Published:Updated:

சர்தார் சரோவர் அணை நிறைவது தண்ணீரால் அல்ல... கண்ணீரால்! - மேதா பட்கரின் தோழி #SardarSarovar

சர்தார் சரோவர் அணை நிறைவது தண்ணீரால் அல்ல... கண்ணீரால்! - மேதா பட்கரின் தோழி   #SardarSarovar
சர்தார் சரோவர் அணை நிறைவது தண்ணீரால் அல்ல... கண்ணீரால்! - மேதா பட்கரின் தோழி #SardarSarovar

சர்தார் சரோவர் அணை நிறைவது தண்ணீரால் அல்ல... கண்ணீரால்! - மேதா பட்கரின் தோழி #SardarSarovar

திலிருந்து தொடங்கலாம், "நர்மதா நதி. மேதா பட்கர். போராட்டம்." இந்த வார்த்தைகளை, நம் வாழ்வில் என்றாவது ஒரு நாள், ஏதாவது ஒரு வழியில் கடந்திருப்போம். ஆனால், அது தொலைதூரத்தில் நடக்கும் நிகழ்வு என்பதால், அதற்குப் பெரிய முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டோம். ஆனால், இன்று அதைப் பற்றிய சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், மிக சமீபமாக "குஜராத். பிரதமர் மோடி. சர்தார் சரோவர் அணை. சாதனை. வெற்றி. விவசாயிகள் மகிழ்ச்சி. வரலாறு. சர்தார் வல்லபாய் படேல். வளர்ச்சியின் நிஜ நாயகன். இந்தியாவின் ஆகச் சிறந்த பிரதமர்." இது போன்ற வார்த்தைகளை அதிகமாகக் கடந்திருக்கிறோம். 

"இந்திய தேசத்தின் கனவுத் திட்டம் நிறைவேறியது", "மோடி, குஜராத்தின் வெற்றி மாடல்", "வறட்சியில் தவிக்கும் விவசாயிகளின் வாழ்க்கைப் பிரச்னையைத் தீர்த்த மோடி அரசு" என்று வாட்ஸ்அப்பில் பகிர்வதற்கு ஒரு சில நிமிடங்கள் முன்பு, இந்தத் திட்டத்தைப் பற்றியும் அதன் சாதக பாதகங்கள் குறித்தும் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகிறது.

சர்தார் வல்லபாய் பட்டேல், சுதந்திர காலத்திற்கு முன்னர் ஒரு கனவு காண்கிறார். அது நர்மதா அணையின்மீது மிகப் பெரிய... பெரிய என்றால், உலகிலேயே பெரிய அணை ஒன்றைக் கட்ட வேண்டும். அதன் மூலம், வறட்சிக்குத் தீர்வு காண வேண்டும் என்பது. பட்டேலின் அந்தக் கனவுக்கு 1961ல் உயிர் கொடுத்தார், ஜவஹர்லால் நேரு. சர்தார் சரோவர் அணைக்கு அந்த வருடம் நேரு அனுமதி வழங்கினார். 1979ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 1987ல் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டன.

பொதுவாக, அணைகளை இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, "எம்பேங்க்மென்ட் அணைகள்" (Embankment Dams).இது, பொதுவாக நாம் பார்க்கக்கூடிய அணைகள். மற்றொரு வகை, "கிராவிட்டி அணைகள்" (Gravity Dams). இதில் சர்தார் சரோவர், கிராவிட்டி அணை வகையைச் சேர்ந்தது. அதிகப்படியான கான்கிரீட்டைக்கொண்டு கட்டப்படுவது. அந்த கான்கிரீட்டின் உறுதித்தன்மையைக் கொண்டு நீரைத் தேக்கும் இயல்பைக்கொண்டது. சமயங்களில், அணையின் கொள்ளளவை மீறி நீர் ஓடும்போதும்கூட பாதிப்புகள் ஏற்படாதவாறு தடுக்கும்திறன்கொண்டது. (குறிப்பு: கொள்ளளவைத் தாண்டிய கொஞ்ச அளவுக்குத்தான். அதிகப்படியான வெள்ளத்தை இந்த அணையும் தாங்காது)

