Published:Updated:

இளம் வாக்காளர்களை ஆளும் முதிய அரசியல்வாதிகள்..! இது ஜனநாயக முரண்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இளம் வாக்காளர்களை ஆளும் முதிய அரசியல்வாதிகள்..! இது ஜனநாயக முரண்
இளம் வாக்காளர்களை ஆளும் முதிய அரசியல்வாதிகள்..! இது ஜனநாயக முரண்

இளம் வாக்காளர்களை ஆளும் முதிய அரசியல்வாதிகள்..! இது ஜனநாயக முரண்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தாத்தாக்கள் ஆளுவதற்கு பேரன்கள் ஓட்டுப்போடுகிறார்கள். ஆம், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஒரு பக்கம் நாட்டின் 75 சதவிகிதம் பேர் 40 வயதுக்கு உட்பட்ட இளம் தலைமுறை வாக்காளர்கள். இன்னொருபுறம் இந்திய அரசியல்வாதிகளில் 80 சதவிகிதம் பேர் 70 வயதைக் கடந்தவர்கள்.  

விடுதலைப்போராட்டம்

இந்தியாவின் அரசியல் எழுச்சியை ரீவைண்ட் செய்து பார்த்தால், அதில் சில சூழல்கள்தான் இளைஞர்களை அரசியலை நோக்கி இழுத்திருக்கிறது. சுதந்திரப் போராட்ட கால சூழலில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அரசியலுக்குள் வந்தார்கள். நாடு விடுதலை பெற வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் மட்டும் அவர்களிடம் இருந்தது. சுதந்திரத்துக்குப் பின்னர் காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அரசியலுக்குள் அவர்கள் கலந்தார்கள். 

இன்றைக்கு முதிய அரசியல்வாதிகள் என்ற அடைமொழியோடு இருக்கும் வாஜ்பாய், எல்.கே.அத்வானி, ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ், நல்லகண்ணு போன்றோர் அந்த வரிசையில் இடம்பெறுள்ளவர்கள்.  

இளைஞர்களை ஈர்த்த பெரியார்

தமிழகத்தில் தமிழர்களின் இன உணர்வைத் தட்டி எழுப்பிய ஆளுமை பெரியார். பார்ப்பனிய எதிர்ப்பு, தன்மானம், பெண் விடுதலை, பகுத்தறிவு என தமிழர்களிடையே இன மான உணர்ச்சியை தட்டி எழுப்பியவர் பெரியார். அவரின் பின்னால் அப்போது இளைஞர்களாக இருந்த அண்ணா, பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டோர் அணிவகுத்தனர்.  

பெரியாரின் வழித்தோன்றலாக வந்த அண்ணா இந்தி எதிர்ப்பு எழுச்சியில் இளைஞர்களை ஈர்த்தார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, இந்தி மொழிக்கு எதிரான எழுச்சியை முன்னெடுத்தவர் அண்ணா. அவரைப் பின்பற்றி அரசியலுக்கு வந்த இளைஞர்கள்தான் இன்றைக்கு தி.மு.க, அ.தி.மு.க-வில் இருக்கும் முதிய அரசியல்வாதிகள்.  சுதந்திரப் போராட்ட காலத்து அரசியல் சூழலும், இந்தி எதிர்ப்பு அரசியல் சூழலும் இந்தியாவில், தமிழகத்தில் இப்போது இல்லையா.

நேர்மையானவர்கள் வருவதில்லை

இந்தச் சூழல் குறித்து தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நல்லகண்ணுவிடம் கேட்டோம்.  “தனிப்பட்ட முறையில் நான் சிறுவயதிலேயே அரசியலுக்கு வந்தவன். எங்கள் காலத்தில் நாங்கள் அரசியலுக்கு  இழுக்கப்பட்டதற்கு பல காரணங்கள் இருந்தன. ஆனால், தற்போது அப்படி ஒரு சூழல் இல்லை. மற்றொரு புறம் கட்சிக் களத்தில் பணியாற்றும் இளைஞர்கள் எவ்வித பின்னணியும் நோக்கமும் இல்லாமல் இருக்கிறார்கள். இதுவும் ஒருவகையில் ஆபத்து.

இங்கே அரசியல் வேறு மாதிரி இருக்கிறது. நேர்மையானவர்கள் இதற்குள் வருவதில்லை. அரசியலில் காலம் காலமாக இருப்பவர்களே மீண்டும் மீண்டும் ஆட்சிக்குப் போட்டி போடுகிறார்கள். அரசியல் என்றால் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிப்பது மட்டுமில்லை. மக்களின் தேவைகளுக்காக உறுதியான காரணங்களுடன் போராடுவதும் அரசியல்தான். ஜல்லிக்கட்டுத் தடை நீக்கக் கோரி தமிழ் மக்களின் உரிமைக்காக மாணவர்களும் இளைஞர்களும் ஒன்று திரண்டார்கள். அது ஒரு மாபெரும் எழுச்சி. நெடுவாசலில் விவசாயத்தைக் காப்பதற்காக களம் இறங்கியிருக்கிறார்கள். எதற்காக குரல்கொடுக்க வேண்டும் என்கிற தெளிவு இளைஞர்களிடம் இருக்கிறது. அது அரசியல் களத்தில் கட்சிப்பணியில் இருந்தபடிதான் செயலாற்ற வேண்டும் என்று இல்லை” என்கிறார். 

அரசியல்தான் மற்ற எல்லாவற்றுக்கும் ஆளுமையாக இருக்கிறது. ஆளுமைகளுக்கு எல்லாம் ஆளுமை என்று சொல்லலாம். அதிக அளவு தந்திரங்கள், எண்ணற்ற சூழ்ச்சிகள், கணக்கில் அடங்கா அவமானங்களைக் கொண்டதுதான் அரசியலாக இருக்கிறது. இது எல்லாவற்றையும் தாண்டி பதவி சுகத்தை அனுபவிப்பதற்குள் அரசியல்வாதிகளுக்கு வயதாகி விடுகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர்களில் கூட பெரும்பாலானவர்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்களாகத்தான் இருக்கின்றனர். எம்.எல்.ஏ- பதவிக்காக போட்டியிடுபவர்களில் பெரும்பாலானவர்கள் 50 வயதைத் தாண்டியவர்களாகத்தான் இருக்கின்றனர். லோக்சபா தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் 60 வயது ஆனவர்களுக்குத்தான் வாய்ப்புகளே கிடைக்கின்றன. இது அரசியல் முதிர்ச்சியாகக் கருத்தப்படுகிறது. அடிமட்டத் தொண்டனாக இருந்து மக்களைப் புரிந்துகொண்டு லோக்சபா வரை செல்வதற்கு அரசியல் அனுபவம் தேவைப்படுகிறது என்கின்றனர். மற்ற துறைகளைப் போலவே சம்பளமும், பதவியும் உடனே கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பும் இளைஞர்களிடம் இருக்கிறது. ஆனால், இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழலில் அது சாத்தியம் இல்லை.  

2021-ல் இளைஞர்கள் இறங்குவார்கள்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் யுவராஜிடம் பேசினோம்.  "தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஆட்சியில்

இருக்கும் திராவிடக் கட்சிகள் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை அளிக்கவில்லை. தாங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இளைய தலைமுறையினர்களை சிந்திக்கவிடவில்லை.  மற்ற மாநிலங்களைப் போல அவ்வளவு எளிதாக மக்களால் தலைவர்களைச் சந்திக்கவும் முடியாது. அதனாலேயே இளைஞர்களுக்கும் அரசியலைப் பற்றி ஒரு தெளிவான சிந்தனை இல்லாமல் இருந்தது.  அந்தச் சூழல் இப்போது முற்றிலுமாக மாறி வருகிறது. இளைஞர்கள் அரசியல் பற்றி நிறையப் பேசுகிறார்கள். தங்கள் தலைவர்களிடம் நேரடியாகச் சொல்ல முடியாததை சமூக வலைதளங்களின் வழியாகச் சொல்லும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. தற்போது இல்லையென்றாலும் 2021 தேர்தலில் முழுக்க முழுக்க இளைஞர்களின் பங்கு நிச்சயம் இருக்கும். இளைஞர்களுக்கான தேவைகள் மற்றும் சிந்தனைகளுடன் அந்த தேர்தல் அமையும். அதை அடிப்படையாகக் கொண்டே தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன" என்கிறார். 

எவ்வளவு செலவழிக்க முடியும்?

இளைஞர்கள் அரசியலுக்கு வரத் தயங்குவதற்கு பொருளாதாரச் சூழலும் ஒரு காரணியாக இருக்கிறது என்கிறார் எழுத்தாளர் சரவணன்

சந்திரன், “வயதானவர்களுக்குத்தான் அரசியல் என்ற புரிதல் இன்றும் இருக்கிறது. இரண்டாவது முக்கியப் பிரச்னை இளைஞர்களின் பொருளாதாரப் பிரச்னை. தனது குடும்பத்துக்கான எந்தவிதப் பொருளாதாரப் பின்புலமும் இல்லாமல் வயதானவர்கள் நிறைந்துள்ள ஒரு துறையில் இளைஞர்களால் கால்பதிக்க முடியாது. பொருளாதாரப் பின்புலம் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கட்சிகள் அதற்கான இடத்தை அளிப்பதில்லை. தற்போது தமிழகத்தில் இருக்கும் கட்சிகள் தங்கள் கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று இப்போதுதான் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், அந்தக் கட்சியின் செல்வாக்குள்ள எம்.எல்.ஏ-க்கள்  தனிப்பட்ட முறையில் தங்கள் தொகுதிகளில் நிலச்சுவாந்தார்கள் போலதான் செயல்பட்டுவருகிறார்கள். அவர்களை மீறி எந்தச் செயலும் மக்களால் செய்ய இயலவில்லை என்பதே நிதர்சனம்.

இப்படி அரசியலில் சேரமுடியாதவர்கள் ரசிகர் மன்றங்களில் இணைகிறார்கள், ரசிகர் மன்றங்கள் தேவை இல்லை என்பவர்கள் அதிலிருந்து வெளியேறுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தேசிய கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் இடம் தராதபோது சிறுகட்சிகளில் இணைகிறார்கள். மாநிலத்தில் கட்சிகள் தங்களிடம் இணைபவர்களிடம் கேட்கும் முதல் கேள்வி, “உங்களால் எவ்வளவு செலவழிக்க முடியும்?” என்பதே. ஆனால் எந்த இளைஞனிடம் கோடிக் கணக்கில் பணம் இருக்கிறது. அதனால் அவர்களும் இடம் தரமாட்டார்கள், இவர்களும் வரமாட்டார்கள்" என்கிறார். 

ஒருங்கிணைக்கும் தலைவர் இல்லை

இந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் கடந்த பின்னர், காங்கிரஸ் ஆட்சிகாலங்களில் ஊழல் மலிந்துவிட்டது என்ற பரவலான குற்றச்சாட்டு எல்லா மட்டத்திலும் இருந்துவந்தது. இதை அறுவடை செய்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஊழலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த அன்னா ஹசாரேவின் இயக்கத்தில் இருந்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மாநிலத்தின் முதல்வர் வரை உயரமுடிந்தது ஜனநாயகத்தின் ஆச்சர்யங்களில் முதன்மையானது. ஆம் ஆத்மியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் சுதா என்ன சொல்கிறார்?

