Published:Updated:

”ஸ்டாலின் - எச்.ராஜா சந்திப்பில் மனசு என்ன பேசிக் கொள்ளும்? " - கேள்வி எழுப்பிய அரசியல் விமர்சகர் 

”ஸ்டாலின் - எச்.ராஜா சந்திப்பில் மனசு என்ன பேசிக் கொள்ளும்? " - கேள்வி எழுப்பிய அரசியல் விமர்சகர் 
”ஸ்டாலின் - எச்.ராஜா சந்திப்பில் மனசு என்ன பேசிக் கொள்ளும்? " - கேள்வி எழுப்பிய அரசியல் விமர்சகர் 

”ஸ்டாலின் - எச்.ராஜா சந்திப்பில் மனசு என்ன பேசிக் கொள்ளும்? " - கேள்வி எழுப்பிய அரசியல் விமர்சகர் 

ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு தமிழக அரசியல் களம் தலைகீழான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.தி.மு.க-வுக்கு அ.தி.மு.க தான் எதிர்க்கட்சி என்பதைவிட, தற்போது பி.ஜே.பிதான் எதிர்க்கட்சியாக உருவாகியுள்ளது. அண்மை காலமாக அ.தி.மு.க., தி.மு.க-வைச் சேர்ந்த தலைவர்கள் பரஸ்பரம் விமர்சித்துக் கொள்வதை விட , தி.மு.க தலைவர்களும் பி.ஜே.பி  தலைவர்களும் ஒருவருக்கு ஒருவர் கடுமையான விமர்சனங்களை அள்ளி வீசி வருகின்றனர். இந்த நிலையில் பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் எச்.ராஜா தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் அவர்களைச் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.

அதுமட்டுமன்றி நேற்றுவரை கடுமையான விமர்சனங்களை அள்ளி வீசியவர்கள் இன்று சிரித்துக் கொண்டு போஸ் கொடுத்தது 'இதெல்லாம் அரசியலில் சாதாரணமப்பா 'என்று சாமான்யனையும் பேசவைத்து விட்டது. அரசியல் தலைவர்கள் தங்களுக்குள் கடுமையான விமர்சனங்கள் செய்து கொள்வதும்,பின்னர் சந்தித்துக் கொள்வதுமான போக்கு இருந்து வந்தாலும் ஸ்டாலின் - எச் ராஜா சந்திப்பு இருவருடைய கடந்த கால மோதல்களையும், எதிர்கால அரசியலையும் யோசிக்கவைத்து விட்டது.

விவசாயிகள் பிரச்னை தொடர்பாக பிரதமரைச் சந்திக்க அனுமதி கோரியிருந்தார் ஸ்டாலின். ஆனால், ஸ்டாலினுக்கு அனுமதி வழங்குவதில்  தாமதம் ஏற்பட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர் பிரதமரைச் சந்தித்துப் பேசினார். இந்த விவகாரத்தில் எச் .ராஜா, கிண்டலாக ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். "ஸ்டாலின் பொய் பேசுவதை நிறுத்தச் சொல்லுங்கள் நானே பிரதமரிடம்  நேரம் வாங்கித் தருகிறேன்" என்று கூறியிருந்தார்.அவருடைய இந்தப் பேச்சு தி.மு.க-வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

சாரணர் இயக்க மாநிலத் தலைவர் பதவிக்கு எச்.ராஜாபோட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானவுடன், இது குறித்து மு.க.ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். "சாரணர் தலைவர் பதவியை 'பி.ஜே.பி-க்குக் கொடுத்து பிஞ்சுகள் நெஞ்சில் காவி நஞ்சை' விதைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் இப்போதே திரைமறைவில் நடந்துகொண்டிருப்பதாக கல்வி அதிகாரிகள் பேசிக் கொண்டிருக்கின்றனர்" என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டாலின் பதவிட்டிருந்தார்.

ஸ்டாலினின் இந்த விமர்சனதுக்கு எச்.ராஜா பதிலடி கொடுத்திருந்தார். "ஆட்சி அதிகாரத்தின் மூலம் நாத்திகத்தையும். பிரிவினைவாதத்தையும் பரப்பியவர்கள் என்னைப் பற்றி பேசுகிறார்களா?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார். 

மேலும் சாரணர் பதவியை எச் ராஜாவுக்குக் கொடுக்கும் வகையில் கல்வித்துறை அதிகாரிகள் மிரட்டப்படுவதாகவும், அந்தப் பதவியை அவருக்குக் கொடுப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டியிருந்தார் ஸ்டாலின்.

இந்தப் பதிவு தொடர்பாக தனியார் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த எச்.ராஜா "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லம் பேய் என்பதுபோல,தமிழகத்தில் எது நடந்தாலும் அதற்கு பாரதிய ஜனதாவை குறை கூறும் மனநோய் ஸ்டாலினுக்கு உள்ளது எனக் கூறியிருந்தார். இவ்வாறு ஸ்டாலினுக்கும் ,எச் ராஜாவுக்குமானமோதல் போய்க் கொண்டிருந்த வேளையில் திடீரென ஸ்டாலினை எச் .ராஜா சந்தித்தார்.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, " தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலினை சந்தித்ததில் இம்மியளவும் அரசியல் இல்லை" என்று கூறியிருந்தார்."என்னுடைய மணி விழா கோவிலம்பாக்கத்தில் நடக்கிறது. அதற்காக மு.க.ஸ்டாலின் மற்றும் ,தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகளையும் அழைப்பதற்காக அவரைச் சந்தித்துப் பேசினேன். தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு உடல் நிலை சரியில்லை. எனவே அவரைச் சந்திக்க முடியவில்லை. மேலும் அவருடைய உடல்நிலை குறித்தும் ஸ்டாலினிடம் கேட்டறிந்தேன்" என்றார். 

இருவருக்கும் இடையேயான இந்தச் சந்திப்பு ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்குமா?என எச்.ராஜாவிடம் கேட்டோம். "அரசியல் ரீதியாகக் கருத்து வேறுபாடுகள் இருக்கும். அதனை மறுக்க முடியாது. கருத்துவேறுபாடுகளை நான் எப்போதும், தனிப்பட்ட உறவில் கொண்டு வருவது கிடையாது. ஏற்கெனவே 2009- ல் என் மகளின் திருமணத்துக்கு அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதியையும், துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலினையும் அழைத்து இருந்தேன். மத்திய அரசியல் களத்திலும் இதுபோன்ற விமர்சனங்கள் இருந்தாலும் அரசியல் தலைவர்கள் தனிப்பட்ட நிகழ்வுகளில் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டுவது உண்டு. எனவே, இந்தச் சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை" என்றவரிடம் இப்படி  "நட்பு ரீதியாக  சந்திக்க வேண்டிய  நிலை உள்ளது என்பது தெரிந்தும் ஏன் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறீர்கள்" என்றதற்கு? "சில நேரத்தில் பிரச்னை அடிப்படையில் மட்டுமே கருத்துகளை வெளியிடுகிறோமே  தவிர வேறு எதுவும் இல்லை "என்றார் 

இது குறித்து அரசியல் விமர்சகர் மயிலை பாலுவிடம்  பேசியபோது,"கருத்து ரீதியான சொற்பயன்பாடு சரியாக இருந்திருந்தால் அரசியல் களத்தில் இவ்வாறான கேள்விகள் எழாது.சாமான்ய மக்களே இதற்கான கருத்தைச் சொல்வார்கள். நேற்று தாறுமாறாக கருத்தைத் தெரிவித்தார்கள்...இன்று சந்தித்து கை குலுக்கிக் கொள்கிறார்கள் என்று சொல்வது இயல்பாகிவிட்டது. அந்தக் கட்சியில் இருக்கின்ற தொண்டர்களோ தலைவர்கள் என்றாலே இவ்வாறுதான் நடந்து கொள்வார்கள் என்று கருதுவார்கள்.. 

விமர்சனத்துக்கும், திட்டுவதற்கும் உள்ள வேறுபாட்டை அரசியல் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். கருத்துக்கு எதிர்க்கருத்துச் சொல்வதில் எல்லை மீறுவதில்தான் அரசியல் ஆரோக்கியம் என்பது இல்லாமல் போய்விடுகிறது. அப்படியான கருத்துகளைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறான சந்திப்புகள் என்பது அரசியல் களத்தில் நல்ல விஷயம் என்றாலும் அந்த நிகழ்வையும் இருக்கின்ற தலைவர்கள் ஆரோக்கியமாக எடுத்துச் செல்ல வேண்டும். எல்லை மீறி வார்த்தைகளைத் தவறவிடும் தலைவர்கள் மீண்டும் சந்திக்கும்போது, அவர்களுடைய மனம் என்ன நினைக்கிறது என்பதை புரிந்துகொண்டு கருத்துகளை சொல்ல வேண்டும்"  ஸ்டாலின் -ராஜா சந்திப்புக்கும் இதையேதான் கூறுகிறேன்.நேற்றுவரை கடுமையான விமர்சனங்களை வைத்தவர்கள். இன்று சந்திக்கிறார்கள். அப்போது அவர்களுடைய மனம் என்ன நினைக்கும் என்பதை எண்ண வேண்டும்" அதனால் கருத்து ரீதியிலான விமர்சனங்கள்தான் ஆரோக்கியமான அரசியலை வளர்க்கும் என்பதைப்  புரிந்து கொள்ள வேண்டும் ' என்றார்  

அடுத்த கட்டுரைக்கு