Published:Updated:

அவமானமாக இருக்கிறது!

தாய்மடியில் வருந்திய சகாயம்மா.அ.மோகன் பிரபாகரன்

மிழுக்காக என்று சொல்லி பல அமைப்புகள் இயங்கிவரும் வேளையில், 'தாய்மடி’ என்ற அமைப்பு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. வெளிநாட்டுத் தமிழர்களை ஒருங்கிணைத்து தமிழகத்தில் உருவாகியிருக்கிறது தாய்மடி! கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற இந்த அமைப்பின் கூட்டத்தில் வெளிநாடுகளில் தமிழ் வளர்ச்சிக்குப் பங்காற்றி வரும் தமிழர்களுக்குப் பாராட்டு விழா நடந்தது. அதில் ஏராளமான வெளிநாடு வாழ் தமிழர்கள் கலந்துகொண்டனர். சங்கரபாண்டியன், ஆல்பர்ட் ஆகிய இருவர் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

அவமானமாக இருக்கிறது!

விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சகாயம் ஐ.ஏ.எஸ் பேசும்போது, 'மதம், சாதி இவை எல்லாம் மனிதனைப் பிரிப்பதற்கான ஒரு செயலாக இருக்கும்வேளையில் தமிழ் உணர்வு மட்டும் மனிதத்தை வளர்க்க உதவும் ஒரு கருவியாக உள்ளது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற ஒன்றே இதற்கு எடுத்துக்காட்டு. நாமக்கல் கலெக்டராக இருந்தபோது கொல்லிமலையில் நாங்கள் நடத்திய விழாவுக்கு வந்த ஒரு பள்ளிப் பேருந்து சிறிய விபத்தில் சிக்கிவிட்டது. யாருக்கும் பாதிப்பில்லை. அந்தப் பேருந்தில் வந்த ஒரு சிறுமியின் தந்தை இதனைக் கேள்விப்பட்டு அங்கு வந்தவர், அந்த ஓட்டுநரை கேவலமாகத் திட்டினார். காரணம், தன் மகளுக்கு ஏதோ ஆகிவிட்டதோ என்ற பதற்றம். இதேபோல, நம்முடைய குழந்தைகள் ஆயிரக்கணக்கில் சிதைக்கப்பட்டபோது இந்தக் கோபம் யாருக்கும் வரவில்லையே? நாம் மனிதர்களா? 2012-ம் ஆண்டு மதுரையில் ஆட்சியாளராக இருந்தபோது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த மத்திய அரசு கரடி, புலி, சிங்கம் ஆகியவற்றோடு காளை மாட்டையும் சேர்த்துவிட்டார்கள். காரணம், தமிழர்கள் காட்டக்கூடிய வீரம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இவர்களுடைய அடையாளங்கள் எல்லாம் நசுக்கப்பட்டுவிட வேண்டும் என்பதற்காகவோ என்னவோ? ஆனால், அந்தத் தடையை உடைத்து நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடத்தியும் காட்டிவிட்டோம். அந்த நிகழ்ச்சியில் ஒருவர் காளையிடம் இருந்து தப்பிக்க அதன் வாலைப் பிடித்துவிட்டார். இதனை மிருகவதை அமைப்பு படம் பிடித்து நாங்கள் ஏதோ மாட்டைக் கொடுமை செய்வதுபோல காட்டி பிரச்னை ஆக்கிவிட்டனர். ஆனால், ஒண்ணே முக்கால் லட்சம் மக்களை இழந்த சமூகத்தின் பிரதிநிதியாக இருக்கும் நாம் எவ்வளவு கொக்கரித்து இருக்க வேண்டும். ஆனால், நாம் செய்யவில்லையே? அவமானமாக இருக்கிறது. நமக்குத் தமிழ் உணர்வு இல்லாமல் போய்விட்டது. ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மீது நான் அதிகமாகக் கவனம் செலுத்தக் காரணம், என் சமூகம் உலகத்தின் ஓரிடத்தில் அனாதையாக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல, ஊனமுற்ற இனம் என்னுடைய தமிழ்ச் சமூகம்தான். இனியும் இதை அப்படியே வளரவிடக் கூடாது. அதற்குத்தான் 'தாய்மடி’ போன்ற அமைப்புகள் பாடுபடவேண்டும். புதிய தமிழ்ச் சமூகம் படைக்கப் பாடுபடவேண்டும்.

அவமானமாக இருக்கிறது!

ஆங்கில மோகமும் அதற்கு மாறாக நம்மை சிதைத்துவிட்டது. ஒருமுறை கொல்லிமலை 'வல்வில் ஓரி’ விழாவில் ஃபிரான்ஸில் இருந்து வந்த ஒரு பெண்மணி தமிழ் பாட்டுக்கு அழகாக பரத நாட்டியம் ஆடிக்கொண்டிருந்தார். வெளியே நாய்க் கண்காட்சியில் தமிழர் ஒருவர் தன் நாயை ஆங்கிலத்தில் பழக்கிக்கொண்டிருந்தார். நான் அதிசயித்துப் போனேன். தமிழ்நாட்டில் நாயிடம்கூட ஆங்கிலத்தில் பேசினால்தான் புரியுமோ என்ற ஒரு தாழ்வு மனப்பான்மை நம்மவர்களுக்கு இருக்கிறது. நிறம், மொழி, உணவு, உடை, கலை எதன்மீதும் தமிழனுக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் கோஆப்டெக்ஸில் இருந்தபோது நம் ஆடையின் மீது மதிப்பு மற்றும் தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேட்டிப் புரட்சியைக் கொண்டுவந்து வேட்டி தினத்தை அறிவித்தோம். ஆனால், அதைத் தமிழன் எடுத்துக்கொண்டானோ இல்லையோ, வணிக நிறுவனங்கள் பிடித்துக்கொண்டன. அதே போல உணவில் பெருமிதம் கொள்ளவேண்டும் என்பதற்காக சிறுதானிய உணவகங்களை நாமக்கல்லில் ஆரம்பித்தோம். இன்றும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு கிராமத்துச் சிறுமியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, 'மை ஃபாதர் ஈஸ் வொர்க்கிங் இன் உரக்கடை’ என்று சொன்னாள். நான் அதனைப் பாராட்டினேன். காரணம், நாம் சாதாரணமாக தமிழில் பேசும்போது, 10 வார்த்தைகளில் 6 ஆங்கில வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறோம். ஆனால், அந்தப் பெண் ஆங்கிலத்தில் பேசும்போது தமிழ் வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறாள். இப்போதெல்லாம் நானும் அடிக்கடி அதனைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டேன். தமிழை வளர்க்க வேண்டும், புதிய சமூகத்தைப் படைத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு எல்லாம் இந்தத் 'தாய்மடி’ மற்றும் 'புதிய பாதை’ அமைப்புகள் தொடர்ந்து போராடவேண்டும் என்பது என் வேண்டுகோள்' என்று முடித்தார்.

படங்கள்: வீ. நாகமணி

அடுத்த கட்டுரைக்கு