Election bannerElection banner
Published:Updated:

கருணாநிதிக்கு 92 வயது ஆகிறதா?

சூப்பராகப் போய்க்கொண்டு இருக்கும் பெங்களூரு வழக்கு!

''ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்டுள்ள தொகை 66,44,73,573.00. இதற்கு முழுவதுமாகக் கணக்குகள் காட்டப்பட்டு ஜெயலலிதாவின் வருமான சேமிப்பில் கூடுதலாக ரூ.95 லட்சம் இருக்கிறது''  என்று சொல்லி ஆச்சர்யம் கூட்டி உள்ளார் வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ்.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு விசாரணையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ், தன் வழக்கறிஞர் படையோடு 8 நாட்கள் வாதாடி தன் முதல்கட்ட வாதத்தை நிறைவு செய்திருக்கிறார்.

கருணாநிதிக்கு 92 வயது ஆகிறதா?

இதில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களாக குமார், மணிசங்கர், அசோகன், செந்தில், அன்புக்கரசு, பன்னீர்செல்வம், திவாகர், செல்வகுமார், கருப்பையா, பரணிகுமார், முத்துக்குமார், இவர்களோடு அ.தி.மு.க மேலவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணனும், அரசு தரப்பில் பவானி சிங், முருகேஷ் மராடியும், அன்பழகன் தரப்பில் தாமரைச்செல்வன், குமரேசன், சரவணன், நடேஷன், ராமசாமி ஆகியோரும் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சார்பாக ஐ.ஜி. குணசீலன்,  டி.எஸ்.பி. சம்பந்தம் ஆகியோரும் ஆஜராகி விடுகிறார்கள்.  

''அரசு ஊழியர்கள் கிஃப்ட் வாங்கலாமா?'

தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகனின் வழக்கறிஞர் குமரேசன், நீதிபதி குமாரசாமியிடம் 'தமிழ்நாடு அரசு ஊழியர் விதிமுறைகள்- 1973’ என்ற புத்தகத்தைக் கொடுத்தார்.

குமரேசன்: அரசுப் பணியில் பதவி வகிப்பவர்கள் அசையும், அசையாச் சொத்துகளை எவ்வளவு வாங்க முடியும் என்பதும் அவர்களின் பணிக்காலத்தில் வரும் நன்கொடை, பரிசுப் பொருட்களை எப்படி கையாள வேண்டும் என்ற விவரங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன.  

நீதிபதி: மந்திரிகள், முதல்வர்களுக்கு இந்தச் சட்டம் உட்பட்டதா?

குமரேசன்: இந்தப் புத்தகத்தில் அரசு ஊழியர் யார் என்று விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசாங்கத்தால் நியமனம் செய்யப்பட்டு உள்ளவர்களுக்கு இது பொருந்தாது. நியமனம் செய்யப்பட்டவர்களுக்குப் பொருந்தாது என்றால், மற்றவர்களுக்குப் பொருந்தும் என்றுதானே அர்த்தம். இது மாநில முதல்வருக்குப் பொருந்தும். அதுமட்டுமல்லாமல், அனைத்து அரசாங்க ஊழியர்களும் பணியில் இருக்கும் போதும் சொத்துகளைக் குறிப்பிட வேண்டும் என்று சொல்லி இருக்கிறது என்று கூறினார். இதனை நீதிபதி பதிவு செய்துகொண்டார்.  

''அரசியலும் ஒரு தொழில்தான்..!'

கருணாநிதிக்கு 92 வயது ஆகிறதா?

நாகேஸ்வர ராவ்: 1991-ல் முதன்முறையாக ஜெயலலிதா முதல்வரானார். 1992-ல் அவருடைய 44வது பிறந்த நாள் தொண்டர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அப்போது அவருக்கு டி.டியாக ரூ.2.15 கோடி பரிசாகக் கொடுத்தார்கள். அதை 1992-93 வருமானவரித் துறையில் காட்டி பரிசுப் பொருளாக வந்ததால், வரி கட்ட வேண்டியதில்லை என்றதற்கு வருமானவரித் துறை அதை வருமானமாகக் காட்டி வரி போட்டார்கள்.

அதை எதிர்த்து நாங்கள் வருமானவரித் துறையில் மேல்முறையீடு சென்றோம். அப்போது எங்கள் தரப்பு வழக்கறிஞராக பல்கிவாலா வாதிட்டார். ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி 'அரசியலும் தொழில்தான்’ என்று கூறி வருமானவரிச் சட்டம் 28ன்படி தொழில் நிறுவனத்தைப்போல வரி கட்டியாக வேண்டும் என்றது.

அதையடுத்து மீண்டும் வருமானவரித் துறை தீர்ப்பாயத்துக்கு மேல்முறையீடு சென்றபோது என் மனுதாரருக்கு டி.டியாக அனுப்பியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி கீழ் நீதிமன்றத்திலேயே விசாரிக்க சொன்னதையடுத்து கீழ் நீதிமன்றம் விசாரித்து பரிசுப் பொருட்கள் சட்டப்படி வருமானம்தான் என்று தீர்ப்பளித்தது. அதையடுத்து நாங்கள் வருமானவரித் துறையில் வரி கட்டினோம்.

நீதிபதி: (குறுக்கீடு) வருமானவரித் துறையின் நோக்கம் ஒருவரின் வருமானத்துக்கு ஏற்ப வரி வசூலிப்பது மட்டுமே.  ஆனால், கிரிமினல் கோர்ட், அந்த வரி செலுத்துவோருக்கு எங்கிருந்து வருமானம் வந்தது? எப்படி வந்தது? என்பதையெல்லாம் விசாரிக்கும் என்பதால், அடிக்கடி வருமானவரித் துறையில் வரி கட்டியதாகச் சொல்ல வேண்டாம்.  

நாகேஸ்வர ராவ்: இந்த நீதிமன்றம் ரூ.2.15 கோடியை என் மனுதாரருடைய வருமானமாகச் சேர்க்க வேண்டும்.

''கருணாநிதிக்கு 92 வயதாகிறதா?''

நாகேஸ்வர ராவ்: என் மனுதாரருக்கு வந்த கிஃப்ட் சம்பந்தமாக வருமானவரித் துறை அதிகாரி செல்வராஜ் சாட்சியம் அளித்துள்ளார். தமிழர்களின் கலாசாரம் பற்றி எனக்கும் நன்றாகத் தெரியும். தமிழர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். தான் நேசிக்கும் தலைவர்களுக்காக உயிரையும் தருவார்கள். அவர்களின் பிறந்த நாளுக்காக மிக நீண்ட வரிசையில் நின்று பரிசுப் பொருட்களைத் தருவார்கள்.

கருணாநிதிக்கு 92 வயது ஆகிறதா?

நீதிபதி: (தி.மு.க வக்கீல் குமரேசனைப் பார்த்து) உங்கள் தலைவருக்கும் கிஃப்ட் தருவார்களா?

குமரேசன்: எங்கள் தலைவர் கலைஞரின் பிறந்த தினத்தில் நாங்கள் புத்தகம் கொடுப்போம். பணமெல்லாம் கொடுக்கமாட்டோம்.

(ஜெ. தரப்பு வழக்கறிஞர்கள் கோரஸாக, 'கருணாநிதி தன் தொண்டர்களிடம் உண்டி வைத்து வசூலிக்கிறார்’ என்றார்கள்.)

நீதிபதி: முதல் முறையாக முதல்வர் ஆனதும் அனுபவம் இல்லாமல் கொண்டாடி இருக்கிறார்.

நாகேஸ்வர ராவ்: இவர்களும் கிஃப்ட் வாங்குவார்கள்.

குமரேசன்: எங்கள் தலைவர் கருணாநிதி தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்திருக்கிறார். அவருக்கு 92 வயதாகிறது. நாங்கள் கிஃப்ட் வாங்க மாட்டோம்.

நீதிபதி: கருணாநிதிக்கு 92 வயதாகிறதா? (கன்னத்தில் கை வைத்து ஆச்சர்யமடைந்தார்.)

நீதிபதி: முதலில் தி.மு.கதான் தொடங்கப்பட்டதா?

குமரேசன்: இல்லை. டி.கேதான் தொடங்கப்பட்டது.

நீதிபதி: டி.கேவுக்கு விளக்கம் சொல்லுங்கள்.

குமரேசன்: திராவிடர் கழகம். பிறகு தி.மு.க உருவாகியது. அதிலிருந்து எம்.ஜி.ஆர்., 1972-ல் விலகி அ.தி.மு.க என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.  

''பெரியாரிடம் கற்றுக்கொண்டோம்!''

நாகேஸ்வர ராவ்: ஜெயா பப்ளிகேஷன் நிறுவனம் 1988-ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் ஏ1 ஜெயலலிதாவும், ஏ2 சசிகலாவும் பங்குதாரர்கள். இந்த நிறுவனத்துக்கு, 1. நமது எம்.ஜி.ஆர்., நாளிதழின் சந்தாதாரர்கள் மூலம், 2. விவசாய நிலங்களின் மூலம், 3. பிரின்டிங் மூலம், 4. வாடகையின் மூலம்... என நான்கு வழிகளில் வருமானம் வந்தது. இந்த நான்கு வழிகளில் மொத்தம் ஜெயா பப்ளிகேஷனுக்கு ரூ.15.1 கோடி வருமானம் வந்துள்ளது.  

நீதிபதி:  நமது எம்.ஜி.ஆர். நியூஸ் பேப்பர் ஆரம்பிக்க யார் மூளையாக இருந்தது?

தி.மு.க வழக்கறிஞர் குமரேசன்: எங்கள் தலைவர் கருணாநிதி 'முரசொலி’ என்ற தி.மு.க கட்சி இதழை நடத்திக் கொண்டிருக்கிறார். அதைப் பார்த்துத்தான் அ.தி.மு.கவும் தங்கள் கட்சிக்கு ஓர் இதழ் வேண்டுமென்று 'நமது எம்.ஜி.ஆர்’ இதழை ஆரம்பித்தார்கள்.

நீதிபதி: இதற்கும் நீங்கள்தான் காரணமா? (என்று சொல்லிச் சிரித்தார்.)

குமரேசன்: கட்சிக்கு பத்திரிகை இருக்கவேண்டும் என்பதை நாங்கள் பெரியாரிடம் இருந்து கற்றுக்கொண்டோம்.

நீதிபதி: ம்.  

நாகேஸ்வர ராவ்: சந்தாதாரர்களிடம் இருந்து நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் நிறுவனத்துக்கு வந்த மொத்தத் தொகை ரூ.14.25 கோடி ஆகும். இதை வருமானவரித் துறையில் தாக்கல் செய்து அதற்கான வரியையும் செலுத்தியிருக்கிறோம். ஆனால், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இந்த ரூ.14.25 கோடியை என் கட்சிக்காரர் ஜெயலலிதாவின் வருமான லிஸ்ட்டில் சேர்க்கவில்லை என்று கீழமை நீதிமன்றத்தில் சொன்னோம். ஆனால், கீழமை நீதிமன்ற நீதிபதி குன்ஹா வருமானவரித் துறை ஆவணங்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று நிராகரித்து விட்டார். எனவே, இந்த ரூ.15.1 கோடியை என் மனுதாரர் வருமானத்தில் சேர்க்க வேண்டும். நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் மூலம் பெறப் பட்ட ஸ்கீம் டெபாசிட் தொகைகளை 1998-க்குப் பிறகு ரீபேமன்ட் கொடுத்தும் இருக்கிறோம். இது சம்பந்தமாக 31 பேர் சாட்சியமும் அளித்து இருக்கிறார்கள்.

நீதிபதி: (குறுக்கீடு) இப்படிச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டாம். உங்கள் மனுதாரருடைய சொத்துகள் மதிப்பு எவ்வளவு? அவை பற்றிய விவரங்களையும், ஊழல் தடுப்பு போலீஸார் குறிப்பிட்டுள்ள சொத்துகள் மதிப்பின் விவரங்களையும் சுருக்கமாகப் பட்டியல் போட்டு கொடுங்கள். எப்போது கொடுப்பீர்கள்?

குமார்: நாளை கொடுக்கிறோம்.

நீதிபதி: இவ்வளவு நாள் ரெடி செய்யாமல் எப்படி இந்த வழக்கை நடத்தினீர்கள். (பவானி சிங்கைப் பார்த்து) சொத்துக் குவிப்பு சதவிகிதம் எவ்வளவு?

பவானி சிங்: மௌனம்.

குமரேசன்: 700 சதவிகிதம்.

நீதிபதி: எப்படி கணக்கீடு செய்தீர்கள்?

குமரேசன்: (விரிவாக எடுத்துரைத்தார்...)

நீதிபதி: அவர்களுக்கு வருவாய் 1964-ல் இருந்தே இருக்கிறது என்கிறார்கள். அதற்கு உங்களிடம் கணக்கு இருக்கிறதா? நீங்கள் அரசு வழக்கறிஞராக உட்கார வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா?

குமரேசன்: நான் இங்கு அரசு வழக்கறிஞர் ஆவதற்கு சட்டத்தில் இடமில்லை.

நீதிபதி: அப்புறம் எதற்காக இங்கு உட்கார்ந்து இருக்கிறீர்கள்?

குமரேசன்: அரசு வழக்கறிஞருக்கு உதவியாக இருக்கிறேன்.

நீதிபதி: அவருக்கு 30 வருட அனுபவம் இருக்கிறது. அவருக்கு உதவியாளரும் இருக்கிறார்...  (பவானி சிங்கைப் பார்த்து) இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து எப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது?

பவானி சிங்: 9 மாதங்களில்.

நீதிபதி: இங்கு இதுபோன்ற வழக்குக்கு எத்தனை நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார்கள்?

பவானி சிங்: 3, 4 வருடங்கள் ஆகும்.

நீதிபதி: அப்படியென்றால், இந்த வழக்கை விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு எவ்வளவு அழுத்தம் கொடுத்திருப்பார்கள்?

நாகேஸ்வர ராவ்: 150 போலீஸார் இதற்காக இரவும், பகலும் வேலை பார்த்தார்கள்.

என்னுடைய வாதத்தின் அடிப்படையில் எங்கள் தரப்பு விவரங்களையும், ஊழல் தடுப்பு போலீஸார் கொடுத்திருக்கும் விவரங்களையும் சுருக்கமாகப் பட்டியல் போட்டிருக்கிறேன். அதன் அடிப்படையில் ரூ.66,44,73,573.00 கோடிக்கு கணக்குகள் காண்பிக்கப்பட்டு என் மனுதாரர் ஜெயலலிதாவின் சேமிப்பில் ரூ.95 லட்சம் கூடுதலாக இருக்கிறது.

(அந்தப் பட்டியலை நீதிபதி குமாரசாமியிடம் கொடுத்தார்.)  

நீதிபதி குமாரசாமி: இதை கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தீர்களா?

நாகேஸ்வர ராவ்: செய்தோம்.

நீதிபதி: இந்தப் பட்டியலில் உங்கள் தரப்பு விவரங்களுக்கான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களைக் கொடுங்கள்.

(ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் துழாவிக்கொண்டிருந்தார்கள்.)

நீதிபதி: (பவானி சிங்கைப் பார்த்து) உங்களிடம் பட்டியல் இருக்கிறதா?

பவானி சிங்: அவர்களிடம் சார்ட்டர்டு அக்கவுன்டென்ட் இருக்கிறார்கள். அதனால் உடனே பட்டியல் போட்டு கொடுத்துவிட்டார்கள். என் வாதத்தின்போது பட்டியல் கொடுத்து வாதிடுவேன். அவர்கள் கொடுத்திருக்கும் சொத்துப் பட்டியல் தவறாகக் கூறப்பட்டுள்ளது. அனைத்துச் சொத்துகளும் ஏ1க்கு உடையதுதான். மற்ற யாரிடமும் சொத்துகள் இல்லை.

நீதிபதி: ரூ.66 கோடி சொத்துக் குவிப்பு எப்படி வந்தது? புலன் விசாரணை அதிகாரி யார்?

(இந்த வழக்கின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சார்பாக தினமும் நீதிமன்றத்தில் ஆஜராகும் டி.எஸ்.பி சம்பந்தத்தைக் கூப்பிட்டு பவானி சிங் நீதிபதியிடம் இவர்தான் என்று சொல்லி அவரிடம் ரூ.66 கோடி எப்படி வந்தது என்று கேட்டுக்கொண்டிருந்தார்.)

விவாதம் தொடர்கிறது!

வீ.கே.ரமேஷ்

படங்கள்: வீ.சதீஷ்குமார்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு