Published:Updated:

மீனவர் மீதான தாக்குதலை தடுக்க எவ்வளவோ முயற்சி செய்கிறோம்: கருணாநிதி

மீனவர் மீதான தாக்குதலை தடுக்க எவ்வளவோ முயற்சி செய்கிறோம்: கருணாநிதி
மீனவர் மீதான தாக்குதலை தடுக்க எவ்வளவோ முயற்சி செய்கிறோம்: கருணாநிதி
மீனவர் மீதான தாக்குதலை தடுக்க எவ்வளவோ முயற்சி செய்கிறோம்: கருணாநிதி

சென்னை: மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்கவேண்டும் என்று முதல்வர் கடிதம்  எழுதுவார்; நாங்களும்தான் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொள்கிறோம் ஆனாலும்  தொடர்கதையாக உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில்  கூறியிருப்பதாவது:

நாகை மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் மீண்டும்  நடைபெற்றுள்ளதே?


 நமது முதலமைச்சர் உடனடியாக பிரதமருக்கு இன்று கடிதம் எழுதி விடுவார்!  அதைப் பற்றி அறிவிப்பு இன்று மாலையோ, நாளைக் காலையிலோ ஏடுகளில் வரும்.  நமது மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதைத் தடுக்க நாமும்  எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டாலும், அது தொடர் கதையாகவே  தொடருகிறது.

இந்திய-இலங்கை பிரச்னையிலே மேலும் மேலும் அலட்சியம் காட்டாமல், இந்திய அரசு  இதனைத் தீர்க்க முயற்சி மேற்கொள்ளாவிட்டால், இது எங்கே கொண்டு போய் முடியும்  என்றே சொல்ல முடியாது.இதனை மனதிலே கொண்டு மத்திய அரசும், பிரதமரும்  இதிலே தலையிட வேண்டும்.அண்மையில் சென்னையில் நாம் நடத்திய “டெசோ”  மாநாட்டுத் தீர்மானங்களில் இதுவும் முக்கியமான ஒன்றாக இடம் பெற்றிருந்ததை இந்திய  மத்திய அரசுக்கு நினைவூட்டுகிறேன்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் எந்தப் பணியையும்  நிறைவேற்றாமல் முடிந்துவிட்டதே?

இதைவிட துக்ககரமானது வேறொன்றும் இருக்க முடியாது.  மாநிலங்களவையில் அதன் தலைவர் ஹமீது அன்சாரி தனது நிறைவுக் குறிப்பிலே  கூறியதைப்போல; அலுவல்கள் எதையும் நிறை வேற்றாமல், ஒரு கூட்டத் தொடர்  எப்படி வீணாகக் கூடாது என்பதற்குமுன் மாதிரியாக இந்தக் கூட்டத் தொடர்  அமைந்துவிட்டது. எவ்வளவு பெரிய தவறு என்றாலும்,அதைப்பற்றி விவாதிக் கத் தயார்  என்று பிரதமரே கூறிய பிறகும், விவாதிக்கத் தயாராக இல்லைஎன்று அவையை  எதிர்க்கட்சிகள் முடக்கியதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது.

##~~##
அவையைநடத்த திட்டமிடப் பட்ட 17 நாட்களில் மூன்று நாட்கள் இவ்வாறு முடக்கி  வைக்கப்பட்ட பிறகாவது எஞ்சிய நாட்களில் மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதித்து  முடிவுகளை மேற்கொண்டிருக்கலாம். என்ன தவறு என்று எதிர்க்கட்சிகள் தங்கள்  விவாதத்திலே எடுத்து வைத்து, அதற்கு ஆளுங் கட்சித் தரப்பிலே விளக்கம்  அளித்திருந்தால் எது உண்மை என்பதை நாட்டு மக்கள்புரிந்து கொள்ள முடிந்திருக்கும்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு  விற்கமீண்டும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வருகிறதே?
அது உண்மையாக இருந்தால் மிகவும் தவறானதும், கண்டிக்கத்தக்கதுமான  முடிவாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில் ஆட்சியில்  இருந்தபோது ஏற்கனவே இதுபோன்ற ஒரு முயற்சி எடுக்கப் பட்டது தெரிந்ததும், அதற்கு  நாம் தெரிவித்த எதிர்ப்பின் காரணமாக அந்த முயற்சி அப்போது மத்திய அரசினால்  கைவிடப்பட்டது. இப்போது மீண்டும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் ஐந்து சதவிகித  பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.மத்திய அரசும்  பிரதமரும் உடனடியாக அதில் தலையிட்டு, அந்த முயற்சியினைத் தடுத்து நிறுத்த  வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தண்ணீரை விற்கிறது குடிநீர் வாரியம் என்று சொல்கிறார்களே?
ஆமாம், ஏடுகளில் செய்தியே வந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியின்  சாதனைகளிலே குடிநீரை விற்கும் சாதனை தற்போது நடைபெறுகிறது. 6000 லிட்டர்  400 ரூபாயாம். இந்த ஆட்சியிலே இன்னும் எதையெதை விற்பார்களோ?

அண்ணா வளைவு...ஊரை ஏமாற்ற நினைக்கிறார்கள்
அண்ணா நகரிலே உள்ள நீண்ட கால நினைவுச் சின்னமான அண்ணா  வளைவினை அகற்றத் தேவையில்லை என்று முதலமைச்சர் ஆணை பிறப்பித்திருப்பதாக  அனைத்து ஏடுகளிலும் செய்தி வந்திருக்கிறதே?
 நீண்டகால நினைவுச் சின்னமான, அண்ணா பெயரால் அமைந்துள்ள அந்த  வளைவினை அகற்ற முதலிலே உத்தரவு பிறப்பித்தது யார்? யாரோ ஒரு அமைச்சர்  உத்தரவு பிறப்பித்து அந்த வளைவினை அகற்றுவதற்கு யாருக்கும் துணிச்சல் வராது.  அந்த வளைவினை அகற்ற முடியவில்லை என்றதும், தற்போது வளைவு அகற்றத்  தேவையில்லை என்று உத்தரவு போட்டு ஊரை ஏமாற்ற நினைக்கிறார்கள். ஆனால்  வளைவு தற்போது பாதி உடைபட்ட நிலையில், எந்த நேரத்தில் கீழே விழுமோ என்ற  ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், பொது மக்கள் அந்த வழியாகச் செல்லவே  அஞ்சுவதாகவும் செய்திகள் வருகின்றன. இதற்கு பொறுப்பானவர்கள் யார்? மீது இந்த  அரசு எடுக்கப் போகிற நடவடிக்கை என்ன?மக்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.
அரசு என்ன பதில் கூறப் போகிறது? அதிகாரிகள் மட்டத்தில் முடிவு செய்து அண்ணா  வளைவினை அகற்ற முடிவு செய்திருக்க முடியாது. அகற்ற முடிவு செய்தது  மட்டுமல்ல; அகற்றுகின்ற செயல்பாடு 70 சதவிகிதம் நடைபெற்றுள்ள நிலையில்,முதல்  அமைச்சர் திடீரென்று அதனை அகற்றத் தேவையில்லை என்றும், அது நீண்ட நாள்  நினைவுச் சின்னம் என்றும் சொல்லியிருக்கிறார். அது நீண்ட நாள் நினைவுச் சின்னம்  என்பது,அந்த நினைவுச் சின்னத்தை அகற்ற முடிவெடுத்தபோது தோன்றவில்லையா?
ஏடுகளில் எல்லாம் பலமுறை அந்த நினைவுச் சின்னத்தை அகற்றப் போகிறார்கள் என்று  வந்ததே? அப்போதே முதலமைச்சர் அதனை அகற்றத் தேவையில்லை என்று  அறிவிக்காமல், பல லட்சம் ரூபாய் அரசுபணத்தைச் செலவிட்டு, அந்த நினைவுச்  சின்னத்தை அகற்றுகின்ற செயல் பாடுகள் நடைபெற்றபிறகு, அந்தப் பணியை  நிறுத்துங்கள் என்று அறிவித்ததால், அரசுக்கு எவ்வளவு ரூபாய் இழப்பு?இழப்பு  மாத்திரமல்லாமல், அந்த வளைவு தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் முக்கால்  பகுதிஇடிக்கப்பட்டு, தானாகவே விழுந்து விடுமோ என்று பொதுமக்கள் அந்த வழியாக  நடப்பதற்கே அஞ்சுகின்ற நிலைமை உள்ளது.
அந்த வளைவினை தற்போது மீண்டும் பழைய நிலைக்கேகொண்டுவர வேண்டு  மென்றால், அதற்காகவும் செலவழிக்க நேரிடும். அப்படியே மீண்டும் அதைமுன்னர்  இருந்த நிலைக்கே கொண்டு வந்தாலும் அது பழைய உறுதிப்பாட்டோடு  இருக்குமாஎன்பதும் சந்தேகம். அண்ணா வளைவு விவகாரத்தில் திட்டச் செலவு உயரும்  என்றும், அதற்கு யார் பொறுப்பு என்றும் இன்றைக்கும் ஒரு பெரிய செய்தி வந்துள்ளது.  தமிழக அரசின் சார்பில் இதற்கு நல்ல விளக்கமான பதில் அளிப்பார்களா என்று  எதிர்பார்ப்போம்.
மின் நிலைமை சீரடைந்துள்ளதா?
அ.தி.மு.க. ஆட்சியில் மின் உற்பத்தி அதிகமாகும், அதன்மூலம் நிலைமை  சீராகும் என்றுதான் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். ஆனால் நிலைமை  எதிர்மறையாகத் தான் போய்க்கொண்டிருக்கின்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி பதிலளித்துள்ளார்.