Published:Updated:

டார்கெட் சத்தியமங்கலம்!

மிரட்டும் மாவோயிஸ்ட்கள்

'தண்ணீர், மண், காடு இவற்றுக்கான அதிகாரம் அங்குள்ள மனிதனுக்குத் தான்... அதனை நோக்கிப் போராடுவோம்’  வனத்துறை அலுவலகத்தின் மீது அதிரடி தாக்குதல் நடத்திவிட்டு இப்படி ஒரு நோட்டீஸை வீசிவிட்டுச் சென்றுள்ளனர் மாவோயிஸ்ட்கள்.

டார்கெட் சத்தியமங்கலம்!

 கூடலூர் அருகே கேரள எல்லையில் தனியார் சொகுசு ஓய்வு விடுதிகள் மீது கடந்த நவம்பர் மாத இறுதியில் மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தினர். டிசம்பர் முதல் வாரத்தில் வயநாடு வனத்தில், சோதனைக்குச் சென்ற போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் கடந்த டிசம்பர் 22-ம் தேதி தமிழக  கேரளா எல்லைப் பகுதியான முக்காலியில் உள்ள சைலன்ட் வேலி வனச்சரக அலுவலகத்தை தீவைத்து கொளுத்தினார்கள். பாலக்காடு, வயநாடு மாவட்டங்களில் செக்போஸ்ட், பன்னாட்டு உணவு விடுதிகள் போன்றவை மீது மாவோயிஸ்ட்கள் அடுத்தடுத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

'நள்ளிரவு 1.30 மணி இருக்கும். திடீரென பயங்கர சத்தம் கேட்டது. வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தோம். அப்போது, துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று வனத்துறை அலுவலகம் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தது. நாங்கள் வெளியே வந்ததை பார்த்ததும், அந்தக் கும்பலில் இருந்த ஒருவர் எங்களைப் பார்த்து, 'ஒன்றும் பயப்பட வேண்டாம். உங்களை ஒன்றும் செய்ய மாட்டோம். உள்ளே போங்கள்’ என்று சொன்னார். தொடர்ந்து அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து ஆவணங்களையும், பொருட்களையும் சூறையாடினர். வெளியே நிறுத்தப்பட்டிருந்த வனத்துறை ஜீப்புக்கும் தீவைத்தனர். அப்போது அதிகாரிகள் சிலரும் வந்துவிட்டனர். ஆனால் அவர்கள் ஆயுதமேந்தி இருந்ததால், அதிகாரிகள் அவர்களை நெருங்கவில்லை' என்றனர் அந்தப் பகுதி மக்கள்.

மன்னார்காடு எம்.எல்.ஏ சம்சுதீனிடம் பேசினோம். 'மாவோயிஸ்ட்கள் இங்கு தளம் அமைத்துள்ளதை ஏற்கெனவே போஸ்டர்கள் ஒட்டி உறுதிப்படுத்தினர். ஆனால், வனத்துறையினரும் போலீசாரும் இதை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. அதுதான் தற்போது நடந்துள்ள சம்பவங்களுக்குக் காரணம். இந்தத் தாக்குதல் சுற்றுலாப் பயணிகளிடமும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக முதல்வரிடம் பேச உள்ளேன்' என்று சொன்னார்.

பாலக்காட்டில் வெளிநாட்டு உணவகங்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் அருண், காந்த் ஆகிய இருவரை பாலக்காடு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். பாலக்காடு எஸ்.பி. மஞ்சுநாத், 'பிடிபட்ட இருவரும் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள். மாவோயிஸ்ட் இதழியல் பிரிவில் வேலை பார்த்த இவர்கள் இருவரும், துண்டுப் பிரசுரங்களை தயார்செய்து வீசியுள்ளனர்' என்கிறார்.

'தாக்குதல் நடத்தியது ஏன்?’ என்பதை விளக்கும் வகையில் மாவோயிட்டுகள் துண்டுப் பிரசுரங்களை வீசிவிட்டு சென்றனர். அதில், 'ஆதிவாசி மக்கள் இங்கு பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள தேயிலைத் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்கள் போன்ற விவசாய பூமிகளை உருவாக்கியவர்கள் அவர்கள்தான். ஆனால், அவர்களுக்கான இடத்துக்கு பட்டா கொடுக்காமல் அரசு ஏமாற்றி வருகிறது. கஷ்டப்படும் ஆதிவாசி மக்களிடம் இருந்து வனத்துறையினர் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

டார்கெட் சத்தியமங்கலம்!

ஆதிவாசிகளுக்கு சொந்தமான இடத்தில் எல்லாம் சொகுசு விடுதிகள் அமைக்க அரசு அனுமதிக்கிறது. ஆதிவாசிகளை அழித்து, பணம் படைத்தவர்கள் உல்லாசமாய் இருக்க அரசு பலவிதமான ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஆனால் ஆதிவாசி மக்களுக்கு இங்கு கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளைக்கூட செய்து தரவில்லை. ஆதிவாசிகளின் குழந்தைகள் ஏராளமானோர் சத்துக்குறைபாடு காரணமாக இறந்துபோனார்கள். அதெல்லாம் இந்த அரசு கண்டுகொள்ளவே இல்லை. அரசு பயங்கரவாதம் இந்தப் பகுதியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக இத்தகைய போராட்டங்கள் மேலும் மூர்க்கமாகத் தொடரவே செய்யும்' என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

இன்னொரு கடிதத்தில், 'கேரளாவில் மட்டுமின்றி தமிழகம், கர்நாடகத்திலும் நாங்கள் இருக்கிறோம். அங்கும் எங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம். தண்ணீர், மண், காடு இவற்றுக்கான அதிகாரம் அங்குள்ள மனிதனுக்குத்தான். அதனை நோக்கிப் போராடுவோம்' என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கேரளா விரைந்துள்ள க்யூ பிரிவு உள்ளிட்ட சிறப்புப் பிரிவு போலீஸ் அதிகாரிகள், இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர். தமிழகத்திலும் தேடுதல் வேட்டை தீவிரமடைந்துள்ளது.

இரண்டு மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் கும்பல் பதுங்கி இருக்கக்கூடும் என்றும் அவர்களின் அடுத்த தாக்குதல் சத்தியமங்கலத்தை ஒட்டியப் பகுதியில் உள்ள மலை கிராமங்களில் இருக்கலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தியுள்ள தமிழக போலீசார், அங்கு சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பழங்குடியின மக்களின் நலனை காப்பதுதான், மாவோயிஸ்ட்களை ஒடுக்குவதற்கு சரியான வழி. அதை உணர்ந்து அரசு செயல்படட்டும்.

ச.ஜெ.ரவி

 படங்கள்: தி.விஜய்

அடுத்த கட்டுரைக்கு