கிராவிட்டி அணையான 'சர்தார் சரோவர் அணை', உலகிலேயே இரண்டாவது பெரிய கிராவிட்டி அணையாகச் சொல்லப்படுகிறது. (உலகின் முதல் பெரிய கிராவிட்டி கான்க்ரீட் அணை, அமெரிக்காவில் இருக்கும் 'கிராண்ட் கெளலி'.)

1. சர்தார் சரோவர் அணையில் 30 மதகுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் 450 டன் எடைகொண்டது. ஒரு மதகினைத் திறக்க ஒரு மணிநேரம் வரை ஆகும்.

2. குஜராத்தின் கெவாடியா எனும் பகுதியில் இந்த அணை நிறுவப்பட்டுள்ளது. 

3. குஜராத், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள், இதனால் பயன்பெறும் என்று சொல்லப்படுகிறது.

4. 1400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்டது. 

5. 2006-ம் ஆண்டே இந்த அணை பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், அதன் உயரம் உயர்த்தப்பட்டு, இப்போது நாட்டுக்கு பிரதமரால் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

6. 2006-ம் ஆண்டு, இந்த அணையின் ஆழத்தை 121.92 மீட்டரிலிருந்து, 138 மீட்டராக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அன்றைய குஜராத் முதலமைச்சராக இருந்த பிரதமர் மோடி, 51 மணிநேரம் தொடர் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.

7. இந்த அணை ஏற்படுத்தும் சூழலியல் சீர்கேடுகளையும், இதனால் லட்சக்கணக்கான ஆதிவாசிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட இனத்தவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், இந்தத் திட்டத்தை எதிர்த்து சமூக மற்றும் சூழலியல் போராளிகள் மேதா பட்கர், அருந்ததி ராய் மற்றும் பாபா ஆம்தே  ஆகியோர் 'நர்மதா நதி பாதுகாப்பு இயக்கம்' தொடங்கினார்கள். (நர்மதா பச்சோ அந்தோலன்). இது, இன்றுவரை தொடர்ந்து போராடிவருகிறது. 

8. முதலில் இந்தத் திட்டத்துக்கு, உலக வங்கி நிதியுதவி செய்துவந்தது. பின்னர், இது பெரும் சூழலியல் கேடுகளை விளைவிக்கக்கூடியது என்பதை உணர்ந்து, 1994ல் இந்தத் திட்டத்துக்கு உதவுவதிலிருந்து பின்வாங்கியது உலக வங்கி.

9. நேரு காலத்தில் இவ்வளவு பெரிய அணைக்கான திட்டம் தீட்டப்படவில்லை. அன்றைய திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஆழம், 162 அடிகள் மட்டுமே. ( இன்று இது 455 அடி - 138.68மீ)

10. இந்தத் திட்டம், இன்னும் முழுமையாக முடியவேயில்லை. குஜராத்தில், கடந்த 20 ஆண்டுகளாக பா.ஜ.க-வின் ஆட்சி இருந்தும்கூட இந்த அணைக்கான கால்வாய் வெட்டும் பணி முழுமைபெறவில்லை. 90,389கி.மீ தொலைவுக்குத் திட்டமிடப்பட்டிருந்த கால்வாய், 18,803கி.மீ மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

11. 19 லட்சம் ஹெக்டேர்களுக்குப் பாசன நீர் வழங்கவேண்டிய இந்தத் திட்டம், இன்று 3 லட்சம் ஹெக்டேர்களுக்கு மட்டுமே பாசன நீர் வசதி வழங்குகிறது. 

