Published:Updated:

அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

Published:Updated:
அணு ஆட்டம்!

அணு சக்தியில் பாதுகாப்பு...? 

''பாதுகாப்பு என்பது வெறும் கோஷமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- யாரோ  

##~##

'வேலியில் போறதைப் பிடிச்சு மடியில் கட்டிக் கொள் ளாதே...’ என்று தமிழில் அழகான ஓர் அறிவுரை உண்டு. கொடிய நச்சுப் பாம்பைப் பிடித்து தலையணைக்குக் கீழே வைத்துக் கொண்டு அமைதியாகத் தூங்க முயல்வது எத்தனை முட்டாள்தனமானதோ... அது போன்றதுதான் அணு உலையை ஊருக்குள் கட்டிவைத்துவிட்டு, பாதுகாப்பை அதிகரிக் கிறோம் என்று சொல்வதும்!

இயற்கைப் பேரிடர், மனிதத் தவறுகள், மனித விஷமங்கள் மூலமாக அணு உலைகளுக்கு ஆபத்துகள் வரலாம். அண்மையில் நடந்த ஃபுகுஷிமா விபத்து முதல் வகையைச் சார்ந்தது. நில நடுக்கம் ஏற்பட்டு, அதனால் சுனாமி உருவாகி, அணு உலைகளைத் தாக்கி, உலைகளை வெடிக்கச் செய்து பெரும் விபத்து நிகழ்ந்தது. ஆகஸ்ட் 29, 2006 அன்று ராஜஸ்தான் மாநிலத் திலுள்ள ராவத்பட்டா அணு உலை யின் அருகே உள்ள கன்வர்புரா என்ற கிராமத்தின் மீது ஒரு விண்கல் வந்து மோதியது. அது அணு உலையின் மீது மோதியிருந்தால் பெரும் விபத்து நிகழ்ந்து இருக்கும். காரில் நாம் வேகமாகப் போகும்போது, ஒரு பெரிய பாறை வந்து விழுந்தால் எத்தனை பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை கற்பனை செய்துபாருங்கள். அதுபோலத்தான் தலை தெறிக்கும் வேகத்தில் சுற்றிக் கொண்டும், சுழன்று கொண்டும் இருக்கும் பூமியின் மீது ஒரு விண்கல் வந்து விழுந்தால் ஏற்படும் விளைவும் இருக்கும்!

அணு ஆட்டம்!

மனிதத் தவறுகளின் காரணமாகத் தான் உக்ரைன் நாட்டில், செர்னொ பில் அணு உலை வெடித்தது. எந்தத் தொழிலிலும், எந்த நிலையிலும், எந்தத் தருணத்திலும் மனிதத் தவறுகள் நிகழ லாம்; நிகழ்கின்றன. கவனமாகக் கட்டப்படும் கம்ப்யூட்டர்களே தவறு செய்யும்போது, ரத்தமும், சதையும் கொண்ட, பல்வேறு சிந்தனைகளும், கவலைகளும், பயங்களும், கனவுகளும், ஆசைகளும், விருப்பு-வெறுப்புகளும், கோபதாபங்களும் கொண்ட மனிதர்கள் தவறு செய்வதில் என்ன விந்தை இருக்கமுடியும்?

மனித விஷமங்கள் ஒரு பெரிய பிரச்னை. உள்நாட்டு பாதுகாப்புப் பற்றி கலந்து ஆலோசிக்க இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர் களையும் செப்டம்பர் 5, 2006 அன்று பிரதமர் அழைத்தார். அன்றைய முக்கிய விவாதங்களுள் ஒன்று என்ன தெரியுமா? பயங்கரவாதக் குழுக்கள் இந்தியாவிலுள்ள முக்கிய நிறுவல்கள் (Installations) மீது தாக்குதல் நடத்தலாம், அணு உலைகள் உட்பட என்பதுதான். பிரதமர் இந்தக் கூட்டத்தை நடத்தியதற்கும், அணு உலைகளின் பாதுகாப்பு பற்றி கவலைப் பட்டதற்கும் காரணம் இருந்தது. ஆம், ஆகஸ்ட் 22, 2006 அன்று குஜராத் மாநிலத்திலுள்ள சாக்ரபார் அணு மின் நிலையத்தின் உள்பகுதியில் ஆயுதம் தாங்கிய இரண்டு பயங்கரவாதிகள் கண்டுபிடிக்கப்பட்டார்கள். வேறு தகவல்கள் எதையும் தராத மத்திய அரசு, 'அணு உலை பாதுகாப்பாக இருக்கிறது’ என்று மட்டும் ஓர் அறிக்கை விடுத்தது (தி ஹிந்து, ஆகஸ்ட் 23, 2006). ஆகஸ்ட் 17. 2011 அன்று கூட உள்துறை துணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், 'அணு மின் நிலையங்கள், பயங்கரவாதக் குழுக்களின் முக்கிய இலக்குகளாக இருக்கின்றன’ என்றார். பயங்கரவாதச் செயல்களை நமது அரசு எப்படித் தடுக்கும் திறனுடன் இருக்கிறது என்பது, மும்பை வெடிகுண்டு நிகழ்வுகளில்

அணு ஆட்டம்!

இருந்தே அறிந்துகொள்ள முடியும். ஜெயிஷ்-இ-முகமது (ஜெம்) எனும் பயங்கரவாதக் குழு கடற் பிரிவு ஒன்றினைத் துவக்கி, தீவிரவாதிகளுக்கு 18 மாதங்கள் பயிற்சி கொடுத்து, நடுக்கடலில் முகாம் அமைத்து, கல்பாக்கம் அணு மின் நிலையத்தைத் தாக்கத் திட்டமிட்டு இருப்பதாக இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது (தினத்தந்தி, பிப்ரவரி 2, 2007). கல்பாக்கம் அருகே அனுமதியின்றி ஒரு ஹெலிகாப்டர் தரையிரங்கிப் பரபரப்பு ஏற்படுத் தியது (தினமலர், டிசம்பர் 22, 2009). தவறான பெயரும், முவரியும் கொடுத்து பல இளைஞர்கள் வருடக்கணக்காக கூடங்குளம் அணு மின் நிலையத்தில் வேலை பார்த்தது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. தேசத் தந்தை மகாத்மா காந்தியை, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை, காங்கிரஸ் கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை, ஏன் இவர்கள் அனைவருக்கும் மேலான நாடாளுமன்றத்தையே பாதுகாக்க முடியாத இந்திய அரசு அணு உலைகளைப் பாதுகாக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.

அணு உலைகளை அச்சுறுத்தும் மனித விஷமங் களுள் இன்னொரு வகை இருக்கிறது. அதுதான் அணு சக்தித் துறையே செய்வது, அல்லது செய்துவிட்டு மறைப்பது. கல்பாக்கத்தின் தகிடுதத்தங்களை எல்லாம் எழுத இங்கே இடமில்லை என்பதால், ஒன்றிரண்டைச் சொல்கிறேன்.

1999-ம் ஆண்டு மார்ச் 26 அன்று கல்பாக்கம் அணு உலையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. இரண்டாவது அணு உலையில் மாபெரும் கனநீர் கசிவு ஏற்பட்டு கதிரியக்கம் பரவியது. ஏழு தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டதால், அவர்கள் எஞ்சியுள்ள வாழ்க்கையில் கதிர்வீச்சுக்கு ஆளாகவே கூடாது என்று அறிவிக்கப்பட்டு நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்கள். சுமார் 50 தொழிலாளர்கள் 'கவனம் தேவை’ பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள். இது குறித்து கல்பாக்கம் அதிகாரிகளோ, அணு சக்தித் துறையோ கடைசி வரை வாய் திறக்கவேவில்லை.

2003-ம் வருடம் ஜனவரி மாதம் கல்பாக்கத்தில் கதிர் வீச்சு கசிவு ஏற்பட்டு ஆறு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். பார்க் (BARC) நிறுவனத் தலைவர் பி.பட்டாச்சார்ஜி, 'தாங்கள் ஓர் எந்திரம் பழுதுபட்டதை கவனிக்காமல் விட்டதாலும், தொழி லாளர்களின் கவனக்குறைவினாலும் இந்த விபத்து நிகழ்ந்தது’ என்று குறிப்பிட்டார். ஜனவரியில் நடந்த தவறை அவர் ஒப்புக்கொண்டது, 2003 ஆகஸ்ட் மாதம் (த ஹிந்து, ஆகஸ்ட் 7, 2003), என்பது கவனிக் கப்பட வேண்டியது!

2003 டிசம்பர் மாதம் கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்கள் மூன்று பேர் மரணமடைந்தனர். கதிர் வீச்சு காரணமாக புற்றுநோய் ஏற்பட்டு அவர்கள் மரணித்ததாக செய்தி வெளியானது. ஆனால், பாபா அணு ஆய்வு மைய (பார்க்) இயக்குநர் பட்டாச்சார்ஜி என்ன சொன்னார் தெரியுமா? 'இந்தத் தொழிலாளர்கள் சுற்றுலா ஸ்தலமான மகாபலிபுரத்துக்கு சொந்த விஷய மாகச் சென்றிருந்தபோது சாலை விபத்தில் பலியானார்கள்’ என்று தெரிவித்தார் (தினத்தந்தி, டிசம்பர் 6, 2003). வேதனை என்னவென்றால் இறந்தவர்களுள் ஒருவர் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். மகாபலிபுரத்து விபத்தில் சிக்கியவர் வேலூருக்குப் போவாரா, வேலூர் மருத்துவமனை எந்த மாதிரியான சிகிச்சைக்கு பெயர் போனது போன்ற கேள்விகளுக்கு நமது குழந்தைகள்கூட அழகாக பதில் சொல்வார்கள்.

மொத்தத்தில் இந்தியாவின் முக்கியமான சிவப்புச் சிந்தனையாளர்களுள் ஒருவரான டி.டி.கொசாம்பி சொல்வதுதான் உண்மை. 'அணுசக்தி என்பது, இன்னும் பிறக்காத எத்தனையோ தலைமுறைகள்கூட எதிர்கொள்ள இருக்கும் ஒரு மாபெரும் அச்சுறுத்தல்!’ 

அணு ஆட்டம்!

அ.வின்ஸ் ஆன்டோ

கணிதத்தில் இளமறிவியல் படிப்பும், திருநெல்வேலி சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டமும் பெற்றிருக்கும் வின்ஸ், குமரி மாவட்டத்தைச் சார்ந்தவர். 1996-ம் ஆண்டு த.மா.கா-வில் இணைந்து இன்று காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்தாலும், அணு சக்தி திட்டங்களை எதிர்க்கிறார். மாணவப் பருவத்திலேயே கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்க்கத் துவங்கியவர், 'ஒவ்வொரு நாளும் எனது எதிர்ப்பு உணர்வு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது...’ என்கிறார். குமரி மாவட்ட பாசனத் துறை சேர்மன் ஆகப் பணியாற்றும் வின்ஸ், நீர் ஆதாரங்களைக் காப்பதிலும், கூடங்குளம் அணு உலையை விரட்டுவதிலும், தம் மக்களைப் பாதுகாப்பதிலும் முனைப்புடன் செயல்படுகிறார்.

- அதிரும்..

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism