Published:Updated:

ஹைட்ரஜன் வெடிப்பு... தரமற்ற உதிரிப்பாகங்கள்... சீரற்ற மின் உற்பத்தி... தென்னிந்தியாவின் சோகமாகும் கூடங்குளம்! #Alert

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஹைட்ரஜன் வெடிப்பு... தரமற்ற உதிரிப்பாகங்கள்... சீரற்ற மின் உற்பத்தி... தென்னிந்தியாவின் சோகமாகும் கூடங்குளம்! #Alert
ஹைட்ரஜன் வெடிப்பு... தரமற்ற உதிரிப்பாகங்கள்... சீரற்ற மின் உற்பத்தி... தென்னிந்தியாவின் சோகமாகும் கூடங்குளம்! #Alert

ஹைட்ரஜன் வெடிப்பு... தரமற்ற உதிரிப்பாகங்கள்... சீரற்ற மின் உற்பத்தி... தென்னிந்தியாவின் சோகமாகும் கூடங்குளம்! #Alert

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கூடங்குளம் அணு மின் நிலையம், 1988-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 2013-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இதுவரை வரலாறு காணாத வகையில் அதிக முறை பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் அணுசக்தி பயணத்தில் கூடங்குளம் அணு உலை வைரக் கற்களாக பறை சாற்றப்பட்டு, மக்கள் மத்தியில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் குறியீடாகக் காட்டப்பட்டது. அப்போது கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராகப் போராடிய மக்கள், "கூடங்குளம் அணு உலைகளில் மூன்றாம் தர உதிரிப் பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒருபோதும் அவற்றால் ஒழுங்கான மின் உற்பத்தியைத் தர முடியாது" எனத் தங்கள் கருத்தை முன் வைத்தனர். மேலும், 'இந்தக் கடலும், மண்ணும் எங்களுக்குச் சொந்தம். அவற்றைக் காப்பாற்ற எங்களுக்குத்தான் அதிக கடமை இருக்கிறது' என்று பல நெருக்கடிகளுக்கு இடையிலும் தங்கள் போராட்டத்தை நடத்தினர். போராடிய மக்கள் மீது சொல்ல முடியாத அடக்குமுறையை மத்திய-மாநில அரசுகள் கையாண்டன. இப்போராட்டத்தில் நான்கு உயிர்களும் பறி போயின. இன்றளவுக்கும் போராடிய மக்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 2012-ம் ஆண்டு கூடங்குளத்துக்கு எதிராகப் போராடிய வழக்கு ஒன்றில் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் சமீபத்தில் கைதுசெய்யப்பட்டார். இதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு இயங்கும் அணு உலைகள் சீரான மின் உற்பத்தி செய்கிறதா என்றால், இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. 

ஹைட்ரஜன் வெடிப்பு... தரமற்ற உதிரிப்பாகங்கள்... சீரற்ற மின் உற்பத்தி... தென்னிந்தியாவின் சோகமாகும் கூடங்குளம்! #Alert

பராமரிப்புப் பணிகளுக்காக உலைகள் நிறுத்தப்பட்டால், இரண்டு மாதங்களுக்குள் அவை மீண்டும் மின் உற்பத்தியைத் துவக்க வேண்டும் என்கிறது சர்வதேச அணுசக்தி முகமை. ஆனால், ஒவ்வொரு முறையும் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்படும் கூடங்குளம் 1-ம் யூனிட், நான்கு மாதங்களுக்குக் குறையாமல் எடுத்துக்கொள்கிறது. 2013 முதல் 2017-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கூடங்குளம் யூனிட் 1 மட்டும் 40 முறைக்கு மேல் பழுதடைந்துள்ளது. முதல் யூனிட்டே முழுமையாக உற்பத்தி செய்யாத நிலையில், இரண்டாம் யூனிட் கடந்த மார்ச் 31-ம் தேதி இயக்கப்பட்டது. அதற்கு வர்த்தக ரீதியிலான உற்பத்தியைத் துவக்கி இருக்கிறோம் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், இரண்டாம் யூனிட் துவங்கப்பட்டது முதல் தற்போது வரை ஒரு யூனிட் மின்சாரத்தைக் கூட உற்பத்தி செய்யவில்லை. ஆகஸ்ட் மாதம் பழுதடைந்த யூனிட் 2, அக்டோபர் மாதம் முதல் மின்னுற்பத்தியைத் துவக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் இன்னோர் அறிவிப்பு வந்தது. அதில் இரண்டாம் யூனிட் உற்பத்தியைத் துவக்க இன்னொரு மாதமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அறிவிப்பு அதோடு நின்றுவிடாமல், மின்னுற்பத்தி இயந்திரத்தில் ஹைட்ரஜன் வாயு குவிந்துள்ளதால் தான் மின்னுற்பத்தி நின்றதாக அது சொன்னது.

