Published:Updated:

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 40: 4.3.92

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 40: 4.3.92

Published:Updated:
பழசு இன்றும் புதுசு

கும்பகோணம் மகாமத் திருவிழாவில் நடந்து முடிந்த அந்த மாபெரும் சோகச் சம்பவத்தின் பாதிப்பு துளியும் மாறவில்லை. மீண்டும் ஒருமுறை, அந்த நகரைச் சுற்றி வந்தபோது, விபத்து பற்றி மேலும் பல புதிய தகவல்கள் தெரியவந்தன.

விழா ஏற்பாடுகளைச் செய்வதற்கு நிறைய கால அவகாசம் இருந்தும் மிகத் தாமதமாக அரசு விழித்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்ததே, பல குளறு​படிகளுக்குக் காரணம் என்று தெரிய வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதே, மகாமகத்துக்கான முதல் கட்ட வேலைகள் துவங்கப்பட்டு, அதற்காக

பழசு இன்றும் புதுசு

40 லட்சம் ஒதுக்கப்பட்டது. அப்போதைய தொகுதி எம்.எல்.ஏ-வும், அமைச்சருமான கோ.சி.மணி அதற்கான பணியில் தீவிரமானபோதுதான் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது.

அ.தி.மு.க. அரசு புதிதாகப் பதவி​யேற்​ற​வுடன், மகாமக வேலைகள் கண்டு​ கொள்ளப்​படவே இல்லை. அரசு ஒதுக்கிய

பழசு இன்றும் புதுசு

10 கோடி  மகாமகத்துக்கு ஒரு வாரம் முன்புதான் வந்து சேர்ந்ததாகத் தகவல்!

வழக்கமாக மகாமகப் பணிக்கு அரசு அதிகாரிகள் ஒரு குழுவாகவும், ஊர் முக்கிய பிரமுகர்களைக்கொண்ட ஒரு கமிட்டியும் அமைக்கப்படும். ஆனால், இந்த முறை மகாமகத்துக்குச் சில நாட்கள் முன்புதான், ஊர் முக்கியப் பிரமுகர்களைக்கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. அதிலும், சம்பந்தமே இல்லாத வெளியூர் பிரமுகர்கள் சிலர் சேர்க்கப்பட்டதில் உள்ளூர்ப் பிரமுகர்கள் பலருக்கு வருத்தம்.

இது இப்படியிருக்க, மகாமகக் குளத்துக்கு வருகை தரும் பக்தர்கள் எப்படி வந்து, போக வேண்டும் என்று போலீஸ் தரப்பில் ஒரு ரூட் வரைபடம் பிரின்ட் செய்து விநியோகித்தார்கள். நாளிதழ்கள் வரைபடத்தைப் பிரசுரித்தன. வெளியூரில் இருந்து வந்திருந்த பலர் அந்த வரைபடைத்தை மறக்காமல் கையில் வைத்திருந்தனர். அதேபோல, மிகப் புனிதமான என்று சொல்லப்படும் 'தீர்த்தவாரி நேரம்’ பகல் 11.45 முதல் 12.30 என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

##~##

முதல்வர் அங்கே வரப்போகிறார் என்பதை மகாமகம் நடப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பே அமைச்சர் அழகு திருநாவுக்கரசு அதிகாரிகளுக்குத் தெரிவித்திருக்கிறார். அதுவரை மக்கள் வசதிக்காக ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்த அதிகாரிகள், திடீரென்று முதல்வர் வருகைக்கான ஏற்பாட்டில் திசைதிரும்பிவிட்டார்கள்.

''ஏற்கெனவே வரைபட மேப், குளத்தில் நீராட வேண்டிய நேரம்... இப்படிப் பல விஷயங்களை விளம்பரப்படுத்தி விட்ட நிலையில், சி.எம். வந்தால் அந்த புரோகிராம்களை மாறுதல் செய்ய வேண்டிவரும். அப்படி மாறுதல் செய்தால்கூட, அதை மக்களுக்கு விளம்பரப்படுத்த அவகாசம் இல்லையே! என்ன செய்வது?'' என்று ஓர் அதிகாரி கருத்துச் சொல்ல... அவருக்கு ஆளும் கட்சிப் பிரமுகர்

ஒருவரிடம் இருந்து பயங்கர டோஸ்!

அதேபோல, மேற்குக் கரை வழியாக காரில் முதல்வர் நுழைந்தவுடன் ஓரப் பகுதியிலேயே ஓர் இடத்தில் முதல்வர் குளித்துவிட்டு, வந்தவழியே திரும்பிப் போகும்வகையில் ஓர் ஏற்பாட்டை அதிகாரிகள் செய்திருந்தார்கள். இதன்படி நடந்திருந்தால், மேற்குக் கரையின் ஒரு வழி மட்டுமே அடைபட்டிருக்கும். கரையின் மறுமுனை வழியாக மக்கள் போக்குவரத்து இருந்திருக்கும். ஆனால், இங்கேயும் ஆளும் கட்சிப் பிரமுகர் ஒருவர் தலையிட்டு, மேற்குக் கரையின் நடுவில் ஓர் இடத்தில் முதல்வர் குளிக்க இடம் குறித்திருக்கிறார். அதிகாரிகள் வாயடைத்துப்போய் நின்றார்களாம்.

இப்படி இடம் மாறியதால்தான் மேற்குக் கரையின் இருமுனையும் முதல்வர் வருகைக்காக போலீஸாரால் தடை ஏற்பட்டுத்தப்பட்டது.

இப்படித்தான் குழப்பம் ஆரம்பித்தது. இது ஒருபுறம் இருக்க... காசி விஸ்வநாதர் கோயிலின்

பழசு இன்றும் புதுசு

கொடிக்கம்பம் முறிந்து விழுந்த தகவலை அப்போதைக்கு அதிகாரிகள் மூடி மறைக்கப் பார்த்திருக்கிறார்கள். இருந்தும், அந்தத் தகவல் மக்களிடத்தில் பரவிவிட்டது.

மகாமகப் பணிக்கான ஸ்பெஷல் டியூட்டிக்​காக டி.ஐ.ஜி-யான செல்வராஜைப் போடுவதாக முடிவாகி இருந்தது. இந்த நிலையில், டி.ஐ.ஜி. திடீரென்று மாரடைப்பால் காலமாகிவிட்டார். இதனால் போலீஸார் மத்தியிலும், 'அபசகுணமான பீதி’ பரவியிருந்தது. ஒரு கட்டத்தில், போலீஸ் டி.ஜி.பி-யான ஸ்ரீபால் கும்பகோணத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகளுடன் டெலிபோனில் தொடர்புகொண்டு, ''அன்று எதுவும் அசம்பாவிதம் நடக்கக் கூடாது! எல்லாம் நல்ல​படியாக நடக்க வேண்டும் என்று நீங்கள் எல்லாம் கோயிலில் வேண்டிக்கொள்ளுங்கள்'' என்றாராம்!

ஆக மொத்தத்தில் மகாமகத் தினத்தன்று, 'நிச்சயம் ஏதோ ஒரு விபரீதம் நடக்கும்’ என்று போலீஸார் மத்தியில் ஒருவித பயம் இருந்தது! அதனால், முதல்வருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் அவர்கள் மிகத் தீவிரமாக இருந்தனர்.

நீராட வருபவர்கள் குளத்தில் வடகரைப் பகுதியில் இறங்கி மேற்குக் கரையில் ஏறுவதாக முன்கூட்டி திட்டமிட்டு அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், அந்த வழியெல்லாம் கடைசி நிமிடத்தில் முதல்வர் வருகையால் தடை செய்யப்பட்டன. வடகரையில் இறங்கி தென்கரையில் ஏறவேண்டும் என்ற போலீஸார் திடீரென திட்டத்தை மாற்றினர். இந்த 'மாற்ற விவரம்’ பொதுமக்களுக்குப் போய்ச் சேராததுதான் பெரும் குழப்பம்!

காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள் குளத்தில் இறங்கியவர்கள் மீண்டும் கரையேற வழி இல்லாமல் குளத்துக்குள்ளே நிற்கத் தொடங்கினர். குளத்தின் படிகளில் நின்றவர்கள் வெகுநேரம் நிற்க முடியாமல் அப்படியே நெருக்கமாக உட்கார்ந்துவிட்டனர். அவர்களுக்குப் பின்னால் லட்சக்கணக்கான மக்கள் குளத்தில் இறங்க வாய்ப்பு எதிர்பார்த்தபடி பதற்றத்துடன் முட்டிமோதி நின்றுகொண்டு இருந்தனர்.

இந்த நெருக்கடியான கூட்டத்தில் முதல்வரின் ஹெலிகாப்டர் வேறு சத்தமிட்டபடி வானத்தில் சுற்றி வர... பக்தர்களிடம் சலசலப்பு!

நெட்டியடித்துக்கொண்டு முன்னேறத் தொடங்கினர். ''மேற்குக் கரையை ஒட்டிய குளத்துக்குள் நின்றவர்களிடம் குடந்தை போலீஸ் உதவிக் கண்காணிப்பாளர் கந்தசாமி லேசாக லத்திப் பிரயோகம் செய்தார். இதுதான், போலீஸின் முதல் அத்துமீறல் சம்பவம்... கூட்டம் மிரண்டு ஓடத் தொடங்கியது!'' என்கிறார்கள் நேரில் பார்த்த பிரமுகர்கள்.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் சாமிநாதன் ஓடிப்போய், ''பக்தர்களை அடிக்காதீர்கள்!'' என்று கந்தசாமியிடம் கெஞ்சினார். ஆனால், சிதறிய கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

சரியாக 11.45 மணிக்கு ஜெயலலிதா புனித நீராடத் தொடங்கியபோது ரெடியாக இருந்த தேவாரம் ஐ.ஜி., தீர்த்தவாரிக்கான நேரம் தொடங்கிவிட்டதை அறிவிப்பதற்காக மூன்று முறை துப்பாக்கியால் வானத்தில் சுட்டுக் காட்டினார்.

பழசு இன்றும் புதுசு

தேவாரம் துப்பாக்கி உயர்த்துவதைப் பார்த்ததுமே, 'ஏதோ அசம்பாவிதம்’ என்று தவறாக எண்ணி மக்கள் சிதறத் தொடங்கினர். மக்கள் பீதி அதிகமாகிறது. உடனே அவர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தியதில், கூட்டத்தில் சிக்கிப் பலர் மூர்ச்சையாகி இருக்கிறார்கள்.

12.00 மணிக்குப் புனித நீராடிவிட்டுக் கரையேறிய ஜெயலலிதா, பொதுமக்களைக் கவர்வதற்காக கையசைத்துக் காட்டும்போது ஏற்பட்ட திடீர் நெரிசலில், வடகரையில் உள்ள 'பாங்கூர் தர்மசாலா’ கிரில் கவர் தடுப்பு அருகே மக்கள் வெள்ளம் ஆரவாரித்தது. அப்போது கிரில் சுவர் சாய்ந்தது. இதைப் பார்த்ததும் கூட்டம் மேலும் சிதறி ஓடியது. அப்போது கட்டடம் இடித்துவிட்டதாக நினைத்த மக்கள் நாலா பக்கமும் ஓடியபோது அவர்களைத் தடுத்து நிறுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் லத்தியால் சுழற்றிச் சுழற்றி அடித்தார். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கியப் பிரமுகர் ஒருவர் ''அடிக்காதீர்கள்!'' என்று அந்த இன்ஸ்பெக்டரின் காலைப் பிடித்துக் கெஞ்சியதாகத் தெரிகிறது.

ஒரு கும்பல் குளத்தில் இருந்து கரையேறவும், மற்றொரு கும்பல் போலீஸ் தடியடி பொறுக்கமுடியாமல் குளத்தில் இறங்க முற்பட்டதும் இடையில் மக்கள் சிக்கி மூச்சுத் திணறினர்.

