Published:Updated:

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்... ஆட்சி கவிழ்ப்பா... அரசியல் நாடகமா...?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்... ஆட்சி கவிழ்ப்பா... அரசியல் நாடகமா...?!
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்... ஆட்சி கவிழ்ப்பா... அரசியல் நாடகமா...?!

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்... ஆட்சி கவிழ்ப்பா... அரசியல் நாடகமா...?!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"நல்லதில் இருந்து கழிசடைக்கு மாறுவதுதான் அரசியல் மாற்றம்" என்றார் பெரியார். அப்படியான மாற்றங்கள்தான் தற்போது தமிழக அரசியல் களத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. முதலமைச்சர் பதவிக்கான சண்டை, ஓ.பன்னீர்செல்வத்தில் தொடங்கி தற்போது எடப்பாடி பழனிசாமியில் வந்துநிற்கிறது. ஆனால், இரண்டுபேரும் மல்லுக்கு நின்றதும்... நிற்பதும் மன்னார்குடி தரப்பிடம்தான்.  

ஜெ., மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா முதல்வராக விரும்பியதையடுத்து, தமிழக முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் மன்னார்குடி தரப்பிடமிருந்து விலகி, தனி அணி ஒன்றை உருவாக்கினார். இந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டதால், அவர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார். பின்னர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்குப் பின், சசிகலாவால், அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் கட்சியை வழிநடத்திச் சென்றார். ஆர்.கே.நகர் தொகுதிக்குத் தேர்தல் அறிவிப்பு வர அதில் வேட்பாளராகக் களமிறங்கினார் தினகரன். ஒருகட்டத்தில், அந்தத் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்ததாகப் புகார் எழுந்ததால் தேர்தல் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதற்காக (இரண்டு அணிகள் பிரிந்ததால் இரட்டை இலைச் சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது) லஞ்சம் கொடுத்த புகாரில் தினகரன் கைதுசெய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அது, கடைசிவரை இழுபறியாக இருந்த நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த தினகரன், தாம் மீண்டும் கட்சிப் பணியில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். இந்தச் செயல் எடப்பாடி அணியில் அங்கம் வகித்த சில அமைச்சர்களுக்குப் பிடிக்காமல் போக... அவரை ஓரங்கட்டும் முயற்சியில் பல செயல்கள் நடந்தன. 

இந்நிலையில், பன்னீர்செல்வம் அணி வைத்த இரண்டு கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட பழனிசாமி அணி, அதன்படி செயல்படவும் ஆரம்பித்தது. அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாகக் கவர்னர் முன் இரண்டு அணியினரும் கைகுலுக்கி இணைந்துகொண்டனர்.  இதன்பிறகு, தொடர்ந்து அவர்கள் மன்னார்குடி தரப்புக்கு எதிராகச் செயல்பட....தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், ஆளுநரைச் சந்தித்து அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாகத் தனித் தனியாகக் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, அரசுக் கொறடா ராஜேந்திரன், ''19 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என சபாநாயகரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பிய சபாநாயகர் தனபால், ''கட்சித் தாவல் சட்டத்தின்கீழ் ஏன் உங்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும், இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும்'' என்றும் கேட்டிருந்தார். இதற்கு 19 பேரும் விளக்கமளித்தனர். ''இந்த விளக்கம் திருப்தியில்லை'' என்றுகூறி சபாநாயகர் மீண்டும் 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், அவர்கள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதனால் அவர்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனிடையே, ஜக்கையன் திடீரென சபாநாயகரைச் சந்தித்து விளக்கம் அளித்ததோடு, முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறினார். ஜக்கையன் விலகியதால், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களான மற்ற 18 பேரும் 'முதல்வர்  பழனிசாமியை நீக்கவேண்டும்' என்று குரல்கொடுத்து வந்தனர்.  ஆனால், அவர்கள் விளக்கம் அளிக்கவில்லை. இதையடுத்து இன்று, 18 எம்.எல்.ஏ-க்களையும் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். சபாநாயகரின் இந்த உத்தரவை உடைப்பதற்காக நீதிமன்றபடி ஏறியுள்ளது டி.டி.வி.தினகரன் தரப்பு. 

தமிழக அரசியல் களம் குழம்பிய குட்டையாகி உள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. யார் விழுவார்கள்... யார் பதவியில் நீடிப்பார்கள்... தகுதி நீக்கத்தை ரத்து செய்யுமா நீதிமன்றம் போன்ற கேள்விகளுடன் அரசியல் விமர்சகரான மயிலை பாலுவிடம் பேசினோம். ''தினகரன் தரப்பில் 18  எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே உள்ளனர். ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்பு இல்லை. தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களைச் சேர்த்தாலும் 100 எம்.எல்.ஏ-க்கள் வரவில்லை. அதனால் இந்த ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்பில்லை. தகுதி நீக்கம் என்பது சட்டப்பேரவைத் தலைவரின் அதிகாரத்தின்கீழ் வருவதால் அவர் தகுதி நீக்கம்செய்து உத்தரவிட்டுள்ளார். இந்தத் தகுதி நீக்கத்தை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தகுதி நீக்கத்தை ரத்து செய்யச் சொல்வதோ அல்லது தடைகோருவதோ சரியானது அல்ல. காரணம், பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு கேட்கலாமே தவிர, தகுதி நீக்கத்துக்கு ரத்துகோருவதும் தடைகோருவதும் பேரவைக்குப் பொருந்தாத ஒன்றாகத்தான் இருக்கும். ஒரே கட்சியில் இருப்பதால் அவர்களால் இவ்வாறு கேட்க முடியாது. இதேபோன்று உத்தரகாண்டில் அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ஒன்பது பேரை  சட்டப்பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டுசென்ற அவர்கள், பேரவையில் வாக்களிக்க உரிமை கோரினர். அவர்கள் வாக்களித்தால் பி.ஜே.பி அரசு அமையும் என்ற நிலை இருந்தது. இப்படியான சூழலில் இதை விசாரித்த நீதிமன்றம்,'இதில் ஒன்பது எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை ரத்துசெய்ய முடியாது என்றும் பேரவையிலும் நீங்கள் வாக்களிக்க முடியாது' என்றும் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஒருவாரம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்த

நிலையில், அதில் தலையிட்ட நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்தது. 'நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவேண்டியது பேரவையின் கடமையாக இருக்கும்போது, அதை ஏன் சட்டப்பேரவை செய்யாமல் இருக்கிறது' எனக் கேள்வி எழுப்பியது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி உத்தரகாண்ட் பேரவையில் அதன் பெரும்பான்மையை நிரூபித்ததைத் தொடர்ந்து மீண்டும் காங்கிரஸ், ஆட்சி அமைத்தது. இங்கு அப்படியான சூழல் இல்லை... டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள்  தி.மு.க-வுடன் போக மாட்டார்கள். அதனால் இது ஓர் அரசியல் நாடகம்தான். டி.டி.வி.தினகரன் தரப்பு தங்களிடம் உள்ள செல்வாக்கைக் காட்டுவதற்காக  ஆடுபுலி ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதை முறியடிப்பதற்கான வியூகத்தின் ஓர் ஆயுதமாகத் தகுதி நீக்கத்தைக் கையில் எடுத்துள்ளது எடப்பாடிபழனிசாமி தரப்பு. தகுதி நீக்கம் செய்தால்தான், இருக்கிற எம்.எல்.ஏ-க்களுக்கு பயம் வரும். இனி யாராவது போனால் உங்களுக்கும் இதே கதிதான் என்பதைக் காட்டவே அதிரடியாக தகுதி நீக்கம் செய்துள்ளனர். இந்தத் தகுதி நீக்கத்தின் மூலம் 18 பேருக்கு சிக்கல் இருந்தாலும், தகுதி நீக்கம் செய்யத் தேவையில்லை... தனிக்குழுவாக இயங்கலாம் என்று நீதிமன்றம் சொல்வதற்கான வாய்ப்பு உள்ளது. அவ்வாறு  கடந்தகால அரசியலில் நடந்துள்ளது. 'அ.தி.மு.க-வில் நீடிக்க விரும்பவில்லை' என்று ஜி.விஸ்வநாதன் கூறியபோது, அவரைத் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் பேரவைத் தலைவர். அதை எதிர்த்து நீதிமன்றம் போனார் விஸ்வநாதன். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'அவரைத் தகுதி நீக்கம் செய்யத் தேவையில்லை என்றும், தனிப்பட்ட உறுப்பினராக (independent member) கருதப்படுவதால் அவர் சட்டமன்ற உறுப்பினராக இயங்கலாம் என்றும், 

ஒருவேளை அவர் வேறு ஏதேனும் அரசியல் கட்சியில் சேர்ந்தால் அவரைத் தகுதி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் பேரவைக்கு உள்ளது' என்றும் உத்தரவிட்டது. அதனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தனிக்குழுவாகச் செயல்படலாம் என்று சொல்லவும் அல்லது அது பேரவையின் கட்டுப்பாட்டில் வருவதால் தலையிட முடியாது என்று சொல்லவும் விதிகள் உள்ளன'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு