Published:Updated:

கூடங்குளம் போராட்டம் தீவிரமானதற்கு ஜெ.தான் காரணம்: கருணாநிதி

கூடங்குளம் போராட்டம் தீவிரமானதற்கு ஜெ.தான் காரணம்: கருணாநிதி
கூடங்குளம் போராட்டம் தீவிரமானதற்கு ஜெ.தான் காரணம்: கருணாநிதி
கூடங்குளம் போராட்டம் தீவிரமானதற்கு ஜெ.தான் காரணம்: கருணாநிதி

சென்னை: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு முதலமைச்சர்  ஜெயலலிதா முதலில் ஆதரவு தெரிவித்ததுதான், போராட்டம் தீவிரமடைய  காரணமாகிவிட்டதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், " கூடங்குளத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவின் அரசு காவல் துறையை அங்கே கொண்டு போய் குவித்து வைத்து, அவர்கள் மூலமாகவே போராட்டத்தை அடக்கிவொடுக்க எண்ணுகிறது. துப்பாக்கி பிரயோகம் வரை நடைபெற்று மீனவர் ஒருவர் தன் உயிரைக் காணிக்கையாக்கி இருக்கிறார். அன்றாடம் நமது மீனவர்களை இலங்கைக் கடற்படையிடமிருந்து காப்பாற்ற நாம் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில், அதிமுக அரசின் காவல்துறையே இன்று நம்முடைய மீனவர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்திருக்கிறது. தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கும் முயற்சியிலே அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா உடனடியாக நிவாரணத் தொகையை அறிவித்து, பணத்தின் மூலமாக அந்த மீனவரின் போன உயிரைத் திரும்பக் கொண்டு வர முயற்சிக்கிறார். போராட்டம் எதிர்ப்பாளர்கள் கையை விட்டுப் போய், சரணடைய வந்த உதயகுமாரையும் புஷ்பராயனையும் பொதுமக்களே சரணடையக் கூடாதென்று தூக்கிக் கொண்டு போய் விட்டதாக செய்தி வந்துள்ளது.

கூடங்குளத்தில் போராட்டம் இந்த அளவிற்கு பெரிதாக ஆவதற்கு அ.தி.மு.க. ஆட்சியினர்தான் காரணம் என்று எதிர்ப்பாளர்களே கூறுகிறார்கள். தொடக்கத்திலேயே அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு மாநில அரசு ஆதரவு தெரிவித்து, அவர்களை உசுப்பி விட்டு விட்டு, தற்போது அவர்களை அடக்கி ஒடுக்கி விடக் கருதுகிறது.

அணு உலை பிரச்சினையில், முதலில் மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு இருப்பதைப் போலக் காட்டிக் கொள்வதற்காக, அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு கரம் நீட்டினார்கள். முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதைப் போல 1000 மெகாவாட் மின் திறன் கொண்ட இரண்டு அணு மின் அலகுகள் அமைப்பதற்கான பெரும்பாலான பணிகள் முடிவுற்றிருந்த நிலையில்; பணியினைத் தொடர வேண்டாமென்றும் - போராட்டம் நடத்துகின்ற மக்களுக்கு அறிவுரை கூறி உண்மையை உணரச் செய்கிற வரை, அணு உலை பணிகளைத் தொடங்கக் கூடாது என்றும், 19-9-2011 அன்று பிரதமருக்கு நமது முதல் அமைச்சர் கடிதம் எழுதினார்.

இந்தச் செயல்; எதிர்ப்பாளர்களுக்கெல்லாம் தங்கள் செயல்பாடு நியாயம் தான் என்று ஊக்கப்படுத்திவிட்டது. ஆரம்பத்திலேயே அணு உலை எதிர்ப்பாளர்களிடம், “அந்த ஆலையினால் ஆபத்து இல்லை, ஆபத்து வராமல் மத்திய, மாநில அரசுகள் பார்த்துக் கொள்ளும், ஆபத்துக்களைத் தடுப்பதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்படும்” என்றெல்லாம் தொடக்கத்திலேயே போராட்டக் குழுவினரிடம் விளக்கியிருந்தால், இந்த அளவிற்கு நிலைமை முற்றியிருக்காது.

மத்திய அரசின் முடிவினை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு 21-9-2011 அன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அணு உலை எதிர்ப்பாளர்களையெல்லாம் சந்தித்து ஆதரவு தெரிவித்ததோடு, அதற்கு மறுநாள் 22-9-2011 அன்று அவசர அவசரமாக அமைச்சரவையைக் கூட்டி, அதிலே மத்திய அரசு உடனடியாக கூடங்குளம் திட்டப் பணிகளை நிறுத்த வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றியதோடு, மூத்த அமைச்சர் ஒருவர் தலைமையில் போராட்டக் குழுவினரோடு பிரதமரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்து கொடுத்தார்.

இப்படி யெல்லாம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த முதலமைச்சர் ஜெயலலிதா, பின்னர் என்ன காரணத்தாலோ தன்னுடைய முந்தைய நிலையை மாற்றிக் கொண்டார். இப்படி முதலில் ஒன்றும் பிறகு ஒன்றும் எனக் கருத்தை மாற்றிச் சொல்வது “மெஜாரிட்டி” ஜெயலலிதா அரசுக்கு வாடிக்கையான ஒன்று தானே?

இது வரை நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்பதைப் போல அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்த வேண்டும். தொடக்கத்தில் போராட்டக் காரர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா  தற்போது முதலமைச்சரைச் சந்திக்க வந்த போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச மறுத்தது - மன்னிக்க முடியாத -முன்யோசனையற்ற தவறு.

மத்திய அரசும், மாநில அரசும் போராட்டக் குழுவினரின் முக்கிய பிரதிநிதிகளையெல்லாம் அழைத்து வைத்துப் பேச வேண்டும். ஆபத்து எதுவும் ஏற்படாமல் அரசினால் எடுக்கப்பட வேண்டிய அத்தனை நடவடிக்கைகளையும் செய்து கொடுப்போம் என்று அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். உத்தரவாதம் அளிப்பதோடு அவற்றை செய்து முடிக்கவும் ஆவன செய்ய வேண்டும். போராட்டம் நடத்துவோரும் நமது மக்கள் தான்.

அவர்களை ஏதோ விரோதிகள் என்பதைப் போல இந்த அரசு நினைக்கக் கூடாது. போராட்டம் நடத்துவோரும், அந்த அணு உலை தொடங்குவதற்கு முன்பாகவே தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தால், இத்தனை கோடி ரூபாய்களை செலவழித்திருக்கத் தேவையில்லை. ஆனால் பல ஆண்டு காலமாக பணிகளை செய்து முடித்துள்ள நிலையில், இரு தரப்பினருக்கும் உகந்த முறையில் சுமூகமாக இதைத் தீர்ப்பதற்கு வழி காண வேண்டுமே தவிர, இந்த “மெஜாரிட்டி” அரசு தங்களிடம் காவல் துறை இருக்கிறது என்ற நினைப்போடு, போராட்டத்தை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று கருதிடக் கூடாது ” என்று கூறியுள்ளார்.