சிறிது நேரத்தில் ஜெயலலிதா அங்கு இருந்து புறப்பட்டு பெண்கள் கல்லூரி ஹாஸ்டலுக்கு ரெஸ்ட் எடுக்கச் சென்றதும், குளத்தில் இருந்து ஒட்டுமொத்த மக்களும் மேற்குக் கரையிலும், வடகரையிலும் கரையேறிப் போக முற்பட்டனர். போலீஸார் மீண்டும் ஒரு முறை தடியடிப் பிரயோகம் நடத்தினர்!

இப்படியாகப் பல தடவை குறுகிய ஏரியாவுக்​குள்ளே போலீஸ் தாக்குதல் நடத்தியிருக்கிறது. எல்லாம் முடிந்து கூட்டம் வடியத் தொடங்கியபோது, வடகரையில் பாங்கூர் தர்மசாலா அருகில் கிட்டத்தட்ட 200 அடி இடைவெளியில் நூற்றுக்​கணக்கானவர் விழுந்துகிடந்தனர். காயம்​பட்டுப் பலர் துடித்துக்கொண்டு இருந்தனர். இவர்களைத் தவிர, குளத்தின் மற்ற கரைகளில் நெரிசலில் சிக்கிக் காயம்பட்டவர்கள் பலர். இவர்கள் அனைவரையும் தர்மசாலா வாசலருகே தூக்கி வந்து தரையில் வரிசையாகப் படுக்க வைத்திருந்தனர்.

இத்தனை விபரீதம் நடந்து முடிந்ததும், போலீஸ் கொஞ்ச நேரம் ஸ்தம்பித்துப் போனது. உடனடியாக ஆம்புலன்ஸ், போலீஸ் கன்ட்ரோல், ஆஸ்பத்திரி ஆகியவற்றுக்கு எல்லாம் மின்னல் வேகத்தில் தகவல் சொல்லி உஷார்படுத்தியது ஹாம் (பிகிவி) ரேடியோ சங்கத்தினர்தான்!

எல்லாவற்றிலும் கொடுமையான ஒரு விஷயம்... குளத்தின் வடகரையில் இருமுனைகளிலும் நின்றிருந்த போலீஸார், நிலைமை தங்கள் கைமீறிப் போவதைப் பார்த்து பயந்து போய்விட்டனர்.  எப்படி மக்களைக் கட்டுக்குள் கொண்டுவருவது என்று புரியாமல், தங்கள் கைகளில் இருந்த வயர்லெஸ் மூலம் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டனர். ''முதல்வர் பத்திரமாகப் போகட்டும்... அப்புறம் பார்க்கலாம்!'' என்றே எல்லா முனைகளில் இருந்தும் பதில் வந்தது. அதோடு... கீழ்மட்ட போலீஸாரிடம் இருந்து வந்த வயர்லெஸ் அழைப்புகளைச் சட்டை செய்யாமல், முதல்வரையும் தங்கள் குடும்பத்தினரையும் பத்திரமாக காரில் அனுப்புவதில்தான் உயர் அதிகாரிகள் சிலர் கண்ணும்கருத்துமாய் இருந்து இருக்கிறார்கள்!

கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த பொதுமக்களிடம் அகப்பட்டத்தைப் பறிக்கவே ஒரு கூட்டமும், சில்மிஷம் செய்ய வந்திருந்த ஒரு கூட்டமும் போலீஸார் முன்னிலையிலேயே தங்கள் பணியை அரங்கேற்றியதுதான் அனைத்திலும் சோகமானது!

'தர்மசாலாவில் உணவுப் பொட்டலங்களை விஸ்வ ஹிந்து பரிஷத் விநியோகித்ததைப் பார்த்ததாக’ உள்ளூர்க்காரர்கள் சிலரைக் கட்டாயப்படுத்தி எழுதி வாங்கி இருக்கிறார்கள். அதனால்தான் பதற்றம் உண்டானது என்று காட்டப் பார்க்​கிறார்கள். அப்படி எழுதிக் கொடுத்தவர்கள் என்னிடம் வந்து முறையிட்டார்கள். உடனே, நான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் விசாரித்து, அவர்கள் எழுதிக் கொடுத்ததை வாபஸ் பெறச் செய்தேன்!'' என்கிறார் சாமிநாதன்.

