Published:Updated:

“புத்தர், ஏசுநாதர் மாதிரி நம்ம சின்னம்மா!” ‘நாஞ்சில்’ சம்பத்தின் குபீர் லாஜிக்

“புத்தர், ஏசுநாதர் மாதிரி நம்ம சின்னம்மா!” ‘நாஞ்சில்’ சம்பத்தின் குபீர் லாஜிக்
“புத்தர், ஏசுநாதர் மாதிரி நம்ம சின்னம்மா!” ‘நாஞ்சில்’ சம்பத்தின் குபீர் லாஜிக்

மெரினா கண்ணகி கை நீட்டியதற்குப் பின்னால், ஒற்றைப் பனைமரத்துக்குச் சற்றுத் தள்ளி நண்பருடன் உரையாடிக் கொண்டிருக்கையில், கம்பீரமான நடையோடு ஒருவர் எங்களைக் கடந்துசென்றார். அவர், 'நாஞ்சில் சம்பத்தா...' என்ற சந்தேகக் கேள்வி என்னைக் கடப்பதற்குள் அவருடன் ஓர் இளைஞர் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தார். நானும் நண்பரும் சந்தேகத்தில் தெளிவடைந்து அவர் அருகில் சென்றோம். எங்களை அறிமுகம் செய்துகொண்டு பேச்சைத் தொடங்கினோம்… அது கேள்வி பதிலாக அமைந்துவிட்டது…

''சார் சசிகலா வந்திருக்காங்க…''

“ஆமா, சின்னம்மாவ இப்போதான் பாத்துட்டு வாரேன்”

''என்ன சார் சொல்றீங்க... அரசியல் சார்பா யாரையும் சந்திக்கக்கூடாதுனு சொல்லிருக்காங்களே…''

“அதெல்லாம் தெரியாது. நான் இப்போதுதான் சின்னம்மாவப் பார்த்துவிட்டு வருகின்றேன்'' (உறுதியான குரலில்…)

''என்ன மாதிரியான மனநிலையில இருக்காங்க சசிகலா?''

“முன்னைவிட இப்போ பெரிய தெளிவுடன் இருக்காங்க. கௌதம புத்தருக்கும், ஏசுநாதருக்கும் நடந்த துரோகம் மாதிரிதான் இப்போ சின்னம்மாவுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் நடந்துட்டுருக்கு. ரெண்டுபேரும் இந்தச் சூழல ஈஸியா சமாளிச்சு வெளிவரும் ஆன்ம பலத்தோட இருக்காங்க…”

''அப்படிப் பலத்தோட இருக்குறதுக்கு முன்ன இருந்த மாதிரியான சூழல் இப்போ இருக்குன்னு நினைக்குறாங்களா?''

“இவ்ளோ பெரிய நம்பிக்கை துரோகிகளும் இருக்காங்களேன்னுதான் நினைப்பாங்க… ஒருநாள் இதைத் தாண்டி வரணும்னுதான் நினைப்பாங்க… அதற்கான வாய்ப்பும் சூழலும் தமிழ்நாட்டில் கனிந்து வரும் என்றே நான் நம்புகிறேன்.”

''சரி இப்போ இருக்கக்கூடிய ஆட்சி…'' (கேட்டு முடிப்பதற்குள்…)

“தமிழ்நாட்டில் இப்போ இருக்குறது ஆட்சியே கிடையாது'' (என இடைமறிக்கின்றார்.)

''சரி ஆட்சி நடக்குறதா சொல்றாங்களே... அது எவ்ளோ நாள் நீடிக்கும்?''

“எவ்வளவு நாள் நடக்கும்னு சொல்ல முடியாது. நாளைக்கே முடிந்தாலும் நல்லது.”

''அதாவது முடிவுக்கு வரணும் அப்படிங்கிற விருப்பமாத்தானேங்க சார் சொல்றீங்க…'' “நீடிப்பதற்கான வாய்ப்பு இல்லையே. ஏற்கெனவே 18 பேர் ஆதரவத் திரும்பக் கொடுத்தவுடனேயே இந்த ஆட்சிக்கு ஆயுள் குறைஞ்சாச்சு…”

''வாக்கெடுப்பு செஞ்சா அவங்களுக்குப் பெரும்பான்மை இருக்கே?''

“18 பேர் ஆதரவத் திரும்பப் பெற்றாலே அந்த அரசாங்கம் பெரும்பான்மையை இழந்திருதே”

''ஆனா அவங்கதான் தகுதி நீக்கம் செய்யப்பட்டுட்டாங்களே…?''

“தகுதி நீக்கம்தான் முடிவுக்கு வரலையே”

''அ.தி.மு.க தொண்டர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புறீங்களா?''

“நம்பிக்கையோடு இருங்கள்… அயர்வில்லாமல் இருங்கள்… எந்த நேரத்திலும் அச்சத்துக்கும் சோர்வுக்கும் ஆட்பட்டுவிடாதீர்கள்… இந்தத் தலைமையின்கீழ் (டி.டி.வி.தினகரன், சசிகலா)  அ.தி.மு.க-வை மீண்டும் வலிமையோடு கட்டியெழுப்புவதற்கு ஒருநாள் விரைந்து வந்து கொண்டிருக்கிறது. அந்த நாள் எந்த நாள்… இந்த நாளில் சொல்ல முடியவில்லை…”

''சார் நீங்க இலக்கியவாதியா அரசியல்வாதியா?'' ''நான் இலக்கியவாதி'' (சட்டென்று வருகிறது பதில்)

''அப்போ இலக்கியவாதியா சொல்லுங்க… இப்போ நடக்குறத எப்படி எடுத்துப்பீங்கன்னு?''

''இலக்கியத்திலும் இது வருதே…''

'பி.ஜே.பி ஆட்கள் உங்களை ஒரு ஹோட்டல்லருந்து வெளில வர முடியாமல் செய்தார்களே?''

“ஆமா அடிக்க முயன்றார்கள்…”

''இந்த மாதிரியான எதிர்ப்பு இலக்கியவாதிகளுக்கு…''

“இலக்கியவாதிகளுக்குத்தான் எதிர்ப்பு வருது.  இலக்கியவாதிகளுக்குத்தான் எதிர்ப்பு வரும்… அரசியல்வாதிகள் அழிந்துவிடுவார்கள்… ஆனால், இலக்கியவாதிகள் ஸ்திரமானவர்கள்… கல்புர்கிக்கும் கௌரி லங்கேஷுக்கும் என்ன நடக்க நேர்ந்ததோ அதுதான் அன்றைக்கு எனக்கும் நடக்கப் பார்த்தது. ஆனால், நான் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டேன். அதனால் தப்பித்துக்கொண்டேன்…”

''இப்போ நவீன இலக்கியம் அதிகமாயிடுச்சு. இப்போ எழுதுறவங்களும் மேற்கத்தியச் சிந்தனையைக் கொண்டுதான் எழுதுறாங்க. நமக்குன்னு ஒரு தொடர்ச்சியான பண்பாடு இருக்கு; படைப்பாக்க முறை இருக்கு. அதைவிட்டுட்டே போனோம்னா அதெல்லாம் அழிஞ்சு போயிடாதா…?

''பிரபஞ்சன் இப்போவும் எழுதிட்டுருக்காரு.... சமகால எழுத்தாளர்கள் நிறைய எழுத ஆரம்பிச்சுருக்காங்க. கதைகள், கவிதைகள் நிறைய வருகின்றன. எங்க போய் ஓடி ஒழிஞ்சு கொண்டாலும் சங்க இலக்கியத்தையும் சமய இலக்கியத்தையும் தாண்டி ஓர் எழுத்தாளன் சிந்திக்க முடியாது... ஓட முடியாது. நான் நேற்று முன்தினம் ஏ.வி.எம் ராஜேஸ்வரி மகாலுக்குப் போனேன். அங்கே ராமலிங்க மணிமண்டப நிகழ்ச்சியில பேராசிரியர் அரங்கராமலிங்கம் பேசினார். 

'நீருண்டு பொழிகின்ற காருண்டு விளைகின்ற

        நிலனுண்டு பலனுமுண்டு

        நிதியுண்டு துதியுண்டு மதியுண்டு கதிகொண்ட

        நெறியுண்டு நிலையு முண்டு'

அப்படின்னு வள்ளலார் பாடுறாரு. இதைத்தான் நெஞ்சமுண்டு நேர்மையுண்டுன்னு சொல்றாங்க. இந்த உண்டுன்னு சொல்றது இங்கயிருந்து அங்க போனதுதான்னு சொல்றாரு.''

''தமிழகத்துல கல்புர்கி, கௌரி லங்கேஷ் மாதிரி ஆட்கள் இருக்காங்களா?''

''ஏன் பெருமாள் முருகனே அதைத்தானே செய்தாரு...? கௌரி லங்கேஷை எப்படிப் பார்க்குறாங்களோ அப்படித்தான் பெருமாள் முருகனைப் பாத்தாங்க. அதனாலதான் கௌரி லங்கேஷ், பெருமாள் முருகனோட மாதொரு பாகனை கன்னடத்துல மொழிபெயர்த்து அங்கே வெளியிட்டாங்க.''

''பெருமாள் முருகனுக்கு ஏற்பட்ட எதிர்ப்ப இப்படிப் பாக்கலாமா... அது வேற மாதிரியான எதிர்ப்பு இல்லையா?''

''அது காவி அரசியல்… சாதி அரசியல்''

''வேற ஏதும் சொல்ல விரும்புறீங்களா?''

 'பயிலுறும் அண்ணன் தம்பி – அக்கம்

பக்கத்துறவின் முறையார்

தயைமிக உடையாள் அன்னை – என்னைச்

சந்ததம் மறவாத் தந்தை

குயில்போல் பேசிடும் மனையாள் – அன்பைக்

கொட்டி வளர்க்கும் பிள்ளை

அயலவராகும் வண்ணம் – தமிழென்

அறிவினில் உறைதல் கண்டீர்'

என்ற பாவேந்தர் பாடலைச் சொல்லி இவ்வாறு குடும்பத்தோடும் தமிழோடும் நீங்க நன்றாக வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார் புன்னகையுடன்.

அரசியல்வாதியாகவும் இலக்கியவாதியாகவும் அவரது உறுதியான பேச்சில் வெளிப்பட்ட உற்சாகம் எப்பொழுதும் நிலைத்திருக்கிறது!