Published:Updated:

செப்டம்பர் 19-ம் தேதி திருமுருகன் காந்தி வழக்கில் தீர்ப்பு!

செப்டம்பர் 19-ம் தேதி திருமுருகன் காந்தி வழக்கில் தீர்ப்பு!
செப்டம்பர் 19-ம் தேதி திருமுருகன் காந்தி வழக்கில் தீர்ப்பு!
செப்டம்பர் 19-ம் தேதி திருமுருகன் காந்தி வழக்கில் தீர்ப்பு!

திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேர் மீதான குண்டர் சட்டத்துக்கு எதிரான வழக்கில் வரும் 19-ம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மெரினா கடற்கரையில் ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்திய மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் மீது கடந்த மே மாதம் கடைசியில் குண்டர் சட்ட வழக்கு பதியப்பட்டது. அதை எதிர்த்து சென்னை அறிவுரைக் கழகத்தில் நான்கு பேர் சார்பிலும் முறையீடு செய்ததில், அரசுத் தரப்பு செய்தது சரியே எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. 

இதற்கிடையில் குண்டர்சட்ட நடவடிக்கையை எதிர்த்து நான்கு பேர் சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இதில் அரசுத் தரப்பில் வேண்டுமென்றே தாமதம் செய்யப்படுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. 

இன்று காலை நடந்த வழக்கு விசாரணையில் அரசுத் தரப்பில் வாதாடிய அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், அரசுத் தரப்பில் ஏற்பட்ட தாமதத்தை ஒப்புக்கொண்டார். நான்கு பேர் சார்பில் வாதாடியவர்கள், அரசின் இந்தத் தாமதத்தையும் குண்டர்சட்ட விதிப்படி, குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு முறையீடு செய்யும் முன்பே சென்னை போலீஸ் ஆணையர் பத்திரிகையாளர்களைக் கூட்டி, குண்டர்சட்ட வழக்கு சரியே எனக் கூறியதையும் முக்கியமாக எடுத்துவைத்தனர். 

இதைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் செல்வம், கலையரசன் ஆகியோர் வரும் 19-ம் தேதிக்கு விசாரணையைத் தள்ளிவைத்ததுடன் அன்றே இதில் உத்தரவிடப்படும் என்றும் அறிவித்தனர்.