Published:Updated:

"கல்வி உதவித் தொகையை 'கட்' செய்வதுதான் அம்மா அரசா?" - கொதித்தெழும் செ.கு.தமிழரசன்

"கல்வி உதவித் தொகையை 'கட்' செய்வதுதான் அம்மா அரசா?" - கொதித்தெழும் செ.கு.தமிழரசன்
"கல்வி உதவித் தொகையை 'கட்' செய்வதுதான் அம்மா அரசா?" - கொதித்தெழும் செ.கு.தமிழரசன்

எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அ.தி.மு.க-வோடு தோழமை பாராட்டிவருபவர் இந்தியக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செ.கு.தமிழரசன். ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய அ.தி.மு.க-வில் தற்போதுவரை நிலவிவரும் குளறுபடிகளிலும் தனது தனிப்பட்டக் கருத்து என்று எந்த முடிவையும் முன்வைக்காதவர். முதன்முறையாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் கல்வி உதவித் தொகைத் திட்டம் குறித்துக் கருத்து தெரிவித்திருக்கிறார்.

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய - மாநில அரசுகள் கூட்டு சேர்ந்து 'சமூக நீதி'யைக் குலைத்துவிட்டதாக எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில், அரியலூர் அனிதாவின் தற்கொலை ஏற்படுத்தியுள்ள சோகம் தணிவதற்குள் அடுத்த அதிரடியாக, ஆதி திராவிட மாணவர்களின் கல்வி உதவித்தொகையை குறைத்து அரசாணை வெளியிட்டு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியிருக்கிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு!

இதுகுறித்துப் பேசும் 'இந்தியக் குடியரசு கட்சி'த் தலைவர் செ.கு.தமிழரசன், ''குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்வதான திட்டம் நடைமுறையில் இருந்துவந்தது. இந்தத் திட்டத்தைப் பற்றி அப்போது சட்டசபையில் நான் எடுத்துச் சொன்னதோடு, 'தமிழ்நாட்டிலும் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்பட்டால், எண்ணற்ற ஆதி திராவிட மக்கள் பயன்பெறுவார்கள்' என்று அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை வைத்தேன். 

எனது கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டிலும் 'போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை' திட்டத்தை அறிமுகப்படுத்தினார் ஜெயலலிதா. அதாவது, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், தொழிற்பயிற்சி மற்றும் தொழிற்கல்வி பெறுகிற ஆதி திராவிட மாணவர்களுக்கு அவர்களுடைய பயிற்சிக்கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்து 'போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை'த் திட்டத்தை அரசாணையாக வெளியிட்டார் ஜெயலலிதா. 

கட்டணம் செலுத்தி உயர் கல்வி கற்கமுடியாத நிலையில் இருந்த எண்ணற்ற ஆதி திராவிட மாணவர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி, பலனடைந்தனர். அதிகப்பட்சமாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் வருடத்துக்கு 70 ஆயிரம் ரூபாய் வரையிலும் கல்விக் கட்டணச் சலுகை பெற்று பலனடைந்துகொண்டிருந்தார்கள். ஆனால், தற்போது ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, இந்தக் கல்விக் கட்டணச் சலுகையை ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது. அதாவது, இதுநாள் வரையிலும் முழு அளவிலான கல்விக் கட்டணத்தையும் தமிழக அரசே செலுத்திவந்த நிலையை மாற்றி, அதில் பாதியளவுக் கட்டணத்தை மட்டுமே அரசு ஏற்றுக்கொள்ளும். மீதிக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட ஆதி திராவிட மாணவர்களே செலுத்தவேண்டும் என்று மாற்றியமைத்துள்ளனர். 

இது எப்படி இருக்கிறதென்றால், நான் இலவசமாக சாப்பாடு போடுகிறேன் என்று தம்பட்டம் அடித்துவிட்டு, 'சோறு மட்டும்தான் நான் போடுவேன். கூட்டு, குழம்பு எல்லாம் நீயே பார்த்துக்கொள்' என்று ஏமாற்றுவதுபோல்தான் இருக்கிறது. 

கல்வியறிவு இல்லாமல், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் கல்வி கற்க வசதியில்லாமல், சிரமப்பட்டுக் கொண்டிருந்த விளிம்பு நிலை மக்கள் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும். அதற்கான உதவியாக அம்மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொண்டு அம்மக்களின் கல்வியறிவை ஊக்குவிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் இப்படியொரு திட்டத்தை அன்றைய முதல்வர் ஜெயலலிதா நடைமுறைப்படுத்தினார். ஆனால், அம்மா வழியில் ஆட்சி நடத்திவருவதாகச் சொல்லும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, இத்திட்டத்தை சீர்குலைக்கும் விதமாக இப்படியொரு அதிர்ச்சி முடிவை எடுத்து நடைமுறைப்படுத்துவது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்துவரும் துரோகமாக கருதவேண்டியுள்ளது. இதுதான் அம்மா வழியிலான அரசா?

இதுகுறித்துக் கேட்டால், 'நலத்திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கிவரும் தொகையை நிறுத்திவிட்டது. நாங்க என்ன செய்ய முடியும்?' என்று தங்களது இயலாமையையே பதிலாக்குகிறார்கள் தமிழக ஆட்சியாளர்கள். ஏற்கெனவே, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இதுபோன்ற தருணங்களில் மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுத்து நலத்திட்ட நிதியைப் பெற்றுத் தந்தார். இப்போதும், தமிழக அரசின் நலத்திட்டங்களுக்காக மத்திய அரசு தரவேண்டிய 1500 கோடி ரூபாய் இன்னமும் நிலுவையில்தான் இருக்கிறது. இந்தத் தொகையைப் போராடிப் பெற்று தமிழக மக்கள் நலனுக்கு செலவிடுவதுதான் இப்போதைய தமிழக அரசின் முதல் கடமையாக இருக்கமுடியும்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என இதுவரையிலும் அ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்று ஆட்சிப் பொறுப்பு வகித்தவர்கள் அனைவரும், 'ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை தருவதையே தங்களது இலக்காகவும் நோக்கமாகவும் கொண்டு செயல்பட்டார்கள். எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் முன்மாதிரியாகக் கொண்டே தற்போதைய அ.தி.மு.க தலைமை ஆட்சி நடத்திவருவதாகக் கூறிவருவது உண்மையானால், மேற்கூறிய உதாரணங்களை எடுத்துக்கொண்டு அதிலிருந்து பிறழாமல் ஆட்சி நடத்தவேண்டும்.'' என்றார் அழுத்தமான குரலில்.