பொய்களால் மட்டுமே கட்டப்பட்ட அணை :

சர்தார் சரோவர் அணைகுறித்த தகவல்களை அறிய, மேதா பட்கரோடு இணைந்து செயல்படுபவரும், அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பின் ஆலோசகருமான கீதா அவர்களைத் தொடர்புகொண்டோம்...

"வெறும் பொய்களால் மட்டுமே கட்டப்பட்டது இந்த அணை. இன்று உலகம் முழுக்கவே பல நாடுகளும்  பெரிய அணைகளுக்கு எதிராக மாறிவரும் சூழலில், நம் தேசம் அதற்கு நேரெதிர் திசையில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இயற்கைப் புரிதலும் அடிப்படை அறிவும் கொண்டு, சிந்திக்கும் திறன்கொண்ட அனைவருக்குமே இது ஒரு மோசடித் திட்டம் மட்டும் அல்ல, பேரழிவைத் தரும் திட்டம் என்பதும் தெளிவாகத் தெரியும். 

குஜராத் மாநிலத்தில் ஏற்படும் பூகம்பங்களுக்கு, இந்தப் பெரிய அணைத் திட்டம் முக்கியமான காரணம் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபணம் ஆகியுள்ளது. எத்தனை லட்சம் பூர்வீகக் குடிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்தல் பணிகள் இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவே இல்லை. 2006ல் இதன் ஆழம் அதிகப்படுத்தியதால் மட்டுமே 192 கிராமங்கள் காலி செய்யப்பட்டுள்ளன. 44 ஆயிரம் குடும்பங்கள் தங்கள் நிலங்களைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். சொல்ல முடியாத அளவிற்கான காடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. தான் வழக்கமாகச் செய்யும் விளம்பரத் தந்திரங்களைவைத்து, இந்த முறையும் மக்களை ஏமாற்றியுள்ளார், பிரதமர். எங்கள் கேள்விகளுக்கு வேண்டாம்... குஜராத்தின் முன்னாள் முதல்வரான பா.ஜ.க-வைச் சேர்ந்த சுரேஷ் மேத்தா இத்திட்டத்துக்கு எதிராக எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பிரதமர் என்ன பதில் வைத்திருக்கிறார்? 

பா.ஜ.க-வைச் சேர்ந்த குஜராத் முன்னாள் முதலமைச்சர் சுரேஷ் மேத்தா, பல அரசு ஆவணங்களைச் சுட்டிக்காட்டி, இந்தத் திட்டம் மிக மோசமானது என்றும் இதனால் விவசாயிகளுக்குத் துளியளவு நன்மையும் இல்லை என்றும், அரசு ஏன் இதை தவறாக விளம்பரம் செய்கிறது என்றும் புரியவில்லை என்று ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

எங்கள் போராட்டம் முடிந்திடவில்லை. காடுகளில் சுற்றித்திரிந்து, மர நிழல்களில் இளைப்பாறிய ஆதிவாசிகள், இன்று கொளுத்தும் வெயிலில் தகர ஷெட்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த அணையின்மீது பிரதமர் எடுத்துவைத்த ஒவ்வொரு அடியின் கீழும் ஆயிரமாயிரம் பழங்குடிகளின் ரத்தமும், சதையுமான வாழ்க்கையும் இருக்கிறது. அவர், தன் பிறந்தநாளைக் கொண்டாடியது அணையின் மீது அல்ல, மண்ணாய் அழித்தொழிக்கப்பட்ட பழங்குடிகளின் கல்லறைமீதுதான்..."  

வளர்ச்சி, விவசாயிகளுக்கு அல்ல... நிறுவனங்களுக்குத்தான் : 

                                    " கட்டப்பட்ட அணை நிரம்பும் அளவுக்குத் தண்ணீர் இல்லை. இதற்காக, பக்கமிருக்கும் அணைகளிலிருந்து நீரை எடுத்து, இந்த விழாவுக்காக

இந்த அணையில் நிரப்பியுள்ளனர். இதைவிட மோசமான விஷயம் வேறு ஏதாவது இருக்குமா? இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் ஆர்&ஆர் (R&R - Rehabilitation and Resettlement) செய்யப்படவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, இதில் செளராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளின் வறட்சி தீர்க்கப்படும் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். உண்மை என்னவென்றால், அந்தப் பகுதிகளுக்கெல்லாம் இன்னும் கால்வாயே வெட்டப்படவில்லை. இப்போதைக்கு வதோரா போன்ற நகரங்களுக்குத்தான் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பயன்பெறப்போவது விவசாயிகள் அல்ல. நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் தான். 

 எல்லாவற்றுக்கும் மேலாக, காந்திஜி பிறந்தநாளின்போது, சத்குருஜியும் மோடிஜியும் சந்திக்கப்போகிறார்கள். இருக்கும் காடுகளையும், நதிகளையும் அழித்துவிட்டு, இருவரும் நதிகள் மீட்புகுறித்துப் பேசுவார்கள். என்ன ஒரு வேடிக்கை?" என்று சொல்லி முடிக்கிறார் சூழலியலாளர் நித்யானந்த் ஜெயராமன். 

குஜராத்தில், விரைவில் தேர்தல் நடக்கவிருப்பதால், அவசரஅவசரமாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில், தண்ணீர்தான் பிரதானமான விஷயமாக இருக்கப்போவதால், பா.ஜ.க இதைக் கையில் எடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

அந்தக் கறுப்பு நிற ரேஞ்ச் ரோவரில் வெளியே நின்றபடி கைகளை அசைத்துக்கொண்டு அணையை நெருங்குகிறார் பிரதமர். "ஹேப்பி பர்த் டே டு யூ..." எனும் கோஷம் விண்ணைப் பிளக்கிறது. அணைக்குப் பூஜை செய்கிறார். பூ தூவுகிறார். கையெடுத்துக் கும்பிடுகிறார். அந்த விழாவில் இப்படிப் பேசுகிறார்...

"சிலர் நினைக்கிறார்கள், இந்தியாவின் சுதந்திரம் சில தலைவர்களால் மட்டுமே பெறப்பட்டது என்று. ஆனால், உண்மையில் பல ஆயிரம் ஆதிவாசிகள் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்குப் பின்னர் இருக்கின்றனர். அவர்களுக்குரிய மரியாதையை வழங்க வேண்டும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். எதிர்காலம் அவர்களின் தியாகத்தை உணர வேண்டும்..." என்று அவர் சொல்லிக்கொண்டிருந்த அதே நேரத்தில், அவர் ரேஞ்ச் ரோவர் சில நிமிடங்களில் எட்டிவிடும் தூரத்தில், நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்கள் தங்கள் உரிமைகளுக்காகவும், சுய மரியாதைக்காகவும், தங்கள் வாழ்க்கைக்காகவும் நர்மதா ஆற்றில் கழுத்தளவு இறங்கி நின்று போராடிக் கொண்டிருந்தார்கள். 

இந்தத் திட்டத்துக்கு எதிராக எத்தனையோ வழக்குகள் போடப்பட்டன. எவ்வளவோ போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் கூட, அரசின் இரும்புக் கரங்களின் முன் அதை வென்றெடுக்க முடியவில்லை. 

அவர்களின் கண்ணீர்தான், அந்த அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக்கொண்டிருக்கிறது என்பதைப் பிரதமர் ஒரு நாளும் உணரப் போவதில்லை. வரலாறும், வாழ்க்கையும் தொலைத்த அந்தப் பழங்குடிகளுக்கு, ஒருபோதும் இழந்த வாழ்க்கை வாய்க்கப்போவதுமில்லை. இயற்கையின் முன்னர் எந்த அரசியலும் எடுபடாது என்பதை, எந்த அரசியல்வாதியும் உணரப்போவதுமில்லை. இயற்கையின் சீற்றத்திலிருந்து யாரும் தப்பப்போவதுமில்லை.

அடுத்த கட்டுரைக்கு