Published:Updated:

ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலாவும் தினகரனும்தான் காரணம்..! அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் குற்றச்சாட்டு

என்.ஜி.மணிகண்டன்
ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலாவும் தினகரனும்தான் காரணம்..! அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் குற்றச்சாட்டு
ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலாவும் தினகரனும்தான் காரணம்..! அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலாவும், தினகரனும்தான் காரணம் என சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 22-வது வார்டிலுள்ள மல்லிகைபுரத்தில் 9 லட்ச ரூபாய் மதிப்பிலான நவீன உடற்பயிற்சிக் கூடத்தை அமைச்சர்கள் வளர்மதி, வெல்லமண்டி நடராஜன், எம்.பி. குமார் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வெல்லமண்டி நடராஜன், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் சிறப்பான முயற்சியைத் தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து, 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதன் காரணமாக வறண்டக் காவிரியில் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. அதனைப் பார்க்கையில் மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலாவும், தினகரனும்தான் காரணம். அம்மா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரைப் பார்க்க வந்த மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் என யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை.

அதனால்தான் அம்மாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்கிற சந்தேகம் இருக்கிறது. இதுகுறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதைப்போல விரைவில் தினகரன், மாமியார் வீட்டுக்குச் செல்லும் காலம் வரும். கட்சியில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாத டி.டி.வி.தினகரன் எங்களை நீக்குவது வேடிக்கையாகவுள்ளது. அவர் ஜெயலலிதாவால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டவர். அதுமட்டுமல்லாமல், பொதுக்குழுவில் பெரும்பான்மையான நிர்வாகிகள் சேர்ந்து அவரை நீக்கிவிட்டோம். கட்சியில் இல்லாத நபர் எப்படி எங்களை நீக்க முடியும்.

மேலும் டி.டி.வி.தினகரன் தரப்பு திருச்சியில் நடத்தும் கூட்டத்தைத் தடுக்க நினைப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள். நாங்கள் அப்படிச் செயல்படவில்லை. ஜனநாயகப்படி நாட்டில் யார் வேண்டுமானாலும் கூட்டம் நடத்தலாம். அதன்படி அவர் கூட்டம் நடத்த உரிமை உண்டு. அந்தக் கூட்டத்துக்கு நாங்கள் தடைவிதிக்க நினைத்தால் தற்போது கிடைத்துள்ள ஆணைக்கூடக் கிடைத்திருக்காது' என்று தெரிவித்தார்.