உண்மையில் மகாமகத்தை முன்னிட்டு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மருத்துவ முகாம், இலவச உணவு என்று சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டதை, கட்சி வித்தியாசம் இன்றி அரசியல் பிரமுகர்கள் பாராட்டி இருக்கிறார்கள். விழாவுக்கு வந்திருந்த மக்களும் பாராட்டியிருக்கிறார்கள். ஆனால் அரசு தரப்பில், இவர்கள் மீதுதான் ஒட்டுமொத்தமாகக் குற்றம் சுமத்தப்படுகிறது.

********

விருந்து நடந்தது..!

முதல்வரும் சசிகலாவும் குளத்துக்கு வந்தவுடனே - அங்கு அவருக்காக ஏற்பாடாகி இருந்த பாத்ரூமைப் பார்த்த முதல்வர் முகம் சுளித்திருக்கிறார். அந்த பாத்ரூமுக்குள் போய் குளிக்கலாமே என்று முதல்வரை சசிகலா அழைத்திருக்கிறார். ஆனால், முதல்வர் மறுத்துவிட்டு, குளத்தின் படிக்கட்டுகளிலேயே அமர்ந்து குளிக்க முடிவு செய்தார். முதல்வரின் இந்தத் திடீர் முடிவு, ''அடடா, இத்தனை ஏற்பாடுகளைச் செய்தும் வேஸ்ட்டா போச்சே!'' என்று அமைச்சர் ஒருவர் உட்பட ஆளும் கட்சிப் பிரமுகர்கள் கவலைப்பட்டனர். அவர்களுக்கு அருகில் இருந்து ஓர் அதிகாரி இப்படிச் சொன்னாராம்... ''மக்களோடு மக்களாக நின்று முதல்வர் குளிக்கும் வரையில் சிறு தடுப்பு அமைத்து ஏற்பாடு பண்ணி இருக்கலாம். அதைச் செய்யாமல், தனி பாத்ரூமே கட்டியது முதல்வருக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது.''

முதல்வர் தனது அமைச்சரவை சகாக்களை ஒவ்வொருவராக அழைத்து, புனித நீரை அவர்கள் மீது தெளித்து வாழ்த்தினாராம். பிறகு, தொகுதி எம்.எல்.ஏ-வான ராமநாதன், தொகுதி எம்.பி-யான மணிசங்கர ஐயர் இருவருக்கும்கூடப் புனித நீரைத் தெளித்து வாழ்த்தியபோது மெய்சிலிர்த்துவிட்டார்களாம்.

முதல்வர் நீராடிய பிறகு முன்பே ஏற்பாடு செய்தவாறு பெண்கள் கல்லூரி ஹாஸ்டலுக்குச் சென்றுவிட்டார். அங்கே, தஞ்சாவூர் பாணியில் மாபெரும் விருந்து காத்திருந்தது. முதல்வருக்கு ராசியான எண் 9. அதன் இரண்டு மடங்காக 18 வகை காய்கறிகளுடன் சாப்பாடு. அமைச்சர்கள் உட்பட 300 பிரமுகர்கள் அந்த விருந்தில் கலந்துகொண்டார்கள். மகாமகக் குளத்தருகே நடந்து முடிந்த அந்தத் துயரச் சம்பவம் குறித்து அப்போது முதல்வரிடம் சொல்லத் தயங்கிய சில அதிகாரிகள் மட்டும் விருந்தில் கலந்துகொள்ளவில்லை! அந்தச் சம்பவம்பற்றி சென்னை சென்ற பிறகுதான் முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ''இந்த விஷயத்தைக் கும்பகோணத்திலேயே தனக்கு ஏன் தெரிவிக்கவில்லை?'' என்று அதிகாரிகளிடம் முதல்வர் கோபப்பட்டாராம்.

_ நமது நிருபர்கள்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism