Published:Updated:

நாகர்கோவில் நகராட்சி ஆணையருக்கு நெருக்கடி கொடுக்கிறாரா சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ?

நாகர்கோவில் நகராட்சி ஆணையருக்கு நெருக்கடி கொடுக்கிறாரா சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ?
நாகர்கோவில் நகராட்சி ஆணையருக்கு நெருக்கடி கொடுக்கிறாரா சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ?

நாகர்கோவில் நகராட்சிப் பகுதிகளில் உள்ள 52 வார்டுகளிலும் நாகர்கோவில் சட்ட மன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு பணிகளை மேற்கொள்ள சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன் நிதி ஒதுக்கீடுசெய்துள்ளார். ஆனால் ,11 மாதங்களாகியும் இந்தப் பணிகள் எதுவும் நகராட்சியினால் மேற்கொள்ளப்படவில்லை. இந்தப் பணிகளை மேற்கொள்ள தி.மு.க. எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் பல முறை நகராட்சி அதிகாரிகளை நேரில் சென்று வலியுறுத்தியும் பணிகள் எதுவும் நடை பெறவில்லை. இதைத் தொடர்ந்து, தி.மு.க. எம்.எல்.ஏ., சுரேஷ்ராஜன் நாகர்கோவில் நகராட்சி அலுவலகத்தில், 'நகராட்சி ஆணையரைக் காணவில்லை' என்ற பலகையுடன் சென்று போராட்டத்தில் ஈடுபட்டார். தி.மு.க-வினர்  நகராட்சியைச் சுற்றிலும் ஆணையரைக் காணவில்லை என்ற பலகையினை ஆங்காங்கே தொங்கவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ்ராஜன், "வரும் 25-ம் தேதி, நகராட்சி அலுவலகத்துக்குப் பூட்டு போடும் போராட்டமும் அடுத்த மாதம் முதல் வாரத்தில், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டமும் நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், சுமார் 10-க்கும் மேற்பட்ட ஆணையர்கள் நாகர்கோவில் நகராட்சியில் மாறிவிட்டனர். நீண்ட நாள்களாக ஆணையர் இல்லாமல் நாகர்கோவில் நகராட்சி இயங்கிவந்தது. கடந்த சிலமாதங்களுக்கு முன், உடுமலைப்பேட்டை நகராட்சி ஆணையர் சரவணக்குமார், நாகர்கோவில் ஆணையராக வந்தார். அவர் பல அதிரடிகளை நாகர்கோவிலில் நடத்தினார். பிளாஸ்டிக் கட்டுப்பாடு, சந்தைகள் ஏலம் போன்றவற்றில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார். இதனால் பலர் அதிர்ச்சியடைந்தனர். மக்கள், ஆணையரைப் பாராட்டினார்கள். உடுமலைப்பேட்டை நகரத்தைச் சிறப்பாக நிர்வகித்ததால், அந்த மக்களின் கோரிக்கையை ஏற்று உடுமலைப்பேட்டை நகராட்சி ஆணையராகவும் செயல்பட்டுவருகிறார். இந்த நிலையில், குமரிமாவட்டத்தின் குளச்சல் நகராட்சிக்கும்  சரவணக்குமார் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் மூன்று நாகராட்சிக்கும் ஒரே ஆணையராக சரவணக்குமார் செயல்படுகிறார்.

"ஊழலை ஒழிக்க செயல்பட்டுவரும் நாகர்கோவில் நகராட்சி ஆணையர் சரவணக்குமாருக்கு, தி.மு.க. மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான சுரேஷ்ராஜன் நெருக்கடி கொடுக்கிறார். 50-ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவில் நகரில் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நாகர்கோவில் மக்களிடம் நன்மதிப்பைப் பெற்ற நகராட்சி ஆணையர் சரவணக்குமார் மீது களங்கம் ஏற்படுத்தும் விதமாக சுரேஷ்ராஜன் பேனர்களை வைத்துள்ளார். சரவணக்குமார் வந்த பிறகுதான் நாகர்கோவில் நகராட்சி கடனிலிருந்து மீள்கிறது. பல ஆண்டுகளாக நகராட்சியின் வருமானத்தை மறைமுகமாகச் சூறையாடியதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார். இது நாகர்கோவில் நகராட்சிமூலம் கணிசமான தொகையை லாபம் ஈட்டியவர்களை வெகுவாக பாதித்துள்ளது. நகராட்சியில் பெரும்பாலான குத்தகைதாரர்கள் தி.மு.க-வினர்தான் அவர்களின் தூண்டுதலின் பேரில்தான் சுரேஷ்ராஜன் செயல்படுகிறார். 'உன்னுடைய நிர்வாகம் எனக்குப் பிடிக்கவில்லை' என சுரேஷ்ராஜன், சரவணக்குமாரை போனில் திட்டினாராம். மக்களுக்குப் பிடித்த ஆணையர் எம்.எல்.ஏ-வுக்குப் பிடிக்காமல் போக, நாகர்கோவில் நகராட்சியில் சரவணக்குமார் செய்த பல அதிரடிதான் காரணம்" என்று இன்னொரு தரப்பு தி.மு.க-வினர் சொல்கிறார்கள்.