Published:Updated:

எச்.ராஜாவின் 52 வாக்குகளும், தேர்தல் தோல்வி பின்னணியும்!

எச்.ராஜாவின் 52 வாக்குகளும், தேர்தல் தோல்வி பின்னணியும்!

எச்.ராஜாவின் 52 வாக்குகளும், தேர்தல் தோல்வி பின்னணியும்!

எச்.ராஜாவின் 52 வாக்குகளும், தேர்தல் தோல்வி பின்னணியும்!

எச்.ராஜாவின் 52 வாக்குகளும், தேர்தல் தோல்வி பின்னணியும்!

Published:Updated:
எச்.ராஜாவின் 52 வாக்குகளும், தேர்தல் தோல்வி பின்னணியும்!

மிழ்நாட்டில் அ .தி.மு.க-வின் ஆட்சி தொடருமா? இல்லை ஆட்சி மாற்றம் ஏற்படுமா? என்ற பரபரப்புக்கு இணையாக தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத்துக்கான தேர்தல் அனல் பரப்பியது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கவனத்தைப் திருப்பிய இந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பி.ஜே.பி தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவை 180 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் பள்ளிக்கல்வித்துறை முன்னாள் இயக்குனர் மணி. அவர் பெற்ற வெற்றி வாக்குகள் 232.

"மிகப்பெரிய தேசிய கட்சி, மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி, தமிழ்நாடு ஆளும்கட்சியோ வரிந்துகட்டிக்கொண்டு அவருக்காக களமிறங்கியது. இத்தனை இருந்தும், எச்.ராஜா-வால்  வெறும் 52 வாக்குகள் மட்டுமே  பெற முடிந்துள்ளது. இந்த வாக்குகள், அவர் செல்வாக்கின் பலத்தை பறைசாற்றியுள்ளது. அதேநேரம் மணி அமோக வெற்றி பெற அவரின் எளிமை, உயர்ந்த பண்புகள், சாரண, சாரணியர் இயக்கத்தினுள் அவரின் 30 ஆண்டு கால அனுபவம் இவைகளே காரணமாகும். அதுவே உயர்ந்த பதவியில் அவரை தேர்ந்தெடுத்துள்ளது " என்கின்றனர் மணிக்கு ஆதரவாக பணியாற்றிய சாரண சாரணிய ஆசிரியர்கள்.

மறுபுறம் எச்.ராஜா, "இது முழுக்க முழுக்க முறைகேடாக நடந்த தேர்தல். சாரண, சாரணியர் இயக்கத்தின் தேசிய தலைமையிடம் வாக்காளர்கள் சேர்க்கையில் முறைகேடு உள்ளது என்ற புகார் உள்ளது. இதையொட்டியே தேர்தலை நிறுத்தவேண்டும் என்று தேசிய தலைமை கடிதம் கொடுத்தும் மீறி தேர்தலை நடத்தியுள்ளனர். கடந்த 12 ஆண்டுகளாக தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத்தில் எந்தவிதப் பயிற்சியும் முறையாக நடைபெறவில்லை. தேசிய உணர்வை ஊட்டவேண்டும் என்பதற்காகதான், நண்பர்கள் என்னை நிறுத்தினார்கள். ஆனால் நான் வெற்றி பெறக்கூடாது என்ற ஒரே நோக்கத்துக்காகவே முறைகேடாக தேர்தலை நடத்தி என்னை தோற்கடித்துள்ளனர்" என்றார். 

உண்மையில் இவ்வாறு முறைகேடுகள் நடந்தனவா? சாரணர்,சாரணியர் இயக்க ஆசிரியர்கள் சிலரிடம் பேசினோம்.

"எச்.ராஜா சொல்வது  ஏறக்குறைய உண்மைதான். ஆனால் அந்த முறைகேடுகளில் ஈடுபட்டதே அவர்கள்தான். இதற்கு மாநில ஆளும்கட்சி பிரமுகர்கள் ஆதரவு. கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், சாரண, சாரணியர் பயிற்சி ஆசிரியர்கள் உள்ளடக்கியவர்களே சாரண, சாரணியர் இயக்க செயற்குழு நிர்வாகியாக இருக்க முடியும். மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி முதன்மை ஆணையராக செயல்படுவார். 5 ஆண்டு பதவிக் காலம். இதுதான் அடிப்படை. இந்தநிலையில், தேர்தலுக்கு முன்பே பல்வேறு மாவட்டங்களில் சாரண,சாரணியர் இயக்க செயற்குழு நிர்வாகிகள் பலர் நீக்கப்பட்டனர். வாக்காளர் பட்டியலில் கல்வித்துறைக்கு சம்மந்தம் இல்லாதவர்கள் புதிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். உதாரணமாக கோவை மாவட்டத்தில் 21.11.2014ம் ஆண்டு முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி தலைமையில் நடந்த செயற்குழுவில் மாவட்ட ஆணையாளர்( சாரணர்), ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன், மாவட்ட ஆணையாளர் (சாரணியர்), தற்போது உள்ள மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்(பொ) கீதா, சாரண அசிரியர் பிரதிநிதி (சாரணர்) சிவநாராயணன், சாரண ஆசிரியர் பிரதிநிதி (சாரணியர்) அருணாதேவி நியமிக்கப்பட்டனர். இவர்கள் கீழ் மாவட்டத்தல் 120 பள்ளிகளில் இருந்து 1,500 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். நடப்பாண்டு 52 பேர் விருது பெற்றுள்ளனர்.

கோவை மாவட்ட கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தியின் கீழ் இவர்கள் செயல்பட்டு வந்தனர். இயக்கத் தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியானது. கணேஷ்மூர்த்தி நீங்கலாக, பாலகிருஷ்ணன், கீதா, சிவநாராயணன், அருணாதேவி ஆகிய 4 பேர் நீக்கப்பட்டனர். பதவிக்காலம் 3 ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில் ஏன் நீக்க வேண்டும். எந்தச் செயற்குழுவிலும் நீக்கும் நடவடிக்கை குறித்தோ, புதியதாக நிர்வாகிகளை நியமிப்பது குறித்தோ விவாதிக்கப்படவில்லை. இதன் பின்னணி என்னவென்று பார்த்தால் தங்களுக்குச் சாதகமான ஆர்.எஸ்.எஸ் சிந்தாதவாதிகளை இதற்குள் புகுத்துவதற்காகவே இவ்வாறு மேற்கண்டவர்களை நீக்கியுள்ளார்கள் . இவையனைத்தும் தீக்கதிர் நாளிதழில் அம்பலப்படுத்தியுள்ளனர்." என்றவர்கள் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் தொடர்ந்தனர்.

“கல்வித்துறையில் நேரடியாக பணியில் இல்லாத சீனிவாசன்  சாரணர் மாவட்ட ஆணையாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு சாரண,சாரணியர் இயக்கத் தலைமையகத்துக்கு இதுகுறித்து அப்போதே புகார் கொடுக்கப்பட்டது. அதே போல் 'பாண்டவ சகோதரர்களில் ஒருவர் பெயர் கொண்ட  சென்னை என்சிசி இணை இயக்குனராக இருந்த முன்னாள் கல்வி அதிகாரி ஒருவர், பி.ஜே.பி-க்கு மிகவும் நெருக்கமானவர். அந்த அதிகாரி அதிமுகவின் முக்கிய புள்ளிகளுடன் இணைந்து, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சென்னை, கோவை, திருப்பூர், திருவாரூர், நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்த  நிர்வாகிகளை நீக்கிவிட்டு, ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தில் ஈடுபாடு உள்ளவர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்தனர். இப்படிப் பெறப்பட்டதே இந்த 52 வாக்குகள். ஒட்டுமொத்த மாவட்டங்களிலும் இவ்வாறானவர்களைச் சேர்க்க முயற்சித்தனர். அதற்குள் தேர்தல் வந்துவிட்டது. எனவேதான் இப்போது மீண்டும் தேர்தல் நடத்தி எப்படியாவது தலைவர் பதவியைப் பெறுவதற்காக இப்போது புகார் கணைகளை வீசி வருகிறது எச்.ராஜா தரப்பு " என விவரித்தனர். 

எச்.ராஜா ஆதரவாளர்களோ, “எங்கள் தரப்பினர் முறைகேடுகளில் ஈடுபடவில்லை. அவர்கள்தான் ஈடுபட்டனர்." என மறுத்தனர். அதேநேரம் சாரண,சாரணியர் இயக்கத்தை சார்ந்த சிலர், "டெல்லி தலைமையின் மூலம் சில முயற்சிகளை எச்.ராஜா எடுத்து வருகிறார். அங்கிருக்கும் உயரதிகாரிகள் மூலம் நடந்து முடிந்த தேர்தலை செல்லாது என்று அறிவிக்க முயற்சிகளை தொடர்கிறார். மத்திய அரசின் முக்கிய தலைவர்கள் சிலர், மாநில கல்வித்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு எச்.ராஜா தோல்வி குறித்தும் கடுமையான குரலில் பேசியுள்ளனர். மீண்டும் தேர்தல் நடத்தும் சூழல் வந்தால், தங்களின் நியாயமான வெற்றியைப் பாதுகாக்க  நீதிமன்ற படியேற மணி தரப்பு தயாராக உள்ளனர் " என்கின்றனர்.

நாம் தலைவராக வெற்றி பெற்ற மணியிடம் பேசினோம், “எதுகுறித்தும் நான் பேச விரும்பவில்லை. எனக்குக் கிடைத்த இந்தப் பொறுப்பைக் கொண்டு, தமிழ்நாட்டில் சாரண,சாரணியர் இயக்கத்தைக் கூடுதலாக வளர்த்தெடுப்பேன். குடியரசுத் தலைவரிடம் விருது பெரும் சாரண,சாரணியர்களின் எண்ணிக்கையை உயர்த்த அரும்பாடுபடுவேன்" என வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.