Published:Updated:

அனிதா அஞ்சலியிலும் அரசியலா?! அ.தி.மு.க அணிகள் மீது குவியும் வெறுப்பு

அனிதா அஞ்சலியிலும் அரசியலா?! அ.தி.மு.க அணிகள் மீது குவியும் வெறுப்பு
அனிதா அஞ்சலியிலும் அரசியலா?! அ.தி.மு.க அணிகள் மீது குவியும் வெறுப்பு

அனிதா அஞ்சலியிலும் அரசியலா?! அ.தி.மு.க அணிகள் மீது குவியும் வெறுப்பு

அரியலூரில் தற்கொலைசெய்துகொண்ட அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக டி.டி.வி. தினகரன் வந்தபோது, அவரை மிரண்டு ஓடவைத்தார்கள் அரசு கொறடா ராஜேந்திரனின் ஆதரவாளர்கள். அதற்குப் பதிலடிகொடுக்கும் வகையில், தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் புடைசூழவந்து கொறடாவின் ஏரியாவில் மிரட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

அனிதாவின் மரணத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சியினர் மட்டுமல்லாமல் சமூக ஆர்வலர்களும் அஞ்சலிசெலுத்தினர். அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், அனிதாவின் உடலுக்கு அஞ்சலிசெலுத்த வந்தார். ஆனால், அரசு கொறடா  ராஜேந்திரன் ஆதரவாளர்கள், அவரை ஊருக்குள் விடாதபடி பல்வேறு இடையூறுகளைக் கொடுத்தனர். ஆனால், அதையும் மீறி தினகரன் அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார். அப்போது, இரு தரப்பினரும் கோஷமிட்டதுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். 'தள்ளுமுள்ளு'ம் ஏற்பட்டது. "அம்மாவின் கட்சியைக் கூறுபோட்ட தினகரனே ஒழிக", "அரியலூர் மாவட்டத்துக்குள் நுழையக் கூடாது" என்றெல்லாம் முழக்கமிட்டு தினகரனைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தனர். எனினும் ஆதரவாளர்கள் தினகரனை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். கொறடாவின் ஆதரவாளர்கள், தினகரன் ஆதரவாளர்களின் காரில் ஓங்கி அடித்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

பின்னர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வந்து சமதானம்செய்து, தினகரனைப் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தார். இது, அ.தி.மு.க-வினரின் மத்தியில் மிகப்பெரும் சலசலப்பை உண்டாக்கியது. இந்நிலையில், தினகரன் தன் ஆதரவு எம்.எல்,ஏ-க்களோடு கலந்தாலோசித்தார். "நாம் அனைவரும் அனிதா வீட்டுக்குப் போவோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என வெற்றிவேல் எம்.எல்.ஏ சொல்லியதோடு, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் தங்களின் ஒருமாதச் சம்பளத்தைக் கொடுப்பது என்றும் முடிவுசெய்தனர். இந்நிலையில், அனிதா மரணமடைந்து 30-வது நாள் துக்கம் அனுசரித்த நாளன்று வருவதாக திருமாவளவனிடம் தெரிவித்தாராம் தினகரன். அனிதா வீட்டுக்கு 20 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அரியலூர், பெரம்பலூர் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் பொறுப்பாளர்கள் என மாநாட்டுக்கு வருவதைப்போன்று திரளாக வந்துள்ளனர். 

தினகரனைப் பார்த்ததும் தொண்டர்கள் கோஷமிடத் தொடங்கினர். அதற்கு அவர், "நாம் துக்கம் அனுசரிக்கும் வீட்டுக்கு வந்திருக்கிறோம். அதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்" என்று சொன்னதும் தொண்டர்கள் கப்சிப் ஆனார்கள். அந்த நேரத்தில், அங்கிருந்த அரசுக் கொறடா ராஜேந்திரன் தரப்பினர், எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் அமைதியாக இருந்தனர். தினகரனை திருமாவளவன் வரவேற்று, அனிதாவின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அனிதாவின் படத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது தந்தையிடம் 15 லட்ச ரூபாயைக் கட்சியின் சார்பாக நிதியுதவியாக வழங்கினார் தினகரன். பிறகு, அனிதாவின் அண்ணன் மணிரத்தினத்துக்கு அவர் ஆறுதல் கூறினார். மணிரத்தினம் பேசும்போது, “அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகள்தான் தமிழகத்தில் பிரதான கட்சிகள். மத்திய அரசால் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தின் உரிமைகள் பறிபோய்க்கொண்டிருக்கின்றன. மாநிலக் கட்சிகளின் உரிமைகளை விட்டுக்கொடுக்கக் கூடாது. மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வால், எனது தங்கையின் இறப்பே இறுதியானதாக இருக்கட்டும். இனி எந்த அனிதாக்களும் இறக்கக் கூடாது. அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என்று தினகரனிடம் கேட்டபோது, தங்களால் முடிந்ததைக் கண்டிப்பாகச் செய்கிறோம் என்று தெரிவித்தார்.”

தினகரன் பேசுகையில், "அனிதா குடும்பத்துக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி செய்தது, அரசியல் ஆதாயத்துக்காக அல்ல. அனிதா மரணம், தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அனிதா தற்கொலை போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் இனி எங்கும் நிகழக் கூடாது என்பதற்காகத்தான், திருச்சியில் மாபெரும் போராட்டத்தை நடத்தினோம். வறுமையில் வாடும் குடும்பத்துக்கு 20 எம்.எல்.ஏ-க்கள் தங்களின் ஒரு மாதச் சம்பளத்தையும் கட்சியின் பொதுச்செயலாளர் நிதியிருந்து 5 லட்சம் ரூபாய் என்ற மொத்தம் 15 லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறோம். கருணாஸூம் எங்களுடன் அனிதாவின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல வருவதாக இருந்தார். ஆனால், கடைசிநேரத்தில் அவரால் வர இயலவில்லை. நம்முடைய உரிமைகளை யாரிடமும் விட்டுக்கொடுத்துவிடக் கூடாது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தமிழகத்தின் உரிமைகளைக் காக்க வேண்டும். நீட் தேர்வு, தமிழகத்துக்குத் தேவையில்லை மக்களுக்குத் தேவையில்லாத எந்தத் திட்டங்களாக இருந்தாலும் அரசியலைக் கடந்து நாம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும். இனிமேலாவது காவிரி, நெடுவாசல், கதிராமங்கலம் போன்ற போராட்டங்களுக்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். கலாசாரம் மற்றும் மாநில உரிமைகளை மீட்பதற்காக கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்றார்.


திருமாவளவன், “ஆளும் கட்சியினர் அனிதாவின் வீட்டுக்கு வராத போதும்கூட இரண்டாவது முறையாக ஆதரவு எம்.எல்.ஏ-க்களோடு தினகரன் வந்து நிதியுதவி வழங்கியுள்ளார். இது எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. இனி சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்குக் குரல்கொடுக்கப் போகிறோம்” என்று முடித்துக்கொண்டார்.

அரசுக் கொறடாவின் ஏரியாவில் மிரண்டு சென்றவர், மீண்டும் அங்கு சென்று மிரட்டிவிட்டு வந்துள்ளார் என்ற பேச்சு அ.தி.மு.க. தரப்பில் அதிகமாகப் பேசப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு