Published:Updated:

“இதுதான் எங்கள் திட்டம்” - ஜக்கியின் 'நதிகள் மீட்பு' பின்னணி சொல்லும் ஈஷா நிர்வாகி #VikatanExclusive

“இதுதான் எங்கள் திட்டம்” - ஜக்கியின்  'நதிகள் மீட்பு' பின்னணி சொல்லும் ஈஷா நிர்வாகி #VikatanExclusive
“இதுதான் எங்கள் திட்டம்” - ஜக்கியின் 'நதிகள் மீட்பு' பின்னணி சொல்லும் ஈஷா நிர்வாகி #VikatanExclusive

“இதுதான் எங்கள் திட்டம்” - ஜக்கியின் 'நதிகள் மீட்பு' பின்னணி சொல்லும் ஈஷா நிர்வாகி #VikatanExclusive

“நதிகளை மீட்போம்”. இந்திய தேசத்தின் இன்றைய அத்தியாவசியத் தேவை. தெருவோரங்களில் நின்று துருப்புச் சீட்டுகளைக் கொடுப்பது, தெருக்களில் நாடகங்களை நடத்துவது, யாரின் எதிர்பார்ப்புமின்றி தாங்களாகவே முன்னின்று குளங்களைத் தூர்வாருவது, உள்ளூர் நீர்நிலைகளைச் சரி செய்வது, கைகளிலிருக்கும் பத்தையும் ஐம்பதையும் சேர்த்து நீர்வழிகளில் ஆக்கிரமித்திருக்கும் பெருநிறுவனங்களையும், அரசு நிறுவனங்களையும் எதிர்த்து வழக்குப் போடுவது, ஆச்சர்ய மனிதர்களாக தனியொருவனாகக் களமிறங்கி ஒரு காட்டையே உருவாக்குவது ( அசாமின் ஜாதவ் பயங் போன்றவர்கள்), அரசின் பசுமைப் புரட்சி மலடாக்கிய மண்ணை, தன் முதுகிலிருந்த உயிர்க்கொல்லிக் கட்டியையும்கூடப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயணித்து இயற்கை விவசாய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவது (நம்மாழ்வார்), தன் நீர்நிலையை மீட்க மணல் மாஃபியக்களுக்கு எதிராகப் போராடி அதற்குப் பரிசாக நடுரோட்டில் வெட்டிக் கொல்லப்படுவது ( வேலூர் தணிக்காச்சலம் போன்றவர்கள்), சதுப்புநிலங்களை ஆக்கிரமித்து கொடுஞ்செயல் செய்யும் அரசு நிறுவனங்களையேகூட எதிர்த்துத் தனி மனிதர்களாகப் போராடுவது ( ஈஞ்சம்பாக்கம் சேகர் - பள்ளிக்கரணை மற்றும் அக்கரைப் பகுதிகள், நித்தியானந்த் ஜெயராம் - எண்ணூர் ஈரநிலம் போன்றவர்கள்), என இந்திய தேசத்தின் நதிகளையும், நீர்நிலைகளையும் மீட்டெடுக்க இதுவரை எத்தனையோ பேர் பெரும் முயற்சிகளை எடுத்தாலும், எடுத்துக்கொண்டேயிருந்தாலும்... அவர்கள் அனைவருமே மக்களைத் திரட்ட திராணியற்றவர்களாகவே இருந்தனர். 

இன்று தன் பச்சை வண்டியில் பசுமை வளர்த்து, நதிகள் மீட்டு, விவசாயிகளின் உயிர்காக்கும் நோக்கோடு பெரும் பயணம் மேற்கொண்டிருக்கும் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் ’நதிகள் மீட்பு’ பயணம் பெரும் மக்கள் திரளைக் கூட்டுகிறது. இதை எழுதும் நேரம் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா என நான்கு மாநிலங்களைக் கடந்து, அந்த மாநில முதல்வர்களின் சந்திப்புகளைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறது இந்தப் பயணம். மக்களின் குரல்களை மிஸ்டு கால் மூலம் ஒன்றிணைப்பது, நதிகள் மீட்பிற்கான மக்களின் அந்தக் குரலை இந்தியப் பிரதமரின் காதுகளில் ஒலிக்கவிடுவது, அதன் மூலம், 14 அம்ச கோரிக்கைகளை அவரிடம் முன்வைத்து அதை ஒரு சட்ட வரைவாகக் கொண்டு வருவது, அந்தச் சட்டம் அமலாக்கப்பட்டு அதன் மூலம், இந்திய தேசத்தின் நதிகள் அனைத்தையும் மீட்க முடியும் என்கிறார். சத்குரு அவர்களின் வார்த்தைகளில், "தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ளக்கூட மரங்கள் கிடைக்காமல் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் உயிர்களைக் காப்பது". இதை அந்தச் சட்டத்தின் மூலம் மாற்ற முடியும் என்று நம்புகிறார் சத்குரு அவர்கள். அவரின் இந்த நம்பிக்கைமீது ஏராளமான மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். 

’நதிகள் மீட்பு’ பயணம் குறித்து, இத்திட்டத்தினை முன்னெடுப்பவர்களில் பிரதானமானவரும் ஈஷாவின் ’புராஜெக்ட் க்ரீன் ஹேண்ட்ஸ்’ (Project Green Hands) இயக்குநருமான ஆனந்த் எத்திராஜுலு அவர்களை போனில் தொடர்பு கொண்டோம்.

ஆற்றின் ஓரங்களில் இரண்டு பக்கமும் தலா ஒரு கி.மீ தூரத்திற்கு மரங்கள் நடப்படும் என்று சொல்வது குறித்துக் கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன் ?

"ஆமாம்... இந்தியா முழுக்க ஓடும் ஆறுகளின் இருபுறமும் மரங்களை நடப் போகிறோம். தற்போதைய நிலையில் ஆற்றை ஒட்டிய பகுதியில் 70-75 சதவிகிதம்வரை விவசாயம்தான் நடந்துகொண்டிருக்கிறது. அந்த நிலங்களில் எல்லாம் மரங்களை நடப் போகிறோம். நாங்கள் என்றால் ஈஷா அல்ல, அந்த நிலத்தின் விவசாயிகள்தான் நடுவார்கள். மரம் நட்டு, அதன் மூலம் வரும் பழங்களின் வழி அவர்களுக்கான வருமானத்திற்கான திட்டம் ஒன்றையும் உருவாக்கியுள்ளோம். 

CII ( Confederation of Indian Industries), FICCI ( Federation of India Chamber & Commerce ) போன்ற தொழிற் கூட்டமைப்புகளோடு பேசுகிறோம். ஒவ்வொரு கிராமத்தின் அருகிலும் அந்த நிறுவனங்கள் குளிர்பதனக் கிடங்குகளை (Cold Storage) அமைப்பார்கள். அதே மாதிரி பழங்களுக்கான SEZ (Special Economic Zone) உருவாக்கப்படும். விவசாயிகளை ஒருங்கிணைத்து FPO (Farmers Producer Organisation) என்ற ஒன்றும் உருவாக்கப்படும். அதன் மூலம் அந்த நிறுவனங்களுக்குப் பழங்கள் விற்கப்படும். அந்தப் பழங்களை நிறுவனங்கள் நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு 300 கி.மீ தூரத்திற்கும் உணவுத் தயாரிப்புக் கூடங்கள் (Food Processing Unit) உருவாக்கப்படும். அங்கு அந்தப் பழங்கள் ஜூஸ்களாகவும், ஜாம்களாகவும் தயாரிக்கப்படும்."

அத்தனை விவசாய நிலங்களிலும் இந்த மரங்களை நட்டால், நமக்கான உணவுத் தேவைகள் எப்படிப் பூர்த்தியாகும் ?

"நம் தேசத்தின் மொத்த உணவுப் பழக்கத்திலுமே பெரிய மாற்றம் வர வேண்டும். நம் உணவில் நாம் அதிக பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தக் காலங்களில் நம் உணவுகளில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமான பழங்கள் இருந்தன. ஆனால், இன்று அதெல்லாம் மாறிவிட்டது. அந்த உணவுப் பழக்கத்தை நாம் மாற்றிவிட்டால், நமக்கான உணவாக இந்தப் பழங்கள் மாறிவிடும். இதற்கெல்லாம் விவசாயிகள் எந்த முதலீடும் செய்யத் தேவையில்லை. அந்தந்த நிறுவனங்கள்தான் முதலில் முதலீடு செய்யும். அதன் பிறகு, விவசாயிகள் முதலீடு செய்து பழங்களைக் கொடுத்தால் போதும்."

நீங்கள் சொல்வது விவசாயத்தைப் பெருநிறுவனங்களிடம் கொடுத்துவிடுவதுபோல் ஆகிவிடாதா?

"பெருநிறுவனங்களோடு இணையாமல் இங்கு எந்த வளர்ச்சியையும் கொண்டுவர முடியாது. பெருநிறுவனங்கள் முதலீடு செய்தால்தான், விவசாயிகளுக்கு முதலில் நம்பிக்கை ஏற்படும். இதில் மொத்த விவசாயமும் நிறுவனங்கள் கைகளுக்குப் போய்விடாதா என்ற கேள்வி எழலாம். ஆனால், அதைத் தடுக்கத்தான் விவசாயிகளின் கூட்டமைப்பு ஒன்றை அமைக்கிறோம். அந்தக் கூட்டமைப்பு நிறுவனங்களுக்கும், விவசாயிகளுக்கும் ஒரு பாலமாக இருக்கும். அவர்கள் அந்த அபாயத்தைத் தடுத்துவிடுவார்கள்." 

நதிகள் மீட்பு என்று சொல்கிறீர்கள். ஆனால், நீரை மாசுப்படுத்தும் ஓஎன்ஜிசி, அதானி போன்ற நிறுவனங்களோடு கைகோத்திருக்கிறீர்களே. அது முரணாக இல்லையா?

"அவர்கள் எங்களின் இந்தப் பயணத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அவ்வளவே. மற்றபடி எங்களுக்கும், அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை."

ஆனால், உங்களின் நோக்கத்திற்கே எதிராகச் செயல்படுபவர்களோடு கைகோத்திருக்கிறீர்களே?

"சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் சாயம் ஆற்றில் கலக்கிறது. அதற்காக நீங்கள் சட்டை போடாமல் இருக்கிறீர்களா?"

ஆனால், அவர்களோடு கைகோத்துக் கொண்டு சாயப்பட்டறைகளுக்கு எதிராக பொய்யான முகமூடியோடு போராட்டம் நடத்துவது தப்பில்லையா ?

"இல்லை... ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். நதிகள் மீட்பு எங்கள் நோக்கம். நதியை ஒட்டியப் பகுதிகளில் மரங்களை வளர்த்து, விவசாயிகளைக் காக்க வேண்டும். அதற்கு யார் ஆதரவு தந்தாலும், அவர்களை நாங்கள் வரவேற்கிறோம்."

நதிகள் மீட்பில் மிக முக்கிய விஷயம் நீர்ச்சாலைகள் மற்றும் ஈரநிலங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, மணல் கொள்ளையைத் தடுப்பது, சுரங்கங்களை அகற்றுவது, கோகோ கோலா - பெப்சி போன்ற நிறுவனங்களின் நீர்க்கொள்ளையைத் தடுப்பது என எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றனவே. அது குறித்தெல்லாம் உங்கள் பயணங்களில் பேச்சே வரவில்லையே ?

"அடிப்படையைப் புரிந்துகொள்ள வேண்டும். மணல் கொள்ளை ஏன் நடக்கிறது. மணல் கொள்ளை நடப்பதால் நீங்கள் வீடு கட்டாமல் இருக்கிறீர்களா? தேவை அதிகமாக இருப்பதால்தான் கொள்ளை நடக்கிறது. அதற்கும் எங்கள் திட்டத்தில் ஒரு கோரிக்கையை முன் வைத்திருக்கிறோம். அதாவது 3 ஆயிரம் சதுர அடிக்கும் மேல் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவோர், கண்டிப்பாக M-SAND-ஐ மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

சென்னை மேடையில் பேசிய நடிகர் விவேக், "இது நதிகள் இணைப்பிற்கு ஆதரவான கூட்டம் அல்ல, நதிகளை மீட்க நினைக்கும் இதயங்கள் ஒன்றிணைந்த கூட்டம்" என்று சொன்னார். சத்குருவும் எந்த இடத்திலும் நதிநீர் இணைப்பை ஆதரித்துப் பேசவில்லை. ஆனால், மேடையில் பேசிய ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடங்கி தமிழக அமைச்சர்கள் அனைவருமே நதிநீர் இணைப்பை ஆதரித்துதான் பேசினார்கள்?

"அது அவரவர்களின் சொந்தக் கருத்து."

’நதிகளை மீட்போம்’ பயணம் நதிநீர் இணைப்பை ஆதரிக்கிறதா, எதிர்க்கிறதா?

"ஆதரிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை. எங்கள் நோக்கம் என்ன என்பதை எங்கள் காணொளியில் தெளிவாகக் காட்டியிருக்கிறோம். நதிநீர் இணைப்பை நாங்கள் ஒருபோதும் விளம்பரப்படுத்தவில்லை."

இந்தியாவின் தண்ணீர் மனிதர் ராஜேந்தர் சிங், தங்களுக்கு ஆதரவளித்ததாகச் சொல்லி ஒரு வீடியோவை வெளியிட்டது ஈஷா. ஆனால், அதைத் தவறாக எடிட் செய்து ஈஷா உபயோகப்படுத்தியிருப்பதாகச் சிலர் குற்றம்சாட்டினார்கள்.

அது குறித்து ஆனந்திடம் கேட்டோம்,

 “ராஜேந்தர் சிங் எங்களுக்கு ஆதரவு கொடுத்தது உண்மைதான். ஆனால், அந்த வீடியோவை நாங்கள் தவறாக எடிட் செய்யவில்லை. வேறு யாரோதான் செய்துள்ளார்கள். அதைத் தெளிவுபடுத்தும் விதமாக ராஜேந்தர் சிங் பேசும் மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளோம்.” 

இது குறித்து விளக்கம் கேட்க ராஜேந்தர் சிங்கைத் தொடர்பு கொண்டோம்,

"நான் நதிநீர் இணைப்பிற்கு மிகக் கடுமையான எதிர்ப்பாளன். ஒருகாலமும் நதிநீர் இணைப்பை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். சத்குரு அவர்கள், தான் இப்படி ஒரு நதி மீட்புப் பயணம் போவதாக என்னைச் சந்தித்தார். நதிகளுக்காக வேலை செய்யத் தயாராக இருப்பவர் யாரையும் நான் சந்திக்கத் தயாராகவே இருப்பேன். அவரின் பயணம் நதிகளை மக்களோடு இணைக்கும் பட்சத்தில் அதற்கு என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். மற்றபடி நான் இந்தத் திட்டத்திற்கு எந்த இடத்திலும் முழு ஆதரவை அளிக்கவில்லை." 

அந்தக் காணொளி ரஜினியின் பேட்டியிலிருந்துதான் தொடங்குகிறது. அதில் ரஜினி நதிநீர் இணைப்பை ஆதரித்துதான் பேசியிருக்கிறார் ?

("கொஞ்சம் இருங்கள். இது குறித்த விளக்கத்தைக் கேட்டுவிட்டு வருகிறேன்" என்று சொல்லி போனை கட் செய்தார். பின்னர், கால் மணி நேரம் கழித்து அழைத்தார்)

"ரஜினி கூறியது அவரின் சொந்தக் கருத்து. அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. அவர் எங்களுக்கான ஆதரவைத் தெரிவித்துள்ளார்."


மேடையில், காணொளியில் எல்லாம் நதிநீர் இணைப்புக்கு ஆதரவான பேச்சு இருக்கிறது. சத்குரு பயணத்தைத் தொடங்கிய சமயத்தில்தான் பிரதமர் நதிநீர் இணைப்புக்கு 5.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்கிறார். நீங்களும் உங்களுடைய 14 அம்ச கோரிக்கையைப் பொதுமக்களின் பார்வைக்கு முழுமையாக வைக்கவில்லை. ஆனால், உங்களை ஆதரிக்கும் விதமாக மிஸ்டுகால் தரச் சொல்கிறீர்கள். இது நதிநீர் இணைப்புக்கு ஆதரவான பிரசாரம் என்பது மாதிரிதானே மக்களின் பார்வைக்குத் தெரியும் ?

"கண்டிப்பாக இல்லை. எங்கள் நோக்கத்தில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், நதிகள் இணைப்பை நாங்கள் முழுமையாக எதிர்க்கவில்லை. நாங்கள் சொல்வது நல்ல அனுபவம் வாய்ந்த ஓர் ஆராய்ச்சியாளர் குழுவை வைத்து சரியான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, எந்தெந்த இடங்களில் எல்லாம் நதிகளை இணைக்கலாம் என்ற சாத்தியங்களை ஆராய்ந்த பின்னரே, இதை முன்னெடுக்க வேண்டும் என்கிறோம்."

பாரத தேசத்தின் பிரதமர் மோடி அவர்கள் ஒரு திட்டத்தை அறிவித்து, அதற்காக 5.5 லட்சம் கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்குகிறார் என்றால், இந்த அடிப்படை ஆராய்ச்சிகூட இல்லாமலா சொல்லியிருப்பார் ?

"நான் அப்படிச் சொல்லவில்லை. சரி விடுங்க... நதி நீர் இணைச்சாலும், இணைக்காவிட்டாலும் எங்களின் நோக்கம் பாதிக்கப்படப் போவதில்லை. நாங்கள் சொல்வது நதிகளின் ஓரம் இருபக்கமும் மரங்களை நட வேண்டும் என்பதுதான்."

"நன்றி சார். உங்க போட்டோ மட்டும் வேண்டும்."

"நன்றி."

(ஒரு நாள் முழுக்க காத்திருந்து, பலமுறை கேட்டும் ஆனந்தின் போட்டோ கிடைக்காததால், அவரின் போட்டோ இதில் பிரசுரிக்கப்படவில்லை).

அடுத்த கட்டுரைக்கு