அணு உலைகளில் விபத்து ஏற்படுவதற்கு "ஹைட்ரஜன் வெடிப்பு" முக்கியக் காரணமாகும். புகுஷிமாவில் உள்ள மூன்று உலைகளிலும் "ஹைட்ரஜன் எக்ஸ்ப்ளோசன்" ஏற்பட்டதால் தான் விபத்து ஏற்பட்டது என்பது உலகறிந்த விஷயம். இந்தப் பின்னணியில் புதிதாகக் கட்டிமுடிக்கப்பட்ட அணு உலையில் ஹைட்ரஜன் பிரச்னை ஏற்பட்டுள்ளது  மக்களிடம் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னமும் குறைந்தபட்சம் அறுபது ஆண்டுகள் செயல்பட வேண்டிய உலைகள் ஆரம்ப நிலையில் இவ்வளவு பிரச்னைகளை சந்தித்தால் வரும் காலகட்டங்களில் என்னவாகும்? இதுகுறித்து, இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக இருந்த கோபாலகிருஷ்ணன் அவர்களைத் தொடர்புகொண்டு கூடங்குளம் அலகு இரண்டில் ஏற்பட்ட "ஹைட்ரஜன் கசிவு" குறித்து மேலும் தகவல்கள் தருமாறு கேட்டேன். அவர் சொன்ன விஷயங்கள் அதிர்ச்சியைத் தருகின்றன. "ஹைட்ரஜன் வாயு அதிகமாக இருந்தால் (ஓர் அளவுக்கு மேல்), சின்ன தீப்பொறி பட்டாலே வெடித்துச் சிதறி விடும். அதுவும் இப்போது ஹைட்ரஜன் குவிந்துள்ள இடம், மின்னுற்பத்தி நடைபெறும் பகுதி என்பதால் எலக்ட்ரிக் ஸ்பார்க் சர்வசாதாரணமாக வரும்" என்றும் தெரிவித்தார். " விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது, அது அதிர்ஷ்டவசமானது" என்றும் தெரிவித்தார். 

ஹைட்ரஜன் வெடிப்பு... தரமற்ற உதிரிப்பாகங்கள்... சீரற்ற மின் உற்பத்தி... தென்னிந்தியாவின் சோகமாகும் கூடங்குளம்! #Alert

மேலும், "இதைப்போன்ற கசிவுகள் ஆரம்பக்கட்ட சோதனை ஓட்டங்களிலேயே கண்டறியப்பட வேண்டும். அணு உலைகள் சில ஆண்டுகள் ஓடிய பிறகு வந்தால் அவை உற்பத்தி சார்ந்த பிரச்னையாகக் கூட இருக்கலாம். அணுசக்தி மின்னுற்பத்தி கழகம் (NPCIL) அவசரப்பட்டு அலகுகள் ஒன்று மற்றும் இரண்டுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டது. இன்னும் சில ஆண்டுகள் ரஷிய நிறுவனத்தை, குறிப்பிட்ட அலகுகளை ஓட்டிக் காண்பிக்கச் சொல்லி, பிரச்னைகள் ஏற்பட்டால் அவற்றை நிவர்த்தி செய்யச் சொல்லி ஒப்படைக்கச் சொல்லிருக்க வேண்டும். அணு உலை பாகங்கள் அதிக நாள்கள் கடற்கரையில் வைத்திருந்ததாலும், உப்புக்காற்றால் அரிப்பு ஏற்பட்டிருக்கலாம். மேலும் இந்த வகையான "மென்னீர் உலைகள்" (light water reactors) இந்திய பொறியாளர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் புதிது. அதனால் அவர்களுக்குப் பழுதுகளும் அவற்றைச் சரி செய்யும் வழிமுறைகளும் அதிக அளவில் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. கூடங்குளம்தான் இந்தியாவின் முதல் மென்னீர் அணு உலை மற்றும் முதல் 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டது என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். கூடங்குளம் அணு உலைகளுக்குள்ள உதிரிப் பாகங்களை மட்டும் ரஷ்யா நிறுவனத்திடமிருந்து வாங்கிக்கொண்டு, நம் நாட்டுப் பொறியாளர்களே கட்டடங்களைக் கட்டுவதும், சாதனங்களை நிறுவிக்கொள்வதும் என்று இந்திய அணு மின் கழகம் எடுத்த முடிவு தவறானது. இந்தியப் பொறியாளர்களுக்கு அனுபவம் இல்லாத, நம்முடைய விஞ்ஞானிகளுக்குத் தெரியாத தொழில்நுட்பத்தை நாமே நிறுவிக்கொள்ளலாம் என்கிற முடிவை எப்படி எடுத்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை" என்கிறார், கோபாலகிருஷ்ணன். 

’சீனாவின் துயரம்’ என மஞ்சள் நதியை சொல்வார்கள். அங்கு 1332-33-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் மட்டும் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தார்கள். தொடர்ச்சியாக 1887, 1931 ஆண்டுகள் எனப் பல வெள்ளங்களில் ஒட்டுமொத்தமாகப் பல கோடி மக்கள் உயிரிழந்துள்ளார்கள்.  இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன் கருத்துப்படி, நிச்சயம் கூடங்குளம் அணு உலைகள் "தென்னிந்தியாவின் சோகமாக" மாறுவதற்கு வாய்ப்புள்ளது. கூடங்குளத்தில் மூன்று மற்றும் நான்காவது உலைகளுக்கு நடைபெறும் பணிகளை உடனடியாக நிறுத்திவிட்டு, முதல் இரண்டு அலகுகளை "சுயாதீனமான குழுவை" கொண்டு ஆய்வு நடத்த வேண்டும். இவை மட்டுமே கூடங்குளம் அணு உலைகள் தென்னிந்தியாவின் சோகமாக மாறுவதைத் தடுக்க உதவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு