நீதிபதி குமாரசாமி
''நான் ஆடிட்டரும் அல்ல; வாதிடும் நீங்கள், கணக்காளரும் அல்ல... தேவையற்றதைப் பேசி நீதிமன்ற நேரத்தை வீணாக்க வேண்டாம்'' என்று கறார் காண்பித்தார், தனி நீதிபதி குமாரசாமி. ''ஜெயலலிதா, சசிகலாவின் நட்பு பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டும். இந்த வழக்கின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மீடியா மூலம் ஹீரோயிஸம் காட்டுவதற்காகத் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்'' என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வழக்கு விசாரணையில் வாதங்கள் வலுத்து வருகின்றன.
இதில் ஜெயலலிதா தரப்பில் குமார், மணிசங்கர், அசோகன், செந்தில், குலசேகரன், திவாகர், பன்னீர்செல்வம், ஜெயராமன், தனஞ்செயனும் அரசு தரப்பில் பவானி சிங், முருகேஷ் மராடியும், தி.மு.கவின் அன்பழகன் தரப்பில் தாமரைச்செல்வன், குமரேசன், சரவணன், நடேசன், பாலாஜியும், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சார்பாக சிறப்புப் பணி அமர்த்தல் ஐ.ஜி., குணசீலன், டி.எஸ்.பி. சம்பந்தம் ஆகியோரும் ஆஜரானார்கள்.

நான் ஆடிட்டரும் அல்ல... நீங்கள் கணக்காளரும் அல்ல!
(கடந்த 8 நாட்கள் நாகேஸ்வர ராவ் வாதிட்டுச் சென்றதும் ஜெயலலிதா வழக்கறிஞர் குமார் தன்னுடைய முடிவுரையை வாசித்தார்.)
குமார்: என் மனுதாரருடைய போயஸ் கார்டன் வீட்டில் மாதம் ரூ.16,15,000 செலவானதாகவும், போயஸ் கார்டனில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக, அங்கு இடித்தமைக்கான செலவு மட்டும் ரூ.18,18,500 ஆனதாகவும் இதைத் தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் தவறாகப் பதிவு செய்ததோடு, இதற்கு ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கவில்லை. இதற்கெல்லாம் ஒவ்வொரு வருடமும் வருமானவரித் துறையில் விவரங்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன. அதை அவர்களும் ஆய்வுசெய்து ஏற்றுக்கொண்டு உள்ளார்கள்.
நீதிபதி: வருமானவரித் துறை பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். நான் ஆடிட்டர் அல்ல. வாதிடும் நீங்கள் கணக்காளரும் அல்ல. மேல்முறையீட்டில் 20 சதவிகிதம்கூட நியாயத்தை நிரூபிக்கவில்லை.
குமார்: என் மனுதாரர் ஜெயலலிதா, ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் என்ற இரண்டு கம்பெனிகளில் மட்டுமே பங்குதாரராக இருந்தார். இந்த கம்பெனிகளும் வழக்கு காலகட்டத்துக்கு முன்பு தொடங்கப்பட்டது. மற்ற எந்த கம்பெனிகளிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ என் மனுதாரர் ஜெயலலிதா பார்ட்னராகவோ, நிர்வாக இயக்குநராகவோ இருந்தது கிடையாது.
மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், லெக்ஸ் பிராப்பர்ட்டிஸ், இண்டோ டோகா, ரிவர்வே அக்ரோ புராடெக்ட், சயோனோரா, ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் ஆகிய கம்பெனிகள் வழக்கு காலகட்டத்துக்கு முன்பு, 1986-ல் இருந்தே தன்னிச்சையாக இயங்கி வருகின்றன. இதில் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்த கம்பெனியில் ஜெயலலிதா பங்குதாரராகவோ, நிர்வாக இயக்குநராகவோ இல்லை. அந்த கம்பெனிகள் தங்கள் பங்குதாரர்களிடம் இருந்து ஷேர்கள் வாங்கி வங்கியில் கடன் பெற்று இயங்கி வருகின்றன. இந்த கம்பெனிகளுக்கு உரிமையாளர்கள் இருக்கிறார்கள். இந்த கம்பெனிகள் என் மனுதாரருக்குச் சொந்தமானவை என்று சீல் வைத்துவிட்டார்கள். இதனால் பொதுமக்களிடம் இந்த கம்பெனிகள் மீது அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது.
நீதிபதி: இந்த கம்பெனிகளுக்கு எப்போது சீல் வைத்தார்கள்?
குமார்: 1998-ல்.
நீதிபதி: இதை எதிர்த்து அப்போது ஏன் நீதிமன்றத்தில் அப்பீலுக்குப் போகவில்லை?
குமார்: (தயக்கத்தோடு) நீதிமன்றத்துக்குப் போனோம்.
குமரேசன் (தி.மு.க.): (குறுக்கீடு செய்து) 15 வருடங்கள் கழித்து கடந்த வருடம்தான் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்கள். வழக்கு எண்: 4932/2014. இதை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
குமார்: தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் இந்த கம்பெனிகள் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை.
நீதிபதி: இப்படித் தேவையற்ற வாதங்களைச் செய்ய வேண்டாம். இதையெல்லாம் நாகேஸ்வர ராவ் கடந்த 8 நாட்களாக வாதிட்டு இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பான 64,000 பக்கங்களையும் நான் முழுமையாக படிக்க வேண்டாமா? நான் கேட்பதை நீங்கள் கொடுப்பது இல்லை. கீழ் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் என்ன குற்றங்கள் நடந்துள்ளன என்பதைச் சுருக்கமாக எடுத்துக்கூறி வாதம்செய்ய வேண்டும். இந்த மேல்முறையீட்டு விசாரணையில், நீங்கள் 20 சதவிகிதம்கூட உங்கள் தரப்பு நியாயத்தைச் சொல்லவில்லை.
குமார்: இந்த விவரங்கள் அனைத்தும் பட்டியலாகக் கொடுக்கப்பட்டு உள்ளது. இறுதியாகச் சொல்கிறேன். இது அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால் போடப்பட்ட பொய்யான வழக்கு.
இவ்வாறு விவாதம் நடந்தது.
அன்பழகன் விசாரணை தள்ளி வைப்பு
இந்த வழக்கின் அரசு வழக்கறிஞராக இருக்கும் பவானி சிங்கை நீக்க வேண்டும் என்று தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் தொடுத்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த்பைர ரெட்டி, ''விரும்பினால் அன்பழகன் தரப்பும், கர்நாடக அரசும் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று அவர்களின் வழிகாட்டுதல்படி அரசு வழக்கறிஞரை நியமிக்கச் செய்யலாம்'' என்றார். இதை ஒட்டி, அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் குமரேசன், ''நாங்கள் உச்ச நீதிமன்றம் செல்ல இருப்பதால், இந்த விசாரணையை ஒரு வாரம் தள்ளிவைக்க வேண்டும்'' என்றதை அடுத்து நீதிபதி இந்த விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தார். அதையடுத்து இந்த வழக்கில் சுப்பிரமணியன் சுவாமி தன்னையும் 3-ம் தரப்பு வாதியாக இணைத்துக்கொள்ள வேண்டும் என்று, தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் மனுத் தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞரிடமும் ஜெ. வழக்கறிஞரிடமும் கூறினார். அதற்கு ஜெ. வழக்கறிஞரும் அரசு வழக்கறிஞரும் மறுநாள் பதில் மனுத் தாக்கல் செய்வதாகச் சொன்னார்கள். ஜெ. வழக்கறிஞர் குமார், ''நாளை பதில் மனுத்தாக்கல் செய்கிறேன்'' என்றார். பவானி சிங், ''தி.மு.கவுக்குப் பதில் மனுத்தாக்கல் செய்ததையே இப்போது செய்கிறேன்'' என்றார். இதைக் கேட்டு நீதிபதி, வாய்விட்டுச் சிரித்தார்.

28-ம் தேதி காலை நீதிபதி வந்ததும் கீழ் நீதிமன்றத்தில் ஏ2 சசிகலாவுக்காக வாதாடிய மணிசங்கர், 'இந்த வழக்கில் ஏ2 சசிகலாவுக்காக கேரள உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பசந்த் வாதாடுவார்’ என்று அறிமுகம் செய்து வைத்து அமர்ந்தார்.
பசந்த்: இந்த வழக்கின் ஏ1 ஜெயலலிதாவுக்காக குமாரும், ராவ்வும் வாதிட்டு நிறைவு செய்திருக்கிறார்கள். நான் ஏ2 சசிகலாவுக்காக வாதாட வந்திருக்கிறேன். ஐ.ஜி., பெருமாளே புகார்தாரராகச் செயல்பட்டு 18.9.1996-ல் எஃப்.ஐ.ஆர்., பதிவுசெய்து, பிறகு அவருக்குக் கீழ் செயல்பட்ட நல்லம நாயுடு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் ரெடிமேடாகவே ஒரு குற்றப்பத்திரிகை தயார் செய்து 4.6.1997-ல் ஏ1 மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். அதன் பிறகு 22.1.1997-ல் இந்தக் குற்றப்பத்திரிகையில் ஏ2 சசிகலா, ஏ3 சுதாகரன், ஏ4 இளவரசி ஆகியோர் சேர்க்கப்பட்டார்கள்.
தமிழ் சினிமாத் துறையின் இளவரசி
ஏ1 ஜெயலலிதாவின் அம்மா சந்தியா, சினிமாத் துறையில் சிறந்த நடிகையாக இருந்து நிறைய பணம் சம்பாதித்தார். அவருடைய மகள் ஜெயலலிதா 1964, 1965 முதல் தமிழ் சினிமாத் துறையில் கொடிக்கட்டி பறந்ததோடு, தமிழ் சினிமாத் துறையின் இளவரசியாகவும் திகழ்ந்தார். அதன்மூலம் நிறைய செல்வங்களை ஈட்டினார். எம்.ஜி.ஆர் மிகச் சிறந்த நடிகர். அவரோடு பல படங்களில் இணைந்து நடித்ததன் மூலம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்ததால் எம்.ஜி.ஆரின் சிறந்த நட்புக்குரியவராகத் திகழ்ந்தார்.
நீதிபதி: எம்.ஜி.ஆரும்., கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்தானே?
பசந்த்: ஆமாம்.
எம்.ஜி.ஆர் 24.12.1987-ல் மரணமடைந்தார். அதன்பிறகு அ.தி.மு.க கட்சி இரண்டாகப் பிரிந்தாலும் அ.தி.மு.கவின் பெரும்பாலான தொண்டர்கள் ஜெயலலிதாவையே எம்.ஜி.ஆருக்கு நிகரான தலைவராக ஆதரித்தார்கள்.
சசிகலா நட்பின் தொடக்கம்
ஏ1 ஜெயலலிதா திருமணம் ஆகாதவர். ஏ2 சசிகலா பிசினஸ் செய்துகொண்டிருந்தார். அவர் வினோத் வீடியோ விஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இவருக்குத் திருமணம் ஆகி குழந்தைகள் இல்லை. ஜெயலலிதா அரசியலிலும், சினிமாவிலும் இருந்ததால் அவருடைய வீடியோ பதிவுகள் சம்பந்தமாக சசிகலாவின் நிறுவனத்துக்குப் போய் வந்ததால் ஜெயலலிதாவும், சசிகலாவும் நெருங்கிப் பழகினார்கள். இருவரும் பிசினஸ் பார்ட்னர்களாகவும் இருந்தார்கள்.
இவர்களுடைய நட்பை யாரும் பிரிக்க முடியாது. இவர்களுடைய நட்பு பொன் எழுத்துகளால் பொறிக்கப்படக் கூடியது. இந்த நட்பை தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் தவறாகச் சித்திரித்தார்கள்.

ஏ2 சசிகலாவின் சகோதரி மகன் சுதாகரன், சென்னைக்கு வந்தார். சின்னம்மாவான சசிகலா இருந்த போயஸ் கார்டன் வீட்டில் இவரும் தங்க ஆரம்பித்தார். அதற்கு ஏ1 ஜெயலலிதா ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. பின்பு அம்மா என்ற முறையில் சுதாகரனுக்கு நடிகர் சிவாஜியின் மகள் வழி பேத்தியைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து 7.9.1995 அன்று மிகவும் ஆடம்பரமாகத் திருமணம் நடைபெற்றது. அடுத்து ஏ2 சசிகலாவின் மூத்த அண்ணன் ஜெயராமன், இவர் ஏ1 ஜெயலலிதாவுக்குச் சொந்தமான திராட்சைத் தோட்டத்தில் வேலை பார்த்தார். மின்சாரம் தாக்கி இறந்ததால், அவருடைய மனைவி இளவரசி கைக்குழந்தையோடு தன் கணவனின் தங்கை இருக்கும் போயஸ் கார்டனுக்கு வந்து தங்கினார். அதற்கும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஆக, மொத்தத்தில் போயஸ் கார்டனில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மற்றும் அவருடைய கைக்குழந்தை ஆகியோர் தங்கி இருந்தார்கள்.
