Published:Updated:

’20 கோடி ரூபாய் வரை பேரம் பேசுகிறார்கள்!’ - கர்நாடக போலீஸை நாடும் செந்தில் பாலாஜி

தினேஷ் ராமையா
’20 கோடி ரூபாய் வரை பேரம் பேசுகிறார்கள்!’ - கர்நாடக போலீஸை நாடும் செந்தில் பாலாஜி
’20 கோடி ரூபாய் வரை பேரம் பேசுகிறார்கள்!’ - கர்நாடக போலீஸை நாடும் செந்தில் பாலாஜி

தமிழக போலீஸார் மீது கர்நாடக காவல்துறையில் புகார் அளிக்க இருப்பதாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், கர்நாடக மாநிலம் குடகில் உள்ள பேடிங்டன் எனும் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த விடுதியில், தமிழக காவல்துறையினர் நேற்று விசாரணை நடத்தினர். ஒப்பந்ததாரர் சுப்பிரமணி மரணம் தொடர்பாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., பழனியப்பனிடம் விசாரணை நடத்த குடகு சொகுசு விடுதிக்கு தமிழக போலீஸார் சென்றதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், விசாரணை எதற்காக நடத்தப்பட்டது என்பது குறித்து போலீஸார் தரப்பில் அதிகாரபூர்வமான எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த நிலையில், தமிழக போலீஸார் தங்களை மிரட்டுவதாக தினகரன் ஆதரவாளரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ-வுமான செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், அணி மாறுவதற்காக ரூ.20 கோடி வரை போலீஸார்மூலம் பேரம் பேசுகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச வேண்டும் என்றும், அவ்வாறு பேசாவிடில் பொய்வழக்குப் போடப்படும் என்றும் போலீஸார் மிரட்டுகின்றனர். சொந்த விருப்பத்தின் பேரிலேயே நாங்கள் இங்கு தங்கியிருக்கிறோம். மிரட்டல் விடுக்கும் தமிழக போலீஸார் மீது, கர்நாடக காவல்துறையில் புகார் அளிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்’ என்று அவர் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி. தினகரன், தங்கள் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் மிரட்டப்படுவதாகவும், அதுதொடர்பாக காவல்துறையினர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இருப்பதாகவும் தெரிவித்தார்.