"சுதந்திரப் போராட்டம் போலவோ, இந்தி எதிர்ப்புப் போலவோ, ஊழல் எதிர்ப்பு போன்ற ஒரு சூழல் தமிழகத்தில் இப்போது இல்லை

. இப்போது தமிழகத்தில் நடந்து முடிந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம், நெடுவாசல் போராட்டம், தாமிரபரணிக்காக நடக்கும் போராட்டம், மீனவர்கள் போராட்டம் இவைகளில் எல்லாம் இளைஞர்கள் பெரும் அளவில் பங்கேற்கின்றனர். இனிமேல் அதுபோன்ற போராட்டங்கள் தொடரும் என்றே கருதுகின்றேன். ஆனால், இளைஞர்களை ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு தலைமை தமிழகத்தில் இப்போது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அரசியல் கட்சிகளில் 50 சதவிகிதம் அளவுக்கு இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இளைஞர்களுக்கு தற்போது இருக்கும் ஊடகங்கள் வாயிலாக அரசியல் ரீதியான விழிப்புஉணர்வு ஏற்பட்டுள்ளது" என்கிறார். 

அமெரிக்காவில் அதிபராக இருப்பவர்கள், இரண்டு முறைகளுக்கு மேல் அந்தப் பதவியில் வகிக்க முடியாது. ஆனால், இந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்ச்சியாக ஒருவரே முதல்வராக இருந்திருக்கிறார்கள். இருந்து வருகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதிய தலைவராக இருந்து மறைந்த ஜோதிபாசு மேற்கு வங்கத்தில் 23 ஆண்டுகள் முதல்வராக இருந்திருக்கிறார். தி.மு.க தலைவர் கருணாநிதி 19 ஆண்டுகள் முதல்வராக இருந்திருக்கிறார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 16-வது ஆண்டாக முதல்வராக இருக்கிறார்.  டெல்லியில் ஷீலா தீட்சித் 15 ஆண்டுகாலம் முதல்வராக இருந்திருக்கிறார், அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா 15 ஆண்டுகள் முதல்வராக இருந்திருக்கிறார்.  

கட்சித் தலைவர்களை எடுத்துக்கொண்டால், அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா 60 வயதானவர். தி.மு.க தலைவர் கருணாநிதி 92 வயதானவர். தி.மு.க செயல் தலைவர்  மு.க.ஸ்டாலின் 64 வயதானவர். ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ 72 வயதானவர்தான். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் 64 வயதானவர். இப்படி தமிழகத்தின் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் எல்லோருமே 60 வயதைக் கடந்தவர்கள். 

வயது நிர்ணயம் தேவை

இளைஞர்களின் அரசியல் எண்ணத்தில் சலிப்பு ஏற்படுவதற்கு காரணம் இதுதான். ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58 ஆக இருக்கிறது. ஆனால், அரசியல்வாதிகளின் ஓய்வு என்பது அவர்களாக பார்த்து அரசியலில் இருந்து விலகுவது அல்லது அவர்கள் உயிரோடு இருக்கும் வரை தொடர்கிறது. அரசியலிலும் இதுபோன்று வயது நிர்ணயிக்க வேண்டும் என்ற கருத்துகள் பரவலாக எழத்தான் செய்கிறது. இது குறித்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமியிடம் கேட்டோம். "இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்பதை மறுக்க முடியாது. அரசியல் குறித்த புரிதல் இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அரசியல்வாதிகளிடம் விழிப்பு உணர்வு ஏற்பட வேண்டும். அப்போதுதான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு வயது நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது வரவேற்கத் தகுந்த ஒன்று" என்றார். 

சுயநல அரசியல்

டிஜிட்டல் உலகை சிருஷ்டிக்கும் பல கோடி ரூபாய்கள் வர்த்தகம் செய்யும் ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருப்பவர்களின் வயது 30-க்குள் இருக்கிறது. இந்தியாவில் சிறந்த சி.இ.ஓ-க்கள் பட்டியலில் உள்ளவர்கள் பெரும்பாலனவர்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். ஃபேஸ்புக், வாட்ஸ்அப்-களில் அரசியல்வாதிகளை இளைஞர்கள் பகடி செய்கிறார்கள். மோடியின் மதவாதத்தை கிழிக்கிறார்கள், கருணாநிதியின் குடும்ப அரசியலைப் போட்டுத்தாக்குகிறார்கள். காங்கிரஸ் ஊழலை கலாய்க்கிறார்கள். ஆனால், அவர்கள் கள அரசியலில் இறங்கத் தயங்குகிறார்களா? அரசியல்வாதிகளிடம் இருந்து இளைஞர்கள் என்னதான் எதிர்பார்க்கிறார்கள்?

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்ற கல்லூரி மாணவி நல்லிசை அமிழ்துவிடம் கேட்டோம். " தமிழகத்தின் முதிய அரசியல்வாதியான நல்லகண்ணுவை ஒதுக்கிவிட முடியாது. ஆனால், அதே நேரத்தில் இன்றைக்கு புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் தீபாவையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவரைக்கும் இளைஞர்கள் ஒருவித தயக்கம் காரணமாக அரசியலில் பங்கேற்காமல் இருந்திருக்கின்றனர். இப்போது அதற்கான முன்னேற்புகள் இருப்பதாகக் கருதுகிறேன். காலம், காலமாக அரசியல்வாதிகளாக இருப்பவர்கள், தங்களுக்கு எது நல்லதோ அதைத்தான் செய்கிறார்கள். அதை விடுத்து மக்களுக்கு என்ன நன்மையோ அதைச் செய்பவராக இருக்கவேண்டும். பொதுநலமாக பேசும் அரசியல்வாதிகள் சுயநலமாகத்தான் செயல்படுகின்றனர்" என்கிறார். 

தீர்மானிப்பது யார்?

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை எழும்பூர் கவின் கலைக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர் கே.நவ்சாத். அவர் என்ன சொல்கிறார். "இளைஞர்கள் விரும்பக் கூடிய சூழலாக அரசியல் இல்லை. படிப்பு, வேலை என்று ஏற்கெனவே திட்டமிடப்பட்ட பாதையில்தான் இளைஞர்கள் செல்கின்றனர். இந்தப் பாதையைக் கூட ஒரு இளைஞனின் பெற்றோரோ அல்லது சமூகமோதான் தீர்மானிக்கிறது. பிறரால் திட்டமிடப்பட்ட பாதையில்தான் நாங்கள் செல்கிறோம். சினிமா, கிரிக்கெட் போல ஒரு டாபிக் ஆகத்தான் அரசியலைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம். அரசியல் படிப்பதற்கும் யாரும் தயாராக இல்லை. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் இத்தனை லட்சம் இளைஞர்கள் பங்கேற்றது என்பதே ஆச்சர்யமான விஷயம்தான். வாழ்வியல், கலாசாரம் சார்ந்தது என்பதால் பங்கேற்றனர் என்று வேண்டுமானால் சொல்லலாம். இளைஞர்களை ஒருங்கிணைத்து அரசியல் முன்னெடுக்கப்பட்டால், குறைந்த அளவில்தான் இளைஞர்கள் முன்வருவார்கள் என்று கருதுகின்றேன்" என்றார்.  

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்ற இன்னொரு இளைஞர் சக்திவேல், "தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று கூறுவதற்கே தயக்கமாக இருக்கிறது. அவருக்கு ஓ.பன்னீர்செல்வம் பரவாயில்லை என்ற மனநிலை இருக்கிறது. அதற்காக அவரை ஏற்றுக்கொள்கிறோம் என்று அர்த்தம் இல்லை. புதிதாக ஒரு கட்சி, இளைஞர்களுக்கான கட்சி வராதா என்று என்னைப் போன்ற இளைஞர்களிடம் ஒரு எண்ணம் ஏற்பட்டுள்ளது" என்கிறார். 

தமிழகத்துக்குத் தலைமையேற்கப்போகும் இளம் தலைவர் யார் என்று தொலைகாட்சிகளில் ஒரு தேடல் வைத்தாலாவது இளம் தலைவர் கிடைப்பாரா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு