காவிரி மேலாண்மை வாரியம் அமையாததற்கு கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புகள் தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டே மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால், மேலாண்மை வாரியம் அமைக்கும் முதற்கட்ட பணிகள் கூட இதுவரை தொடங்கவில்லை. இதுதொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம், தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமையாதது குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் பா.ஜ.க. உறுப்பினர்களுக்கான மருத்துவப் பரிசோதனை முகாமைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்ய காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு திருமாவளவன் சுயநலத்துக்காக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமையாததற்குக் காரணம் கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியே காரணம். பா.ஜ.கவைப் பொறுத்தவரை மாநில அரசு மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு திட்டங்களை நிறைவேற்றாவிட்டால் அதற்கான கோரிக்கைகளை நாங்கள் வைப்போம். அரசைக் கண்டித்து போராட்டங்களையும் நாங்கள் முன்னெடுப்போம். தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க மாநில அரசு முன்வர வேண்டும். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை ஆணையம் மூலம் தெளிவுபடுத்த வேண்டும். இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் பா.ஜ.க. இல்லை’ என்றார்.