Published:Updated:

சொந்த ஊர் குதூகல வைபவத்தில் கொள்ளை லாபம் பார்க்கும் வியாபாரிகள்!

சொந்த ஊர் குதூகல வைபவத்தில் கொள்ளை லாபம் பார்க்கும் வியாபாரிகள்!
சொந்த ஊர் குதூகல வைபவத்தில் கொள்ளை லாபம் பார்க்கும் வியாபாரிகள்!

சென்னை  கோயம்பேடு பேருந்து நிலையத்தைப் பார்க்கும்போதெல்லாம் சென்னை இவ்வளவு மனிதர்களையும் தன்னுள் எப்படிச் சுருக்கிக்கொண்டிருக்கிறது என்ற சந்தேகம் எல்லோருக்குள்ளும் எழுவது இயல்பு. ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் சென்னைக்கு வருவதும், போவதுமாகவே இருக்கின்றனர். சென்னைக்குள் தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். சென்னைவாசிகளாக இருக்கும் பெரும்பாலானோர் சென்னையில் வேலைவாய்ப்பு, படிப்பு போன்ற காரணங்களால் வந்து குடியேறியவர்கள்தானே தவிர, பூர்வீகக் குடிகள் இல்லை. அதனால்தான் நான்கு நாள்கள் தொடர்ந்து விடுமுறை வந்தால் போதும், சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் ரயில்களிலும், பேருந்துகளிலும் இடம்பிடிக்க யுத்தமே நடத்துகிறார்கள். அதுவும் பொங்கல், தீபாவளி என்றால் சொல்லவே வேண்டாம். சொந்த ஊருக்குச் செல்வதற்குள் படாதபாடு படவேண்டும்.

இப்படி ஊருக்குச் செல்லும்போது பேருந்துகளில் நடக்கும் அட்ராசிட்டிகளை வார்த்தைகளில் சொல்லி மாளாது. இந்த அவசரப் பயணங்களில் பலரும் பேருந்துக் கட்டணத்தைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. 200 ரூபாய், 300 ரூபாயில் முடியும் பயணங்களுக்கு ரூ.1,000, 2,000 தருவது பற்றி யோசிப்பதில்லை. பயணச்சீட்டு கிடைத்தால் போதும் என்று பயணிப்பவர்கள் அதிகமாகிப்போக, அதையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கிவிட்டன போக்குவரத்து நிறுவனங்கள். தனியார் பேருந்தில் மட்டும்தான் இந்தப் பிரச்னை என்று நினைப்போமாயின், அது தவறு. இப்போது அரசுப் பேருந்துகளும் வார விடுமுறை நாள்களிலும், தொடர்ச்சியான விடுமுறை நாள்களின்போதும் கமிஷன் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பேருந்தில் இருக்கும் யாரோ ஒருவர் கேள்வி கேட்கத் துணிந்தாலும், “இதான் விலை. கொடுக்க முடியாது என்றால் வேற பஸ் பாத்துக்கோங்க“ என்று கண்டக்டரிடம் இருந்துவரும் பதில் அவர் வாயையும் அடக்கிவிடும்.

இப்போது அரசுப் பேருந்துகளும் வார விடுமுறை நாள்களிலும், தொடர்விடுமுறை நாள்களின்போதும் கூடுதலாக கட்டணம் வசூலித்துக் கமிஷன் பார்க்க ஆரம்பித்து விட்டன, பேருந்தில் இருக்கும் யாரோ ஒருவர் கேள்வி கேட்கத் துணிந்தாலும், "இதுதான் கட்டணம். கொடுக்க முடிந்தால் பயணம் செய். இல்லாவிட்டால், வேற பஸ்ஸை பாத்துக்கோங்க" என்று கண்டக்டர் கண்டிப்பாக தெரிவிப்பதில், பலரும் வாயை அடக்கிக்கொண்டு 'நமக்கேன் வம்பு' என்றரீதியில் பயணம் செய்கிறார்கள். அதையும் தாண்டி, கோயம்பேடு மற்றும் பேருந்து நிலைய அலுவலரிடம் அதிகக் கட்டணம் பற்றிப் புகார் சொல்லும் பட்சத்தில், அவர் இதையெல்லாம் பெரிதுபடுத்துவது கிடையாது. எனவே, ஊருக்குப் போனால் போதும் என்ற எண்ணத்தில் யாரும் இதைப் பற்றிப் பேசத் துணிவதில்லை. ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் இதைப்பற்றி யோசிக்க யாருக்கும் நேரம் இல்லாமல் போய்விடுகிறது. அடுத்தமுறை பேருந்தில் பயணிக்கும்போதுதான், இதைப் பற்றிய நினைவே வருகிறது. "முன்னரே பயணச்சீட்டுப் பதிவு செய்துவிட்டால் இந்தப் பிரச்னை இருக்காது" என்று நினைத்தால், மறுபடியும் மக்கள்தான் ஏமாளி. பேருந்து முன்பதிவு அரசாங்கப் பேருந்தை பொறுத்தவரையில் பாதுகாப்பானது மட்டுமல்ல; விலை மலிவானதும்கூட. ஆனால், தனியார்ப் பேருந்துகளைப் பொறுத்தவரை, விடுமுறை நாள்களுக்குப் தகுந்தவாறு விலையைப் பன்மடங்காக உயர்த்தி விடுகின்றன. ஒரு மடங்கு, இரு மடங்கு என்றால் பரவாயில்லை. சில சமயங்களில் விமான டிக்கெட்டின் விலையும் பேருந்து டிக்கெட்டின் விலையும் ஒன்றாகிப்போன வேடிக்கையும் நடந்தது உண்டு.

இதெல்லாம் அரசாங்கம் அறியாதது அல்ல. கடந்த மாதம் நான்கு நாள்கள் தொடர்ந்து விடுமுறை வந்தபோதும், “அதிக கட்டணம் வசூலிக்கும் வாகனங்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், "என்ன நடவடிக்கை எடுத்தார்கள்" என்றுதான் இப்போதுவரை தெரியவில்லை. ஒவ்வொரு முறை தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போதும், போக்குவரத்துத் துறையின் கட்டணக்கொள்ளை மற்றும் அட்டகாசங்களை ஊடகங்கள் படம் பிடித்துக் காட்டினாலும் நடவடிக்கைகள் என்னவோ பெரிதாக எடுக்கப்படுவதில்லை. சொல்லப்போனால், மீண்டும் மீண்டும் அதே நிலைதான் தொடர்கிறது. 

இந்தக் கட்டண உயர்வுகுறித்து போக்குவரத்துக் கழக ஊழியர் ஒருவரிடம் கேட்டபோது, “அரசாங்கம் கொடுக்கும் ஊதியம் பெரும்பாலும் போதுமானதாக இருப்பதில்லை. 20 வருடங்களுக்கு மேல் அனுபவம் இருந்தாலும், பெரிதாக மாற்றம் ஏதும் இல்லை. பின்னர், எப்படித்தான் எங்கள் பிழைப்பை ஓட்டுவது? போராடத்தான் முடியும். அரசாங்கம்தான் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.

தனியார் பேருந்துகளில் பணியாற்றும் ஊழியர்களின் நிலையோ இன்னும் சோகம், “பேருந்துக் கட்டணத் தொகை முழுவதையும் முதலாளியிடம் கொடுத்துவிடுவோம். எங்களுக்கு மாதச் சம்பளம் மட்டும்தான். பெரும்பாலும் ஆன்லைனில் பதிவுசெய்துவிடுவதால், எங்களுக்கு எதுவுமே கிடைப்பதில்லை. ஒருபுறம், பார்க்கப்போனால் ஆம்னி பேருந்துகளின் மீதான வரிவிதிப்பே இந்தவிலை உயர்வுக்குக் காரணம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஓர் இருக்கைக்கு 3,000 ஆயிரம் ரூபாய் வீதமும், படுக்கைப் பேருந்துகளுக்கு ஒரு படுக்கைக்கு 7,200 ருபாய் வீதமும் கட்டுகிறார்கள். இது மட்டும் இல்லாமல் இன்சூரன்ஸ், எஃப்.சி, டிரைவர், கண்டக்டர் படி என்று அது ஒருபக்கம். டீசல், பெட்ரோல் விலை உயர்வு என எல்லாவற்றையும் கணக்குப் போட்டுப் பார்த்தால் பணம் கையில் தங்குவது கஷ்டம்தான். எப்படி இருப்பினும் விடுமுறை நாள்களில் கொள்ளை லாபம் பார்க்காமல் இருப்பதில்லை" என்றார்.

"தமிழகத்தில் மொத்தப் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவு, இருக்கும் பேருந்துகளிலும் தனியார் பேருந்துகளுக்கு இணையாக போதிய வசதிகள் இல்லாத நிலை, அதிகளவிலான பயணிகளின் எண்ணிக்கை" போன்ற பல காரணங்களால், 'கட்டணம் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை' என்று கருதி மக்கள் தனியார் பேருந்துகளை நோக்கியே செல்கிறார்கள். 

இதுபற்றி அண்ணா பல்கலைக்கழத்தில் படிக்கும் மாணவர்களிடம் கேட்டபோது, “இங்கு படிக்கும் பெரும்பாலானோர் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்தவர்கள். ஒவ்வொரு முறையும் நாங்கள் ஊருக்குச் செல்லும்போதும் டிக்கெட் விலை சாதாரண விலையைவிட ஐம்பது, நூறுகூட இருக்கும். இதுவே நிறைய நாள் லீவு விட்டால் அவ்வளவுதான். முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்துவிட்டால் தப்பித்தோம். இல்லை என்றால், விலை எக்கச்சக்கமாக இருக்கும். எவ்வளவு கட்டணமாக இருந்தாலும், அதைக் கொடுத்து போய்த்தானே ஆக வேண்டும்? விடுமுறை கிடைத்து வீட்டுக்குப் போவதே கடினம். இந்தநேரத்தில் வேற என்ன செய்யமுடியும்? எல்லா கட்டணத்தையும் மின்னணு மயமாக்கி கண்காணித்தால்தான், இந்த மாதிரி அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க முடியும். தனியார்ப் பேருந்துகளுக்கும் கட்டண நிர்ணயத்தில் அரசு ஒரு வரைமுறையை வகுக்க வேண்டும். பயணிகளாக நாம வேற என்ன செய்யமுடியும்'' என்றனர் வேதனையுடன்.

ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை, தீபாவளி விடுமுறை என அடுத்தடுத்து வரிசையாக விடுமுறை நாள்கள் வந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழக அரசுப் பேருந்து கட்டணக் கொள்ளையைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்துப் பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது. ஏனெனில், நடுத்தரவர்க்கத்தினரும், ஏழை, எளிய சாமான்ய மக்களுமே அரசுப் பேருந்தை நம்பியுள்ளனர் என்பதை அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்குமா?

அடுத்த கட்டுரைக்கு