின் சொற்பொழிவுக்கும் என்ன வேறுபாடு?

முன்னது அழகியல். பின்னது அரசியல். இலக்கியவாதியின் பொழிவில் யதார்த்தம் தவழும். அரசியல்வாதியின் சொற்பொழிவில் உணர்ச்சி எழும்பும்.

 செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

அரசியல்வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் என்ன வித்தியாசம்?

 'சம்பாதித்தால்’ தன்னை தக்க வைத்துக்கொள்ள அரசியல்வாதிகள் கொஞ்சமாவது செலவு செய்தாக வேண்டும். ஆனால், அரசு ஊழியராக இருந்து ஒருவர் ஊழல் செய்தால், தனது கஜானாவில் முழுமையாகப் பதுக்கிக்கொள்ளலாம்.

 ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை எடுத்துவிடுவோம் என்று சொல்லும் கட்சிக்கு மக்கள் வாக்களிப்பார்களா?

பெண் வாக்காளர்களை இந்த வாக்குறுதி நிச்சயம் ஈர்க்கும். மேலும் இந்த வாக்குறுதியை தி.மு.கவோ அ.தி.மு.கவோ சொல்லும் போதுதான் சலனம் ஏற்படுத்த முடியும்.

 கே.ஏ.என்.சிவம், பெங்களூரு.

எதற்கெடுத்தாலும் கடந்த தி.மு.க ஆட்சியைக் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்களே சரியா? இவர்களது ஆட்சியே சில மாதங்கள்தானே இருக்கிறது?

அ.தி.மு.க ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்னமும் கருணாநிதியைக் குறை சொல்லிக்கொண்டு இருப்பதைப் பார்த்தால், மூன்றரை ஆண்டுகளில் சொல்லிக்கொள்வது மாதிரி இவர்கள் எதையும் செய்யவில்லையோ என்று சந்தேகம் கிளம்புகிறது. தி.மு.கவும் அ.தி.மு.கவும் ஒருவரை மாற்றி ஒருவர் குறை சொல்வதைவிட்டுவிட்டு ஆக்கபூர்வமான காரியங்களை தமிழ் மக்களுக்குச் செய்வதில் தங்களது நேரத்தைச் செலவு செய்தால் நல்லது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடக்கும் விவாதங்களைக் கவனித்தால் ஒருவரை ஒருவர் குறை சொல்வது மட்டுமே சட்டமன்ற நடவடிக்கையாக மாறிவிட்டது. இது அவர்களுக்கும் நல்லதல்ல, நாட்டுக்கும் நல்லதல்ல.

அ.மு.சுலைமான், காயல்பட்டினம்.

மக்களை முட்டாளாக்குவதில் தலைசிறந்தவர் ரஜினியா... ஓ.பன்னீர்செல்வமா?

இரண்டு பேருமே நன்றாக நடிக்கிறார்கள். ரசியுங்கள். ஏன் கோபப்படுகிறீர்கள்?

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

கலைஞர் டி.வியை தி.மு.க சார்பில் கட்சிப் பணத்தை வைத்து ஆரம்பித்திருந்தால், கருணாநிதிக்கு இந்த சிக்கல் வந்திருக்காதே?

டி.வி நடத்துவதன் மூலமாகக் கிடைக்கும் லாபம் அனைத்தும் கட்சிக்குப் போகட்டும் என்று யார் நினைப்பார்கள்?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002 kalugu@vikatan.com என்ற முகவரியிலும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு