ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

ஜெயிலில் வைத்துவிட்டு தேர்தல்...

பெயிலில் வருவாரா நேரு?திரும்பிப் பார்க்க வைக்கும் திருச்சி மேற்கு!

##~##

லகம் முழுவதும் அக்டோபர் 26-ம் தேதி தீபாவளி. ஆனால், திருச்சி மேற்குத் தொகுதி மக்களுக்கோ முன்கூட்டியே அக்டோபர் 13-ம் தேதி தீபாவளி. ஆம். அன்றுதான் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையத்தால்  தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, வாக்காளர்களின் முகங்கள் மத்தாப்புபோல பிரகாசிக்கிறது. எப்படியும் தீபாவளி போனஸ் திகட்டத் திகட்டக் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு. போட்டியிட விரும்பும் அரசியல் பிரமுகர்கள்தான் 'யாருக்கு ஸீட்?’ என்று திக்திக் இதயத்துடன் காத்திருக்கிறார்கள்! 

கடந்த சட்டமன்றத் தேர்தலில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த கே.என்.நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு, கிட்டத்தட்ட 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவரைத் தோற்கடித்த அ.தி.மு.க-வின் மரியம்பிச்சை, தமிழக  அமைச்சராக​வும் ஆனார். ஆனால், பதவி ஏற்ற சில நாட்களிலேயே அவர் விபத்தில் இறக்க... அதன் காரணமாக, இடைத்தேர்தலை சந்திக்கிறது இந்தத் தொகுதி. அவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்ற நேரு, கடலூர் சிறையில் இருக்கிறார்.

ஜெயிலில் வைத்துவிட்டு தேர்தல்...

தி.மு.க-வைப் பொறுத்த வரையில், வேட்பாளர் ரேஸில் முதலில் இருப்பவர் கே.என்.​நேரு. ஒரு

ஜெயிலில் வைத்துவிட்டு தேர்தல்...

தேர்தலில் தோல்வி கண்டால், அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவார் என்பது நேருவுக்கான தேர்தல் சென்டிமென்ட். 'கடந்த முறை மரியம்​பிச்சையை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்றவர் என்பதால், இம்முறை போட்டியிட்டால் அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார். அவர் மாவட்டச் செயலாளராகவும் இருப்பதால், கண்டிப்​பாகப் போட்டியிட வேண்டும்’ என கட்சியினர் ஒருமித்த குரலில் சொல்​கிறார்கள். ஆனால், இந்த சென்டிமென்ட் இடைத்தேர்தலுக்குப் பொருந்துமா என்பதும் கேள்விக் குறிதான்!

அடுத்ததாக, தி.மு.க-வில் அடிபடும் பெயர் பரணிக்குமார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு மிக வேண்டப்பட்டவர். இருந்தும், அவரது சில நடவடிக்கைகள்

ஜெயிலில் வைத்துவிட்டு தேர்தல்...

காரணமாக கட்சியில் இருந்து கொஞ்சம் காலம் தனிமைப்படுத்தப்பட்டார். இப்போதோ, பக்குவப்பட்ட மனிதராக மாறி தொகுதியை வலம் வருவதுடன், கட்சியின் நிகழ்ச்சிகளிலும் தவறாமல் ஆஜராகிவிடுகிறார். தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர் என்பதோடு, முன்பு எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறார் என்பதால், 'நேருவுக்கு ஸீட் இல்லை என்றால், அது பரணிக்குமாருக்குதான்!’ என்று கட்சிக்காரர்கள் அடித்துக் கூறுகிறார்கள்.

சிறையில் இருக்கும் நேருவை ஜாமீனில் எடுக்கும் முயற்சிகள் ஜரூராக நடக்கின்றன. 'கலைஞர் அறிவாலய’ வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும், அடுத்தடுத்து வழக்குகளைத் தயார் நிலையில் வைத்திருக்கிறது போலீஸ். எனவே, அவர் ஜாமீனில் வெளியே வருவது சந்தேகம்தான். அதையும் மீறி வெளியே வந்தால்​தான், போட்டியிடும் முடிவை எடுப்பார். 'ஒரு​வேளை சூழ்நிலைகள் சுமுகமாக இல்லாவிட்டால், இடைத்​தேர்தலை புறக்கணிக்கும் முடிவையும் தி.மு.க. எடுக்கலாம்’ என்றும் சொல்கிறார்கள் சில விவரப் புள்ளிகள்.

ஜெயிலில் வைத்துவிட்டு தேர்தல்...

அ.தி.மு.க. முகாமில் என்ன நிலை? மரியம்பிச்சையின் மகன் ஆஷிக், முன்னாள் எம்.எல்.ஏ-வான ரத்தினவேல், முஸ்லிம் சமுதாயப் பிரமுகரான பிலால், கேபிள் தொழில் செய்யும் கவுன்சிலரான சீனிவாசன் ஆகியோர் ஸீட் கேட்பார்கள் என்பது அக்கட்சி வட்டாரத் தகவல். என்றாலும், அம்மாவின் ஆசீர்வாதம் பெறும் பாக்கியசாலி யார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி! முஸ்லிம் பிரமுகர் ஒருவருக்கே ஸீட் கொடுக்கப்படும் என்றும் விவரமான வட்டாரத்தினர் சொல்கிறார்கள். எனவே ஆஷிக்கும், பிலாலும் ரேஸில் இருக்கிறார்கள். இதில் பிலால், கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-வுக்கு வந்து ஐக்கியமானவர். கடந்த தேர்தலின்போது முஸ்லிம் சமுதாய வாக்குகளை மரியம்பிச்சை பெறுவதற்கு பிலால் கடுமையாகவே வேலை செய்தார். 'ஆஷிக்குக்கு ஸீட் கிடைத்து வெற்றி பெறும்பட்சத்தில், இளம் வயது சட்டமன்ற உறுப்பினர் என்னும் பெயரைப் பெறுவார். புதுமை படைப்பதுதானே அம்மாவின் பாணி. அதனால், கண்டிப்பாக அவருக்குதான் ஸீட் உறுதி’ என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்த ம.தி.மு.க-வும், இந்த இடைத்தேர்தலில் போட்டி​யிடுவோம் என அறைகூவல் விட்டிருக்கிறது. ''சென்ற முறை அ.தி.மு.வி-ன் கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறி தேர்தலைத் தவிர்த்த காரணத்தினால், இம்முறை தொகுதியை ம.தி.மு.க-வுக்கு தாரை வார்த்து, அதன் மூலம் உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.மு.க-வை தங்கள் கூட்டணிக்கு அ.தி.மு.க. கொண்டு​வரும்!'' என்று ம.தி.மு.க. தரப்பில் இருந்தே ஒரு வித்தியாசக் கோணத்தைச் சொல்லிக் கிறுகிறுக்க வைக்கிறார்கள். ஆனால், 'அது சாத்தியமே இல்லை!’ என்று சத்தியம் செய்கிறார்கள் அ.தி.மு.க-வினர். கூட்டணியோ, தனித்தோ... ம.தி.மு.க. சார்பில் ரேஸில் இருப்பவர்கள் மூவர்தான். முன்னாள் எம்.எல்.ஏ-வும் மாவட்டச் செயலாளருமான மலர்மன்னன், மாவட்ட துணைச் செயலாளர் வெல்லமண்டி சோமு, வைகோவால் 'மாமா’ என அன்புடன் அழைக்கப்படும் ஷேக்​முகமது​வின் மகள் டாக்டர் ரொக்கையா ஆகியோர் லிஸ்டில் இருக்கிறார்கள்.

இதுவரையில் இடைத்தேர்தல் என்றாலே 'திருமங்கலம் ஃபார்முலா’தான் நம் அனைவரின் நினைவுக்கு வந்தது. இந்த இடைத்தேர்தலுக்குப் பிறகு 'திருச்சி ஃபார்முலா’ என்று சொல்லும் நிலை வராமல் இருந்தால் நலம்!

- ஆர்.லோகநாதன்

படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்