Published:Updated:

இலங்கை கால்பந்து வீரர்களுக்குப் பயிற்சி: அதிகாரி சஸ்பெண்ட்!

இலங்கை கால்பந்து வீரர்களுக்குப் பயிற்சி: அதிகாரி சஸ்பெண்ட்!
இலங்கை கால்பந்து வீரர்களுக்குப் பயிற்சி: அதிகாரி சஸ்பெண்ட்!
இலங்கை கால்பந்து வீரர்களுக்குப் பயிற்சி: அதிகாரி சஸ்பெண்ட்!

சென்னை: இலங்கை கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி அளித்த நேரு உள் விளையாட்டு அரங்க பொறுப்பு அதிகாரி தாமûஸ தற்காலிக பணி நீக்கம் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் கொழும்பு திரும்பினர்.

இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,":இலங்கைத் தமிழர்கள் சிங்களர்களுக்கு சமமான உரிமைகளைப் பெறும்வரை அந்த நாடு மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல், தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில், இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாட்டில் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கடும் கண்டனத்தை நான் வெளியிட்டவுடன், இலங்கை ராணுவ வீரர்களை இந்தியாவில் உள்ள வேறு மாநிலத்திற்கு அனுப்பி வைத்து மத்திய அரசு தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறது.

அண்மையில், இரண்டு இலங்கை ராணுவ வீரர்களுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதை அறிந்தவுடன், அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ஒட்டுமொத்த தமிழகமும் இதே கோரிக்கையை விடுத்தது. ஆனால், மத்திய அரசு அதற்கு கிஞ்சித்தும் மதிப்பளிக்கவில்லை. மாறாக, இதுபோன்ற பயிற்சிகள் அளிப்பது நிறுத்தப்பட மாட்டாது என மத்திய அமைச்சர் தெரிவித்து, தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளார். இந்தச் சூழ்நிலையில் இலங்கையைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள், தங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில், நட்புரீதியிலான போட்டிகளில் கலந்து கொள்ள தமிழகம் வர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் இந்தச் செயல் தமிழக மக்களை அவமானப்படுத்தும் செயல். மத்திய அரசின் இந்தச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கை நாட்டைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறும் வகையில், சென்னையில் உள்ள பாரத ரிசர்வ் வங்கியில் பணிபுரியும் அலுவலர் ஒருவரை "ராயல் காலேஜ் ஆப் கொழும்பு' நிர்வாகம் தொடர்பு கொண்டு, இங்குள்ள கால்பந்து அணிகளுடன் நட்புரீதியிலான விளையாட்டுப் போட்டிகளில் விளையாட ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டதாகவும், அதன்பேரில், அந்த அலுவலர் அதற்கான ஏற்பாட்டை செய்ததாகவும், கடந்த ஆகஸ்ட் 30-ல் தமிழகம் வந்த இலங்கை கால்பந்து விளையாட்டு வீரர்கள் மறுநாள் சென்னை சுங்க இலாகா அணியுடன் நேரு விளையாட்டரங்கில் விளையாடியுள்ளதாகவும் எனக்கு தகவல் வந்துள்ளது.

##~~##
இதனை அறிந்த நான் அது குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டேன். அந்த விசாரணையில், பாரத ரிசர்வ் வங்கி அலுவலர் நட்புரீதியிலான கால்பந்து போட்டியை நடத்துவதற்கு வாய்மொழியாக நேரு விளையாட்டரங்கத்தின் பொறுப்பு அதிகாரி தாமûஸ அணுகியதாகவும், அவர் விளையாட்டுப் போட்டிகளுக்கு நேரு விளையாட்டரங்கத்தை பயன்படுத்த வாய்மொழியாக அனுமதி வழங்கியதாகவும் தெரியவந்தது.
நேரு விளையாட்டரங்கில் விளையாட்டுப் போட்டிகளை அனுமதிக்க நேரு விளையாட்டரங்க பொறுப்பு அதிகாரிக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது. தனக்கு இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தி இலங்கை விளையாட்டு வீரர்களை நேரு விளையாட்டரங்கில் கால்பந்து விளையாட அனுமதி அளித்ததன் மூலம் தமிழக மக்களின் உணர்வுகளை நேரு விளையாட்டரங்க பொறுப்பு அதிகாரி கொச்சைப்படுத்தியுள்ளார்.
எனவே, பொறுப்பு அதிகாரி தாமûஸ தற்காலிக பணிநீக்கம் செய்து துறைவாரியான நடவடிக்கை எடுக்கும்படி தலைமைச் செயலாளருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், இலங்கை கால்பந்து வீரர்களுக்காக எந்த போட்டிகளும் தமிழகத்தில் நடத்தக் கூடாது என்றும் நான் உத்தரவிட்டுள்ளேன். இலங்கை கால்பந்து வீரர்களை இலங்கைக்கு உடனடியாக திருப்பி அனுப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நான் உத்தரவிட்டுள்ளேன்'' என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கொழும்பு திரும்பினர் 
.
இதனிடையே தமிழக் அரசின் நடவடிக்கையை தொட்ரந்து இலங்கை வீரர்கள் தாங்கள் சென்னையில் தங்கியிருந்த விடுதியை காலி செய்துவிட்டு நேற்று கொழும்பு திரும்பினர்.