Published:Updated:

’அசுத்த நீரில் புனித நீராடல்!’ : காவிரி புஷ்கர விழாவின் அவலம்

மா.அருந்ததி
’அசுத்த நீரில் புனித நீராடல்!’ : காவிரி புஷ்கர விழாவின் அவலம்
’அசுத்த நீரில் புனித நீராடல்!’ : காவிரி புஷ்கர விழாவின் அவலம்

மயிலாடுதுறை,காவிரி துலாக்கட்டத்தில் 144 வருடங்களுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் காவிரி மகா புஷ்கரம் நேற்று நடைபெற்றது. இதற்கு 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 50 ஆயிரத்திற்கும் குறைவான மக்கள் வந்தது மிகவும் ஏமாற்றத்தை அளித்தது. காவிரி புஷ்கரம் கொண்டாட செய்யப்பட்ட திட்டங்களில் உள்ள குறைபாடுகளே இதற்குக் காரணம்.

’அசுத்த நீரில் புனித நீராடல்!’ : காவிரி புஷ்கர விழாவின் அவலம்

பெரும்பாலான பக்தர்கள் காவிரி நீரில் புனித நீராடவே விரும்பினர். ஆனால், காவிரியிலிருந்து நீர் வராததாலும், காவிரி புஷ்கரம் நடத்தியே தீர வேண்டும் என்ற கட்டாயத்தினாலும் துலாக்கட்டத்தில் தற்காலிக குளமும் படித்துறையும் அமைக்கப்பட்டு மோட்டார் மூலம் நீர் நிரப்பப்பட்டது. இதில்தான் நேற்று புனித நீராடல் நடைபெற்றது. புனித நீராடலின் ஆரம்பத்தில் தூய்மையாக இருந்த நீர் நேரம் ஆக ஆக மண்ணோடு கலந்து அசுத்தமான நிலைக்குச் சென்று விட்டது. மக்கள் நீராட புதிய நீர் உள்ளே வரவும் பழைய நீர் வெளியேறவும் திட்டமிடப்பட்டது. ஆனால், சரியாகச் செயல்படுத்தப்படவில்லை. எனவே, மோட்டாரிலிருந்து வந்து கொண்டிருந்த நீர் பழைய நீருடன் சேர்ந்து அசுத்த நிலையை அடைந்தது. இதனால் பல பக்தர்கள் நீராடத் தயங்கினர். மேலும், தண்ணீரில் அதிக அளவில் ப்ளீசிங் பவுடர் கலக்கப்பட்டது. இதனால், பக்தர்கள் மிகவும் அசௌகரியமாக உணர்ந்தனர்.

’அசுத்த நீரில் புனித நீராடல்!’ : காவிரி புஷ்கர விழாவின் அவலம்

பெண்களுக்கான உடைமாற்றும் அறைகளிலும், கழிவறைகளிலும்கூட வசதிகள் சரியாகச் செய்யப்படவில்லை. புஷ்கர குளத்திற்கு எந்த வழியாக உள்ளே சென்று எந்த வழியாக வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்படவில்லை. இதனால் பக்தர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டது. கார் பார்கிங் வசதி துலாக்கட்டத்தில் இருந்து வெகு தூரத்தில் செய்யப்பட்டு இருந்ததும் இவ்விழாவிற்கு மக்களின் வருகையைக் குறைத்தது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இவ்விழாவில் பங்கேற்பார் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் அவர் இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை. மற்ற அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் யாரும் இவ்விழாவில் பங்கேற்கவில்லை. இவ்விழாவை முன்னின்று நடத்திய ஆதினங்களுக்கு உள்ளேயே பல பூசல்கள் காணப்பட்டன. இவ்விழாவிற்கு தமிழக அரசின் நிதியிலிருந்து ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டது. மேலும், தனியார் வங்கி ஒன்று ரூ.1 கோடியை நன்கொடையாக அளித்தது. ஆனால், இதிலும் ஊழல்தான் நடந்துள்ளது.

காவிரி புஷ்கரத்தில் முதல் நாளே பக்தர்களின் வருகை குறைவாக இருந்தமையால் அடுத்து வரும் 11 நாள்களிலும் பக்தர்களின் எண்ணிக்கை குறையவே வாய்ப்புள்ளது. இறுதியாகச் சொல்லப்போனால், மகாமகத்திற்கு வந்த அளவு கூட்டம் கூட "144" ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இவ்விழாவிற்கு வரவில்லை .மிக பிரமாண்டமாக நடைபெறும் என எண்ணிய இவ்விழா மிகவும் சாதாரணமாக நடைபெற்று முடிந்தது.