Published:Updated:

“முழு சந்திரமுகியாவே மாறிட்டாரு எடப்பாடி பழனிசாமி!" - வறுத்தெடுக்கும் வன்னி அரசு

“முழு சந்திரமுகியாவே மாறிட்டாரு எடப்பாடி பழனிசாமி!" - வறுத்தெடுக்கும் வன்னி அரசு
“முழு சந்திரமுகியாவே மாறிட்டாரு எடப்பாடி பழனிசாமி!" - வறுத்தெடுக்கும் வன்னி அரசு

“முழு சந்திரமுகியாவே மாறிட்டாரு எடப்பாடி பழனிசாமி!" - வறுத்தெடுக்கும் வன்னி அரசு

பிரதமராக நேரு இருந்த காலத்தில், இந்தித் திணிப்பு உள்ளிட்ட பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தமிழ்நாடெங்கும் ஒலித்த பெரு முழக்கம் - "வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது." இதன் வீச்சு, 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி' என்ற கோட்பாடாக பரிணமித்து, உரிமை கோரியது. இதோ 55 ஆண்டுகள் கடந்துவிட்டன. 'இன்றும் மாநில சுயாட்சிக்கான தேவையை மத்திய பி.ஜே.பி அரசின் ஒடுக்குமுறைகள் உருவாக்கியுள்ளன' என்கின்றனர் மாநில சுயாட்சிக்கான குரலை ஓங்கி ஒலிக்கும் உணர்வாளர்கள். 

மாநில சுயாட்சி என்றால் என்ன ?

"தனித் திராவிட நாடு கோரிக்கையை முழங்கியது அப்போதைய திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும். இதையொட்டி பிரிவினைத் தடைச்சட்டத்தைக் கொண்டு வந்தது அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு. இதையொட்டி 1963-ம் ஆண்டு நவம்பர் 3-ம் நாள், சென்னை ராயபுரத்தில் உள்ள தி.மு.க தலைமை அலுவலகத்தில்(முன்பு இங்குதான் அலுவலகம் இருந்தது ) மத்திய செயற்குழுக் கூட்டம் கூடியது.

தி.மு.க-வின் சட்டதிட்டத்தில் விதி (2)-ல் உள்ள 'திராவிட நாடு கோரிக்கை'  திருத்தப்பட்டு, கைவிடப்பட்டது. "திராவிட நாடு கோரிக்கை கைவிடப்பட்டாலும் தனி நாட்டுக்கான காரணங்கள் அப்படியேதான் உள்ளன" என்றார் அறிஞர் அண்ணா. இதன் தொடர்ச்சியாக 'எல்லை பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை, பணம் (நிதி) இவை தவிர்த்த அனைத்து அதிகாரங்களும் மாநில அரசிடமே இருக்கும் எனும் 'மாநில சுயாட்சி'யை முன்னிறுத்தியது தி.மு.க" என்கின்றனர் மூத்த திராவிட சிந்தனையாளர்கள்.

முன்னெடுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் :

"அன்று தி.மு.க-வால் குரல் கொடுக்கப்பட்ட மாநில சுயாட்சியின் தேவைகள் இன்றும் தொடர்கின்றன. எனவே எங்கள் தலைவர் தொல். திருமாவளவன் மாநில சுயாட்சிக்கான முன்னெடுப்புகளைத் தொடங்கியுள்ளார். அதுவே (செப்.21 மாலை) சென்னை இராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் 'மாநில சுயாட்சி மாநாடு' எனும் பிரமாண்டம் " என்கின்றனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உற்சாகமாக. கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுவை முதல்வர் நாராயணசாமி, தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு, சி.பி.எம் தமிழ் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், சி.பி.ஐ தமிழ் மாநிலச் செயலர் முத்தரசன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கும் இம்மாநாடு அரசியல் முக்கியத்துவம் கொண்டதாகப் பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விரிவாகப் பேசுகிறார்  விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் .திருமாவளவன்.

"ஏற்கெனவே அரசியல் நிர்ணய சபையின் விவாதங்களில் மாநில சுயாட்சி குறித்து  விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.  அதற்கும் முன்னதாகவே 'சைமன் குழு' . இந்தியாவுக்கு வந்தபோது, அக்குழுவினரிடம் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இதுகுறித்து விரிவான அறிக்கை ஒன்றை அளித்திருக்கிறார். மாநில அரசுகளுக்கான அதிகாரங்கள் மற்றும் உரிமைகள் குறித்து அவ்வறிக்கையில் விரிவாக விளக்கியிருக்கிறார். பண்டித ஜவகர்லால் நேரு  அவர்களும் மாநில சுயாட்சியின் தேவை குறித்து அரசியல் நிர்ணய சபையின் விவாதங்களில் ஆதரவாகப் பேசியிருக்கிறார். தமிழகத்தில் தி.மு.க நிறுவனர் பேரறிஞர் அண்ணா மாநில சுயாட்சியை முன்மொழிய, அவரைத் தொடர்ந்து தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி தீவிரமாக செயல்பட்டார். நீதியரசர் ராஜமன்னார் தலைமையில் குழு ஒன்றை அமைத்து மத்திய மாநில அரசுகளின் உறவுகள் தொடர்பாக ஆய்ந்து அதன் அறிக்கையை மத்திய அரசுக்குச் சமர்பித்துள்ளார். இவ்வாறு மாநில சுயாட்சி கோரிக்கையானது, ஒரு நெடிய வரலாற்றைக் கொண்டிருக்கிறது. தற்போது, நாங்கள் மீண்டும் அதே மாநில சுயாட்சி கோரிக்கையை உயர்த்திப் பிடிக்கிறோம். மாநில அரசுக்கென வரையறுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானவையாக இல்லை என்ற நிலையிலும் சொற்பமான அளவில் இருக்கும் அதிகாரங்களையும் மைய அரசு படிப்படியாக பறித்து வருகிறது. இனி வருங்காலமெல்லாம் மாநில அரசுகள் மத்திய அரசை அண்டி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலங்களுக்குப் போதிய அதிகாரங்கள் இல்லை என்பதுடன் இருந்த அதிகாரங்களும் இனிமேல் இல்லை என்னும் நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசுகளின் உரிமைகளையும் அதிகாரங்களையும் பறிக்கும் செயலானது, அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதாகும். இந்நிலையில்தான் இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாக்கவும் மாநில சுயாட்சியை வென்றெடுக்கவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்த மாநாட்டை ஒருங்கிணைக்கிறது" என்கிறார். 

முழு சந்திரமுகியா மாறிட்டாரு முதல்வர் :

"இந்த மாநாடு இந்தியளவில் மிகப்பெரிய அதிர்வை உண்டாக்கும்" என்கிறார் விடுதலை சிறுத்தைகள் மாநிலத் துணைப்  பொதுச்செயலாளர் வன்னி அரசு. தொடர்ந்து பேசும் அவர், "கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக ஒற்றையாட்சி சர்வாதிகாரத்தை அமல்படுத்தி வருகிறது மத்திய பி.ஜே.பி ஆட்சி. மாநில அரசின் அதிகார வரம்புக்குட்பட்ட வரி விதிக்கும் அதிகாரத்தை ஜி.எஸ்.டி மூலம் பறித்தது. 'நீட்'-திணிப்பின் மூலம், கல்வியை மாநில உரிமைகளிலிருந்து பறிக்கிறது. தமிழ்நாடு காவல்துறை இருக்கும் நிலையில்,  சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மத்திய காவல்படைப் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுகிறது. நமது உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்க வேண்டிய தமிழக அரசோ, மயிலாடுதுறையில் முகாமிட்டுள்ளது. மாநில உரிமைகளை ஒரேயடியாக மூழ்கடித்துவிட்டு,  தம் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள மயிலாடுதுறையில் காவிரியில் மூழ்கி எழுந்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.  மோடியிடம் கெட்ட பெயர் வாங்கிவிடக் கூடாது என்றே பெரியாரின் பிறந்தநாளுக்கும் மரியாதை செலுத்தவில்லை முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 'முழு சந்திரமுகியாகவே மாறிட்டாரு' என ரஜினி சொல்வது போல, முழு பி.ஜே.பி-யாவே மாறிட்டாரு எடப்பாடி பழனிசாமி. இப்படி சுயமரியாதை இழந்தவர்களிடம் மாநில சுயாட்சிக்கான உரிமைகளை எதிர்பார்க்க இயலாது. எனவே, அதை  விடுதலைச் சிறுத்தைகள் முன்னெடுக்கிறது. இது தமிழ்நாட்டுக்கான முழக்கம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் தேசிய இனங்கள் அனைத்துக்குமான பறை முழக்கம்." என்கிறார் உணர்ச்சிப்பூர்வமாக.

இம்மாநாட்டுப் பந்தலில் மாநில உளவுப்பிரிவுக்கு இணையாக மத்திய ஐ.பி உளவுப்பிரிவினரும் அதிகளவில் வட்டமிடுகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கூட்டிய மாநில சுயாட்சி மாநாடு, தற்கால அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாகக் கருதப்படுகிறது. 

அடுத்த கட்டுரைக்கு