Published:Updated:

கூடங்குளம்: போலீஸ் தடியடிக்கு ராமதாஸ் கண்டனம்!

Vikatan Correspondent
கூடங்குளம்: போலீஸ் தடியடிக்கு ராமதாஸ் கண்டனம்!
கூடங்குளம்: போலீஸ் தடியடிக்கு ராமதாஸ் கண்டனம்!
கூடங்குளம்: போலீஸ் தடியடிக்கு ராமதாஸ் கண்டனம்!

சென்னை: கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள்  மீது  காவல் துறையினர் நடத்திய தடியடிக்குகு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கூடங்குளம் அணுமின்நிலையம் என்ற  உயிர்குடிக்கும் எமனுக்கு எதிராக அப்பகுதி மக்கள் கடந்த ஒராண்டிற்கும் மேலாக  அறவழியில் போராடி வருகின்றனர்.இதனை மதிக்காத மத்திய, மாநில அரசுகள் அணு  உலையை எப்படியும் திறந்து விட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.

அணுமின் நிலையத்தை திறப்பதற்கு எதிரான தங்களின் போராட்டத்தை மத்திய, மாநில  அரசுகள் மதிக்காத நிலையில், அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை நிறுத்தக்  கோரி, அணுமின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை கூடங்குளம் மக்கள்  கடந்த இரண்டு நாட்களாக நடத்தி வருகிறது.

போராட்டக்காரர்கள் மீது எந்தவித அடக்குமுறையையும் கட்டவிழ்த்து விடக்கூடாது என்று  நானும், மற்றத் தலைவர்களும் வலியுறுத்தியிருந்தோம்.அதன்படி, முதல் நாள்  போராட்டம் அமைதியாக முடிந்துவிட்ட நிலையில்,இரண்டாம் நாளான இன்று, எந்தவித  கோபமூட்டும் செயலும் நடக்காத நிலையில்,காவல்துறையினரே வன்முறையை  கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

##~~##
அறவழியில் போராடிய மக்கள் மீது தடியடி நடத்தியும்,கண்ணீர்புகை குண்டுகளை வீசியும்  கொடூரத் தாக்குதலை காவல்துறையினர் அரங்கேற்றியுள்ளனர்.பல பொதுமக்களை
காவலர்கள் கடல்நீரில் தள்ளிவிட்டு தாக்கியுள்ளனர்.வானத்தை நோக்கி துபாக்கிச் சூடும்  நடத்தப்பட்டிக்கிறது.
இத்தாக்குதலில் பெண்கள், முதியோர்,குழந்தைகள் என ஏராளமானோர்  காயமடைந்துள்ளனர்.பத்திரிக்கையாளர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக  தெரிகிறது.அறவழியில் போராடுவதைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் மக்கள் மீது  அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடும் காவல்துறையினரின் நடவடிக்கை கடுமையாக  கண்டிக்கத்தக்கது.
தங்களின் உயிரைக் காக்கவும், உரிமையை நிலைநிறுத்தவும் போராடும் மக்களை  பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும்.392 நாட்களாக கூடங்குளம் மக்கள்  நடத்திவரும் அறவழிப் போராட்டத்துக்கு இதுவரை மக்களுக்கு சாதகமாக நடந்து வந்த  தமிழக அரசு,இப்போது ஆங்கிலேயர் ஆட்சிகாலத்து வைஸ்ராய்களைப் போல மாறி,  மத்திய அரசின் உத்தரவுக்கு பணிந்து,அப்பாவி மக்கள் மீது ஒடுக்குமுறையை  ஏவிவிடுவது முறையல்ல.
எந்த பிரச்னையையும் வன்முறை மூலமாகவோ,ஒடுக்குமுறை மூலமாகவோ  தீர்த்துவிடமுடியாது என்பதை சிங்கூர் மற்றும் நந்திகிராம் நிகழ்வுகளிலிருந்து தமிழக அரசு  புரிந்துகொள்ள வேண்டும்.
கூடங்குளம் மக்களின் உணர்வுகளை மிதிப்பதை விட்டுவிட்டு, அவர்களின் உணர்வுகளை  மதித்து அரசு செயல்பட வேண்டும்.கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக உச்ச  நீதிமன்றத்தில் தொடரவுள்ள வழக்கு விசாரணை முடியும் வரை அணு உலையில்  எரிபொருள் நிரப்புவதை மத்திய அரசு நிறுத்திவைக்க வேண்டும்.
இதுதொடர்பாக தமிழக அமைச்சரவையை உடனடியாக கூட்டி தீர்மானம் நிறைவேற்றி  மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.