இந்திய மீடியாக்களும் இந்த வழக்கை அதிகமாக ஒளிபரப்பிக்கொண்டிருந்தன. அந்த மீடியா மூலம் தன்னை ஹீரோயிஸம் காட்டுவதற்காகக் கீழ் நீதிமன்ற நீதிபதியின் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
நீதிபதி: மீடியாக்களைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். அவர்களின் வேலையை அவர்கள் பார்க்கிறார்கள். உங்கள் பணியை நீங்கள் பாருங்கள்.
பசந்த்: மீடியாக்கள் எழுதும் தகவல்களை வைத்துத் தீர்ப்பு சொல்லக் கூடாது. இந்த வழக்கில் கீழ் நீதிமன்றம் ஆதாரங்கள் இல்லாமல் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
நீதிபதி: கீழ் நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கின் 65,000 பக்கங்கள்கொண்ட ஆவணங்களைப் படித்து 252 சாட்சிகளிடம் விசாரித்து, உங்கள் தரப்பு, அரசுத் தரப்பு, வழக்கறிஞர்களின் வாதங்களையும் கேட்டு முழுவதுமாக அலசி ஆராய்ந்துதான் 1,000 பக்கங்களுக்குக் கொண்ட தீர்ப்பு எழுதி இருக்க முடியும். ஆதாரங்கள் இல்லாமல் எப்படிக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கியிருக்க முடியும்?
முதல்வரும் அரசு ஊழியர்தான்
பசந்த்: 1998 செப்டம்பர் 5-ம் தேதி மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட பினாமி சட்டத்தில் ரத்த சம்பந்தமான உறவினர்கள் பெயரில் சொத்துகள் எழுதி வைத்திருந்தால் மட்டுமே அவர்கள் பினாமிகளாகக் கருதப்படுவார்கள் என்று கூறி இருக்கிறது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் ரத்த சம்பந்தமான உறவினர்கள் கிடையாது. அரசு ஊழியர்கள்தான் பரிசுப் பொருட்கள் வாங்கக் கூடாது. ஆனால் முதல்வர்கள், அரசு ஊழியர்கள் கிடையாது. அவர்கள் தற்காலிக ஊழியர்கள்.
நீதிபதி: அரசு பதவியில் இருந்து சம்பளம் வாங்கும் அனைவரும் அரசு ஊழியர்களாகத்தான் கருதப்படுவார்கள். இந்த விஷயத்தில் சட்டம் அனைவருக்கும் சமமானது!
விசாரணை தொடர்கிறது...
வீ.கே.ரமேஷ், படங்கள்: வீ.சதீஷ்குமார்
பசந்த் தற்குறிப்பு
சசிகலாவுக்காக ஆஜராகும் பசந்த், கோழிக்கோட்டில் 5.5.1950-ம் ஆண்டு பிறந்தார். கோழிக்கோடு மலபார் கிறிஸ்டியன் பள்ளியில் உயர்நிலைப் படிப்பை முடித்த அவர், அங்குள்ள அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். இவரது மனைவி சுசீலா வழக்கறிஞராக இருக்கிறார். இவர்களுடைய மகன் ராகேன். இவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சியை மேற்கொண்டு இருக்கிறார். இவரது மருமகள் மேத்யூ. இவரும் கேரள அரசு வழக்கறிஞராக இருக்கிறார். குடும்பமே வழக்கறிஞர் பணியில் இருக்கிறார்கள்.
இவர் கோழிக்கோட்டில் 15.10.1973-ல் குற்றவியல் தொழிலாளர்கள் மற்றும் சிவில் விஷயங்களில் பயிற்சியைத் தொடங்கி கோழிக்கோடு பார் அசோசியேஷன் செயலாளராகவும், 1988-ல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதியாகவும், 9.9.2002-ல் கேரள உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 8.9.2004-ல் உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாகவும் பணியாற்றி 4.5.2012-ல் பணி ஓய்வும் பெற்றார்.