Published:Updated:

பெரும்பான்மை பலம் கொள்ளையடிப்பதற்கான 'லைசென்ஸ்' அல்ல: பா.ஜனதா

Vikatan Correspondent
பெரும்பான்மை பலம் கொள்ளையடிப்பதற்கான 'லைசென்ஸ்' அல்ல: பா.ஜனதா
பெரும்பான்மை பலம் கொள்ளையடிப்பதற்கான 'லைசென்ஸ்' அல்ல: பா.ஜனதா
பெரும்பான்மை பலம் கொள்ளையடிப்பதற்கான 'லைசென்ஸ்' அல்ல: பா.ஜனதா

புதுடெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள பா.ஜனதா,பெரும்பான்மை பலம் கொள்ளையடிப்பதற்கான 'லைசென்ஸ்' அல்ல என்றும், இந்த பிரச்னையை வீதிக்கு எடுத்துச்செல்வதாகவும் அறிவித்து உள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலுக்கு பொறுப்பேற்று,பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகக்கோரி பா.ஜனதாவினர் நடத்திய போராட்டத்தால்,நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் முடங்கிப்போனது.நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மறுதேதி குறிப்பிடப்படாமல் நேற்று ஒத்திவைக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து பா.ஜனதா மூத்த தலைவர்களான நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜும்,மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லியும் நிருபர்களை கூட்டாக சந்தித்தனர்.

அப்போது சுஷ்மா கூறியதாவது:

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், ஏலமுறையைப் பின்பற்றாமல், நியமன முறையை கடைப்பிடித்ததால் ரூ1.86 லட்சம் கோடி அளவுக்கு நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கை அளித்து, அந்த அறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு தேவையான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்ற காரணத்தாலேயே, அது அவர்கள் கொள்ளையடிப்பதற்கான லைசென்ஸ் ஆகிவிடாது. இதுவரையில்லாத அளவுக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.

##~~##
நாட்டின் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய பாதுகாவலர்களே, நாட்டை கொள்ளையடித்துள்ளனர். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டின் ஒவ்வொரு கோப்பிலும் பிரதமர் மன்மோகன்சிங்கின் கையெழுத்து உள்ளது.எனவே அவரே இந்த ஊழலுக்கு நேரடி பொறுப்பு ஆவார்.
நிலக்கரி சுரங்க ஊழலில் பிரதமர் ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரினோம். நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்யுமாறு கூறினோம். பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று கேட்டோம்.
நாடாளுமன்ற சபைகள் தொடர்ந்து இயங்குவதற்கு ஏற்றவகையில்,நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை ரத்துசெய்வது, பாரபட்சமற்ற நீதி விசாரணைக்கு உத்தரவிடுவது என்று இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தோம்.ஆனால் மத்திய அரசு அதை செய்வதற்கு கூட தயாராக இல்லாமல் போய்விட்டது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் எங்களது போராட்டம் தொடரும். இந்த நாள் முதல் எங்களது போராட்டம் நாடாளுமன்றத்துக்கு வெளியே நடைபெறும். இந்த விவகாரத்தை கிராமங்களுக்கு, வீதிகளுக்கு எடுத்துச்செல்வது எப்படி என்பது குறித்து நாங்கள் திட்டமிடுவோம்.
நான் இந்த பிரச்சினை குறித்து அதிமுக, தெலுங்குதேசம் கட்சிகளிடம் பேசி இருக்கிறேன். இந்த விவகாரத்தில் அவர்கள் எங்களுடன் உள்ளனர்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் பிரச்சினையில் பிரசாரம் செய்வதற்கு எங்களது வியூகத்தை வகுப்பதற்கு பா.ஜனதாவின் மையக்குழு கூட்டம், வரும் 13-ம் தேதி நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.
அருண் ஜெட்லி கூறுகையில், "பாராளுமன்றம் பா.ஜனதாவால் முடக்கப்படவில்லை. ஊழலால்தான் முடக்கப்பட்டது" என்றார்.