Published:Updated:

டி.டி.வி. தினகரன் திருச்சியில் கூட்டம் நடத்த, அரசு அனுமதி மறுப்பது ஏன்.. ?

சி.ய.ஆனந்தகுமார்
டி.டி.வி. தினகரன் திருச்சியில் கூட்டம் நடத்த, அரசு அனுமதி மறுப்பது ஏன்.. ?
டி.டி.வி. தினகரன் திருச்சியில் கூட்டம் நடத்த, அரசு அனுமதி மறுப்பது ஏன்.. ?

அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட தினகரன் தரப்புக்குத் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் வேளையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு செய்து வருகின்றது.

நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் மரணத்துக்கு நீதிகேட்டும், நீட் தேர்வை எதிர்த்தும் டி.டி.வி,தினகரன், முதலில் செப்டம்பர் 12-ம் தேதி, சென்னையில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தார். ஆனால் அது, உச்சநீதிமன்ற தீர்ப்பால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, செப்டம்பர் 16-ம் தேதி திருச்சி உழவர் சந்தையில் கண்டனக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். இதற்காகத் தினகரன் தரப்பிலிருந்து, திருச்சி மாநகராட்சி மற்றும் மாநகரக் காவல் ஆணையர் ஆகியோரிடம் மனுக்கொடுக்கப்பட்டது. அன்றைய தேதியில், உழவர் சந்தை மைதானத்தில், வேறு ஒரு நிகழ்ச்சி நடக்க உள்ளதால், அனுமதி மறுக்கப்படுவதாக மாநகராட்சி சார்பில் கூறப்பட்டது.

அதேநாளில், திருச்சி அ.தி.மு.க எம்.பி ப.குமாரை கடந்த வாரம், அ.தி.மு.க இளைஞர் இளம்பெண் பாசறை மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து, தினகரன் நீக்கினார். அதற்கு எதிராக, பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த குமார், தன்னைப் பொறுப்பிலிருந்து நீக்கத் தினகரனுக்குத் தகுதியில்லை எனப் பேட்டியளித்தார். இந்நிலையில், டி.டி.வி தினகரன் தன்னைத் தொலைப்பேசியில் மிரட்டியதாகவும், நடிகர் செந்தில் தன்னை அவதூறாகப் பேசியதோடு, கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்தப் புகாரின் பேரில் திருச்சி மாநகரக் குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் அருள்அமரன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் டி.டி.வி.தினகரன் மற்றும் நடிகர் செந்தில் மீது பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தல், தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் புதுக்கோட்டை முன்னாள் எம்.பியின் மகன் எம்.பி., குமார் குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படியான இடையூறுகளுக்கு மத்தியிலும், டி.டி.வி தினகரனுடன், ஆலோசனை நடத்திய தினகரன் தரப்பைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் மனோகரன், சீனிவாசன், ராஜசேகரன் ஆகியோர், செப்டம்பர் 19  அன்று கண்டனக் கூட்டம் நடத்த அனுமதி  கோரி மீண்டும் திருச்சி மாநகராட்சியிடம் மனு அளித்தார்கள். இந்நிலையில் மீண்டும், இரண்டாவது முறையும் தினகரன் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருச்சியில் டி.டி.வி.தினகரன் கூட்டம் நடத்தி, பெரியளவில் கூட்டம் காண்பித்துவிட்டால், தங்களுக்குப் பின்னடைவாக இருக்கும் என நினைக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு, கூட்டம் நடத்துவதற்கு அனுமதியளிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம். இதற்கு எதிராக தினகரன் தரப்பும் நீதிமன்றம் மூலம் அனுமதி பெறலாம் என முயற்சி செய்வதாகக் கூறுகிறார்கள்.

இப்படியான உட்கட்சி மோதல்களால் திருச்சி அரசியலில் அனல்பறக்கிறது.