Published:Updated:

'மோடி அரசு முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்படுகிறது' - வேல்முருகன் கண்டனம்

இரா.செந்தில் குமார்
'மோடி அரசு முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்படுகிறது' - வேல்முருகன் கண்டனம்
'மோடி அரசு முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்படுகிறது' - வேல்முருகன் கண்டனம்

" அரசியல் சாசனத்தையும் சர்வதேச சட்டங்களையும் மீறி, அரசையே குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராகக் கொண்டுசெலுத்தும் மோடியை வன்மையாகக் கண்டிக்கிறோம். ரோகிங்யா முஸ்லிம்களை அகதிகளாக ஏற்க மறுக்கும் முடிவை  மோடி உடனடியாகக் கைவிட வேண்டும்" என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்  கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது " சட்டத்தின் ஆட்சி  என்பதுதான் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால் மோடியின் தன்னிச்சையான முடிவுகள் எதுவும் நாடாளுமன்றத்தில் வைக்கப்படுவதுமில்லை, விவாதிக்கப்படுவதுமில்லை. எனவே அவர் சட்டத்தின் ஆட்சி நடத்தவில்லை என்றாகிறது. இது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகும் .அப்படி அரசியல் சாசனத்திற்குப் புறம்பான ஒரு தன்னிச்சையான முடிவை குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக எடுத்திருக்கிறார் அவர்.

மியான்மர் நாட்டு ராணுவம் அந்நாட்டின் குடிகளான “ரோகிங்யா முஸ்லிம்கள்” மற்றும் சிறுபான்மைக் கிறிஸ்தவர்கள் மீது கொடூர தாக்குதலைக் கட்டவிழ்த்து, வலுக்கட்டாயமாக அவர்களை வெளியேற்றி வருகிறது. இதனால் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோகிங்யா முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.அகதிகளான அவர்களில் சுமார் 3 லட்சம் பேர் வங்க தேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். சுமார் 40 ஆயிரம் பேர் இந்திய எல்லைப்புறத்தை வந்தடைந்தனர்.ஆனால் மோடி, “இந்த ரோகிங்யா முஸ்லிம்களை இந்தியாவுக்குள் அனுமதிப்பதில்லை; ஏன் எனில் அவர்களால் இந்தியாவுக்கு ஆபத்து நேரிடும்; தீவிரவாத நடவடிக்கைகளுக்குத் தொடர்புடையவர்கள் என அவர்களைப் பற்றி உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது” என்கிறார்.

அவர்களைத் தீவிரவாதிகளாக சித்தரித்து, படுகேவலமான அரசியலின் சின்னமாகியிருக்கிறார்.ரோகிங்யா முஸ்லிம்களை அகதிகளாக அங்கீகரிக்க மோடி மறுப்பதானது, இந்திய அரசியல் சாசனத்திற்கும் அகதிகள் குறித்த சர்வதேச சட்டங்களுக்குமே புறம்பானதாகும்.
தான் ஏற்க மறுப்பது மட்டுமன்றி வங்கதேச அரசையும் “ரோகிங்யா முஸ்லிம்களை அகதிகளாக ஏற்க வேண்டாம்” என நிர்பந்தம் செய்வதாகவும் தகவல் வருகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இதற்காகவே வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தார் எனவும் சொல்லப்படுகிறது. இப்படி அரசியல் சாசனத்தையும் சர்வதேச சட்டங்களையும் மீறி, அரசையே குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராகக் கொண்டுசெலுத்தும் மோடியை வன்மையாகக் கண்டிப்பதுடன்; ரோகிங்யா முஸ்லிம்களை அகதிகளாக ஏற்க மறுக்கும் முடிவை உடனடியாகக் கைவிடுமாறும் வலியுறுத்துகிறோம்" என்றார்.