Published:Updated:

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மோடி தமிழகம் வருகை?! என்ன பலன்?

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க  மோடி தமிழகம் வருகை?! என்ன பலன்?
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மோடி தமிழகம் வருகை?! என்ன பலன்?

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மோடி தமிழகம் வருகை?! என்ன பலன்?

மிழக அரசின் சார்பில் கொண்டாடப்பட்டு வரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா, வரும் ஜனவரி மாதத்துடன் நிறைவடைய உள்ளது. நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே, அதாவது கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது என்று முடிவுசெய்யப்பட்டது. 2016 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்ததும், ஜெ. முதல்வராகப் பொறுப்பேற்று ஐந்து மாதங்களிலேயே உடல்நலக்குறைவால் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். 

இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம், அவரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்று, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை பல்வேறு அரசியல் குளறுபடிகளுக்கு இடையே பல்வேறு மாவட்டங்களிலும் நடத்தி வருகிறார்கள். அரசு செலவில் நடத்தப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை, தங்களின் அரசியல் மேடையாக எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் பயன்படுத்தி வருகிறார்கள் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறைகூறி வருகின்றன.

எனினும், மாநில அரசின் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, தமிழக அரசை மத்தியில் உள்ள பி.ஜே.பி. திரைமறைவில் இயக்கிக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்நிலையில், சென்னையில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர்களும் உறுதி செய்துள்ளனர். மோடியின் அப்பாயின்ட்மென்ட் கோரி, தமிழக அரசின் சார்பில் பிரதமர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, கோரிக்கை வைத்துள்ளனர்.

எனினும், பிரதமர் அலுவலகத்தில் இருந்து இன்னமும் தேதி கிடைக்காததால், ஜனவரி மாதத்தில் எந்தத் தேதியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவை நடத்துவது என்று தமிழக அரசின் சார்பில் இன்னமும் முடிவு செய்யவில்லை என்றே தெரிகிறது,

பிரதமர் சென்னை வரும் தேதி முடிவாகாத நிலையில், சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் இந்த விழாவை நடத்துவது என்றும், இதற்காக ஜனவரி மாதம் முழுவதும் கலைவாணர் அரங்கில் வேறு நிகழ்ச்சிகள் நடத்த அரங்கத்தை அதிகாரிகள் புக் செய்யாமல், பிளாக் செய்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி, மதுரையில் தொடங்கப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா கொண்டாட்டங்கள், மாநிலத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலோ அல்லது முக்கிய நகரங்களிலோ நடத்தப்பட்டு வருகின்றன. எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையை உணர்த்தும் வகையிலான புகைப்படக் கண்காட்சிகளும் அரசின் செய்தித்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களும் நடைபெறுகின்றன. இந்த விழா, மாவட்டங்கள்தோறும் நடத்தப்பட்டு, இறுதியாக சென்னையில் வரும் டிசம்பர் மாதம் நிறைவுவிழாவை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

நிறைவுவிழா நடைபெறவுள்ள கலைவாணர் அரங்கில், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் ஆய்வு செய்தபின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, "சென்னையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில், சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். கட்சியின் சின்னமான இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக, அண்மையில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைக் கட்சியின் மூத்த நிர்வாகிகள், தேர்தல் ஆணையத்திடம் அளிப்பார்கள். தேர்தல் ஆணையம் அளிக்கும் உத்தரவைப் பொறுத்து சின்னத்தை மீட்டெடுப்போம்" என்றார். 

எனவே, மோடி சென்னை வருவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பி.ஜே.பி-யின் முக்கிய நிர்வாகிகளும் அவரின் வருகையை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். மோடி தமிழகம் வருவதன் மூலம், மாநில பி.ஜே.பி. மேலும் உத்வேகம் அடையும் என்று அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். பெயர் வெளியிட விரும்பாத மாநில பி.ஜே.பி  நிர்வாகி ஒருவர் கூறுகையில், மோடி வருவதை அரசியலாகப் பார்க்காமல், தமிழக அரசு விழாவில் அவர் பங்கேற்கிறார் என்றே பார்க்க வேண்டும். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தாலும், இதேபோன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி வந்து கலந்துகொண்டிருப்பார். தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல்களுக்கு பி.ஜே.பி. காரணம் என்று கூறப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. அவர்கள் என்ன காரணத்துக்காக பிரிந்தார்கள்? தற்போது ஏன் மீண்டும் இரு அணிகளையும் இணைத்தார்கள்? என்பதற்கு இரு தரப்பினருமே விளக்கம் அளித்துள்ளனர். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் தொடர்பான பிரச்னை நீதிமன்றத்தில் இருப்பதால், அதுபற்றி நாங்கள் எந்தக் கருத்தையும் தெரிவிக்க இயலாது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு