Published:Updated:

“காந்தி முதல் கௌரி வரை கொலையாளி ஒருவர்தான்!” - கெளரி லங்கேஷைப் பற்றி நண்பரும் ஆவணப்பட இயக்குநருமான தீபு

“காந்தி முதல் கௌரி வரை கொலையாளி ஒருவர்தான்!” - கெளரி லங்கேஷைப் பற்றி நண்பரும் ஆவணப்பட இயக்குநருமான தீபு
“காந்தி முதல் கௌரி வரை கொலையாளி ஒருவர்தான்!” - கெளரி லங்கேஷைப் பற்றி நண்பரும் ஆவணப்பட இயக்குநருமான தீபு

கௌரியை முதன்முதலில் 2001-ம் ஆண்டு பாபுதேங்கிரி பற்றிய ஒரு ஆவணப்படம் வேலையின்போது சந்தித்தேன். என் நண்பர் விஜய் அந்த ஆவணப்படத்தை இயக்கினார். பாபுதேங்கிரியை இன்னொரு அயோத்தியாவாகவும், கர்நாடகாவை இன்னொரு குஜராத்தாகவும் மாற்றுவோம் என்ற வலதுசாரிகளின் அறிவிப்பு, கௌரியிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. உடனே ஓர் உண்மை அறியும் குழுவை உருவாக்கி அங்கே வந்தார்'' என்று தன் நினைவுகளைப் பகிர்கிறார் தீபு.

“காந்தி முதல் கௌரி வரை கொலையாளி ஒருவர்தான்!” - கெளரி லங்கேஷைப் பற்றி நண்பரும் ஆவணப்பட இயக்குநருமான தீபு

சமீபத்தில், சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் நண்பர், தீபு. கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக, 'பெடஸ்ட்ரியன் பிக்சர்ஸ் (Pedestrian Pictures)'  என்ற தயாரிப்பு நிறுவனத்தை கூட்டு முயற்சியில் ஒருங்கிணைத்து நடத்திவருகிறார். அரசியல் சமூகப் பிரச்னைகள் குறித்த பல்வேறு ஆவணப்படங்களை நண்பர்களும் இணைந்து உருவாக்கி வருகிறார். தற்போது, கௌரி பற்றிய ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டிருக்கிறார். கர்நாடகாவில் சென்ற வாரம் திரையிடப்பட்ட இந்த ஆவணப்படம், இணையதளத்திலும் வெளியிடப்படவுள்ளது.

“பாபுதேங்கிரி சமயத்தில் நாங்கள் நெருக்கமானோம். அவர் நடத்திய கர்நாடக நல்லிணக்க மன்றத்தில் இணைந்து இயங்கியபோது எங்கள் நட்பு மேலும் வளர்ந்தது. 2004-ம் ஆண்டு கௌரியும் நானும் இணைந்தே சிறை சென்றோம். பாபுதேங்கிரி பிரச்னையில் நாங்கள் வலதுசாரிகள் குறித்த ஓர் எச்சரிக்கை அறிக்கையை அளித்தோம். அதனால், கைதுசெய்யப்பட்டோம். இப்போது, கெளரி லங்கேஷ் பற்றி ஆவணப்படத்தில் ஒரு பத்திரிகையாளர், சமூகச் செயற்பாட்டாளர் என்பதையும் தாண்டி, என் தோழியைப்பற்றி சொல்லியிருக்கிறேன். கௌரி பல தடைகளைத் தாண்டி மிகத் தைரியமாக சவால்களை எதிர்கொண்டார். அவர் என்ன எழுதினாரோ, அதன் நியாயத்தின் வழியில் நின்றும் காட்டினார். அதற்கான வலிமையைப் பெற்றிருந்தார். அவரால் என்னவெல்லாம் செய்யமுடியுமோ எல்லாவற்றையும் செய்தார். இந்தச் சமூகத்தின் பல தளங்களிலும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக் குறித்து எழுதிக்கொண்டே இருந்தார்” என்று தோழியின் நினைவுகளைப் பரவசத்துடன் தொடர்கிறார் தீபு.

“அவருக்குக் கன்னடம் தாய்மொழி என்றாலும், இதழியல் மொழியாக ஆங்கிலத்திலிருந்து கன்னடத்துக்கு மாறுவது கடினமானதாக இருந்தது. இருப்பினும், தொடர்ந்து கன்னடத்தில் எழுதி தன்னை

“காந்தி முதல் கௌரி வரை கொலையாளி ஒருவர்தான்!” - கெளரி லங்கேஷைப் பற்றி நண்பரும் ஆவணப்பட இயக்குநருமான தீபு

மெருகேற்றிக்கொண்டார். வலதுசாரி அரசியலை எவ்வளவு மூர்க்கமாக எதிர்த்தாரோ, அதற்கு நேர்மாறாக மென்மையான தாய்மை குணம்கொண்டவர். நண்பர்கள் மற்றும் எல்லோர் மீதும் அக்கறைகொண்டவர். அவர் எப்போதுமே பிறரைப் பற்றி கவலைகொண்டவராகவே இருப்பார். ஆனால், அவரைக் குறித்து அக்கறையே கிடையாது. இந்தச் சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்று நிறைய கனவில் இருந்தார். குழந்தைகள் அதைச் செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஜிக்னேஷ் மேவானியும், உமர் காலித்தும் இந்த நாட்டில் வலதுசாரிகளுக்கு எதிராகவும், அநீதிகளுக்கு எதிராகவும் போராடும் இளைஞர்களின் பிரதிநிதிகள். அவர்களை நிறையவே நேசித்தார். 

ஒருமுறை நாங்கள் பழங்குடிகள் பற்றிய ஓர் ஆவணப்படத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தோம். எங்கள் குழு காலையில் பெங்களூரிலிருந்து புறப்படுவதாக இருந்தது. அன்று இரவு ஜிக்னேஷ் ஊரிலிருந்து வந்திருந்தார். எனவே, இரவு இரண்டு மணிக்கு விமான நிலையத்திலிருந்து அவரை கெளரி அழைத்து வந்திருக்கிறார். காலையில் ஜிக்னேஷ் தேநீர் அருந்தும்போது சந்திக்கலாம் என்றதும், கெளரி கடுமையான குரலில், 'ஜிக்னேஷ் வந்தபோது மணி 2:30. அவன் இன்னும் உறங்கவில்லை' என்றார். அந்த அளவு அவரை நேசித்தார். கன்னையா, ஷைலா என்று எல்லோரையும் அவர் நேசித்தார். சில மாணவர்கள் அவரிடம் விளையாட்டாக, 'நீங்கள் தேசிய அளவில் தலைவர்களாக இருக்கும் இவர்களைத்தான் தத்தெடுப்பீர்கள். என்னைப் போன்றவர்களை இல்லை' என்பார்கள். அதற்கு, 'நீங்கள் ஏற்கெனவே என்னுடைய பிள்ளைகள்தான்' என்று கெளரி பதில் அளிப்பார். இந்தச் சமூகத்துக்காக உழைக்கும் இளைஞர்கள்மீது அவ்வளவு அக்கறையுடன் இருந்தார். அவரது எழுத்துகள் அநீதிகளைக் கடுமையாக எதிர்த்தன. 16 வருடங்களாக அவர் பேசியவை என்னிடம் இருக்கின்றன. அவை எதிலுமே 10 நிமிடங்களுக்கு மேல் பேசியது கிடையாது. அவர் பெரிய பேச்சாளர் கிடையாது. மிகக்கடுமையாக வலதுசாரிகளை எதிர்த்தார். லிங்காயத் சமூகத்தில் பிறந்தவராக இருந்தாலும், ஆழமானப் பகுத்தறிவாளராக இருந்தார். சமூகப் பிரச்னைகளை எதிர்த்து எழுதினார் என்பதைவிட, மக்களோடு மக்களாக களத்தில் இருந்தார். LGBT உரிமைகள் உள்பட எல்லாரின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தார்” என்று கௌரியின் வீரம் மற்றும் தாய்மைக் குணத்தை விவரிக்கும் தீபுவின் குரல், கௌரியின் மரணம் பற்றி பேசும்போது உடைய ஆரம்பிக்கிறது.

“காந்தி முதல் கௌரி வரை கொலையாளி ஒருவர்தான்!” - கெளரி லங்கேஷைப் பற்றி நண்பரும் ஆவணப்பட இயக்குநருமான தீபு

“நான் அன்று ஒரு படப்பிடிப்பில் இருந்தேன். என் போன் சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆகிவிட்டிருந்தது. வீட்டுக்குச் சென்றதும் என் மனைவி, இந்தத் துன்பகரமான செய்தியைக் கூறினார். கர்நாடகாவில் இந்தக் கொடுமை இயல்பாக மாறி வருகிறது. கல்புர்கியின் கொலையும் அப்படித்தானே? இந்துத்துவத்தை எதிர்த்தால், நாயைப்போலச் சாவாய் என்பதுதான் அவர்களது முழக்கமாக இருக்கிறது. கௌரியை எத்தனையோ பேர் மிரட்டினாலும், திட்டினாலும், 'வாங்க, ஒரு கப் காபி குடித்துக்கொண்டே பேசுவோம்' என்பதே அவரின் பதில் அணுகுமுறையாக இருந்தது. அவருக்கு நிறைய மிரட்டல்கள் இருந்துகொண்டே இருந்தன. ஆனால், அது இவ்வளவு கொடூரமான உண்மையாகும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ராகவேஷ்வரா என்கிற சாமியார், பிரேமலதா என்கிற பெண்ணை பாலியல் வன்முறை செய்த விஷயத்தில்,, பிரேமலதாவுக்காக கௌரி நின்றார். அதைப்பற்றி தொடர்ந்து எழுதினார்” என்கிற தீபு, கௌரியின் கொலை கர்நாடகாவில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிக் கூறுகிறார். 

“கௌரியின் மறைவு, கர்நாடகாவில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தளத்தில் இயங்குபவர்கள் என்று மட்டுமின்றி, மக்களிடையே அந்தத் தாக்கம் தெரிந்தது. மக்களிடம் ஒரு நம்பிக்கையை கெளரி வளர்த்திருந்தார். இடதுசாரிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று விரும்பினார். அவரை 'நக்சல்' என்று ஊடகங்கள் முத்திரை குத்தின. எந்த ஊடக அறத்தின்படி செயல்பட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. கௌரி நக்சல்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை ஏற்படுத்த முற்பட்டார். நக்சல்களின் கோரிக்கைகள் பற்றிப் பேசினார். நக்சல்கள் எந்தச் சமூக அநீதிக்கு எதிராகப் போராடினார்களோ, அந்தக் காரணத்தையே கெளரி ஆதரித்தார். 

காந்தி முதல் கௌரி வரை கொலையாளி ஒருவர்தான். அதுவே, இந்துத்துவம். எடியூரப்பாவின் ஊழலை கௌரி வெளிக்கொண்டு வந்ததால், கொன்றது அவர்களாக இருக்கலாம் என்று வலதுசாரிகள் பிரச்னையைத் திசை திருப்புகிறார்கள். ஆனால், அரசியவாதிகளின் ஊழலை வெளிக்கொண்டு வருவதால் பெருமளவில் நெருக்கடிகள் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கும் பலர். மீண்டும் தேர்தல்களில் வலம் வருவதில்லையா? மக்களிடம்தான் செல்வதில்லையா? இந்தியாவில் எந்த ஓர் அரசியல் தலைவரும், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை கண்டுகொள்ளப்போவதில்லை. எடியூரப்பாவைவிட கொடூரமானவர்களைப் பற்றி கௌரி எழுதியிருக்கிறார். ஆனால், அவர்கள்கூட கௌரியை கொன்றிருக்க வாய்ப்பில்லை” என்று தீர்க்கமாகச் சொல்கிறார் தீபு. 

கௌரியைப் பற்றிய ஆவணப்படத்தை யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் திரையிட்டுக்கொள்ளலாம் என்றும், திரையிடலுக்குத்தான் வரமுடியாவிட்டாலும், நிச்சயம் பெங்களூரிலிருந்து யாராவது வந்து கலந்துகொள்வார்கள் என்றும் சொல்கிறார் தீபு.

(பாபுதேங்கிரி இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புனிதப்பகுதியாக இருந்து வருகின்றது.)

அடுத்த கட்டுரைக்கு