Published:Updated:

பஸ் ஸ்டாண்டுக்குள் பாய்ந்த மந்திரிகள்!

அரட்டல்... உருட்டல்... மிரட்டல்... கெஞ்சல்...

.தி.மு.க ஆட்சிக்கு வந்த இந்த மூன்றரை ஆண்டுகளில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் எதுவும் நடத்தாத நிலையில் தமிழக அளவில் ஸ்டிரைக்கை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்கள் போக்குவரத்து தொழிலாளர்கள். 2001-ல் ஓ.பன்னீர்​செல்வம் முதல்வராக இருந்த போதுதான் இதே போன்றதொரு போராட்டம் நடத்தப்பட்டது.    இப்​போது அதே பன்னீர்செல்வம் ஆட்சியில் 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு போராட்டம்! முதல்வர் பன்னீர்செல்வம் பணிவு, பவ்யம் என இருந்தாலும் இந்தப் போராட்டத்தை உடைக்க மொத்த கேபினெட்டும் பஸ் ஸ்டாண்டுக்குள் புகுந்து 'டாப் கியர்’ போட்டது ஆச்சர்யம்தான். அம்மாவுக்காக கோயில்களை வலம் வரும் மந்திரிகள் அரட்டல், உருட்டல், மிரட்டல், கெஞ்சல் என டிப்போக்களில் நடத்திய அடாவடிகள் கொஞ்சநஞ்சமல்ல.

பஸ் ஸ்டாண்டுக்குள் பாய்ந்த மந்திரிகள்!

ஆளும் கட்சியின் அண்ணா தொழிற்​சங்கப் பேரவையைத் தவிர எல்லா சங்கங்களும் வேலை நிறுத்தத்துக்கு டிசம்பர் 29-ம் தேதி நாள் குறித்தனர். ஆனால், சொன்ன நாளுக்கு முந்தைய நாளே போராட்டத்தில் குதிக்க... ஸ்தம்பித்தது தமிழகம். 'அந்தந்த மாவட்டத்தில் பஸ்களை ஓடவைப்பது மாவட்டத்தைச் சேர்ந்த மந்திரிகளின் பொறுப்பு’ என உத்தரவு வர... களத்தில் குதித்தனர் மந்திரிகள். இவர்களுக்கு பின்னால் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மேயர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என ஒரு படையே சேர்ந்துகொள்ள... வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பஸ் ஸ்டாண்டுக்குள் பாய்ந்தனர் மந்திரிகள்.

''பஸ் டெப்போவுக்குள் தங்கள் கட்சி அலுவலகத்துக்குள் நுழைவது மாதிரி ஆளும் கட்சியினர் புகுந்துவிட்டனர். மாவட்ட கலெக்டர் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உதவியாக செயல்பட்டனர். தனியார் கல்லூரி பஸ் டிரைவர்களை ஸ்பாட்டில் ஆஜராக உத்தரவு வந்தது. ஆனாலும் எந்த முயற்சியும் பலன் அளிக்க​வில்லை என தெரிந்த பிறகுதான் பேச்சுவார்த்தைக்கு அரசு இறங்கி வந்தது'' என்றார் சி.ஐ.டி.யுவின் தலைவர் சந்திரன்.

'டெப்போ மேனேஜர்’ செல்லூர் ராஜு!

பஸ் ஸ்டாண்டுக்குள் பாய்ந்த மந்திரிகள்!

'பஸ் டெப்போ மேனேஜர்’ என்ற அவதாரத்தை எடுத்தார் அமைச்சர் செல்லூர் ராஜு. அமைச்சரும், கலெக்டர் சுப்பிரமணியனும் மதுரை மாவட்டத்தில் உள்ள 15 டெப்போக்களுக்கும் விசிட் அடித்தனர். பஸ் டெப்போவில் போய் நின்றுகொண்டு, 'டவுன் பஸ்ஸை நீ ஓட்டு’, 'ரூட் பஸ்ஸை அவர் ஓட்டட்டும்’ என்று ஒவ்வொரு பஸ்ஸுக்கும் டிரைவர், கண்டக்டர்களை ஏற்றி​விட்டு கொண்டிருந்தார் செல்லூர் ராஜு. டெப்போ வாசலில் நின்றிருந்த தொழிலாளர்களைப் பார்த்து, 'ஒழுங்கா வேலைக்கு வந்திடுங்க’ என்றும் மிரட்டியிருக்கிறார். மதுரை மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் மற்றும் வேன் உரிமையாளர்​களிடம் பேசிய ஒரு தரப்பு, 'பெர்மிட் இருக்கோ இல்லையோ, எந்த ஊருக்கு வேண்டுமானாலும் டிரிப் அடிச்சுக்குங்க’ என்றும் வாய்மொழி பெர்மிஷன் கொடுத்துள்ளனர்.

'வண்டியை எடுக்கச் சொல்லுப்பா!’

வேலூர் பஸ் நிலையத்துக்குள் புகுந்த அமைச்சர் கே.சி.வீரமணி, பேருந்துகளில் ஏறி பயணிகளிடம், 'வேற டிரைவர் ஏற்பாடு பண்ணியாச்சு... கவலைப்படாம போங்க! வண்டியை எடுக்கச் சொல்லுப்பா...’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத், பஸ் நிலையத்துக்குள் நுழைந்தபோது, அடைமழை. குடையும் கையுமாக காரைவிட்டு இறங்கி கட்சிக்காரர்களை ஏவிவிட்டார். தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களுக்கு மாறி மாறி விசிட் அடித்தார் அமைச்சர் பழனியப்பன். திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்த அமைச்சர் தங்கமணி, அங்கிருந்த டைம் கீப்பரிடம், 'எந்த ஊருக்கு அதிகக் கூட்டம் இருக்காங்களோ அந்த ஊருக்கு முதல்ல பஸ் எடுக்கச் சொல்லுங்க... பஸ் ஸ்டாண்டுல அதிகக் கூட்டம் சேரக் கூடாது!’ என்று உத்தரவிட்டவர், பல ஊர்களுக்கு பஸ் கிளம்பும்வரை காத்திருந்து, 'போலாம் ரைட்’ என்று சொல்லிவிட்டுத்தான் கிளம்பினார்.

பஸ் ஸ்டாண்டுக்குள் பாய்ந்த மந்திரிகள்!

அதிகாரிகளை மிரட்டிய வேலுமணி!

ஸ்டிரைக் தொடங்கியவுடன், பஸ் டெப்போக்​களுக்கு விசிட் அடித்தார் அமைச்சர் வேலுமணி. ஒவ்வொரு பஸ் டெப்போ அதிகாரிகளிடமும் 'நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது. எல்லா பஸ்ஸும் ஓடணும்' என்று கறார் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தொ.மு.ச,  சி.ஐ.டி.யு தொழிலாளர்களைக் காட்டிலும் தங்களுடைய அண்ணா தொழிற்சங்கத்தினர் மீதுதான் அமைச்சர் வேலுமணியின் கோபமெல்லாம் இருந்தது. ஏனென்றால், கோவையில் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் பஸ்களை இயக்க மறுக்கவே, கோபத்தில் கொந்தளித்துவிட்டார் வேலுமணி.  'எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என பெரும் படையுடன் பஸ் டெப்போக்களுக்குள் நுழைந்து தொழிலாளர்களையும் அதிகாரிகளையும் அமைச்சர் வேலுமணி மிரட்டுகிறார்’ என்று கலெக்டரிடம் தொழிற்சங்கத் தலைவர்கள் புகார் செய்தனர்.

டெப்போ டெப்போவாக அலைந்த ஆனந்தன்!

பஸ் ஸ்டாண்டுக்குள் பாய்ந்த மந்திரிகள்!

திருப்பூரில், அண்ணா தொழிற்சங்கத்தினர் பெருமளவில் போராட்டத்தில் கலந்து கொண்டதால், பஸ்களை இயக்க வைப்பதற்காக அமைச்சர் ஆனந்தன் டெப்போ டெப்போவாக அலைந்தார். பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களில் பணியாற்றும் டிரைவர்களை வரவழைத்து பஸ்களை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், தாங்களே டிரைவர் பற்றாக்குறையில் இருப்பதாக பல நிறுவனங்கள் பின்வாங்கின. பயிற்சி ஓட்டுநர்கள், தனியார் பஸ் நிறுவனங்களைச் சேர்ந்த டிரைவர்கள் என கிடைத்த ஆட்களை வைத்து பஸ்களை இயக்குவதற்கு படாதபாடுபட்டார் அமைச்சர் ஆனந்தன்.

ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது!

பஸ் ஸ்டாண்டுக்குள் பாய்ந்த மந்திரிகள்!

தூத்துக்குடி மாவட்டத்தில், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மேயர் அந்தோணி கிரேஸ், அ.தி.மு.க மாநகரச் செயலாளர் ஏசா துரை, எம்.எல்.ஏ கடம்பூர் ராஜு, எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஆகியோர் ஆளுக்கொரு டெப்போவை பொறுப்பேற்றுக்கொண்டனர். ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் டெப்போக்களில் இருந்து பஸ்களை இயக்கும் பொறுப்பை அமைச்சர் சண்முகநாதன் எடுத்துக்கொண்டார். 'நம்ம ஆட்சிக்கு கெட்டபெயர் வந்துவிடக் கூடாது. நம்ம கட்சிக்காரங்க கண்டிப்பாக வண்டியை ஓட்டணும்’ என்று அமைச்சர் சண்முகநாதன் சொல்லியிருக்கிறார். ஆனால், ஒரு சில நிர்வாகிகளைத் தவிர வேறு யாரும் அவரது பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை. எந்த முயற்சியும் பலிக்கவில்லை என்பதால், அமைச்சர், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர் ஆகியோர் பேருந்து நிலையத்தில் முகாமிட்டு, தனியார் பஸ்களை வழிமாற்றி நிலைமையை சமாளிக்க முயன்றனர். பழைய பஸ் ஸ்டாண்டில் திடீரென்று ஸ்பீக்கர் ஏற்பாடு செய்து, 'ஏம்பா... குலையன்கரிசலுக்குப் போற ரத்னா, இப்போ நீ திருச்செந்தூருக்கு ஒரு டிரிப் போயிட்டு வா’ என அ.தி.மு.கவினர் அறிவிப்பு செய்தனர்.

திரைக்கதை வசனம் விஜயபாஸ்கர்!

ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலரும் ஸ்டிரைக்கில் கலந்துகொள்ள... அவர்களின் வீடுகளுக்கு கார்கள் பறந்தன. அழைப்​பிதழ் வைத்து அழைக்காத குறையாக ஒவ்வொருவரையும் காரில் 'அலேக்’ செய்தனர். புதுக்கோட்டையில் மட்டும் அதிகமான கார்கள் புழுதியை பரப்பியபடியே கிராமங்களுக்குள் நுழைந்தன. இந்தக் காட்சிகளுக்கு திரைக்கதை வசனம் தயாரிப்பு எல்லாம் அமைச்சர் விஜயபாஸ்கர்தான்.

மூன்று நாட்கள் மொத்த பஸ் ஸ்டாண்டுக்​குள்ளும் சத்தம் இல்லாமல் சைரன்கள் சுழன்றுகொண்டே இருந்தன.

- ஜூ.வி. டீம்

அடுத்த கட்டுரைக்கு