Published:Updated:

’’அது மீம்ஸா... பீன்ஸா... பிக்பாஸ்னா என்ன?’’  - எ பேட்டி வித் விஜயகாந்த் 

’’அது மீம்ஸா... பீன்ஸா... பிக்பாஸ்னா என்ன?’’  - எ பேட்டி வித் விஜயகாந்த் 
’’அது மீம்ஸா... பீன்ஸா... பிக்பாஸ்னா என்ன?’’  - எ பேட்டி வித் விஜயகாந்த் 

‘எதிர்பார்க்கிறது எதிர்பார்க்கிற நேரத்துல கிடைக்காது; எதிர்பார்க்காதது எதிர்பார்க்காத நேரத்துல நடக்கும்’னு சொல்ற மாதிரி... அந்த மெசேஜ் வந்து விழுந்தது! 

‘‘கேப்டன் பேட்டி ஓ.கே. மார்னிங் நைன்!’’ என்று விஜயகாந்த் உதவியாளரிடமிருந்து மெசேஜ். 'ஆனந்த விகடன் 4500வது இதழுக்கு விஜயகாந்த் பேட்டி கன்ஃபர்ம். காலைல ஷார்ப் 9’ என ’ஒளி ஓவியர்’ ராஜசேகரன் சார் அண்ட் கோவுக்கு மெசேஜினேன். (ஆனால், எனக்கு முன்னாடி அவர்கள் ஆஜர். நான்தான் லேட்!)

விஜயகாந்தின் கோயம்பேடு அலுவலகம். வாசலில் ஏகப்பட்ட தொண்டர்கள், நிர்வாகிகள் பூங்கொத்துகளுடன் காத்திருந்தனர். அவர்களுடன் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்தார் விஜயகாந்தின் தெய்வ மச்சான் சுதீஷ். பெரிய ஸ்க்ரீனில் ’கேப்டன் டி.வி.யில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார்கள். ‘இதோ, முதல்வர் வந்து கொண்டிருக்கிறார்... வருகிறார்... வந்தேவிட்டார்!’ என்று பிரசாரக் கூட்டங்களில் சொல்வதுபோல, ‘கேப்டன் இப்போ வந்துடுவார்... இதோ வந்துட்டார்... இதோ வந்தேவிட்டார்’ என 30 நிமிடங்களாகச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள் அலுவலக உதவியாளர்கள். ஒரு திடீர் தருணத்தில்...வந்து நின்றார் வெள்ளை பேன்ட் சட்டையில் பளிச் விஜயகாந்த்!
 

‘‘ஹலோ... சிபி சார்... ராஜசேகர் சார்... வாங்க.. வாங்க... நல்லாருக்கீங்களா! ஸாரி... கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. டேய் தம்பி, இவங்களுக்கு எதுவும் சாப்பிடக் கொடுத்தீங்களா? ஏன் சார், கொடுத்தாங்களா?’’ என்று நம்மிடம் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார் விஜயகாந்த். (சும்மா சொல்லக் கூடாது... கேப்டன் வீட்டு காபி சுவை....ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா... இன்னும் கூட நாக்குல ஒட்டிட்டு இருக்கு!) 
    
ஆனந்த விகடனில் வெளிவந்த ‘களத்தில் கேப்டன்’ தொடரை அவராகவே நினைவுபடுத்திப் பேசத் தொடங்கினார். திடீரென்று மாவட்ட நிர்வாகிகள் கும்பலாகச் சூழ்ந்தார்கள். எதுவும் பிரச்னையோ என்று பார்த்தால்... போட்டோ ஷூட்! தொண்டர்கள் ஒவ்வொருவரையும் ஞாபகம் வைத்து பேர் சொல்லி அழைத்து, கட்டிப்பிடித்து, பொக்கே வாங்கி போஸ் கொடுத்தார் விஜயகாந்த். நிர்வாகிகள் பலர் அவர்கள் கொண்டு வந்த பொக்கேவை அவரிடம் கொடுத்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள். சிலர் கையில் எதுவும் கொண்டு வராமல் தர்மசங்கடமாக நிற்க, அதைப் பட்டென புரிந்துகொண்ட விஜயகாந்த், அருகிலிருந்த பொக்கேவை எடுத்து அவர்கள் கையில் கொடுத்து, 'இப்ப சிரிங்க...' என சகஜமாக்கினார். 

போட்டோ ஷுட் முடிந்து மீண்டும் நம் பக்கம் திரும்பினார். அவர் அணிந்திருந்த பேன்ட் மீது நம் கவனம் பதிந்ததைக் கவனித்தவர், ‘‘இவன் எப்பவும் வேட்டியிலதான இருப்பான். பேன்ட் போட்டிருக்கானேனு பார்க்குறீங்களா?!’’ என்று சிரித்தவர், ‘‘வேட்டி கட்னா கால்ல தட்டித் தட்டி விடுது. ரொம்பத் தொந்தரவா இருக்கு. அதான் இப்போலாம் பேன்ட்!’’ என்றார்.

பேட்டி தொடங்கியது. ‘‘கரன்ட் பாலிடிக்ஸ்ல இருந்தே ஆரம்பிங்க’’ என்று அவரே லீடு கொடுத்தார். கமல், ரஜினி அரசியல் என்ட்ரி குறித்த கேள்விக்குத் தனது பாணியில் காரசாரமாகப் பதிலளித்தார். (என்னது... என்ன சொன்னாரா..?! ரஜினி, கமல் பத்தி அவர் சொன்னதை ஆனந்த விகடன்ல படிங்க ஃப்ரெண்ட்ஸ். 4,500 ஸ்பெஷல் இதழை இங்க வாங்கிக்கலாம்!) 

விஜயகாந்த் எந்தக் கேள்விக்கும் ’வேண்டாம்’ என்றோ, ‘இதற்கு பதில் சொல்ல மாட்டேன்’ என்றோ சொல்லவில்லை. ஆனால், மக்கள் நலக் கூட்டணியில் இருந்த தலைவர்கள் பற்றிய ஒரு கேள்விக்கு, 'அது...' என பதில் சொல்லத் தொடங்கிய போது, அவருடன் இருந்த நிர்வாகிகள் சிலர் 'முடிஞ்சு போனதைப் பத்திலாம் பேசணுங்களா!’ எனச் சொல்ல, உடனே விஜயகாந்தும், 'அது  வேண்டாமே’ என்பதுபோல சைகை செய்தார். 'மக்கள் நல கூட்டணி' பற்றி அவர் பேச விரும்பவில்லை என்பது தெரிந்தது. 

உரையாடல் அரசியல் தவிர மற்றவை பக்கம் திரும்பியது. விஜயகாந்தின் மகன்கள் சண்முகபாண்டியன், பிரபாகரன் பற்றிக் குறிப்பிடும்போது, ‘‘ரெண்டு பசங்களுக்கும் பொண்ணு பார்த்துட்டே இருக்கேன். நல்ல வரன் வந்தா முடிச்சுரலாம்!’’ என்றபோது சட்டென பாசமிகு தந்தையாக உருமாறினார் தே.மு.தி.க. தலைவர்! 

பேட்டியென்று வந்தபின் ‘பிக் பாஸ்’ பத்திக் கேட்காமல் இருக்க முடியுமா?! கேட்டேன். ‘பிக் பாஸா... அப்படின்னா?’ என்பதுபோல் புருவமுயர்த்தினார். ‘இந்த எலிமினேஷன்னா என்னாங்கண்ணே’ என்று கமலிடம் ’கஞ்சா’ கருப்பு கேட்டது நினைவுக்கு வந்தது. ‘‘ஆங்... கமல் ஏதோ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குறார்னு சொன்னாங்க.. அதுவா!’’ என்று கேட்டவர், ‘‘நமக்கு அதுக்கெல்லாம் நேரம் இல்ல சார். எப்பவாது பசங்களோட படம் பார்க்கிறது மட்டும்தான்!’’ என்றார்.

ஹாலிவுட் சினிமா பற்றி பேசியபோது, ‘‘ஏன் சார்... ஒரு பொண்ணு ஓடிட்டே இருக்குமே? அது என்ன படம்... மம்மியா...?’’ என்று சந்தேகம் கேட்டார். சில பெயர்கள் சொல்லிப் பார்த்தேன். அவருக்கும் தெரியவில்லை. (என் கேர்ள் ஃப்ரெண்ட், ‘இங்கிலீஷ் படமெல்லாம் பாருடா.. அறிவு வளரும்’ என்று அட்வைஸியது நினைவில் வந்தது. ஹ்ம்ம்... அவங்க சொல்றதை எதை நாம கேக்குறோம்!) 

விஜயகாந்தை மிகவும் பிடித்த சிலர் இருக்கிறார்கள். விஜயகாந்த் என்ன செய்கிறார்... என்ன பேசுகிறார் என்று ஒவ்வொரு கனமும் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்கள்... மீம் கிரியேட்டர்கள்! சட்சட் என விஜயகாந்தைப் பற்றி மீம்கள் வந்து விழுந்தபடி இருந்தது ஒரு காலம். இப்போது மீம்ஸுக்கும் விஜயகாந்த்துக்கும் பெரும் இடைவெளி விழுந்துவிட்டது. மீம்ஸ் பற்றிக் கேட்கலாமா எனத் தயங்கியபடியே கேட்டேன். ஆனால், அவரோ செம ஜாலியாக அதற்குப் பதில் சொன்னார்... ‘‘சார்.. அதுக்குப் பேரு மீம்ஸா? நான் இவ்வளவு நாளும் பீன்ஸ்னு நினைச்சுட்டு இருந்தேன்!’’ என்று கடகடவெனச் சிரித்தவர், ‘‘அது அவங்களோட வேலை சார்... அதெல்லாம் பார்த்துட்டிருந்தா நம்ம வேலையை யார் பார்க்குறது!’’ என்றார்.

அவர் கொடுத்த நேரம் முடிந்து விட்டிருந்தது. ஆனால், ஜாலியாகப் பேசியபடி இருந்தார் விஜயகாந்த். நடுநடுவே கர்ச்சீஃப் கொண்டு கண்களை அழுந்த துடைத்துக் கொண்டே இருந்தார். முன்னர் சினிமாக்களில் அவர் கணீரென்று தேசபக்தியுடன் பேச ஆரம்பித்தாலே ரத்தமெல்லாம் ஜிவுஜிவுக்கும்... நரம்புகள் புடைக்கும் ரசிகர்களுக்கு. அரசியலில் ஈடுபட்ட பிறகும் அவரது பிரஸ்மீட்கள் பொறி பறக்கும். ஆனால், சிங்கப்பூர் சிகிச்சைக்குப் பிறகு சில உபாதைகளால் அசெளகரியப்பட்டார் விஜயகாந்த். அதில் அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல... அவரை அறிந்த அனைவருக்குமே வருத்தம்தான்! இது பற்றிய எண்ணம் மனதில் அலைபாய, அதை அவரிடமே கேட்டுவிடலாமா என்று தயங்கி யோசிக்க, சட்டெனெ முடிவெடுத்து, ‘‘இந்தக் கேள்விக்குத் தப்பா எடுத்துக்காதீங்க... கிட்னி மாற்று அறுவை சிகிச்சை பண்ணிக்கத்தான் சிங்கப்பூர்னு போனீங்கனு ஏதேதோ தகவல் உலவுச்சு... எது உண்மை!’’ என்று கேட்டுவிட்டேன்.

‘‘இதுக்குப் போய் ஏன் சார் இவ்வளவு தயங்குறீங்க? சிங்கப்பூர்ல கிட்னி அறுவை சிகிச்சைக்குப் போனேன்னு எவன் சொன்னான்..! கிட்னி ஆபரேஷன் எங்க பண்ணுவாங்க..? இடுப்புலதானே... இப்போ நீங்களே பாருங்க!’’ என்று சட்டையைத் தூக்கிக் காண்பித்தார். வயிற்று பிரதேசம் இயல்பாகவே இருந்தது. ’’தையல் எதுவும் இருக்கா என்ன..?! ஏதோ புரளி கிளப்பியிருக்கானுங்க.. அதெல்லாம் விட்டுத் தள்ளுங்க.. இப்படி எதுவும்னா என்கிட்டயே கேட்டுப்புடுங்க!’’ என்றார்.  

போட்டோ ஷூட். செல்ஃபி எடுப்பதுபோல போட்டோ எடுக்க வேண்டும் என்றதற்கு, ‘’ஆங்.... இந்த செல்ஃபி எடுக்கிறது எப்படிங்க..? எனக்கு அது தெரியாது!’’ என்றார். செல்ஃபிக்கு ஏற்ப மொபைலை அவர் கையில் வைத்துப் பிடித்து ‘சிரிங்க’ என்றபோது.... ஒரு சிரிப்பு சிரித்தார் விஜயகாந்த்...

லவ் யூ கேப்டன்!
 

அடுத்த கட்டுரைக்கு